Followers

Friday, January 7, 2011

என்னுடைய வலைப்பூக்கள்

நான் என்னுடைய வலைப்பூக்கள் நான்கில், ஒன்றில் கம்பராமாயணம் உரைநடை, இரண்டாவதில் பாரதியார் குறித்து நான் நடத்தும் பாடத்திட்டத்தின் பிரதிகள், மூன்றாவதில் தமிழக சுதந்திரப் போர் தியாகிகள் வரலாற்றுச் சுருக்கம், நான்காவதில் பொதுவான கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறேன். இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வம் பலருக்கும் கிடையாது, ஆகவே இவற்றை அதிகமாகப் படிக்க யாரும் முன்வர மாட்டார்கள் என்று சிலர் கருதினார்கள். படிப்பவர் படிக்கட்டும், அப்படிப் படிப்பது உயர்வான இலக்கியங்களாக இருக்கட்டும் என்ற உணர்வில்தான் அவற்றை வெளியிட்டிருக்கிறேன். இதுவரை அவற்றைப் படிப்பவர் எண்ணிக்கை எனக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது. இளைஞர்களின் ஆர்வம் அவர்களுக்கு உருவாக்கித்தரப்படும் பாதை சரியானதாக இருந்தால் நிச்சயம் அவர்கள் அதில் பயணிப்பார்கள் என்பது என் கருத்து. நமது பண்பாட்டுக் காப்பியம் கம்பனின் இராமகாதையையும், மகாகவி பாரதியின் புதுமைக் கவிதைகளையும், நம் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரத் தியாகிகளையும் மதிக்கத்தெரியாதவர்கள் அல்ல நமது இளைஞர்கள் என்பது என் கருத்து. அது இப்போது நிதர்சனமாகத் தெரிந்து விட்டது. அவற்றைப் படித்த என் இனிய இளைய நண்பர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பதிவினைப் படிக்கின்ற அன்பர்கள் என்னுடைய மற்ற வலைத்தளங்களையும் படித்துத் தங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். தங்கள் ஆலோசனைகள் எனக்கு ஊக்கத்தைத் தரும்.
http://www.kambaramayanam-thanjavooraan.blogspot.com
http://www.bharathipayilagam.blogspot.com
http://www.ilakkiyapayilagam.blogspot.com
http://www.tamilnaduthyagigal.blogspot.com

இதுவரை கொடுக்கப்பட்டுள்ள தியாகிகள் வரலாறு:

1. மேயர் டி.செங்கல்வராயன்
2. தூத்துக்குடி பால்பாண்டியன்
3. முத்துவிநாயகம்
4. ஏ.பி.சி.வீரபாகு
5. எம்.சங்கையா
6. கல்கி டி.சதாசிவம்
7. ஸ்ரீநிவாச ஆழ்வார் - பங்கஜத்தம்மாள்
8. எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ்
9. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்
10. மதுரை பழனிகுமாரு பிள்ளை
11. ஹாஜி முகமது மெளலானா சாகிப்
12. தஞ்சை ஏ.ஒய்.எஸ்.பரிசுத்த நாடார்
13. அகினி திராவக அபிஷேகம்
14. கவி கா.மு.ஷெரீப்
15. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி
16. நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
17. பி.சீனிவாச ராவ்
18. காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
19. டாக்டர் ருக்மிணி லக்ஷ்மிபதி
20. வீரன் வாஞ்சிநாதன்
21. ந.சோமையாஜுலு
22. ஓமாந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்
23. ப.ஜீவானந்தம்
24. பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
25. ஐ.மாயாண்டி பாரதி
26. புதுச்சேரி சுப்பையா
27. ஜி.சுப்பிரமணிய ஐயர்
28. கோடை எஸ்.பி.வி.அழகர்சாமி
29. வத்தலகுண்டு பி.எஸ்.சங்கரன்
30. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
31. சுப்பிரமணிய சிவா
32. எம்.பி.டி.ஆச்சார்யா
33. ம.பொ.சிவஞான கிராமணியார்
34. என்.எம்.ஆர்.சுப்பராமன்
35. மதுரை ஏ.வைத்யநாத ஐயர்
36. கோவை ஐயாமுத்து
37. டாக்டர் வரதராஜுலு நாயுடு
38. வீரன் செண்பகராமன் பிள்ளை
39. சேலம் ஏ.சுப்பிரமணியம்
40. குமராண்டிபாளையம் ஏ.நாச்சியப்பன்
41. சீர்காழி சதி வழக்கு
42. திருவையாறு கலவர வழக்கு
43. தேவையா திருமணங்களில் ஆடம்பரம்
44. வ.ரா.
45. வ.வெ.சு.ஐயர்
46. வ.உ.சிதம்பரம் பிள்ளை
47. திரு வி.கலியாணசுந்தரனார்
48. மகாகவி பாரதியார்
49. ராஜாஜி
50. ஜி.சுப்பிரமணிய ஐயர் (2வது முறை)
51. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்
52. திருப்பூர் பி.எஸ்.சுந்தரம்
53. பி. வேலுச்சாமி
54. தர்மபுரி குமாரசாமி
55. க.சந்தானம்
56. புலி மீனாக்ஷிசுந்தரம்
57. சீர்காழி சுப்பராயன்
58. கு. ராஜவேலு
59. மட்டப்பாறை வெங்கட்டராமையர்
60. முனகல பட்டாபிராமையா
61. பெரியகுளம் இராம.சதாசிவம்
62. திண்டுக்கல் மணிபாரதி
63. தேனி என்.ஆர்.தியாகராஜன்
64. பழனி கே.ஆர்.செல்லம்
65. மதுரை டாக்டர் ஜார்ஜ் ஜோசப்
66. மதுரை ஸ்ரீநிவாச ஐயங்கார்
67. பி.எஸ்.சின்னதுரை
68. செங்காளியப்பன்
69. கே.வி.ராமசாமி, கோவை
70. தியாகி வைரப்பன் வேதாரண்யம்
71. திருச்சி டி.வி.சுவாமிநாத சாஸ்திரி
72. திருச்சி பி.ரத்னவேல் தேவர்
73. திருச்சி டி.எஸ்.அருணாசலம்
74. பழனி பி.எஸ்.கே.லக்ஷ்மிபதிராஜு
75. ஸ்ரீமதி செளந்தரம் ராமச்சந்திரன்
76. சர்தார் வேதரத்தினம் பிள்ளை
77. கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள்
78. கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி
79. பாஷ்யம் என்கிற ஆர்யா
80. திருப்பூர் குமரன்
81. காம்ரேட் பி.ராமமூர்த்தி
82. பி.கக்கன்
83. எம்.பக்தவத்சலம்
84. கு.காமராஜ்
85. சி.பி.சுப்பையா, கோவை
86. கோவை என்.ஜி.ராமசாமி
87. கோவை சுப்ரி என்கிற சுப்ரமணியம்
88. தீரர் சத்தியமூர்த்தி பற்றி காமராஜ்
89. தோழர் கே.டி.கே. தங்கமணி


                                   Thanjavur AITUC Leaders paying homage to KTK

தோழர் கே.டி.கே. தங்கமணி

தோழர் கே.டி.கே. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இந்த பார் அட் லா முடித்த வழக்கறிஞர் ஒரு பிரபல கம்யூனிஸ்டாக இருந்தவர். பல தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவர். இவர் லண்டன் சென்று பார் அட் லா படித்து இந்தியா திரும்பி கம்யூனிச இயக்கத்திலிருந்த ஆர்வத்தாலும், சுதந்திரப் போரில் ஈடுபாடு ஏற்பட்டதாலும் தன் இறுதி மூச்சு வரை கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற் சங்கம் என்று வாழ்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தனி முத்திரை பதித்தவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பிரச்சினைகளுக்காக வாதிட்டவர். தோற்றத்தில் எளிமை, பழகுதற்கு இனிமை, நட்பில் நேர்மை, எதிலும் பதட்டப்படாமல் பொறுமை காத்த சிறந்த தலைவர்.

ஒரு முறை நான் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு இரவு பத்து மணிக்கு பேருந்தில் பயணம் செய்தேன். அப்போது திருச்சியில் அகில இந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் மகாநாடு ஒன்று நடந்தது. அதில் கர்நாடக மாநில போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்திலிருந்து என் நண்பர் H.V.அனந்தசுப்பா ராவ் என்பவர் கலந்து கொண்டார். அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பும் போது நான் பயணம் செய்த பஸ்சில் சில இருக்கைகள் முன்பாக தோழர் கே.டி.கே. யும், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத் தலைவர் லட்சுமணன் என்பவரும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். மூவர் அமரும் இருக்கையில் ஜன்னல் ஓரத்தில் எனக்குத் தெரிந்த ஒரு இளைஞரும், நடுவில் தோழர் கே.டி.கே.யும் உட்புறம் லட்சுமணனும் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த இளைஞர் தோழர் கே.டி.கே.யை யாரென்று தெரியாமல் அவரிடம் ஏதோவொரு அற்ப விஷயத்துக்குச் சண்டை செய்யத் தொடங்கி விட்டார். நானும் என்னுடன் பயணம் செய்துகொண்டிருந்த சதாசிவம் என்ற நண்பரும், அந்த இளைஞன் சண்டையிடுவது தோழர் கே.டி.கே. என்று தெரிந்ததும் ஓடிப்போய் அந்த இளைஞனிடம், அவரை யாரென்று நினைத்து இப்படி நடந்து கொள்கிறாய்? என்று அவரைப் பற்றிச் சொல்லி அந்த இளைஞனை அங்கிருந்து என் இருக்கையில் உட்காரச் சொல்லிவிட்டு நான் போய் அந்த இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு வந்தேன். அப்போது அவர் பல விஷயங்களைப் பேசினார். சற்றும் அந்த நிகழ்ச்சிக்காகக் கோபப் படாமல் என்னை சமாதானப் படுத்தினார். அருகில் இருந்த லட்சுமணன் அந்த இளைஞனிடம் இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பா! கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவர். இவர் விரும்பினால் விமானத்தில் செல்ல இவரிடம் அனுமதி இருக்கிறது. அவரிடம் இப்படி நடந்து கொள்கிறாயே என்று அமைதியாகக் கேட்டார். கே.டி.கே. அவர்கள் அதற்கும் அலட்டிக் கொள்ளாமல் சொன்னார், இளைஞர்கள் பாவம், அவர்களுக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை. இளமைத் துடிப்பு விடுங்கள் என்றார். இப்படியும் ஒரு தலைவரா?

அப்படிப்பட்ட தோழர் கே.டி.கே. "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலரில் "கட்டி வைத்துச் சுட்ட கொடுமை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். "தினமணி"க்கு நமது நன்றியறிதலைக் கூறி அந்தக் கட்டுரையை அனைவரும் மறுபடி படிக்கும்படி இங்கு கொடுத்திருக்கிறேன். படியுங்கள். ஒரு சிறந்த தேசாபிமானி, பிரபல கம்யூனிஸ்ட், தேசபக்தன் அவருடைய நினைவைப் போற்றுவோம்.

கட்டி வைத்துச் சுட்ட கொடுமை - கே.டி.கே. தங்கமணி

விடுதலைப் போராட்டத்தில் நெஞ்சை விட்டு நீங்காத பல முக்கிய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி நிறைய சொல்லியும், எழுதியும் வந்துள்ளேன்.

என்னைப் பொது வாழ்க்கையின் உள்ளே இழுத்து நிறுத்திய பழைய சம்பவத்தை நினைவு கூரலாம் எனக் கருதுகிறேன்.

லண்டனில் சட்டம் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றதும், மலேயா சென்றேன். அங்கேயே எனக்குத் திருமணமும் நடந்தது. இரண்டு ஆண்டுகள் வரை அங்கு தங்கி தொழில் நடத்திக் கொண்டிருந்தேன். இரண்டாம் உலகப்போர் வெடித்ததும் எனது மாமனார் குடும்பம் இந்தியா திரும்பியது.

எனது மாமனாரின் சொந்த வீடு காரைக்குடியை அடுத்துள்ள பள்ளத்தூர் அருகே மணச்சை கிராமத்தில் இருந்தது. மாமனாரின் உடல்நிலை நன்றாக இல்லை. அவருடனே நானும் தங்கியிருந்தேன். பள்ளத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக ராமையா என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது.

அப்போது 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின் காரணமாகக் கடும் பஞ்சம் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் போராடிக் கொண்டிருந்தார்கள். சிவகங்கையில் அரசுக் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது.

தேவகோட்டையில் இருந்த சப் கோர்ட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். திருவாடனை நீதி மன்றத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். போலீஸ் எதுவும் செய்யத் திராணி இல்லாமல் முடங்கிப் போனது. ஏனைய அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்பட முடியவில்லை.

இன்றைக்கு சிவகங்கை மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் என்றழைக்கப்படும் மூன்றும் அன்றைக்கு ஒரே மாவட்டமாக இருந்தது. கிழக்கு ராமநாதபுரத்தில் மூன்று மாத காலமாக அரசு என்று எதுவும் இல்லை. மக்களே ஆட்சி நடத்தினார்கள். இந்த எழுச்சியை நசுக்க வெளியிலிருந்து பிரிட்டிஷ் அரசு போலீசைக் கொண்டு வந்தது.

எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர்கள் எல்லோரும் வேட்டையாடிப் பிடிக்கப்பட்டனர். இதில் முக்கியமானவர் சித்தூர் சிவஞானம். அவரும் கைது செய்யப்பட்டார். சிவஞானத்தைக் கொன்றுவிடுமாறு அரசாங்கம் தகவல் தந்துள்ளதாக மிகுந்த மனவருத்தத்தோடு சப் இன்ஸ்பெக்டர் ராமையா என்னிடம் கூறினார். கைதானவரை எப்படிக் கொல்ல முடியும் என்றேன். கோர்ட்டுக்குக் கொண்டு போகும் வழியில் தப்பித்துச் சென்றதாகவும் அப்போது போலீஸ் சுட்டதாகவும் அதில் இறந்து போனதாகவும் ரிப்போர்ட் தரச் சொல்லியிருக்கிறார்கள் என்றார் அவர்.

"அப்படிக் கொன்று விடுவார்களா" பதைத்துக் கேட்டேன்.

"காலையிலேயே கட்டி வைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்" என்றார்.

எனக்குள் இந்தச் செய்தி இடியாக இறங்கியது. நான் ஐந்தாண்டு காலம் இங்கிலாந்தில் தங்கியவன். அவர்களின் சட்டம், நீதி, நியாயங்கள் பற்றியெல்லாம் கேட்டு, படித்து, தேர்வு எழுதியவன். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செய்கை அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை எனக்குத் திறந்து காட்டியது.

நான் மணச்சையிலிருந்து மதுரை வந்தேன். வழக்கறிஞர் கே.பி.கோபாலனின் அலுவலகத்தில் சேர்ந்தேன். திருவாடனை, சிவகங்கை, தேவகோட்டை எழுச்சியில் ஈடுபட்டவர்களை விசாரிப்பதற்காக அரசு ஒரு சட்டத்தின் மூலம் தனி நீதிமன்றம் அமைத்தது. இதில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறுபவர்கள் மட்டுமே அப்பீல் செய்ய முடியும் என்று சட்டத்திலேயே கூறப்பட்டிருந்தது.

மதுரை கோர்ட்டுக்கு நான் வழக்கம் போல் சென்றபோது ஒருநாள் பெரும் கூட்டமாக கைதிகளை நிறுத்தி வைத்திருந்தனர். விசாரித்தபோது அது திருவாடனை வழக்கு என்று தெரிந்தது. நான் நேரே அவர்களிடம் சென்றேன். 'சித்தூர் சிவஞானத்தின் உறவினர்கள் யாரேனும் இருக்கிறீர்களா" என்று கேட்டேன். ஒருவர் 'என் அண்ணன்தான் சிவஞானம்' என்றார். அவர் பெயர் ஆறுமுகம்.

உடனே ஆறுமுகத்தின் சார்பில் நான் ஆஜராவதாகக் கூறி ஸ்பெஷல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். வழக்கறிஞர்கள் யாரும் வழக்கில் ஆஜராகத் தயாராக இல்லை. அரசுக்கு எதிரான கொடுங்குற்றம் என்று பயம் என்றாலும் அதையும் மீறி கே.பி.கோபாலனின் ஜூனியர் எஸ்.டி.நாராயணசாமி, தர்மராஜ் சந்தோஷம், சேதுராமன் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராயினர்.

இதில் சீனியர் ஒருவரின் வழிகாட்டல் தேவையென்று சென்னையில் இருந்த பிரபல கிரிமினல் லாயர் வி.வி.சீனிவாச ஐயங்காரை அணுகினோம். அவரும் உடன்பட்டார்.

சம்பவமே நடக்கவில்லை என்று எதிர்வழக்காட முடியாது. எனவே, சம்பவத்தில் கைதிகள் யாரும் ஈடுபடவில்லை என்று வாதாடுங்கள் என்று அவர் ஆலோசனை சொன்னார். கைதிகள் அனைவரையும் தாடி வளர்க்குமாறு சொன்னோம். அடையாளத்தை மறைக்கவே இந்த ஏற்பாடு.

ஆறுமாத காலம் வழக்கு நடந்தது. ஸ்பெஷல் கோர்ட் முப்பது பேரை விடுதலை செய்தது. நான் ஆஜரான ஆறுமுகமும் விடுதலை செய்யப்பட்டார். நூறு பேருக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் ஏழு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் எல்லோரும் சாதாரண ஜனங்கள். யாரும் வசதி படைத்தவர்கள் இல்லை. படிப்பறிவும் கிடையாது. தேவர்களும், ஹரிஜனங்களும்தான் பெரும்பாலானவர்கள்.

இவர்கள் ஒரு பெரும் ஏகாதிபத்திய அரசி எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர். ஏராளமான இன்னல்களையும் சித்திரவதைகளையும் இன்முகத்தோடு ஏற்றனர்.

தேசத்திற்காக இவ்வளவு பெரிய தியாகத்தைச் சாமானிய மக்கள் செய்யும்போது நானும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் விதையூன்றியது.

சோவியத் யூனியன் நண்பர்கள் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் அப்போது இயங்கியது. பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி அதில் அகில இந்தியத் தலைவராக இருந்தார். திரு வி.க. மாநிலத் தலைவர். நான் மதுரை மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

தமிழ்த் தென்றல் திரு வி.க. சென்னையில் பல தொழிற் சங்கங்களுக்குத் தலைவராக இருந்தார். அவர்தான் எனக்கு, காந்திஜி, மார்க்ஸ், சிங்காரவேலர் போன்றவர்களின் சிறப்பு பற்றி விளக்கிச் சொன்னவர். "உனது குடும்பத்தைத் தொழில் செய்து காப்பாற்றும் நிலையில் நீ இல்லை. எனவே பொது வாழ்க்கைக்கு வா" என்று அழைப்பு விடுத்தவரும் அவர்தான்.

அவரைப் போலவே நானும் மதுரையில் தொழிற்சங்கப் பணியைத் தொடங்கினேன். மோட்டார் தொழிலாளர் சங்கத்தில் பணி தொடங்கியது. பல போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை செல்ல நேர்ந்தது.

1946ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எங்கள் மீது 'சதி வழக்கு' போடப்பட்டது. தொழிற்சங்கங்களை அமைத்து பிரிட்டிஷ் சர்க்காரைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் குற்றம் சுமத்திக் கைது செய்தனர்.

1947 ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். சிறையிலிருந்த தொழிலாளர்கள் எங்களைப் பெரும் ஊர்வலமாகத் திரண்டு அழைத்து வந்தனர். மதுரை புட்டுத் தோப்பில் பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. பி.ராமமூர்த்தி, என்.சங்கரையா, நான் மூவரும் அதில் பேசினோம்.

அப்போது இந்தி ஆசிரியரும் சிறந்த கம்யூனிஸ்டுமான மணவாளன், சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றி ஒரு பாடலை எழுதினார். அன்று மதுரை வந்திருந்த இசைமேதை எம்.பி.சீனிவாசன் அதற்கு மெட்டமைத்தார். ஐ.வி.சுப்பையா பாடினார். மூவருமே சுதந்திரப் போராட்ட வீரர்கள்.

விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே - தோழா! தோழா!!
வீரர் உமக்கே வணக்கம், வணக்கம்
காரிருள் சூழ்ந்த கரிய வானத்தில்
தாரகை போல ஜொலித்து நிற்கின்றீர்
போரிடும் எமக்குப் புத்துயிர் தாரீர் - தோழா,
இந்திய நாட்டின் விடுதலைப் போரில்
எண்ணற்ற வீரரை அர்ப்பணம் செய்தோம்
இதயக் கனவுகள் ஈடேறும், சத்யம் - தோழா
ஆயிரம் ஆயிரம் வீரர்கள் ரத்தம்
குடிதெழுந்தே நிற்கும் கோரச் சமூகம்
தர்த்தெறிவோம் ஜனசக்தியினாலே - தோழா!!

மறுநாள் காலை விடுதலையோடு விடிந்தது. மதுரையே கோலாகலமாக இருந்தது. பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருந்தனர். தெருவெல்லாம் ஜனத்திரள். பாரதியாரின் பாடல்களைப் பாடிய வண்ணம் சின்னச் சின்னதாய் நிறைய ஊர்வலங்கள்.

"எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு - நாம்
எல்லோரும் சமம் என்பதுறுதியாச்சு"

"பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை,
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்தெ கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே!"

ஆம்! இவைதான் அந்த மக்களின் இதயக் கனவுகள். சித்திரைத் திருவிழாவும் தீபாவளியும் சேர்ந்து ஒரே நாளில் கொண்டாடப்படுவது போல் தோன்றியது.

அன்று மாலையில் சுதந்திர தின விழா பொதுக் கூட்டத்தைத் தியாகி வைத்தியநாத ஐயர் ஏற்பாடு செய்திருந்தார். மதுரையின் பெரும் திடலான தமுக்கம் மைதானம் நிரம்பி வழிந்தது. நான் மணவாளனின் பாட்டைப் பாடச் சொன்னேன். 'விடுதலைப் போரினில்' - என ஐ.வி.சுப்பையா உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடினார். எல்லோரும் கண்ணீர் வழியக் கேட்டோம்.

பிறகு காங்கிரஸ் சார்பில் என்.எம்.ஆர்.சுப்பராமனும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நானும் நீதிக் கட்சி சார்பில் பி.டி.ராஜனும் உரையாற்றினோம். நாட்டுக்குச் சுதந்திரம் வந்தது. ஆனால் எங்களது சுதந்திரம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை.

1949இல் மீண்டும் கைது செய்யப்பட்டோம். பிரிட்டிஷ் ஆட்சியில்கூட அனுபவித்தறியாத கொடிய சித்திரவதைகளுக்கு ஆட்பட்டோம். சித்தூர் சிவஞானம் எப்படிச் சுட்டுக் கொல்லப்பட்டாரோ அதே பாணியில் பீபிகுளம் என்று தற்போது அழைக்கப்படும் மதுரை புறநகர்ப் பகுதியில் தியாகி மணவாளன் தப்பியோடும் போது சுடப்பட்டதாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஐ.வி. சுப்பையா மதுரை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து எனது கண்முன்பாகவே அணுஅணுவாக உயிர்விட்டார். இந்த 84 வயதில் கூட சிவஞானமும், மணவாளனும் எனது நம்பிக்கைகளை இதயக் கனவுகளை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.







தீரர் சத்தியமூர்த்தி பற்றி காமராஜர்

(தீரர் சத்தியமூர்த்தி காமராஜ் அவர்களுடைய தலைவர். தன்னுடைய தலைவர் குறித்து தொண்டர் காமராஜ் 1964இல் எழுதிய கட்டுரை இது. நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்)

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் 1919 என்று ஞாபகம். சத்தியமூர்த்தி அவர்கள் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக விருதுநகருக்கு வந்திருந்தபோது நான் ஒரு சாதாரணத் தொண்டனாக இருந்தேன்.. அப்போது எனக்கு வயது பதினேழோ பதினெட்டோ இருக்கலாம். அதுவரை சத்தியமூர்த்தியை நேரில் காணவோ, அவருடைய வெண்கலக் குரலைக் கேட்கவோ எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. எனவே அவரைத் தரிசிக்கும் ஆவலுடன் அந்தப் பொதுக்கூட்டத்துக்குப் போயிருந்தேன்.

அப்போதுதான் சத்தியமூர்த்தியை நான் முதன் முதலாகப் பார்த்தது. அதற்குப் பிறகு 1928ஆம் ஆண்டில் சி.ஆர்.தாஸ் தலைமையில் சுயராஜ்யா கட்சி தொடங்கப்பட்டபோது அந்தக் கட்சியின் கொள்கை பற்றி விவாதிப்பதற்காக முக்கியத் தலைவர்கள் எல்லோரும் மதுரையில் கூடினார்கள். அந்தக் கூட்டம் காலம் சென்ற தேசபக்தர் கே.ஆர்.வெங்கட்ராமையர் இல்லத்தில் நடைபெற்றது. நானும் அந்தக் கூட்டத்திற்குப் போயிருந்தேன். அச்சமயம் சத்தியமூர்த்தி சுயராஜ்யா கட்சியின் கொள்கைகளை விளக்கி மிகத் தெளிவாக ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். காங்கிரஸ் சட்டசபைக்குப் போக வேண்டுமென்பதுதான் சுயராஜ்யா கட்சியின் கொள்கை. அதுதான் சத்தியமூர்த்தியின் விருப்பமாகவும் இருந்தது. அந்தக் கூட்டத்தில் பலபேர் சட்டசபைப் பிரவேசத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவித்தார்கள். நான் கூட அப்போது சட்டசபைக்குப் போகக்கூடாது என்ற கட்சியைச் சேர்ந்தவனாகவே இருந்தேன்.

இந்த மதுரை கூட்டத்தின்போதுதான் எனக்கு சத்தியமூர்த்தி அவர்களுடன் நெருங்கிப் பழகவும் பேசவும் விவாதிக்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்புறம் தலைவர் அவர்களுடன் அடிக்கடி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதும் காங்கிரஸ் பிரசாரம் செய்வதுமே என் முழு வேலை ஆயிற்று.

அந்தக் காலத்தில் ஏ.ரங்கசாமி அய்யங்கார், எஸ்.சீனிவாச அய்யங்கார் போன்ற தலைவர்களின் பெயர்களே தமிழ்நாட்டில் பிரபலமாக விளங்கின. ரங்கசாமி அய்யங்காருக்கு சொந்தத்தில் பத்திரிகை இருந்ததால் அவர் பிரபலமடைவது சுலபமாக இருந்தது. சத்தியமூர்த்திக்கு அத்தகைய வசதி இல்லாததால் பெரும் தலைவர்களை யெல்லாம் மீறிக்கொண்டு முன்னணிக்கு வருவதற்கு அவர் அரும்பாடு பட வேண்டியிருந்தது.

முன்னணிக்கு வந்த பிறகோ அரசியல் தலைமையில் அவருக்கும் ராஜாஜிக்கும் இடையே போட்டி இருந்து கொண்டே இருந்தது.

இந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் ஒவ்வொன்றிலும் தீவிரமாக ஈடுபட்டுப் பல துன்பங்களையும் தண்டனைகளையும் அனுபவித்த தியாக சீலர்களில் சத்தியமூர்த்தி முக்கியமானவர். போராட்டம் சிறைவாசம் என்ற போதெல்லாம் சற்றும் தயங்காமல் உற்சாகத்தோடு முன் வந்து நின்ற சத்தியமூர்த்தி, பதவி என்று வரும்போது மட்டும் அதைத் தாமே அடைய வேண்டும் என்று எண்ணாமல் மற்றவர்களுக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவராயிருந்தார்.

சத்தியமூர்த்திக்குப் பதவி மீது ஆசையில்லை என்பது இதற்கு அர்த்தமில்லை. அவருக்கு விருப்பம் இருந்தும், தகுதி இருந்தும், சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வப்போது ஏற்பட்ட போட்டி காரணமாக அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்காமற் போய்விட்டன. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் அங்கம் வகிக்க வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டதுண்டு. ஆனால், அது கிடைக்காமலே போய்விட்டது. மந்திரி சபையில் இடம் பெற வேண்டுமென்ற அவருடைய விருப்பமும் நிறைவேறாமல் போய்விட்டது. இதற்கெல்லாம் யார் காரணம்? என்ன காரணம் என்பதை இப்போது ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை.

1930ஆம் ஆண்டில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது திருச்சி, வேலூர், அலிபுரம் ஆகிய மூன்று சிறைச்சாலைகளிலும் தேசபக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது சிறையிலுள்ள தொண்டர்கள் ஒன்றுகூடி ஓர் தீர்மானம் செய்தோம்.

விடுதலையாகி வெளியே போனதும் சத்தியமூர்த்தி அவர்களையே தலைவராக்க வேண்டுமென்று நான் வெளியிட்ட யோசனையைத் தொண்டர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

வெளியில் சென்றவுடன் மதுரையில் அரசியல் மகாநாடும், மாகாண காங்கிரஸ் கமிட்டித் தேர்தலும் நடைபெற்றன. சத்தியமூர்த்தியிடம் எங்கள் முடிவைத் தெரிவித்தபோது அவர் சரி என்று ஒப்புக்கொண்டார். ஆனால் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு அரைமணி முன்னதாக ராஜாஜியும் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் சத்தியமூர்த்தி தாம் போட்டியிட விரும்பவில்லையென்று விலகிக் கொண்டார். அகில இந்தியச் சூழ்நிலையில் இது தவறான கருத்தை உண்டாக்கும் என்று சத்தியமூர்த்தி எண்ணியதே அதற்குக் காரணம். அப்போது தலைமைப் பதவியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தது மட்டுமன்றி ராஜாஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் தாமே உப தலைவராக இருந்து வேலை செய்யவும் ஒப்புக் கொண்டார்.

1936இல் பொதுத் தேர்தல் வந்தபோது தேர்தல் பிரசாரத்துக்காக சத்தியமூர்த்தி அவர்களும் நானும் திருவண்ணாமலை பகுதியில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தோம். அதே சமயம் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது. குமாரசாமி ராஜா தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவதை காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலானவர்கள் விரும்பாததால் அவருக்கு எதிராக இன்னொருவரை நிறுத்த ஏற்பாடு செய்தனர். இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க உடனே மதுரைக்குப் புறப்பட்டு வரும்படி தலைவர் சத்தியமூர்த்திக்கு தந்தி கொடுத்திருந்தனர். அதைக் கண்ட சத்தியமூர்த்தி என்னைப் பார்த்து "குமாரசாமி ராஜாதான் விட்டுக் கொடுக்கட்டுமே! அவர் போட்டியிடவில்லையென்றால் பிரச்சினை தீர்ந்து விடும். நீ என்ன சொல்கிறாய்? ராஜாவுக்கு தந்தி கொடுத்து ஒதுங்கிக் கொள்ளச் சொல்லலாமா?" என்று கேட்டார்.

"இப்போதுள்ள நிலைமையில் குமாரசாமி ராஜா தலைவராயிருப்பதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. ஆகையால் நாம் இருவரும் மதுரைக்குச் சென்று ராஜாவையே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யலாம்" என்று கூறினேன். ஆனாலும் அது அவ்வளவு எளிதில் நடந்து விடக்கூடிய காரியமல்ல என்கிற பயம் என் மனதில் இருந்தது. தலைவரும் நானும் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று, கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். சத்தியமூர்த்தி அங்கத்தினர்கள் எல்லோரையும் அழைத்து, "என்னிடம் உங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறதா?" என்று கேட்டார்.

"இருக்கிறது" என்று அவர்கள் பதில் கூறியும் சத்தியமூர்த்திக்குத் திருப்தி ஏற்படாததால், "இப்படிச் சொன்னால் போதாது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சாட்சியாக நம்பிக்கை இருக்கிறது என்று கூறினால்தான் நம்புவேன்" என்றார்.

அவர் கேட்டுக் கொண்டபடியே எல்லோரும் உறுதி அளித்தனர். அதன் பிறகே அவர், "உங்களுக்குள் எந்தவித அபிப்பிராய பேதம் இருந்த போதிலும் குமாரசாமி ராஜாவையே நீங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதுதான் என் விருப்பம்" என்றார்.

சத்தியமூர்த்தியின் விருப்பப்படி குமாரசாமி ராஜாவையே தேர்ந்தெடுத்தார்கள்.

1936ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நேருஜி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோதும் அதற்கு முந்திய வருடங்களில் படேலும், ராஜேந்திரப் பிரசாத்தும் இங்கு வந்திருந்த போதும்தான், சத்தியமூர்த்திக்குத் தமிழ்நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதையும் மக்கள் அவரிடம் எத்தகைய அன்பும் மரியாதையும் கொண்டுள்ளார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.

1939ஆம் ஆண்டு இறுதியில் மாகாண காங்கிரஸ் தலைமைப் பதவியில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்தியமூர்த்தியும் போட்டியிட்டனர். அந்தப் போட்டியில் வகுப்புவாதம் குறுக்கிட்டதால் சத்தியமூர்த்தி தோல்வி அடைய நேர்ந்தது. மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி, அன்றிரவு என்னைப் பார்த்து, "காமராஜ்! அடுத்த வருஷம் உன்னைத்தான் காங்கிரஸ் தலைவனாகத் தேர்தலுக்கு நிறுத்தப் போகிறேன். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வகுப்பு வாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி. நீ தலைவனாக இரு, நான் உனக்குக் காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன்" என்றார்.

"அதற்கு இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த்துக் கொள்ளலாம்" என்று நான் பதில் கூறினேன்.

"அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன். இந்த முடிவு நிச்சயமானதுதான்" என்று உறுதியாகக் கூறிய சத்தியமூர்த்தி, தாம் கூறியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார். பலத்த போட்டி இருந்த போதிலும் சத்தியமூர்த்தியின் தலைமையில் ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய இந்த வெற்றி சத்தியமூர்த்திக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அந்த ஆண்டு நான் தலைவராக இருந்தபோது அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு ஆலோசனை கூறி என்னைப் பெருமைப்படுத்தியது என் வாழ்நாளில் நான் மறக்கமுடியாத நிகழ்ச்சியாகும்.

"வெள்ளையனே வெளியேறு!" போராட்டத்தின் போது சத்தியமூர்த்தியைக் கைது செய்து வேலூர் சிறைக்குக் கொண்டு போனார்கள். அப்போது நானும் அவருடன் வேலூர் சிறையில் இருந்தேன்.

1937இல் ராஜாஜி சென்னையில் முதன்முதலாக மந்திரிசபை அமைத்த போது சத்தியமூர்த்திக்கு அந்த மந்திரி சபையில் இடம் அளிக்கவில்லை.

சத்தியமூர்த்தி நிச்சயம் மந்திரி சபையில் இடம் பெறுவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். தலைவர் சத்தியமூர்த்தியும் எதிர்பார்த்தார். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. மந்திரிகளின் பெயர்ப் பட்டியல் பத்திரிகையில் வெளியான போது சத்தியமூர்த்தியின் பெயர் அதில் இல்லாததைக் கண்டு பலரும் ஏமாற்றத்துக் குள்ளாயினர்.

இந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் ஒவ்வொன்றிலும் தீவிரமாக ஈடுபட்டுச் சிறைவாசம் அனுபவித்த தியாக சீலர்கலில் சத்தியமூர்த்தி முக்கியமானவர்.

தேசவிடுதலைக்காகப் போராடி உடல்நலம் குன்றி உயிர்த் தியாகம் செய்த அருமைத் தலைவர் சத்தியமூர்த்தி இந்த நாட்டின் விடுதலையைக் கண்ணால் காணாமலேயே மறைந்து விட்டார்.

சென்னைக் கோட்டையில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்திருக்க வேண்டிய அந்தத் தியாக புருஷர், கோட்டையில் சுதந்திரக் கொடி பறப்பதைப் பார்க்காமலே போய்விட்டார்.

தீரர் சத்தியமூர்த்தியின் நினைவு என் உள்ளத்தில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். அவருடைய கணீரென்ற வெண்கல சாரீரம் என் செவிகளில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.


ராம்நாத் கோயங்கா

(தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய பத்திரிகைகளின் அதிபர். இந்திய சுதந்திரப் போரில் பல அதிசயிக்கத்தக்க காரியங்களைச் செய்து புகழ் பெற்றவர். இந்திரா காந்திக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்கள் நடத்திய இரண்டாவது சுதந்திரப் போர் எனப்பட்ட புரட்சியின் ஆணி வேராக இருந்து செயல்பட்டவர். பத்திரிகைகளுக்கு எதிரான பிரிட்டிஷ் மற்றும் இந்திரா காலத்து அடக்குமுறைகளை எதிர்த்து நின்றவர். இவரைப் பற்றி இவரிடம் பணிபுரிந்த திரு ரா.அ.பத்மநாபன் தினமணி சுதந்திர தின பொன்விழா மலரில் ஒரு கட்டுரை எழுதினார். அதனை இப்போது மறுபடி படியுங்கள். நன்றி: திரு ரா.அ.பத்மநாபன் & 'தினமணி")

அக்கிரமத்தை அம்பலப்படுத்திய கோயங்கா

"தினமணி", "இந்தியன் எக்ஸ்பிரஸ்" அதிபர் ஸ்ரீ ராம்நாத் கோயங்கா சிறந்த தேசபக்தர். தேச பக்தரிலும், நிகரற்ற துணிச்சல் கொண்டவர். ஒவ்வொரு சமயம், வேறு யாருக்குமே தோன்றாத ஒரு செயலைத் தைரியமாகத் தன்னந்தனியே செய்து முடித்து நாட்டின் மதிப்பை உயர்த்தும் திறன் படைத்தவரும்கூட.

1942-ஆம் ஆண்டு நமது நாட்டின் அரசியல் சரித்திரத்தில் நெருக்கடியான ஆண்டு. அப்போது இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்தது. சர்வாதிகாரிகளான ஹிட்லரும், முசோலினியும் அவர்களது கிழக்குக் கோடிக் கூட்டாளியுமான ஜப்பான் பிரதமர் டோஜோவும் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தார்கள். பிரிட்டனும், பிரான்சும் பல தோல்விகளைத் தழுவி வந்தன. மக்கள் சுதந்திரத்துக்காகப் போரிடுவதாக பிரிட்டன் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியாவுக்குச் சுதந்திரம் தரவில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான இந்தியர்களைப் படை திரட்டி போரில் ஈடுபடுத்தி இந்திய சிப்பாய்களின் ரத்தத்தால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காக்க முயன்று வந்தது.

இந்தியப் படை வீரர்களின் தீரத்துக்கும் போர்த்திறனுக்கும் நிறையப் பாராட்டுக் கிடைத்தது. ஆனால், பிரிட்டனோ, "சண்டை முடிந்த பின் பொறுப்பாட்சி தருவதைப் பற்றிப் பார்க்கலாம்" என்று மழுப்பி வந்தது.

இந்த நிலையில் பொறுமையின் பூஷணமான மகாத்மா காந்தியும் பொறுமை இழந்தார். "இனி பொறுக்க முடியாது. வெள்ளையனே வெளியேறு. இந்திய மக்களே, சாவு நேர்ந்தாலும் சரி, விடாமல் போரிடுங்கள்" என்று அறைகூவல் விடுத்தார்.

அவ்வளவுதான், நாடெங்கும் பிரிட்டனுக்கு எதிராக மக்கள் திரண்டெழுந்தார்கள். பிரிட்டிஷ் யுத்த முயற்சிக்கெதிராக குக்கிராமங்கள் முதல் தலைநகரம் வரை ஒரே எதிர்ப்பு. லட்சோபநட்சம் மக்களைச் சிறையில் தள்ளினார்கள்.

பேச்சுச் சுதந்திரமோ, எழுத்துச் சுதந்திரமோ, பத்திரிகை சுதந்திரமோ ஏதும் இல்லை. பாரதமே ஒரு பெரிய சிறைச் சாலையாக விளங்கியது.

இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் கூடி என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார்கள். பிரிட்டிஷ் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முகமாக நாட்டிலுள்ள எல்லாப் பத்திரிகைகளும் கால வரையின்றி மூடிவிட வேண்டும் என்றார் காந்தியடிகள். தமது "ஹரிஜன்" முதலிய பத்திரிகைகளையும் அவ்வாறே மூடிவிட்டார். மற்ற பத்திரிகைகளோ ஒரு நாள் அடையாள நிறுத்தம் செய்தால் போதுமென தீர்மாந்திதன.

ராம்நாத் கோயங்காவோ காந்தியடிகளின் விருப்பப்படி நடப்பதே சிறந்ததென தமது பத்திரிகைகள் எல்லாவற்றையும் காலவரையின்றி நிறுத்திவிட்டார்.

ஆனாலும், நாடெங்கும் நடக்கும் அராஜக பிரிட்டிஷ் கெடுபிடிகள் உலகறியச் செய்ய வேண்டும் என்று கோயங்கா துடித்தார். அநியாயம் நடக்கும்போது சும்மா இருப்பதாவது. தமது பத்திரிகைகளை நிறுத்தி விட்டதால் தூங்கிக் கொண்டிருந்த பெரிய அச்சகத்திற்கு ரகசியமாக ஒரு வேலை கொடுத்தார். நாட்டில் எங்கு பார்த்தாலும் நடக்கும் அக்கிரமங்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித்தார். அவைகளை எல்லாம் திரட்டிக் கணிசமான ஒரு நூலாக உருவாக்கினார். காதோடு காதாக ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சான அந்த ஆங்கில நூலுக்கு "இந்தியாவில் படுகொலை" (India Ravaged) என்று தலைப்புத் தந்தார்.

நூலின் பிரதிகளை, பரம ரகசியமாக பிரிட்டிஷ் பார்லிமெண்ட் அங்கத்தினர்கள் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் அனுப்பி வைத்தார். பிரிட்டிஷ் மந்திரிகளுக்கும்தான் அது மட்டுமல்ல. அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, ஆஸ்திரேலியா முதலிய வேறு பல நாடுகளின் முக்கியத் தலைவர்களுக்கும் நூலை அனுப்பினார். இதை பிரிட்டிஷார் அறியா வண்ணம் அவர் அனுப்பி வைத்தது சாதனையிலும் சாதனை எனலாம்.

அவ்வளவுதான், பிரிட்டிஷ் பார்லிமெண்டில் கேள்விகள் மேல் கேள்வி எழுந்தது. பிரிட்டிஷ் அரசு பதில் சொல்ல முடியாமல் திகைத்தது. சுதந்திரத்துக்காகப் போரிடுகிறோம் என்று சொல்லிக் கொண்டே இந்தியாவில் லட்சக்கணக்கான ஜனங்களை சிறையில் தள்ளி கெடுபடி ஆட்சி நடத்தி வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் போலி வேஷம் உலகறியத் தெரியலாயிற்று. உலக அரங்கில் பிரிட்டனின் புகழுக்குப் பெரிய அடி கிடைத்தது. தீரர் ராம்நாத் கோயங்காவின் அதிசயச் சாதனையால் உண்மையை உலகம் உணர்ந்தது. பிற்காலத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் தரலாம் என பிரிட்டிஷ் தொழிற் கட்சி அரசு முடிவு செய்ய இந்த அபிப்பிராய மாற்றம் உதவியது என்று சொல்லலாம்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.

4 comments:

  1. மாபெரும் தீரர் சத்தியமூர்த்தியின் ஊரில் பிறந்ததால் நான் பெருமைப் படுகிறேன்.
    இந்த மாபெரும் விடுதலைப் போராட்டத் தியாகியைப் பற்றி, கர்மவீரர் காமராஜர் அவர்களின் கட்டுரை மூலம் அறியத் தந்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. ஆயிரம் முறை மிதிவண்டியிலும்... பேரூந்திலும் மணச்சையின் வழியே பயணம் செய்து இருக்கிறேன் ஆனால் தோழர் கே.டி.கே தங்கமணி அவர்கள் பெண்ணெடுத்த ஊர் என்பதை அறிந்திலேன்... அதோடு தொழில் பெருக்காத ஊரில் எப்படி தோழர் தா.பா பாராளுமன்றத்திற்கு காரைக்குடியில் வந்து போட்டியிட்டார் என்றும் எண்ணியதுண்டு... ஒருவேளை அவரும் அவர் அண்ணனும் அழகப்பக் கல்லூரியில் பயின்று விரிவுரையாளராக பணியாற்றியதால் பரீட்சயமான ஊர் என்பதால் போட்டியிடுகிறார் என்றும் எண்ணியதுண்டு.... காரைக்குடிக்கும் கம்யூனிச இயக்கத்துக்கும் இவ்வளவு நெருங்கியத் தொடர்பு உண்டு என்று எனக்கு இப்போது தான் தெரிகிறது.... பாரதிக்கும் கானாடுகாத்தானுக்கும் தொடர்பு உண்டு என்றும் திரு கதிரேசன் செட்டியார் அவர்கள் பொதுவுடைமைக் கருத்துக்களை ஆதரித்தார்கள் என்பதையும் நான் எனது தந்தையாரின் வழி கேள்வியுற்றேன்... இருந்தும் எனக்கு இந்த அறிய தகவலைப் பற்றி தந்தமைக்கு நன்றிகள் ஐயா! இவைகளை எல்லாம் புத்தகமாக அச்சிட்டு இது ஒரு புதிய ஏற்பாடாக கல்விபயிலும் ஒவ்வொரு மாணவனின் கையிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் என்பது எனது அவா...

    ReplyDelete
  3. மேலே உள்ள பின்னூட்டத்தில் உள்ள பெயர் திருவாளர் கருப்பஞ்செட்டியார் என்று நினைக்கிறேன்... சரியானப் பெயர் ஞாபகத்தில் உறுதியாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  4. அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி. சீரியப் பணி! வணங்குகிறோம்!

    ReplyDelete

Please give your comments here