Followers

Friday, November 30, 2012

வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி

                                      ரைட் ஆனரபிள் வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி

வலங்கைமான் சங்கர நாராயண ஸ்ரீனிவாச சாஸ்திரி காங்கிரசின் தொடக்க கால மிதவாத காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவர். இந்த வரிசையில் வீரம் செறிந்த பல புரட்சிக்காரர்களைப் பற்றியெல்லாம் எழுதிவிட்டு இப்போது முந்தைய மிதவாத காங்கிரஸ் தலைவர்களின் வரலாற்றைக் கொடுத்து வருகிறேன். இவர்களும் தீவிரவாத காங்கிரஸ்காரர்களுக்கு எந்த விதத்திலும் தேசபக்தியில் குறைந்தவர்கள் அல்ல. மிதவாதிகள் என்று பார்த்தால், அவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்து, பதவி இவற்றில் இருந்தவர்களாகத்தான் இருக்கும். அவர்கள் தங்கள் சமூக நிலைமையிலிருந்து இறங்கி வந்து சாலையில் நின்று போராடுவதில்லை. தங்கள் அறிவுத் திறன், வெள்ளை அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதி இவற்றைக் கொண்டு மேல் நிலையில் இருந்து பாடுபட்டவர்கள். ஆகவே தீவிர காங்கிரசார், மிதவாத காங்கிரசார் இடையே எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் வரலாற்றையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமெங்கிற நோக்கில் இவைகள் தரப்படுகின்றன. இந்த சுய விளக்கத்தோடு வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி எனும் அறிஞரும் தேசபக்தருமான இவரைப் பற்றிய கட்டுரையைத் தருகிறேன்.

வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி என்று சொன்னவுடன் ஆங்கிலத்தில் இவரை "வெள்ளி நாக்கு சாஸ்திரி" என வழங்குவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காரணம் இவரது ஆங்கிலப் பேச்சாற்றல். பிறக்கும் போதே அந்தத் திறமையுடன் பிறந்தவர் என்பதைக் குறிக்க அவரைப் பற்றி அப்படிச் சொல்லி வந்தார்கள். அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தர், வட்டமேஜை மா நாட்டுப் பிரதி நிதி, காங்கிரஸ் இயக்கத்தில் தொடர்பு என்று பல்முனை ஆற்றல் படைத்த இவர் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் எனும் சிற்றூரில் மிகச் சாதாரண புரோகிதத் தந்தைக்கு 1869 செப்டம்பர் 22இல் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தை சங்கர நாராயண சாஸ்திரி.அவர் இருந்த ஊரிலேயே ஆரம்பக் கல்வி கற்ற இவர் பின்னர் கும்பகோணம் சென்று அங்குள்ள நேட்டிவ் உயர் நிலைப் பள்ளியிலும், தொடர்ந்து கல்லூரி படிப்பை கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்று 1887இல் பட்டம் பெற்றார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இவர் புலமை பெற்று விளங்கினார். பின் சிலகாலம் சேலம் முனிசிபல் கல்லூரியில் ஆசிரியர் பணியில் ஈடுபட்டார். பின்னர் சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர் நிலைப் பள்ளியில் 1894இல் தலைமை ஆசிரியராகவும் இருந்தார். அங்கு இவர் 1902 வரை சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றி யிருக்கிறார். அந்த காலகட்டத்தில் இவருடைய ஆங்கிலப் புலமை நாட்டுக்குத் தெரிய வந்தது. நிர்வாகத்திலும் முத்திரை பதித்தவர் ஸ்ரீனிவாச சாஸ்திரி. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பின்னாளில் துணை வேந்தராகப் பணியாற்றி பெருமை சேர்த்தவர். இவர் பணியாற்றிய காலத்தில் அங்கு பெரும் புலவர்கள் குறிப்பாக ரா.ராகவ ஐயங்கார், சோமசுந்தர பாரதியார் போன்றவர்களும் இருந்திருக்கிறார்கள்.

1885இல் இவர் பார்வதி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இவருடைய குடும்பத்தில் இவருடைய பெயர்த்தி கவுசல்யா பிரபலமான விஞ்ஞானியான சர்.சி.வி.ராமனின் மருமான் எஸ்.ராமசேஷன் என்பவரை மணம் செய்து கொண்டார்.

இவர் அரசியலுக்கு வந்தது 1905ஆம் வருடம். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் காங்கிரசில் மகாத்மா காந்தி வரவில்லை. திலகர், கோகலே போன்றவர்கள் இருந்தாலும் நமது கோரிக்கை பரிபூரண சுதந்திரம் என்ற அறிவிப்பு வராத காலம். சுதந்திரத்தை அடைய எந்த வழியில் போராடப் போகிறோம் என்று அறியாத நிலையில் அப்போதைய காங்கிரஸ் பிரிட்டிஷ் அரசருக்கு வாழ்த்துப்பா பாடி மகா நாடுகள் நடத்தி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்த மிதவாத காங்கிரஸார் வாழ்ந்த காலம். இதை மனத்தில் வைத்துக் கொண்டால் நிலைமை நன்கு புரிந்து கொள்ளலாம்.

1908இல் இவர் காங்கிரசில் உறுப்பினர் ஆனார். இது 1922 வரை தொடர்ந்தது. பின்னர் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போது இவர் காங்கிரசிலிருந்து விலகிவிட்டார். இந்தியன் லிபரல் கட்சி என்றோரு கட்சியை இவரோடு கருத்து ஒற்றுமை உடையவர்களோடு சேர்ந்து தொடங்கினார். பின்னாளில் இந்தியா மத அடிப்படையில் பிரிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தார்.

சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் இவர் 1913 முதல் 1916 வரை உறுப்பினராக இருந்தார். 1916 முதல் 1919 வரை இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் எனும் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1920 முதல் 1925 வரை கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் எனும் அமைப்பிலும் இவர் பணியாற்றினார்.
முதல் உலக யுத்தத்துக்குப் பிறகு உருவான சர்வதேச அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸ் இது இப்போதைய ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது. அதில் இவர் இந்தியப் பிரதி நிதியாக இருந்தார். இந்தியாவில் நடக்கும் வழக்குகள் இந்திய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்குப் போக வேன்டும். அந்த பிரிவி கவுன்சிலில் இவர் உறுப்பினராக இருந்தார். அதுமட்டுமல்லாமல் தென் ஆப்பிரிக்காவின் பிரதி நிதியாகவும் இருந்திருக்கிறார்.

இப்போதெல்லாம் மிகப் பெரிய நகரங்களில் வாழ்வோர் மட்டுமே ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக பேசுகிறார்கள் என்கிற எண்ணம் உண்டு. அப்போது கும்பகோணத்தில் அரசு கல்லூரியில் படித்த ஸ்ரீனிவாச சாஸ்திரியின் ஆங்கிலம், ஆங்கிலேயர்களே கேட்டு வியக்கும் வண்ணம் இருந்ததாகப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். சரளமாக ஆங்கிலத்தில் பேசுவார். இதனையொட்டியே வெள்ளி நாக்கு படைத்தவர் எனப் பெயர் பெற்றார். மகாத்மா காந்தியோடும், கோபாலகிருஷ்ண கோகலே யுடனும் இவருக்கு நல்ல பழக்கமும் தொடர்பும் இருந்தது. மகாத்மா இவரைத் தன் அண்ணன் என்று அழைப்பது வழக்கம். பிரிட்டிஷ் நகரங்கள் பல இவருக்குப் பல விருதுகளைக் கொடுத்து கெளரவித்திருக்கின்றன.

சென்னை ஆசிரியர்கள் கில்டு எனும் அமைப்பை இவர் தோற்றுவித்தார். தமிழ் நாட்டின் கூட்டுறவு இயக்கம் உருவாகக் காரணகர்த்தர்களில் ஒருவராகவும் இவர் இருந்தார். திருவல்லிக்கேணி அர்பன் கோ ஆபரேடிவ் சொசைட்டி எனப்படும் டியுசிஎஸ் 1904 உருவானது இவரது முன்முயற்சியால்தான்.
1906இல் இவர் கோபாலகிருஷ்ண கோகலேயைச் சந்தித்தார். அவர் தொடங்கிய சர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டியில் இவர் உறுப்பினர் ஆனார். 1915இல் இவர் அதன் தலைவராகவும் ஆனார். 1908 முதல் 1911 வரை இவர் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்தார். 1913இல் இவர் சென்னை லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் உறுப்பினர் ஆனார். பிரிட்டிஷ் இந்திய அரசு பிறப்பித்த ரவுலட் சட்டத்தை இவர் தீவிரமாக எதிர்த்தார். இந்தச் சட்டத்தின்படி அரசு யாரை வேண்டுமானாலும் விசாரணையின்றி சிறையில் அடைக்க முடியும். இம்பீரியல் லெஜிஸ்லேடிவ் கவுன்சிலில் சாஸ்திரி இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆற்றிய உரை வரலாற்றில் போற்றப்படும் உரைகளில் ஒன்று.

1930-31இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மகா நாட்டில் இவரும் மகாத்மா காந்தியுடன் கலந்து கொண்டார். மகா நாடு தோல்வியில் முடிந்தாலும் 1935இல் காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்தார். இவர் 1946 ஏப்ரல் 17ஆம் தேதி தனது 76ஆம் வயதில் சென்னை மைலாப்பூரில் தனது இல்லத்தில் காலமானார். வாழ்க ஸ்ரீனிவாச சாஸ்திரி புகழ்!

1 comment:

Please give your comments here