Followers

Wednesday, November 28, 2012

தியாகி ஆர்.சிதம்பர பாரதி

தியாகி ஆர்.சிதம்பர பாரதி

தமிழ் நாட்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் பலரை  நாம் மறந்தே போய்விட்டோம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகச் சிறைப்பட்டு வட நாட்டுச் சிறைகளில் சுமார் 14 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த தியாகி ஒருவரைப் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்தான் ஆர்.சிதம்பர பாரதி.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களுடைய நெருங்கிய நண்பரான சிதம்பர பாரதி பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பலமுறை அவர்களுடைய சட்டங்களை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு 1957 தேர்தலில் மானாமதுரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆர்.சிதம்பர பாரதி 1905 ஜூன் 5ஆம் தேதி மதுரையில் வடக்கு மாசி வீதியில் இருந்த 'ராமாயணச் சாவடி' எனும் இவர்களது இல்லத்தில் ரெங்கசாமி சேர்வைக்கும் பொன்னம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுக்கு சிதம்பர பாரதி பதினாறாவது குழந்தை. இவருக்கு எட்டு அண்ணன்மார்களும், ஏழு அக்காமார்களும் இருந்தனர். இவருடைய ஐந்தாவது வயதில் இவருடைய தந்தை காலமானார். வறுமை காரணமாக இவரது படிப்பு நின்று போயிற்று. அப்போது தேசிய இயக்கத்தில் முன்னணியில் இருந்து வீர கர்ஜனை புரிந்து வந்த சுப்பிரமணிய சிவாவின் பால் இவருக்கு பற்று ஏற்பட்டு அவரது அடியொற்றி இவரும் சுதந்திர தாகத்துடன் செயல்படத் தொடங்கினார். சிவா தொடங்கிய பாப்பாரப்பட்டி ஆசிரமத்தில் இரண்டு ஆண்டுகள் இவர் இருந்திருக்கிறார். காங்கிரஸ் தொண்டராக இவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த காலம் இது.

காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் எனப் பிரிந்து கிடந்த நேரத்தில் இவர் பால கங்காதர திலகரின் தலைமையில் இயங்கிய தீவிர வாதப் பிரிவில் வ.உ.சி., சிவா ஆகியோரைப் போல தீவிர காங்கிரஸ்காரராகச் செயல்பட்டு வந்தார். பிரிட்டிஷ் அரசு இவரைப் பல வழக்குகளில் குற்றவாளியாகக் கருதி இவரைத் தேடியது. மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப் பட்டது. பெரிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட சூழ் நிலையில் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் ஒரு ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்துப் பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டு போலீசார் திரும்பி விட்டனர். அருகிலிருந்த கிராமத்து மக்கள் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்த கொடுஞ்செயலைச் செய்தவர் போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயர் எனப்படும் தீச்சட்டி கோவிந்தன் ஆவார். அவரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து விஸ்வனாதன் நாயர் மீது திராவகம் வீசி அவரை அலங்கோலப் படுத்திவிட்டனர். அந்தக் குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டவர்களுள் சிதம்பர பாரதியும் ஒருவர். இதனையும் சேர்த்து இவர் மொத்தமாக 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து விடுதலை ஆனபின் தனது மாமன் மகளான பிச்சை அம்மாளை மணந்து கொண்டார். இவரது ஒரே மகள்தான் சண்முகவல்லி.

சுதந்திரத்துக்குப் பிறகு இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். இதன் பின்னர் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957இல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969இல் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டது. இந்திரா காந்தியின் தலைமையில் இந்திரா காங்கிரசும், நிஜலிங்கப்பா, காமராஜ் ஆகியோரின் தலைமையில் சின்டிகேட் காங்கிரசும் உருவாகின. சிதம்பர பாரதி காமராஜ் அவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டவரானபடியால் இவரும் சின்டிகேட் காங்கிரசில் செயல்பட்டார்.

இவருடைய அரசியல் வாழ்க்கையில் எந்த காலத்திலும் ஒரு சிறு குற்றச்சாட்டுக்குக்கூட ஆளாகாமல் ஒரு உண்மையான காந்தியத் தொண்டராகவே விளங்க்கினார். மத்திய அரசு தியாகிகளுக்குக் கொடுக்கும் மரியாதைச் சின்னமான 'தாமிரப் பட்டயம்' பெற்ற தியாகி இவர்.
இவரது மனைவி பிச்சை அம்மாள். இவர்களுக்கு ஒரேயொரு மகள் சண்முகவல்லி கணேஷ், மூன்று பேரப் பிள்ளைகள். இவர் மதுரையில் இருந்த இவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30இல் தன்னுடைய 82ஆவது வயதில் காலமானார். வாழ்க தியாகி சிதம்பர பாரதி புகழ்!

சிவகங்கை ஆர்.வி.சுவாமிநாதன்

சிவகங்கை ஆர்.வி.சுவாமிநாதன்

காங்கிரஸ்காரராக இருந்த போதோ அல்லது இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறை புகுந்தபோதோ, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது கிடைக்காத பெயரும், புகழும், விளம்பரமும் இவர் செய்த ஒரு வீரதீர சாகசத்தினால் ஏற்பட்டது. ஒரு முறை இந்திரா காந்தி தமிழ் நாட்டுக்கு வந்தபோது மதுரை வந்திருந்தார். அப்போது அவருக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் வன்முறை ஆர்ப்பாட்டமாக மாறியது. திறந்த ஜீப்பில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திரா காந்திமீது கல்லும், தடிகளும் வீசப்பட்டன. கும்பல் அருகில் வந்து தாக்கவும் தொடங்கினர். அவர் இருந்த ஜீப் மீது கற்கள் விழுந்து கொண்டிருந்தன. அப்பொது அருகில் இருந்த ஆர்.வி.சுவாமி நாதனும், மதுரை நெடுமாறனும், இந்திரா காந்திமீது கற்கள் விழாமலும், அவர் அடிபடாமலும் அவருக்குக் கேடயமாக இருந்து காப்பாற்றினார்கள். அந்த செய்தி மறு நாள் செய்தித் தாள்களில் வந்தபோது ஆர்.வி.சுவாமி நாதனுக்கு அதுவரை கிடைக்காத பெயரும், புகழும் பாராட்டுகளும் வந்து குவிந்தன. யார் இந்த ஆர்.வி.சுவாமி நாதன் என்பதை இப்போது பார்ப்போம்.

அன்றைய இராமனாதபுரம் மாவட்டம் பாகனேரி வரலாற்றுப் புகழ் கொண்ட ஊர். அந்த ஊரில் வாழ்ந்த வெள்ளையப்பத் தேவருக்கு 1910, ஆகஸ்ட் 5இல் மகனாகப் பிறந்தவர் காங்கிரஸ் தலைவர், தியாகி ஆர்.வி.சுவாமி நாதன். இவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். சமூக சேவையில் நாட்டம் கொண்ட இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னுடைய 19ஆம் வயதிலேயே தன்னை முழு மூச்சுடன் இணைத்துக் கொண்டார். இவர் தன்னுடைய உண்மையான உழைப்பாலும், நேர்மையாலும் காங்கிரஸ் தொண்டராக இருந்து படிப்படியாக உள்ளூர் காங்கிரஸ் கமிட்டி முதல், தாலுகா கமிட்டி, மாவட்ட கமிட்டி, மா நில கமிட்டி என்று பதவி உயர்ந்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராகவும், மத்திய அமைச்சரவையில் விவசாயத்துறை துணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், மத்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் திறமையாகப் பணிபுரிந்து, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, காமராஜ் ஆகியோருடைய பாராட்டுக்களைப் பெற்றவர்.

இந்திய பாராளுமன்ற குழுவோடு இவர் நியுசிலாந்து, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, இங்கிலாந்து, கொரியா, பிலிப்பனிஸ் போன்ற நாடுகளுக்கும் ஸ்காண்டினேவியன் நாடுகள் எனப்படும் டென்மார்க், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். அகில உலக விவசாய மானாட்டுக்காகவும் இவர் வெளினாடு பயணம் செய்திருக்கிறார்.

தமிழகத்தில் தேவர் வகுப்பு பின் தங்கிய ஜாதியாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிற்பட்ட இந்த ஜாதியார்தான் தமிழகத்தில் பெரும்பான்மையான தனிப்பெரும் குழுவாகவும் இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த வகுப்பினருக்குப் பல கொடுமைகளை பிரிட்டிஷ் அரசு அளித்து வேட்டையாடியது. இந்த கொடுமையான சட்டத்தை நீக்கி இவர்களின் நிலை உயர 1947-48 காலகட்டத்தில் சென்னை சட்டசபையில் சட்டம் கொண்டு வந்து இவர்களின் விடிவெள்ளியாக உருவானார் ஆர்.வி.சுவாமி நாதன். அரசியலில் நுழைந்த நாள் முதல் தனது கடைசி மூச்சு ஓயும் வரையிலும் ஒரு சுத்தமான காந்தியவாதியாகவும், காந்தி விரும்பிய உண்மையான காங்கிரஸ்காரராகவும், உயர்ந்த பண்பாளராகவும் வாழ்ந்து காட்டியவர் ஆர்.வி.எஸ். வாழ்க ஆர்.வி.சுவாமி நாதன் புகழ்!

கோமதிசங்கர தீட்சிதர்

கோமதிசங்கர தீட்சிதர்

தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் பெருந்தலைவர்களுள் திரு கோமதிசங்கர தீட்சிதருக்குத் தனியிடம் உண்டு. மிகவும் மரியாதைக்குரியவராகவும் அவர் கருதப்பட்டார். காந்தியம் எனும் தத்துவத்துக்கு ஓர் வடிவம் கொடுத்ததைப் போல தன்னை உருவாக்கிக் கொண்டவர் 'தாத்தா' என்று பலராலும் அழைக்கப்பட்ட இந்த கோமதிசங்கர தீட்சிதர்

கோமதிசங்கர தீட்சிதர் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் பிறந்தவர்..பின்னர் சேரன்மாதேவிக்குக் குடிபெயர்ந்தவர். இளம் வயதிலேயே திரு நெல்வேலி மாவட்டத்தில் அப்போது வேகமாகப் பரவிய தேசபக்தி உணர்வின் காரணமாக தீட்சிதரும் சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மகாத்மா காந்தியின் ஆணைப்படி சற்றும் மகாத்மாவின் ஆணையிலிருந்து பிறழாமல் தன்னையொரு காந்தியத் தொண்டனாக ஆக்கிக் கொண்டார். எப்போதும் தூய கதராடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, எங்கு போவதென்றாலும் நடந்தே போவது என்ற கொள்கையைக் கடைசி வரை கடைபிடித்து வாழ்ந்தவர் தீட்சிதர்.

சுதந்திரத்துக்காகப் போராடிய காலத்தில் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய இவர் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை சட்டசபையில் மூன்று முறை உறுப்பினராக இருந்திருக்கிறார். அம்பாசமுத்திரம் தொகுதியிலிருந்து இவர் 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றவர் இவர். தமிழக அரசியலில் திரு காமராஜ் தலைமையை ஏற்றுக் கொண்டு உண்மையான காங்கிரஸ்காரராக திரு காமராஜ் காலத்திலும், பின்னர் அமைந்த திரு எம்.பக்தவத்சலம் அவர்கள் காலத்திலும் இவருடைய பங்களிப்பு சட்டசபையில் குறிப்பிடத்தக்கதொன்று. 1967 தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் தோற்று அந்த ஆண்டில் தி.மு.க.முதன்முறையாக அரசு அமைத்தபோதும், இவர் போட்டியிட்ட அம்பாசமுத்திரத் தொகுதி மக்கள் இவர்பால் காட்டிய நம்பிக்கை, அன்பு காரணமாக இவர் அபாரமான வெற்றியைப் பெற்றார்.

எந்த பதவிக்கோ அல்லது தனது பதவியைக் கொண்டு எந்தவிதமான ஆதாயங்களுக்கோ ஆசைப்படாமல் ஒரு துறவியைப் போல் வாழ்ந்தவர் தீட்சிதர். அரசாங்கத்திலாகட்டும், வெளியிலாகட்டும் தனது பதவி, அந்தஸ்து இவற்றைக் கொண்டு தனக்கோ அல்லது தனது வாரிசுகளுக்கோ எந்தவித ஆதாயத்தையும் தேடவும் இல்லை, மற்றவர்கள் தேடவும் விடவில்லை. அத்தனை கெடுபிடியான தூய வாழ்க்கையை வாழ்ந்தவர் இந்த முரட்டுக் கதருடை அணிந்த காங்கிரஸ்காரர்.

சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயர் தொடங்கிய பாரத்வாஜ ஆசிரமம், அவர் காலத்துக்குப் பிறகு கைமாறி இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் ஆளுமைக்குள் வந்திருக்கிறது. வ.வெ.சு.ஐயர் காலமான பின் இவருடைய மகன் திரு மகாதேவன் என்பவர் இங்கு மேலாளராகவும், விடுதி காப்பாளராகவும் இருந்து வந்திருக்கிறார். தேசிய பாரம்பரிய உறவு, சேவைக்காக மட்டுமே பயன்பட்டது, ஆதாயத்துக்காக அல்ல என்பது இவரது வாழ்வு காட்டுகிறது.

இவருடைய தொகுதி மக்கள் தங்கள் குறைகளுடன் இவரிடம் வந்துவிட்டால், உடனே அந்தக் குறைகளைக் களைய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வார். அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த பிரதிபலனையும் இவர் எதிர்பார்த்ததில்லை. சேரன்மாதேவியில் தாமிரவருணி ஆற்றைக் கடந்து செல்ல மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையை அங்கொரு பாலம் அமைத்து அவர்கள் சிரமத்துக்கு முடிவு கட்டினார். இவருடைய முன் முயற்சியால் கட்டப்பட்டப் பாலத்தைத் திறந்து வைக்க அப்போதைய சென்னை கவர்னர் ஜெயசாமராஜ உடையார் வந்தார். இந்தப் பாலத்தால் பயண தூரம் மிகக் குறைந்தது கண்டு மக்கள் பெருமகிழ்ச்சியடைந்தனர்.

சென்னை சட்டமன்றத்தில் இவர் பதவி வகித்த காலத்தில் சும்மா சென்று உட்கார்ந்துவிட்டு வரும் பழக்கம் இவரிடத்தில் கிடையாது. தினமும் இவருடைய பங்கேற்பு இருக்கும். அவை அத்தனையும் சட்டமன்ற ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. சட்டமன்றம் நடக்கும் நாட்களில் தினமும் செய்தித் தாட்களில் இவர் கேட்ட கேள்வி அல்லது எழுப்பிய பிரச்சினைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். அந்த அளவுக்குத் தன்னை மக்கள் சேவையில் இணைத்துக் கொண்டவர் கோமதிசங்கர தீட்சிதர். வாழ்க கோமதிசங்கர தீட்சிதர் புகழ்!