Followers

Tuesday, October 18, 2011

தோழர் பாலதண்டாயுதம்


பொதுவுடைமைக் கட்சி தோழர் பாலதண்டாயுதம்

தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தொண்டர் தோழர் பாலதண்டாயுதம். இவர் 1918 ஏப்ரல் 4ஆம் நாள் பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள மாக்கினாம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தையார் காளஹஸ்தி முதலியார். பள்ளிக்கூடப் படிப்பை முடித்துவிட்டுத் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இண்டர் படித்தார். 1939இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இவர் இருந்த அந்த இரண்டு ஆண்டுகள் இவரை ஓர் புரட்சிகர மாணவனாக ஆக்கியது. நாட்டு சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் ஒரு போராட்டம் சாத்வீக, அஹிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது. நாடு முன்னேற, சுதந்திரம் பெற விஞ்ஞான சோஷலிசமே சிறந்தது என்று கருதிய இளைஞர் கூட்டத்தில் பாலதண்டாயுதமும் ஒருவர்.

அப்போது, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இவர்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். அதற்கு தோழர்கள் மன்றம் அதாவது காம்ரேட்ஸ் கிளப் என்ற பெயரில். இந்த அமைப்பைத் தோற்றுவித்தவர் சுப்பிரமணிய சர்மா என்பவர். அந்த சர்மாவின் நெருங்கிய தோழராக விளங்கியவர் பாலதண்டாயுதம்.

ஒரு முறை நிதி வசூல் நடந்த போது ஒரு மாணவன், வசூலித்த தொகையைக் கையாடல் செய்ததை அறிந்து பாலனுக்கு ஆத்திரம் வந்தது. ஆகையால் அந்த மாணவன் பாலன் மீது பகைமை கொண்டு, அவரைப் பற்றி தவறான குற்றச்சாட்டொன்றை துணைவேந்தர் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியிடம் சென்று முறையிட்டார். பாலதண்டாயுதத்தின் ஆற்றல், திறமை இவற்றின் காரணமாக பாலன் மீது பற்று கொண்டவராயினும், அரசியல் கொள்கை ரீதியாக அவர் மீது குற்றச்சாட்டு என்றதும், துணை வேந்தர் நடவடிக்கை எடுத்தார்.

அதன் பயனாக பாலதண்டாயுதம் உட்பட ஐவர் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப் பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் வெளியேற்றப் பட்டனர். இதன் காரணமாக பாலதண்டாயுதம் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஏஸ்.வி.காட்டே அவர்களின் வழிகாட்டுதல்படி, மறுபடி சிதம்பரம் வந்து மாணவர்கள் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தினார்.

அண்ணாமலை நகர் மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்றத்தில் இருந்தது. வெளியேற்றப்பட்ட மாணவர்கள் தினமும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று செய்து வந்தனர். பாலதண்டாயுதம் உட்பட பல மாணவர்கள் ஊரில் பல வேலைகளைச் செய்து கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டே போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் மாணவர்கள் பக்கம் ஆதரவு பெருகி மக்களின் ஆதரவும் கிடைக்கவே, பல்கலைக்கழக நிர்வாகம் பணிந்து வந்தது.

பேச்சு வார்த்தை நடைபெற்றது. பல்கலைக்கழக நிர்வாகம் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டது ஒரே ஒரு நிபந்தனையோடு. அந்த நிபந்தனை என்னவென்றால், பாலதண்டாயுதத்தை மட்டும் மீண்டும் பல்கலைக் கழகத்தில் அனுமதிப்பதில்லை என்பதுதான் அது.

இங்கு பாலதண்டாயுதத்துக்கு ஒரு தர்ம சங்கடம். மாணவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் போராடுவதா, அல்லது நிபந்தனைக்கு ஒப்புக்கொள்வதா? போராட்டம் தொடர்ந்தால் மற்ற மாணவர்களின் வாழ்க்கைப் பாழாகிவிடுமே. நிபந்தனையை ஒப்புக்கொண்டால், விளைவு தன்னை மட்டும்தானே பாதிக்கும். இதில் இரண்டாவதை ஏற்றுக் கொண்டு தன்னைத் தியாக வேள்வியில் ஆஹுதியாக்கிக் கொண்டார் பாலதண்டாயுதம்.

அறிவியல் படிப்பதற்காக உள்ளே நுழைந்த பாலதண்டாயுதம் ஒரு புரட்சிக்காரராக, கம்யூனிஸ்டாக வெளியே வந்தார். வயது முதிர்ந்த நிலையில் அல்ல, அவருடைய இருபதாம் வயதிலேயே இவர் ஒரு புடம் போட்ட பொதுவுடைமை வாதியாகத் திகழ்ந்தார். இந்த மாற்றங்களின் காரணமாக பாலதண்டாயுதத்தை வீட்டில் விரோதித்துக் கொண்டனர்.

நல்ல அழகிய தோற்றம், களையான முகம், கம்பீரம், வீரம் ததும்பும் பேச்சு இவையெல்லாம் பாலதண்டாயுதத்தை இளைஞர்கள் நேசிக்கும் தலைவராக மாற்றியது. பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் துணை வேந்தர் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியையும் வைத்துக் கொண்டே, பாலதண்டாயுதம் பேசுகையில் Mr.Srinivasa Sasthri is neither right nor honourable என்று விமர்சனம் செய்த துணிச்சலை துணைவேந்தர் உட்பட அனைவருமே பாராட்டினர்.

கல்லூரி நாட்களில் இவர் காதலித்த ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை இவர் மணந்தார், இவரது குடும்பத்தாரின் எதிர்ப்புக்கிடையே. இரண்டாம் உலகப் போரின் போது போர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த காரணத்துக்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பதினெட்டு மாதம் சிறைவாசம் இவருக்கு.

1940இல் சிறை சென்று 1942இல் விடுதலையான இவரை உடனே மீண்டும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து வேலூர் சிறைக்குக் கொண்டு சென்றனர். விடுதலையாகி வெளியே வந்தபின் சென்னைக்குச் சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான "ஜனசக்தி"யில் பணியாற்றத் தொடங்கினார்.
இவரது தேசப் பற்றை விளக்க ஒரு நிகழ்ச்சி.

திருநெல்வேலியில் ஒரு ரயில்வே தொழிலாளர் மாநாடு நடந்தது. ஆண்டு 1945 ஜூலை மாதம். அதில் ஒருவர் பேசுகையில், "கம்யூனிஸ்டுகளுக்கு தேசப் பற்றோ, மனிதாபிமானமோ கிடையாது" என்றார். பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பாலதண்டாயுதம், கூட்ட நிர்வாகிகளிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பேசினார்.

அவர் சொன்னார், "நான் ஒரு கம்யூனிஸ்ட். என் பெயர் பாலதண்டாயுதம். பகத் சிங்கின் பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். கம்யூனிஸ்டுகளுக்கு மனிதாபிமானம் இல்லை என்று ஒருவர் சொன்னார். எது மனிதாபிமானம்? வயிற்றுக்குச் சோறு இல்லாத தாய் ஒருத்தி தன் ரத்தத்தையே பாலாக ஊட்டியும், அவளது குழந்தை உடல் வற்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில், அந்தக் குழந்தையை வாங்கி தன் பிள்லையாக வளர்க்கிறார் ஒரு கம்யூனிஸ்ட். அவர் மனிதாபிமானி இல்லையா?" என்றார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்க இவர் அனுப்பப் பட்டார். நெல்லை மட்டுமல்லாமல் இவர் தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தொழிலாளர் இயக்கங்களிலும், பொதுமக்களின் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அடக்குமுறைகளுக்கு எதிராகப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். பதுக்கல், கள்ளச் சந்தை போன்றவர்களுக்கு எதிராக இவரது போராட்டத்தால் அவர்கள் கலக்கம் அடைந்தனர்.

1946ஆம் ஆண்டு, இந்திய சுதந்திரம் கிழக்கு அடிவானத்தைல் தோன்றும் நேரம். அப்போது காங்கிரஸ்காரர் டி.பிரகாசம் சென்னை மாகாண முதல்வரானார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி மீது தாக்குதல் தொடங்கியது. மதுரை சதி வழக்கு என்றொரு வழக்கில் பலர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பாலதண்டாயுதம் போலீசிடம் சிக்காமல் தலைமறைவானார்.

தலைமறைவு என்றால் ஓடி ஒளிந்து கொள்வது அல்ல. போலீசுக்குத் தெரியாமல் ஊர் ஊராகச் சென்று கட்சிப் பணி, தொழிலாளர் நலப் பணி, சமூகப் பணி என்று ஊக்கத்தோடு செயலாற்றி வந்தார். தலைமறைவு வாழ்க்கை நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே விக்கிரமசிங்கபுரம் எனும் ஊரில் போலீசார் பெரும் கூட்டமாக இவரைக் கைது செய்யக் கூடியிருக்க அந்தக் கூட்டத்தில் திடீரென்று தோன்றி பேசிவிட்டு மாயமாக மறைந்து போன சாகசமும் இவர் வாழ்க்கையில் நடந்தது.

சுதந்திரத்துக்குப் பின் 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. பாலதண்டாயுதம் மறுபடியும் தலைமறைவானார். மொத்தம் ஐந்து ஆண்டுகள் நெல்லையிலும், பின்னர் சென்னையிலுமாக தலைமறைவாக இருந்தார் பல இன்னல்களையும் சோதனைகளையும் தாங்கிக் கொண்டு. தியாகத் தழும்பேறிய வாழ்க்கை இவருடையது.

இந்த காலகட்டத்தில் ஒரு சதிவழக்கு புனையப் பட்டது. அதில் ப.மாணிக்கம், ஆர்.நல்லகண்ணு, கே.பி.எஸ்.மணி, பொன்னு வேலாயுதம், அழகமுத்து, வேலுச்சாமித் தேவர், ஐ.மாயாண்டி பாரதி ஆகியோர் ஆயுள் தணடனை விதிக்கப்பட்டனர். மற்றொரு வழக்கில் பாலதண்டாயுதம், மீனாட்சிநாதன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1952 தொடங்கி 1962 வரை இவர் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தார். பத்தாண்டு கால சிறை வாழ்க்கை.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு 1962இல் ஆனந்த விகடனில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதினார் பாலதண்டாயுதம். அப்போது பரவலாக தமிழ்நாட்டில் வளரத் தொடங்கியிருந்த திராவிட இயக்கத்துக்கு எதிராக இவர் போர்க்கொடி உயர்த்தினார். அதன் பலனாக திராவிட இயக்கத்தார் இவர் மீது ஆத்திரம் கொண்டு பலவாறாக விமர்சித்தார்கள்.

1964இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு பட்டது. சீனா இந்தியாவின் மீது ஆக்கிரமிப்பு செய்ததன் பின்னணியில் இந்தப் பிளவு ஏற்பட்டது. சீனாவுக்கு எதிராக இந்திய தேசிய ஒருமைப்பாட்டை ஆதரித்த பாலதண்டாயுதம் சீனாவை ஆதரித்த தோழர்களைக் கடுமையாக எதிர்த்தார். சீன ஆதரவாளர்கள் மார்க்சிய கம்யூனிஸ்ட் என்றும், இந்திய ஒருமைப்பாட்டைக் காக்க குரல் கொடுத்தோர் இந்திய கம்யூனிஸ்ட் என்றும் அழைக்கப்பட்டனர்.

இந்தியாவின் உறுதிப்பாடு, வளர்ச்சி, முன்னேற்றம் இவற்றில் அதிக அக்கறை கொண்டிருந்தார் பாலதண்டாயுதம். மோகன் குமாரமங்கலம் காங்கிரசில் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்காக அமைச்சராகவும் இருந்து பாடுபட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்தவர் பாலதண்டாயுதம். நந்தினி சத்பதி, கணேஷ் போன்ற தோழர்களும் இவர்களோடு காங்கிரசில் இணைந்து பணியாற்றத் தொடங்கினர்.

1973 மே மாதம் 31ஆம் தேதி. சென்னையிலிருந்து டில்லிக்குச் சென்ற ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் விலை மதிக்கமுடியாத பல அரிய உயிர்கள் பலியாயின. அதில் 55 வயதே ஆகியிருந்த பாலதண்டாயுதமும் பலியானார். ஒப்புயர்வில்லாத ஒரு உயிர் பிரிந்தது, இந்த நாடு ஏழ்மையடைந்தது. வாழ்க பாலதண்டாயுதம் புகழ்!

Saturday, October 1, 2011


காந்தி ஜெயந்தி விழா
2-10-2011

1869 அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத்தில் மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த இவர் 'மகாத்மா' வானது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தென்னாப்பிரிக்காவில் அவருக்கு ஒரு புதிய அனுபவம் ஏற்பட்டது. குடியேறி வாழ்ந்த வெள்ளையர்களின் நிற வேற்றுமை அவரை ஒரு போராளியாக ஆக்கியது. இந்தியாவுக்குத் திரும்பி இந்திய சுதந்திரப் போரில் ஈடுபட நினைத்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே சொன்னபடி இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்துச் சாதாரண அடித்தட்டு இந்திய மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டார். இந்தியா வெள்ளையரின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற ஏற்ற வழியொன்றை அவர் கண்டார். அதற்கு வேறு எங்கிருந்தும் கொள்கைகளை இறக்குமதி செய்யவில்லை. இந்த பாரத புண்ணிய பூமியில் காலம் காலமாய் தழைத்து வளர்ந்து வரும் சத்தியம், அன்பு, அகிம்சை இவற்றைக் கொண்டு ஓர் ஆயுதம் தயாரித்துப் போராடினார். இந்திய மக்கள் அவரைப் பின்பற்றினர். நாடும் சுதந்திரம் கண்டது, அவரும் மகாத்மாவாகவும், நாட்டின் தந்தையாகவும் ஆனார். அந்த மகானின் பிறந்த நாள் இன்று 2-10-2011. அவர் நினைவை மட்டுமல்ல, அவர் கடந்து வந்த பாதையை, அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை மீண்டும் சிந்தனை செய்வோம். எந்தக் காலத்துக்கும், எந்தப் பிரச்சினைக்கும், எந்த சிக்கலைத் தீர்க்கவும் காந்தியம் ஒன்றே வழி என்பதை என்று நாடு புரிந்து கொள்கிறதோ, அன்றே நமது துயரங்கள் யாவும் தீரும்! இது பிதற்றல் அல்ல. ஆழ்ந்து சிந்தித்தால் இதிலுள்ள உண்மை ஒவ்வொருவருக்கும் புரியும். அப்படி புரியும் காலம் வரவேண்டும். இறைவனிடம் முறையிடுவோம்.

மகாத்மா காந்தி புகழ் ஓங்குக!!

Friday, September 9, 2011


KMR.Krishnan KMR.Krishnan to KannanKrishnakumar, bcc: me
show details 11:11 (4 minutes ago)
 
என் தந்தையின் முற்றுப்பெறாத நாட்குறிப்பு அனைத்தும் அவருடைய 104வது ஆங்கிலப் பிறந்த நாள் 7 செப் 2011 அன்று மேல் குறிப்பிட்ட வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம்.தாங்கள் படித்து இன்புறுவதுடன் தங்களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிந்துரைக்க வேண்டுகிறோம்.
இந்த மின் அஞ்சலை முடிந்தவரை தமிழ் தெரிந்தோருக்கு அனுப்பவும்.
தங்களுடைய தளத்தில் அறிவிக்கவும்.
வாழ்க வளமுடன்!

கே.முத்துராமகிருஷ்ணன்

Thursday, August 18, 2011

மதுரை மாவட்ட தியாகிகள்:


மதுரை மாவட்ட தியாகிகள்:

சுந்தரராஜ ஐயங்கார்.

இவர் 1899ஆம் ஆண்டில் பிறந்தவர். பத்தாம் வகுப்பு வரை படித்தார். இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். டாக்டர் எஸ்.சுந்தரராஜ ஐயங்கார் எனும் இவருடைய பெயரை பொதுவாக அனைவரும் I.D.F. என்றே குறிப்பிட்டு வந்தனர். இவர் சிறு வயதில் முகவும் முரடனாக இருந்திருக்கிறார். 1918இல் இந்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சியைப் பெற்றார். அதன் பயனாக துப்பாக்கி சுடும் பயிற்சியும் இவருக்கு உண்டு. மகாத்மா காந்தி இந்திய அரசியலில் புகுந்து இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபடத் தொடங்கிய நாளில் அவருடைய கொள்கை, வழிமுறைகள் இவற்றால் ஈர்க்கப்பட்டு இவர் காந்தி பக்தரானார். முதன்முதலில் காந்திஜி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து மகாத்மா காந்தி அறிவித்த எல்லா போராட்டங்களிலும் இவர் பங்கேற்றார். மிகவும் எளிமையானவர்; எல்லோருடனும் சகஜமாகப் பழகக் கூடியவர். முதுகுளத்தூர் தாலுகாவில் இவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக அந்தப் பகுதிகளில் கள்ளுக்கடைகளை இரண்டு முறை மூடும்படியான நிலைமையை உண்டாக்கினார்.

1922இல் மேலூரில் இவர் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1923ஆம் ஆண்டு மறுமுறையும் மறியலில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. 1930ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டதற்காக 6 மாத சிறை தண்டனை பெற்றார். 1932இல் நடந்த மறியலில் இவர் கைது செய்யப்பட்டு ஒரு வருட தண்டனை கிடைத்தது.

பொதுக்கூட்டங்களில் இவர் எளிமையான நடையில் பேசுவார். இவரது பேச்சில் நகைச்சுவை இருக்கும். மக்களை சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவர். பல சின்னஞ்சிறு கதைகளைச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பார். இவர் பேசுகிறார் என்றால், அதைக் கேட்பதற்கென்றே மக்கள் திரளாகக் கூடுவர். தொழிலாளர் பிரச்சினைகளில் அக்கறை கொண்டு பல தொழிலாளர் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். இவர் காலமாகிவிட்டார்.

மு.சுப்பையா பிள்ளை.

மதுரை முனுசாமிப் பிள்ளையின் மகனாக 1911இல் பிறந்தவர் சுப்பையா பிள்ளை. 1930இல் தேசிய காங்கிரசில் இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபடவேண்டுமென்கிற எண்ணத்தில் இணைந்தவர். 1930ஆம் ஆண்டு நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கு கொள்ளவிருக்கிறார் என்பதை அறிந்து இவரைப் பிடித்துக் கொண்டு போய் சப் ஜெயிலில் அடைத்து வைத்துவிட்டார்கள். 1932இல் அன்னிய துணி மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு ஒரு ஜவுளிக் கடையின் முன்பாக இவர் மறியல் செய்த போது கைது செய்யப்பட்டு 4 மாத கால சிறை தண்டனை பெற்றார். மதுரை சிறையில் தண்டனை காலத்தைக் கழித்தார். 1933இல் மறுபடியும் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவனந்தபுரம் சமஸ்தானப் பகுதிக்குச் சென்று அங்கு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காகக் கைது செய்யப்பட்டு ஒரு வருஷம் தண்டிக்கப்பட்டு அங்கு சிறையில் இருந்தார்.

1941இல் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டரை வருஷ சிறை தண்டனை பெற்று தஞ்சாவூர், வேலூர் ஆகிய சிறைகளில் அடைக்கப்பட்டார். 1940இல் மகாத்மா காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு பெற்றார். அதில் இவர் கைதாகி 10 மாத கால சிறை தண்டனை பெற்று, அலிப்புரம் சிறையில் அடைபட்டுக் கிடந்தார். மேடைப் பேச்சில் வல்லவர். இவருடைய ஆவேசமான பேச்சைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதுண்டு. இவர் காலமாகிவிட்டார்.

ர.சிதம்பர பாரதி.

1905இல் பிறந்தவர் சிதம்பர பாரதி. இவருடைய தந்தையார் பெயர் ரங்கசாமி. 1920இல் தனது 15ஆம் வயதில் அரசியலில் ஈடுபட்டார். மதுரையில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கி நடத்திய போராட்டங்கள் அனைத்திலும் இவர் பங்கு கொண்டார். முதலில் வன்முறையில் ஆர்வம் இருந்தபோதும், மகாத்மா காந்தியடிகளின் தாக்கம் இவரை சாத்வீகராக மாற்றியது. சுப்பிரமணிய சிவா தனி மனிதனாக ஊர் ஊராகச் சென்று சுதந்திரப் பிரச்சாரம் செய்த காலத்தில் இவர் அவருடைய பணிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். வீர சவர்க்கார் எழுதிய 1857 முதல் இந்திய சுதந்திரப் போர் எனும் நூலைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து 1927இல் நடந்த சென்னை காங்கிரஸ் மகாநாட்டில் அனைவருக்கும் விநியோகித்தவர். அந்த நூலை மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ்.குடும்பத்தின் டாக்டர் செளந்தரம் அவர்கள். அந்தப் புத்தகம் தடைசெய்யப்பட்டது என்பதும் அதை படிப்பதோ விநியோகிப்பதோ குற்றம் என்றிருந்த் நேரத்தில் இவர் அந்தப் பணியில் செயல்பட்டார். அந்த நூலைப் படிப்பதோ, வைத்திருப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்ற சட்டம் இருந்த நேரம் அது. 1928இல் சென்னையில் இவர் ஒரு பத்திரிகையை நடத்தினார். அதன் பெயர் "தேசோபகாரி" என்பது. இவர் தனது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏழுமுறை, அதாவது 1922, 23, 24, 29, 32, 40, 42 ஆகிய ஆண்டுகளில் போராட்டங்களில் கலந்து கொண்டமைக்காகச் சிறை சென்ற தியாகி. மதுரை நகர காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மாகாண காங்கிரஸ் கமிட்டியிலும் உறுப்பினராக இருந்து வந்தவர். நல்ல சொற்பொழிவாளர். இவரது மேடைப் பேச்சு அனைவரையும் கவர்ந்திழுக்க வல்லது. முன்னாள் சட்டசபை உறுப்பினராக இருந்த இவர் காலமாகிவிட்டார்.

மதுரை தியாகராஜ சிவம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் ஒரு கிராமத்தில் கிராம முன்சீபாக இருந்த சுப்பையர் என்பவரின் குமாரன் இவர். 1900ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆஜானுபாகுவான தேகக் கட்டு, முறுக்கு மீசை, வெள்ளை கதர் ஆடை இவற்றோடு இவர் பெரும் கூட்டத்திலும் பளிச்சென்று தோற்றமளிப்பார். மனதால் மிகவும் மென்மையானவர். இரக்க குணம் படைத்தவர். 1921ஆம் ஆண்டு வாக்கில் சுப்பிரமணிய சிவா மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஊர் ஊராகச் சென்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்த காலத்தில் பல இளைஞர்கள் அவருடைய பேச்சால் கட்டுண்டு காங்கிரஸ் இயக்கத்திற்குள் இணைந்தனர். அப்படி வந்தவர்களில் தியாகராஜ சிவமும் ஒருவர். தான் வகித்து வந்த ஆசிரியர் பணியை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் இவர் ஈடுபட்டார். காரியத்திலும் செயலிலும் இவர் மிகவும் கண்டிப்பானவர். அவருடைய பேச்சே மிகவும் கண்டிப்பு மிகுந்ததாக இருக்கும். அவருடைய காலத்தில் இளைஞர்களின் ஆதர்ச புருஷராக விளங்கியவர் நீலகண்ட பிரம்மச்சாரி. தானும் அவரைப் போல ஒரு தீரமிக்க சுதந்திரப் போராளியாக ஆக வேண்டுமென்பதற்காகத் தன்னுடைய பெயரையும் முதலில் தியாகராஜ பிரம்மச்சாரி என்று வைத்துக் கொண்டார். சுப்பிரமணிய சிவத்திற்கு இவரை மிகவும் பிடிக்கும். இவரை அன்புடன் பீமண்ணா என்றுதான் அழைப்பார். சுப்பிரமணிய சிவம் மதுரையில்ருந்து தொழுநோய் காரணமாக ரயிலில் ஏற அனுமதிக்கப்படாமையால் கால் நடையாகவே நடந்து தொண்டர்களுடன் பாப்பாரப்பட்டிக்குச் சென்று அங்கு உயிர் துறந்தார் அல்லவா? அப்போது சிவம் மகாசமாதி அடைந்த பிறகு அவர் நினைவாக இவர் தன்னுடைய பெயரை தியாகராஜ சிவம் என்று மாற்றிக் கொண்டு, உலகுக்குத் தான் சிவத்தின் வாரிசு என்பதை உணர்த்தினார்.

இவர் 1922இல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டும், 1932இல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் இவர் மொத்தம் பதிமூன்றரை மாதங்கள் சிறையில் இருந்தார். தன்னுடைய சிறை வாசத்தை இவர் கடலூர், திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கழித்தார். இவர் சிறந்த பேச்சாளர். இவருக்கு செல்லம்மாள் எனும் மனைவி இருந்தார்.

மதுரை எஸ்.வி.கே. தாஸ்.

1916ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1936இல் தனது இருபதாம் வயதில் காங்கிரசில் சேர்ந்தார். 1938ஆம் ஆண்டு முதல் பல ஊர்களுக்கும் சென்று கிராம மக்களிடம் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வந்தார். காங்கிரசின் முழு நேர தொண்டனாக இவர் பணியாற்றினார். ஹரிஜன முன்னேற்றம், கள்ளுக்கடை எதிர்ப்பு ஆகிய போராட்டங்களில் இவர் பங்கு கொண்டார். காசியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மதன்மோகன் மாளவியா அவர்களின் பெயரால் ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு இவர் பணியாற்றி வந்தார். அடிப்படையில் சோஷலிச எண்ணம் உடைய இவர் 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற சோஷலிஸ்ட் கட்சியில் சுமார் 25 ஆண்டுகள் செயல்பட்டார். 1949இல் இவரோடு இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தொண்டரான பங்கஜத்தம்மாள் என்பவரை இவர் மறுமணம் செய்து கொண்டார். 1972இல் இவர் காலமானார்.

மதுரை தியாகி வி.கே.டி.பங்கஜத்தம்மாள்.

இளம் வயதிலேயே பால்ய விவாகம் செய்து கொண்டவர் இவர். கணவர் சீனிவாச ஆழ்வாருடன் பஜனைப் பாடல்களும், மேடைகளில் சுதந்திரப் பாடல்களும் பாடி பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் நடத்தி வந்தார். இவர் பலமுறை சிறை சென்றார். இரண்டரை ஆண்டுகள் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1972 வரை இவரது அரசியல் பயணம் தொடர்ந்தது. காந்திஜி தலைமையில் இவர் கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி எதிர்ப்பு போன்ற பல போராட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறார். இவர் 1979 ஜூலை 1இல் இறந்தார்.


திம்மநத்தம் கே.ஆர்.தங்கமுத்து.

மதுரை மாவட்டம் திம்மநத்தம் எனும் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கே.ஆர்.தங்கமுத்து. இவர் பிறந்தது 24 பிப்ரவரி 1914ஆம் வருஷம். இவர் இளம் வயதில் இந்திய சுதந்திரப் போரில் பங்கு கொண்டவர். 1932ஆம் வருஷம் அன்னிய துணி பகிஷ்காரம் செய்து ஜவுளிக் கடைகளின் வாயிலில் மறியல் செய்தார். எனினும் இவர் வயதை எண்ணி இவரைக் கைது செய்யவில்லை. 1942இல் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேறிய போது பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டனர். ஆங்காங்கே காங்கிரசில் பங்கு பெற்ற தொண்டர்கள் பலரும் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அப்படி இவரும் 1942இல் பாதுகாப்பு கைதியாக ஒரு வருஷ காலம் சிறை வைக்கப்பட்டார். இவருடைய தந்தையார் தேசிய இலவச பள்ளிக்கூடமொன்றை நடத்தி வந்தார். ஏழை எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அறிவினை ஊட்ட இவர் அந்தப் பள்ளியைப் பயன்படுத்தினார். அது தவிர கதர் அபிவிருத்தி, கதர் பிரச்சாரம் விற்பனை ஆகியவற்றிலும், ஹரிஜன சேவைகளிலும் இவர் பணியினைத் தொடர்ந்தார். முதலில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் உறுப்பினராக இருந்த இவர் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இவர் வாழ்நாளில் ஏழைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தி இருந்தார்.

மதுரை கே.என்.கிருஷ்ணன்.

மதுரை நாகசாமி ஐயரின் மகனாக 15-3-1915இல் பிறந்தவர் கிருஷ்ணன். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி இவரும் தேச சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 1940இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தை காந்தியடிகள் அறிவித்த போது இவர் அதில் கலந்து கொண்டார். அந்தப் போராட்டத்தில் இவருக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை கிடைத்தது. இவர் மொத்தம் மூன்று முறை சிறை சென்றிருக்கிறார். அலிப்புரம் முதலான பல சிறைகளில் இவர் தண்டனை அனுபவித்து இருக்கிறார்.

மதுரையில் 'தீச்சட்டி' கோவிந்தன் எனும் போலீஸ் அதிகாரி இருந்தார். இவர் 1942 அக்டோபர் 2ஆம் தேதி மதுரையில் காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக ஊர்வலமாகச் சென்ற பெண்களைப் பிடித்து போலீஸ் வண்டியில் ஏற்றி வெகுதூரம் கொண்டு சென்று ஒருவரும் வரமுடியாத காட்டுப் பகுதியில் அவர்களது துணிகளை உருவிக்கொண்டு விட்டுவிட்டு வந்துவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்துக் கிராம மக்கள் கொடுத்த துணிகளை அணிந்து கொண்டு அந்தப் பெண்கள் அழுதுகொண்டு வீடு வந்து சேர்ந்தனர். இந்தச் செய்தியைக் கேட்ட மதுரை தேசபக்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அந்த இன்ஸ்பெக்டர் 'தீச்சட்டி' கோவிந்தனை பழிவாங்குவது என முடிவெடுத்தனர். அந்த இன்ஸ்பெக்டரின் உண்மையான பெயர் விஸ்வநாதன் நாயர் என்பது. ஒரு நாள் அந்த இன்ஸ்பெக்டர் தனியாக மாட்டிக் கொண்ட நேரத்தில் தேசபக்த இளைஞர்கள் ஒன்றுகூடி அவர் மீது அக்கினி திராவகத்தை ஊற்றி, அவர் முகத்தையும் உடலையும் சேதப்படுத்தி விட்டுத் தப்பிவிட்டனர். அந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களில் கே.என்.கிருஷ்ணனும் ஒருவர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. அதில் அக்கினி திராவகம் வீசியதாக இவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

இருந்தாலும் போலீஸ் இவர்களை விடுவதாக இல்லை. வேறு ஏதாவது வழக்கில் இவர்களை கைது செய்துவிட துடித்தது. இந்திய பாதுகாப்புச் சட்டம் எனும் ஆள் தூக்கிச் சட்டத்தின்படி இவர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி ஒரு வருடமும் மூன்று மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். தஞ்சாவூர், வேலூர் ஆகிய சிறைகளில் இவர் இருந்தார்.

அநீதிகளைக் கண்டு பொங்கும் குணமுள்ளவர் இவர். மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட தியாகி. நல்ல உழைப்பாளி. தமிழ்நாடு தியாகிகள் சமிதியின் மதுரை நகரப் பொதுச் செயலாளராக இருந்தவர். மாகாண தியாகிகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர்களில் இவரும் ஒருவர். மதுரை நகர முனிசிபல் கவுன்சிலராகவும் இருந்திருக்கிறார். அமரர் ந.சோமையாஜுலுவுக்கு உறுதுணையாக இருந்து வந்தவர். மக்கள் போற்றும் மாபெரும் தியாகி.

மு. பழனியாண்டி சேர்வை.

இவர் 1930இல் ராஜாஜி நடத்திய வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போரில் தொண்டராகச் சென்று கைதாகி சிறை சென்றவர். அந்த வழக்கில் இவருக்கு 6 மாத சிறை தண்டனை கிடைத்தது. ஊர் ஊராகப் பயணம் செய்து காங்கிரஸ் கொள்கைகளை மக்களுக்கு விளக்கி வந்தவர். 1942இல் நடந்த குவிட் இந்தியா போரில் இவருக்கு ஒன்றரை வருட ஜெயில் தண்டனை கிடைத்தது. வேலூரில் இவர் பாதுகாப்பு கைதியாக அடைத்து வைக்கப் பட்டிருந்தார். காந்தியக் கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். சிறந்த காந்தி பக்தர். அகிம்சை கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர். இவர் மட்டுமல்லாமல் இவருடைய குடும்பத்தில் இவரது சகோதரர்களும் சுதந்திரப் போரில் ஈடுபட்டு தியாகங்கள் புரிந்தவர்கள். தம்பி சண்முகம் மற்றும் பல நண்பர்கள் இவருடன் தேச சேவையில் ஈடுபட்டனர்.

மதுரை சுப்புக் கோனார் மகன் கே.எஸ்.பரமன்.

1910இல் பிறந்த பரமன் தனது 20ஆம் வயதில் 1930இல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் பிடிப்பு உள்ள இவர் கதர் இயக்கத்திலும் ஆர்வமுடையவராக இருந்தார். கை தக்கிளியில் நூல் நூற்றுக் கொண்டிருப்பார். தக்கிளியில் நூல் நூற்பது எப்படி என்பதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர். இவர் முதல் உலக யுத்தத்தின் போது ராணுவத்தில் சேர்ந்தார். முதல் உலகப் போரின் போது பிரிட்டன் இந்திய ராணுவத்தினரை ஐரோப்பாவுக்கு அனுப்பி வைத்தனர். இவர் அப்போது மெஸபடோமியாவுக்குச் சென்றிருந்தார். ராணுவப் பணியை விட்டுவிட்டு இந்திய தேசியப் பணிக்குத் திரும்பினார். 1940இல் காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இவர் பங்கேற்றார். அதில் கைது செய்யப்பட்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் 4 மாத காலம் அடைக்கப்பட்டார். இவருடைய மூத்த சகோதரர் அய்யாக்கண்ணு பிள்ளை மதுரையில் பிரபலமான மனிதர். பரமன் ஒரு சிறந்த தேசிய வாதி.

மதுரை எம்.என்.ஆதிநாராயணன்.

மதுரையில் நாராயணசாமி நாயக்கரின் மகனாக 1913ஆம் வருஷம் பிறந்தவர் ஆதிநாராயணன். 1930இல் இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பி காங்கிரசில் உறுப்பினரானார். 1932இல் அன்னிய துணி பகிஷ்காரம் நடந்து வந்த போது, இவர் தொண்டர்களுடன் அன்னிய துணிகளை விற்கும் ஜவுளிக் கடைகளின் முன்பு அன்னிய துணிகளை வாங்காதீர்கள் என்று மறியல் செய்தார். அதற்காக இவருக்கு 6 மாத சிறை தண்டனையும் நூறு ரூபாய் அபராதமும் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் இரண்டு மாத சிறை தண்டனை என்பது தீர்ப்பு. அபராதம் கட்ட மறுத்து சிறை தண்டனையை அனுபவித்த பின் இவர் வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார். 1930 உப்பு சத்தியாக்கிரகம் தொடங்கி, பல போராட்டங்களில் 1942 வரை இவர் பங்கு பெற்றிருக்கிறார். பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சிறைகள் இவருக்கு சிறை வாசம் செய்யும் இடமாக இருந்தன. தொழிலாளர் நலனில் அக்கறையுடன் தொழிற்சங்கங்களிலும் பங்கு பெற்றார் இவர். சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து மதுரை மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் சங்கத்துக்குத் தலைவராகவும் இருந்தார்.

எம்.ஆர்.எஸ்.மணி.

1912இல் மதுரையில் எஸ்.ராமசாமி சேர்வை என்பவரின் மகனாகப் பிறந்தவர் மணி. 1930இல் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்துக்கு மதுரையில் தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில் தேர்வாகி திருச்சி செல்ல காத்திருந்த சமயம் இவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவரை பாளையங்கோட்டையில் கொண்டு போய் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான போது 4 மாத காலம் சிறைவாசம் முடிந்த நிலையில் இவர் விடுதலை செய்யப்பட்டார். 1941இல் இவர் யுத்த எதிர்ப்பு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரக்கூடாது என்று பிரச்சாரம் செய்தார். அதற்காக இவர் கைது செய்யப்பட்டு 11 மாத காலம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து 1942இல் விடுதலையாகி வெளியே வந்த இவரை மறுபடியும் கைது செய்து மதுரையில் 1 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் சிறை சென்றார். இப்போது அவர் சென்றது அலிப்புரம் ஜெயில். 1943இல் விடுதலையானார். ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை. மீண்டும் கைது செய்யப்பட்டு பாதுகாப்புக் கைதியாக வேலூரில் 1 மாதம், தஞ்சையில் 18 மாதங்களும் காவலில் வைக்கப்பட்டார். மதுரையில் இருந்த தேசபக்தர்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் போனவர்களில் இவரும் ஒருவர். தொழிலாளர் சங்கங்களில் ஈடுபாடு கொண்டவர். பெருந்தலைவர்களாக இருந்த பசும்பொன் தேவர், ப.ஜீவா, பி.ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டவர். மதுரையில் மணீஸ் மிட்டாய் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார்.

ஏ.வி.செல்லையா.

இவரது தந்தையார் ஒரு சிறந்த தேசபக்தர். எனவே அவருடைய பிள்ளைகளும் அப்படியே. இவர் தன்னுடைய சுதந்திரப் போரை 1930இல் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் தொடங்கினார். 1942லும் புரட்சியில் பங்கு கொண்டு சிறை சென்றார். இவர் ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்று இருந்திருக்கிறார். 1942இல் ஒரு குண்டு வீச்சு சம்பவம். அதில் உயிர் இழந்திருக்க வேண்டிய இவர், மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்தார். அந்த குண்டு வீச்சினால் இவர் தலையில் ஏற்பட்ட தழும்பு கடைசி வரை இருந்தது. இவருடைய சகோதரர் அணுகுண்டு ஏ.வி.அய்யாவு ஓர் பிரபலமான போராட்டக்காரர். தேசபக்தர். இவரும் பலமுறை சிறை சென்றிருக்கிறார். சுதந்திரப் போரட்ட வீரர்களை ஒன்றிணைத்து அந்தச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் செல்லையா.

எம். சிவசாமி.

மா.இருளாண்டி பிள்ளை என்பவரின் மகன் இவர். 1920இல் பிறந்தவர். 1940இல் இவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். 1942 புரட்சியில் இவர் பல இடங்களில் புரட்சியைத் தூண்டியமைக்காகக் கைது செய்யப்பட்டு மூன்று மாத காலம் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவருக்கு 6 மாத சிறை தண்டனை கொடுத்து பெல்லாரி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

து. நவநீதகிருஷ்ணன்.

மதுரையில் துரைசாமி நாயுடு என்பவருக்கு 1909இல் பிறந்தவர் து.நவநீதகிருஷ்ணன். 1930இல் சட்ட மறுப்பு இயக்கத்தின் மூலம் இவர் சுதந்திரப் போரில் குதித்தார். அந்தப் போராட்டத்தில் இவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. 1930 ஆகஸ்ட் முதல் இவர் பாளையங்கோட்டை, ராஜமகேந்திரபுரம், சிறைகளில் அடைக்கப்பட்டார். காந்தி இர்வின் ஒப்பந்தப்படி இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். சிறந்த நிர்வாகி, சிறந்த தேசபக்தர்.

Monday, August 8, 2011



இந்திய சுதந்திரத் திருநாள்

வாழ்த்துக்கள்

15 ஆகஸ்ட் 2011


                             JAI HIND!

Saturday, August 6, 2011

விருதுநகர் சதி வழக்கு


பெருந்தலைவர் காமராஜ்

விருதுநகர் சதி வழக்கு

1942ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தியத் திருநாடு கொந்தளிப்பில் ஆழ்ந்த நேரம். தமிழ்நாடு அதிலும் பின்தங்கிவிடவில்லை. தேவகோட்டை கலவரம், திருவாடனை சிறை உடைப்பு, குலசேகரப்பட்டினம் கலவரம், புகளூர் தண்டவாளப் பெயர்ப்பு, கோவை சூளூர் விமான தளம் எரிப்பு போன்ற பல புரட்சிகள் நடந்து கொண்டிருந்த நேரம்.

இதற்கெல்லாம் முன்னோட்டமாக 1933ஆம் வருஷம் தென் தமிழ்நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்போது நினைவு கூர்வோம்.

அந்தக் காலத்தில் விருதுப்பட்டி என்று அழைக்கப்பட்ட விருதுநகரில் தீவிர காங்கிரஸ்காரர்களாக விளங்கிய கு.காமராஜ், அவருடைய நண்பர் கே.எஸ்.முத்துச்சாமி ஆகியோர் சுதந்திரப் போர் எழுச்சியில் தீவிரமாக ஈடுபட்ட நிகழ்ச்சியொன்றை இப்போது பார்ப்போம்.

ஒரே ஊரைச் சேர்ந்த இவ்விருவரும் காங்கிரசில் பிரபலமாக வளர்ந்து வந்தார்கள். கு.காமராஜ் அவர்களின் பெற்றொர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார். கே.எஸ்.முத்துச்சாமி அவர்களின் பெற்றோர் கே.சங்கரநாராயண ஆச்சாரி, அன்னபூரணத்தம்மாள்.

1933இல் உதகமண்டலத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்த வங்காள மாநிலத்தின் கவர்னர் சர் ஜான் ஆண்டர்சனைக் கொலை செய்வதற்காசென்னையில் ஒரு சதி நடந்ததாகவும் அதில் கே.அருணாசலம் (அருண்), சபாபதி, கண்ணாயிரம், ஹைதர் அலி என்கிற சங்கர், வாங்கார்டு இன்சூரன்ஸ் கம்பெனி அதிபர் ஹெச்.டி.ராஜா இவர்களோடு வங்கத்தைச் சேர்ந்த முகுந்தலால் சர்க்கார், கோவை சுப்பிரமணியம் ஆகிய 21 பேர் கைது செய்யப்பட்டு 'சென்னை மாகாண சதி வழக்கு' என்ற பெயரில் ஒரு வழக்கு நடந்தது. (இந்த வழக்கு குறித்த நமது கட்டுரை "சென்னை சதி வழக்கு" எனும் தலைப்பில் நமது வலைத்தளம் http://www.tamilnaduthyagigal.blogspot.com வெ ளியாகியிருக்கிறது. தயவு செய்து அதனைப் பார்க்க வேண்டுகிறேன்.)

இந்த வழக்கில் அப்போது தமிழகத்தில் தீவிரமாக இருந்த தேசபக்தர்கள் சிலரில் காமராஜ் போன்றவர்களையும் இணைக்க ஒரு முயற்சி நடந்தது. ஆனால் பாவம், அவர்களால் முடியவில்லை. காமராஜ் அவர்களை அந்தச் சதிவழக்கில் பிரிட்டிஷ் அரசு சேர்க்க விரும்பியதற்கு முக்கிய காரணம் இருந்தது. அதாவது காமராஜ் 1930இல் உப்பு சத்தியாகிரகத்தை ஆதரித்துப் பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்தார். அப்போது அதே சிறையில் அடைபட்டிருந்த லாகூர் சதி வழக்கில் ஷாஹீத் பகத் சிங்கின் தோழர்கள் காமராஜ் அவர்களுக்கு பழக்கமாகினர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு காமராஜ் அவர்களையும் சதி வழக்கில் பிணைக்க முனைந்தனர்.

உண்மையில் வங்க கவர்னராக இருந்த ஜான் ஆண்டர்சனைக் கொலை செய்யவும், வங்கியைக் கொள்ளை அடிக்கவும் புரட்சிக்காரர்கள் திட்டமிட்டது உண்மைதான். இதில் பங்கு பெற்ற தமிழ் நாட்டு வீரர்களில் கே.அருணாசலம் (அருண் - இவர் பிந்நாளில் 'ஆனந்தவிகடன்' இதழில் தொடராகப் பல தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதினார்) விருதுநகர் சென்று காமராஜ் அவர்களை சந்தித்தார் எனது ஒரு காரணம். அருணாசலம் புதுச்சேரி சென்று இரண்டு துப்பாக்கிகளை வாங்கி வைத்திருந்தார். ஆனல் இதில் எதிலும் காமராஜ் பங்கு பெறவில்லை என்பதுதான் உண்மை.

'சுதந்திரச் சங்கு' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர் இந்த அருணாசலம். இவரையும் இவரோடு தொடர்புடைய மற்ற புரட்சிக்காரர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்து விட்டனர். இந்த முயற்சியில் காமராஜ் அவர்களையும் சேர்த்துவிட அவர்கள் செய்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை.

எனவே அடுத்த சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்தனர் போலீசார். காமராஜரை எப்படியும் மாட்டிவிட வேண்டுமென்பது அவர்களது திட்டம். அந்த சமயம் பார்த்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் காவல் நிலையங்கள் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. போதாதா போலீசாருக்கு காமராஜரை மாட்டிவிட. இந்த நிகழ்ச்சிகளுக்கு காமராஜ், முத்துச்சாமி இவர்கள்தான் காரணம் என்று சந்தேகித்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவர் தவிர மாரியப்பன் எனும் பத்திரிகை நிருபர், நாராயணசாமி, வெங்கடாசலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது நடந்த அந்த வழக்கில் கே.எஸ்.முத்துச்சாமிதான் முதல் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். இரண்டாவது குற்றவாளியாக கு.காமராஜ் பெயர் இருந்தது. மற்றவர்களும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றனர்.

இவர்கள் ஐந்து பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயாரிப்பதில் போலீசார் திணறினர். குற்றவாளிகள் என கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அங்கெல்லாம் இவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. பாவம்! எப்படியாவது இவர்களை இதில் மாட்டிவிட வேண்டுமே என்ன செய்வது? ஒரு முடிவுக்கு வந்தனர். ஐந்தாவது குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருந்த வெங்கடாசலம் என்பவரை மிரட்டி அப்ரூவராக ஆக்கிவிட முயன்றனர். இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டவர் டி.எஸ்.பி.யாக இருந்த பார்த்தசாரதி ஐயங்கார்.
                                                          பார்த்தசாரதி ஐயங்கார்

இவர் பிந்நாளில் காமராஜ் முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை நகர் போலீஸ் கமிஷனராக இருந்தார் - இவருக்கு காமராஜ் அவர்களிடமிருந்து எந்தவித தொல்லையும் நேர்ந்ததில்லை - பழி வாங்கப்படவில்லை என்பது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். மற்றொரு முறை இவர் சென்னையில் பணியாற்றிய சமயம் ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக சென்னைக்கு விஜயம் செய்தார். காமராஜ் உட்பட பலரும் அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். அனுமதிச்சீட்டு கொண்டுவரவில்லை என்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான காமராஜை பார்த்தசாரதி ஐயங்கார் விமான நிலையத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். அதற்காகவும் அவர் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையை காமராஜ் எடுத்ததில்லை. அதுதான் காமராஜ் அவர்களின் பண்பு)

காமராஜ், முத்துச்சாமி ஆகியோர் மீதான இந்த வழக்கு தென் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கிலிருந்து இவர்களை வெளிக்கொணர தலைவர் சத்தியமூர்த்தி, குமாரசாமி ராஜா போன்றோர் முயற்சிகள் மேற்கொண்டனர். அப்போது ராஜபாளையம் விஜயம் செய்த காந்திஜி டி.எஸ்.எஸ்.ராஜனிடம் இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இவர்கள் இருவருக்காகவும் மதுரை தேசபக்தர், பிரபல பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் ஆஜரானார். மதுரையில் வழக்கு நடந்தது. ஆங்கிலேயரான மன்றோ என்பவரின் நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. ஜார்ஜ் ஜோசப்பின் வாதம் போலீசாரின் பொய் வழக்கை நிர்மூலமாக்கியது.

ஜார்ஜ் ஜோசப் முன் வைத்த அலிபி முக்கியமானது. காமராஜ், முத்துச்சாமி இருவரும் விருதுநகர் காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே நேரத்தில் அவ்விருவரும் அவ்வூரில் நடந்த பொருட்காட்சியில் ஒரு போலீஸ் அதிகாரியான அனந்தராமகிருஷ்ணன் என்பாருடன் இருந்தார் என்பதை அவர் நிரூபித்தார்.

உயர் போலீஸ் அதிகாரிகள் எவ்வளவோ வற்புறுத்தியும் அனந்தராமகிருஷ்ணன் பொய்சாட்சி சொல்ல மறுத்துவிட்டார். காமராஜ் பொருட்காட்சியில் தன்னுடன் தான் இருந்தார் என்பதை அவர் உறுதி செய்தார். உண்மை பேசிய குற்றத்துக்காக அந்த அதிகாரி உடனே அங்கிருந்து வேறு ஊருக்கு மாற்றப்பட்டார். நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது.

அடி, உதை தாங்காமல் அப்ரூவராகி பொய்யான வாக்குமூலம் கொடுத்த வெங்கடாசலமும் சத்தியத்துக்கும், மனச்சாட்சிக்கும் பயந்து தான் பொய் வாக்குமூலம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

நீதிபதி மன்றோ தனது தீர்ப்பில் அரசாங்கத் தரப்பு நம்பத்தகுந்த வாதங்களை முன்வைக்கவில்லை. மகா புத்திசாலிகளான இந்த இளைஞர்கள் வெடிகுண்டு வீச இப்படிப்பட்ட கேலிக்கூத்தான நடவடிக்கைகளைச் செய்திருப்பார்கள் என்பதை நம்பமுடியவில்லை என்று கூறினார். முடிவில் ஐந்து பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இந்த பொய் வழக்கு காமராஜ், முத்துச்சாமி ஆகியோரின் புகழை தமிழகம் முழுவதும் பரவும்படி செய்தது. காமராஜ் இந்த வழக்கை எந்தவித புலம்பலோ அல்லது குற்றச்சாட்டுகளோ சொல்லாமல், தன் மடியில் கனமில்லை என்பதால் தீரத்தோடு எதிர்கொண்டு முறியடித்தார். வீரர்களுக்கு என்றுமே தோல்வி கிடையாது; கோழைகளுக்குத்தான் அனைத்துமே என்பதை நிரூபித்தார். வாழ்க காமராஜ்--முத்துச்சாமி புகழ்!!

பெருந்தலைவர் காமராஜ்

Friday, August 5, 2011

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு


குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு

நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கலவரம் இந்திய நாடு முழுவதையுமே திரும்பிப் பார்க்க வைத்தது. சுதந்திரப் போரில் தமிழ்நாடு தனது வீரப்புதல்வர்களின் தியாகத்தை வெளியுலகுக்குத் தெரிவித்த நிகழ்ச்சி இது. தூக்குமேடைக்கு அருகில் சென்று மீண்ட இரு பெரும் தியாகிகளின் வரலாற்றை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்துவிட்ட சம்பவம் இது. இதன் பின்னணியைச் சற்று பார்ப்போம்.

1942 ஆகஸ்ட் 7, 8 தேதிகளில் பம்பாயில் மெளலான அபுல்கலாம் ஆசாத் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டது. அந்த தீர்மானம்தான் புகழ்பெற்ற "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானம்.

இந்தத் தீர்மானத்தின் மீது நேருஜி பேசும்போது ஆங்கிலேயார்கள் தாமாகவே முன்வந்து மூட்டை முடிச்சுகளுடன் இந்தியாவைவிட்டு வெளியேறும் நேரம் வந்துவிட்டது என்று உறுதிபட தெரிவித்தார். மகாத்மா காந்தி பேசுகையில் இந்தப் போரில் இந்திய சுதந்திரப் போர் வீரர்களுக்கு விடுத்த செய்தி "செய் அல்லது செத்து மடி" என்பதாகும்.
                                                                  statue of K.T.Kosalram
இந்த ஆகஸ்ட் தீர்மானம் நெடிய வாசகங்களைக் கொண்டது. இந்தத் தீர்மானத்தின் வாசகங்களில் காந்திஜி கடைப்பிடித்த அகிம்சை வழியில் போரிடப்போவதாகத்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஒளிந்திருந்த ஒரு சூட்சுமத்தை அறிவுசால் காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்து கொண்டார்கள். அந்த வாசகம் 'காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டால், காங்கிரஸ்காரர் ஒவ்வொருவரும் தத்தமக்கு வழிகாட்டியாகி, எப்படிப் போராடுவது என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்' என்பதுதான் அது.
                                                    Kulasekarapattinam temple Arch


1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு இந்தத் தீர்மானம் நிறைவேறியது. அன்றிரவே மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மெளலானா அபுல்கலாம் ஆசாத், வல்லபாய் படேல் போன்றவர்கள் மாநாடு நடந்த ஊரிலேயே கைதாகினர். உடல் நலம் கெட்டு பாட்னாவில் இருந்த பாபு ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு, மகாதேவ தேசாய் போன்றோரும் கைதாகினர்.
                                                    Kulasekarapattinam Beach

கைதான தலைவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர் பிரிட்டிஷ் ஆட்சியினர். இவர்கள் ஒரே இடத்துக்குக் கொண்டு செல்லப்படாமல் வெவ்வேறு ஊர்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
                                                    A deserted street of Kulasekarapattinam

இந்த ரகசிய நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பம்பாய் முதலான இந்திய நகரங்கள், ஊர்கள், கிராமங்கள் தோறும் மக்கள் திரண்டு பொதுவிடங்களில் கலவரத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டன, வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன, ரயில்வே தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன, தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டன, தபால்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அரசாங்க உயர் அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் தாக்குதலுக்கு ஆளாகினர்.

                                                                    Inside a foreign jail

நாடெங்கும் பெரும் கிளர்ச்சி உண்டாகியது. அருணா ஆசப் அலி போன்ற பெண் தொண்டர்கள் சாகசங்களில் ஈடுபட்டனர். கைதாகாமல் வெளியில் இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண், அச்சுத் பட்டவர்தன், அசோக் மேத்தா, ராம் மனோஹர் லோஹியா போன்ற சோஷலிஸ்ட்டுகள் தலைமையேற்று போராட்டத்தை வலிமைப் படுத்தினர்.

நாடெங்கும் தொண்டர்களே தலைமையேற்று தத்தமக்குத் தோன்றியபடி போராடத் தொடங்கினார்கள். இந்திய சுதந்திரப் போர் தொடங்கிய நாளுக்குப் பிறகு முதன் முதலாக இயமம் முதல் குமரி வரைய்ல் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஒரு மக்கள் இயக்கமாக நடத்திய போர் இந்த ஆகஸ்ட் புரட்சிப் போர்.
                                                                   Prisoners

பம்பாய் காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்றிருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். சஞ்சீவி ரெட்டி, சத்தியமூர்த்தி, பக்தவத்சலம் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் கைதாகினர். பெருந்தலைவர் காமராஜ் சிறிது காலம் தலைமறைவாகத் திரிந்து போராட்ட உத்திகளை வகுத்துத் தொண்டர்களுக்கு அறிவித்துவிட்டுத் தாமாகவே போலீசில் சரணடைந்தார்.
                                                              A prisoner inside jail

தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் போராட்டம் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது. கோவையில் சூலூர் விமான நிலையம் தீப்பற்றி எரிந்தது. புகளூரில் ரயில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டு சரக்கு ரயில் தடம் புரண்டது. தேவகோட்டையில் தியாகிகள் கைதாகி அடைக்கப்பட்டிருந்த திருவாடனை சிறை உடைக்கப்பட்டது. திருவையாற்றில் முன்சீப் கோர்ட், பதிவாளர் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது, சீர்காழியில் உப்பனாறு பாலத்துக்கு வெடிவைக்க முயன்றதாக இளைஞர்கள் சிலர் கைதாகினர்.
                                                      Congress Volunteers in an agitation

காங்கிரஸ் தொண்டர்கள் தவிர, இந்தப் போரில் பொதுமக்களும் பெருமளவில் பங்கு கொண்டனர். கட்சிகளுக்குள் இருந்த வேற்றுமைகள் மறைந்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி நாடே அல்லோலப் பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் போரில் முன்னிலை வகித்த திருநெல்வேலியின் நிலைமை எப்படியிருந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
                                                               Preparing the gallows

நெல்லை அதிக அளவில் சுதந்திரப் போர் வீரர்களை அளித்த பிரதேசம். அங்கு தொண்டர்கள் கூடி திருநெல்வேலி பிரதேசத்தை சுதந்திர பூமியாகப் பிரகடனம் செய்ய முயன்றனர். அதற்காக வீரர்கள் ஒன்றுகூடினர். இந்த ரகசியக் கூட்டத்தில் கே.டி.கோசல்ராம், பி.எஸ்.ராஜகோபாலன், டி.வி.காசிராஜன், மங்களா பொன்னம்பலம், ஏ.எஸ்.பெஞ்சமின், எம்.எஸ்.செல்வராஜன், சுந்தரலிங்கம், த.தங்கவேல், நாராயணன், ஆர். செல்லதுரை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு "சுதந்திர சேனை" என்ற பெயரில் ஒரு படையை அமைத்தனர்.
                                                                                Rajaji

1942 ஆகஸ்ட் 9ஆம் தேதி. ஆறுமுகநேரியில் இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒரு ரகசியக் கூட்டம் நடந்தது. அந்தப் பகுதியைச் சுற்றியிருந்த ஊர்களிலிருந்தெல்லாம் தொண்டர்கள் வந்து கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தங்கவேல் நாடார் என்பவர் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் பம்பாய் காங்கிரசின் தீர்மானம் விளக்கப்பட்டது. கே.டி.கோசல்ராம் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூடும்படியும், அப்போது நாம் என்ன செய்ய வேண்டு மென்பதைச் சொல்வதாகப் பேசினார். தொண்டர்கள் அவர் அறைகூவலை ஏற்று உறுதிமொழி தந்தனர்.
                                                                      Rajaji

ஆகஸ்ட் 12. ஆறுமுகநேரி சந்தைத்திடலில் கூட்டம் நிரைந்து வழிந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தார்கள். அவர்கள் மத்தியில் கே.டி.கோசல்ராம் பேசினார். இறுதியில் "அனைவரும் உப்பளம் நோக்கிப் புறப்படுங்கள்" என்று உத்தரவிட்டார். கூட்டமும் அங்ஙனமே அவரைப் பின் தொடர்ந்தது.

அங்கு உப்பளத்தில் அமர்ந்து கோசல்ராம் அமைதியாக சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். மக்களும் அவரைப் பின்பற்றினர். ஆயிரக்கணக்கானோர் அப்போது கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரிப்பதை விட்டுவிட்டு போலீஸ் அவர்களை பயங்கரமாகத் துன்புறுத்தத் தொடங்கினர். நகக் கண்களில் ஊசிகள் ஏற்றப்பட்டன. தலையிலும் மார்பிலும் ரோமங்களைப் பிடுங்கி அலற விட்டனர், மிருகங்களை அடிப்பது போல தொண்டர்களைத் தாக்கினர்.

அவர்கள் அனைவரும் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான பிறகு தொண்டர்கள் போலீசின் அராஜகத்துக்குப் பயந்துகொண்டு பதுங்கி விடவில்லை. மாறாக செப்டம்பர் முதல் தேதி கோசல்ராம் தலைமையில் மறுபடி ஒன்றுகூடினர். போலீசாரின் அராஜகப் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்தனர்.

நாம் அகிம்சை வழியில் அவர்களை எதிர் கொள்ள முடியாது. ஆகவே தற்காப்புக்காக ஒரு தற்கொலை படையை அமைக்க முடிவு செய்தனர். உடனே தற்கொலைப் படை உருவாக்கப்பட்டது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் தொண்டர்கள் தங்கள் கைகளைக் கீறி ரத்தத்தால் கையெழுத்திட்டனர்.

கை விரலில் ஊசியால் குத்தி ரத்தக் கையெழுத்திட்ட பலரில் குறிப்பாக ஜி.மகராஜன், அமலிபுரம் எஸ்.பெஞ்சமின், ஏரல் நடராஜன் செட்டியார், கொட்டங்காடு ஏ.டி.காசி, மெய்யன்பிறப்பு டி.சிவந்திக்கனி, பரமன்குறிச்சி டி.நாகமணி வாத்தியார், செட்டியார்பத்து எம்.அருணாசலம், வாழவல்லான் டி.பச்சப்பெருமாள், கொழுவைநல்லூர் வி.இரமலிங்கம் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.
                                                           Nehru, Rajaji & Patel

புரட்சிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வதாக வெள்ளைக்கண்ணு நாடார், வீரபாகு நாடார், துரைசாமி நாடார், வடிவேல், சுடலைமுத்து, கே.சுப்பையன் ஆகியோர் உறுதியளித்தனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு தொண்டர்கள் இரண்டு பிரிவாகப் பிரிந்து இரு வேறு திசைகளில் சென்றனர்.

மெய்ஞானபுரத்துக்கு ஒரு பிரிவும், சாத்தான்குளத்துக்கு மற்றொரு பிரிவும் சென்றது. மெய்ஞானபுரத்தில் அஞ்சல் அலுவலகம் தாக்கப்பட்டது. அங்கு தீ வைக்கப்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த நிகழ்ச்சியில் விழித்தெழுந்த ஊர்மக்கள் இவர்களைத் திருடர்கள் என்று நினைத்துத் துரத்தி வந்தனர். மாதாகோயில் மணியை அடித்து மக்களை எழுப்பினர். தேசபக்தர்களை ஊர்மக்கள் சுற்றி வளைத்தனர்.

செய்வதறியாது திகைத்த புரட்சி வீரர்களில் ஒருவர் திடீரென்று 'வந்தேமாதரம்' என்று குரல் எழுப்ப, மற்றவர்களும் உரக்க முழங்கினர். ஆகா! வந்திருப்பவர்கள் தேசபக்தர்களாச்சே என்று ஊர்மக்கள் உணர்ந்தனர். உடனே அவர்களும் வந்தேமாதரம் முழக்கமிட்டனர்.

கூட்டத்தினர் அங்கிருந்து புறப்பட்டு குரும்பூர் எனும் ஊரின் ரயில் நிலையத்தை அடைந்தனர். அங்கிருந்த நிலைய அதிகாரியிடம் தங்களிடம் நிலையத்தை ஒப்படைத்துவிட்டு ஓடிவிடும்படி கூறவே அவரும் ஓடிப்போனார்.

சாத்தான்குளம் நோக்கிப் போன புரட்சியாளர்கள் அங்கிருந்த காவல் நிலையத்தைத் தாக்கி அங்கிருந்த ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டனர். காவல் நிலையத்தைத் தன்வசப் படுத்திக் கொள்ள புரட்சிக்காரர்கள் ஒரு புதிய வழியைக் கடைப்பிடித்து ஏமாற்றி காவலர்களை லாக்கப்பில் தள்ளிப் பூட்டிவிட்டனர்.

புரட்சிக்காரர்களின் செயல் மாவட்டத் தலைமையிடத்துக்குப் போய்விடாமல் இருக்க அங்கிருந்த தந்திக் கம்பிகளை அறுத்தனர். ஆனால் செய்தி நெல்லை கலெக்டர் எச்மாடி என்பவருக்குப் போயிற்று. அவர் மலபார் ஸ்பெஷல் போலீசாருடன் சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு விரைந்தார்.

தங்களைப் பிடிக்க மலபார் போலீஸ் வருவதை அறிந்து புரட்சிக்காரர்கள் காட்டுக்குள் புகுந்து தலைமறைவாகினர். புரட்சித் தலைவர்களைக் கண்ட இடத்தில் சுட்டுக் கொன்றுவிடும்படி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். புரட்சிக்காரர்கள் இதற்கெல்லாம் பயப்படவில்லை. துப்பாக்கிகள், குண்டுகள் தயாரிப்பதில் ஈடுபட்டனர்.

மலபார் போலீசார் ஆறுமுகநேரி, சாத்தான்குளம், திருச்செந்தூர், மெய்ஞானபுரம், குரும்பூர் முதலான ஊர்களில் முகாமிட்டிருந்தனர். புரட்சிக்காரர்கள் போலீச்சில் சிலரையும் தங்கள் வசம் இழுக்க முயற்சித்து வந்தனர். இந்தப் பணியில் சோஷலிஸ்ட்டான மங்களா பொன்னம்பலம் என்பவர் ஈடுபட்டார். அவர் அப்போது 18 வயதான இளைஞன்.

1942 செப்டம்பர் 29ஆம் தேதியன்று நள்ளிரவு புரட்சி வீரர்களைக் கொண்ட ஒரு கூட்டம் குலசேகரப்பட்டினம் உப்பளம் நோக்கிச் சென்றது. இந்த குலசேகரப்பட்டினம் கன்னியாகுமரியிலிருந்து முப்பது மைல் தூரத்தில் உள்ள ஒரு சிற்றூர். அவ்வூர் உப்பளத்துள் நுழைந்த தொண்டர்களைப் போலீஸ் தாக்கத் தொடங்கியது. தொண்டர்களும் திருப்பித் தாக்கினர். குறைவான எண்ணிக்கையில் இருந்த போலீசாரைக் கட்டிப் போட்டுவிட்டு தொண்டர்கள் அவர்களது ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

1942 செப்டம்பர் 30 விடியற்கால வேளை. பொழுது இன்னம் முழுமையாக புலரவில்லை. இருள் மண்டியிருந்தது. நான்கு மணியிருக்கலாம். தொண்டர்கள் உற்சாகத்தோடு திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த முஸாபரி பங்களா வாயிலில் லோன் எனும் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி குடிபோதையில் கையில் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு இவர்களை எதிர் கொண்டான்.

கூட்டத்தில் வந்து கொண்டிருந்த பி.எஸ்.ராஜகோபாலன் எனும் இளைஞரின் நெஞ்சைக் குறிபார்த்து அந்த லோன் துரை தன் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு சுட்டுவிட முயற்சி செய்தான். அவன் இருந்த நிலை, துப்பாக்கியைப் பிடித்திருந்த சூழல், இவன் ராஜகோபாலனைச் சுட்டுவிடுவானோ என்று அனைவரும் பதறினர். அப்போது உடன் வந்த பல தொண்டர்களில் ஒருவர் தன் கையிலிருந்த வேல்கம்பை உயர்த்தி அந்த லோன் துரையின் மார்பில் பாய்ச்சினார். அதே நொடியில் உடன் வந்த தொண்டர்கள் அரிவாளைக் கொண்டும், வேல் கம்புகளாலும் அவன் உடலைச் சல்லடைக் கண்களாகத் துளைத்து விட்டனர்.

லோன் துரை கீழே சாய்ந்தான். இரத்த வெள்ளத்தில் பிணமானான். பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின்படி அவன் உடலில் 64 வெட்டுக் காயங்கள் இருந்ததாகத் தெரிந்தது.

லோன் துரையின் மரணம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிவிட்டது. கே.டி.கோசல்ராம் உட்பட சுமார் 500 பேர் மீது வழக்கிப் பதிவு செய்யப்பட்டது.

குரும்பூர் ரயில் நிலையம் பறிக்கப்பட்டது, மெய்ஞானபுரம் தாக்கப்பட்டது குறித்து "குரும்பூர் சதி வழக்கு" பதிவாகியது.

லோன் துரையின் கொலை "குலசேகரப்பட்டினம் கலவர வழக்கு" என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டு நாடு முழுதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

விசேஷ அதிகாரங்களைக் கொண்ட சிறப்பு கோர்ட் வழக்கை விசாரித்தது. இராஜகோபாலன், காசிராஜன், பெஞ்சமின், மங்களா பொன்னம்பலம், தங்கவேல் நாடார், சுந்தரலிங்கம், நாராயணன் ஆகிய 26 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யர், ஐ.சி.எஸ்.

பிரபல வழக்கறிஞர் டேனியல் தாமஸ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட வழக்கறிஞர் குழு குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆகி வாதிட்டனர்.

1942 அக்டோபர் மாதம் வழக்கு தொடங்கியது. 1943 பிப்ரவரி ஆறாம் தேதி முடிவடைந்து, எட்டாம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி டி.வி.பாலகிருஷ்ண அய்யருக்கு தேசபக்தர்கள் மீது என்னதான் அப்படி கோபமோ தெரியவில்லை. தேசபக்தர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

குலசேகரப்பட்டினம் கலவர வழக்கில் முதல் எதிரி காசிராஜனுக்கும், இரண்டாவது எதிரி ராஜகோபாலனுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது போதவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அதோடு மூன்று மூன்று ஜன்ம தண்டனை (60 ஆண்டுகள் சிறை) 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தார். ஆக மொத்தம் தூக்கு தவிர 74 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஏ.எஸ்.பெஞ்சமின் இந்த வழக்கில் மூன்றாவது எதிரி. இவருக்கு 63 ஆண்டுகள் சிறை. இது தவிர மெய்ஞானபுரம் வழக்கில் ஆயுள் தண்டனை (20 ஆண்டுகள்) குரும்பூர் ரயில் நிலைய வழக்கில் 17 ஆண்டுகள், ஆக மொத்தம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை.

மற்ற எதிரிகளான செல்லத்துரை, சுந்தரலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோருக்கு ஜென்ம தண்டனை. ஏனையோருக்கு 5 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் தீர்ப்பை வாசித்து முடித்தவுடன் முதல் இரு எதிரிகளான காசிராஜனும், இராஜகோபாலனும் நீதிபதியைப் பார்த்து சிரித்துக் கொண்டு கேட்டனர், "நீதிபதி அய்யா அவர்களே! எங்களுக்கு இருப்பதோ ஒரு ஜன்மம் ஆனால் தாங்கள் எங்களுக்கு மூன்று ஜன்ம தண்டனையும், அதுதவிர தூக்கு தண்டனையும் கொடுத்திருக்கிறீர்கள். தண்டனையை நாங்கள் எப்படி அனுபவிப்பது, தூக்குக்குப் பிறகு ஜன்ம தண்டனைகளா அல்லது அதற்கு முன்பாகவா?" என்றனர். நீதிமன்ற வளாகம் துக்கத்தையும் மீறி சிரிப்பலைகளில் மிதந்தது.

இந்த கலகலப்புக்கிடையே ஒரு குரல், "இது தெரியாதா? இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவை அனைத்திலும் வரிசையாக இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். இல்லாவிட்டால் விடமாட்டார்" என்று கேட்டது. மறுபடியும் ஒரே சிரிப்பலை.

மதுரை சிறைச்சாலை இவர்களின் இருப்பிடமாயிற்று. அப்போது மதுரை சிறையை உடைத்து இந்த தேசபக்தர்களை வெளிக்கொணர பசும்பொன் தேவர் ஐயா அவர்கள் ஒரு முயற்சியில் இறங்கினார். அந்த ரகசியம் எப்படிக் கசிந்ததோ தெரியவில்லை கைதிகள் அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டனர்.
தளபதி கே.டி.கோசல்ராம் ஒன்றரை ஆண்டு தண்டனை பெற்றார்.

காசிராஜன், இராஜகோபாலன் இருவரும் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இருவரும் சென்னை சிறைக்கு மாற்றப்பட்டனர். இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் இவர்கள் இருவருக்கும் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது இருவருக்கும் சுமார் 20 வயதுதான் இருக்கும். ராஜாஜி அவர்கள் பொது மருத்துவமனைக்குச் சென்று இவர்கள் இருவரையும் உடல்நலம் விசாரித்தார்.

இந்த வழக்கு நடந்து வந்த காலத்தில் குற்றவாளிகளின் வயது காரணமாகவும் தீர்ப்பின் கடுமை காரணமாகவும் தமிழக பத்திரிகைகள் இவர்களுக்கு ஆதரவாக எழுதி வந்தது. 'தினமணி' பத்திரிகையும் வேறு பல பத்திரிகை எழுத்தாளர்களும் இவர்களுக்கு ஆதரவாக எழுதி மக்கள் மத்தியில் இவர்கள் பால் அனுதாபத்தை உருவாக்கினர். ராஜாஜி அவர்கள் இவர்களுடைய விடுதலைக்காக பெருமுயற்சி எடுத்துக் கொண்டார்.

சென்னை உயர்நீதி மன்றம் இவர்கல் அப்பீலைத் தள்ளுபடி செய்தது. மறுபடி ரிவிஷன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்துக்குப் போனது. இவ்விருவரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று பல்லாயிரக் கணக்கில் தந்திகள் அரசாங்கத்துக்குப் பறந்தன.

உச்ச நீதிமன்றத்திலும் இவர்களது மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரின் தூக்கு தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.

இறுதி முயற்சியாக பிரிட்டனில் இருந்த பிரிவி கெளன்சிலுக்கு மேல் முறையீடு செய்தனர். தேசபக்தர் இருவர் சார்பிலும் பிரபல ஆங்கிலேய வழக்கறிஞர் பிரிட் என்பார் வாதிட்டார். ஏற்பாடு செய்து உதவியவர் ராஜாஜி.

லோன் எனும் ஆங்கிலேயரைக் கொன்ற குற்றவாளிகள் என்பதால் இவர்களிடம் அந்த நீதிபதிகளும் இரக்கம் காட்டவில்லை. இவர்களது மேல் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தூக்கு தண்டனை உறுதியாயிற்று இவ்விரண்டு தேசபக்தர்களுக்கும்.

அந்தக் காலகட்டத்தில் இந்திய சுதந்திரம் கைக்கு எட்டும் தூரத்தில் வந்துவிட்டது. காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்திய வைசிராய்க்கு ஒரு கருணை மனு அனுப்பப்பட்டது. வைசிராய் அவர்களை நேரில் சந்தித்து ராஜாஜி அவர்கள் செய்த முறையீடு வேலை செய்தது. தூக்கு தண்டனை இவ்விருவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

அதற்குள் 1946இல் இந்திய சுதந்திரம் நெருங்கி வந்துவிட்ட சமயம், சென்னை மாகாணத்தில் ஒரு இடைக்கால சர்க்கார் உருவாகியது. அதற்கு பிரபல காங்கிரஸ்காரரும், மிகப் பெரிய வழக்கறிஞருமான ஆந்திர கேசரி என வழங்கப்பட்ட டி.பிரகாசம்காரு முதலமைச்சராக வந்தார். அவர் பதவி ஏற்றதும் செய்த முதல் நல்ல காரியம் சிறையில் வாடிய தேசபக்தர்களையெல்லாம் விடுதலை செய்ய உத்தரவிட்டார். கூட்டத்தோடு தூக்குமேடை காசிராஜனும், தூக்குமேடை ராஜகோபாலனும்கூட வெளியே வந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர்.

இவர்கள் தவிர கே.டி.கோசல்ராம் உள்ளிட்ட மற்ற பல தேசபக்தர்களும் சிறையிலிருந்து வெளியே வந்தனர். இப்படியாக ஒரு வீர காவியம் வரலாற்றில் எழுதப்பட்டு புகழ்பெற்றது. அதுமுதல் இவ்விரு சுதந்திரப் போராட்ட வீரர்களையும் "தூக்குமேடை ராஜகோபாலன்", "தூக்குமேடை காசிராஜன்" என்று வழங்கலாயினர்.

இந்தச் சுதந்திரப் பொன்னாளில் இவர்கள் போன்ற மாவீரர்களைப் போற்றி வணங்குவோம். அப்போதுதான் இவர்களைப் போன்ற தன்னலமற்ற தியாகிகள் இந்த மண்ணில் தோன்றுவார்கள். வாழ்க குலசேகரப்பட்டினம் தியாகிகள் புகழ்!!












Sunday, July 31, 2011

சுதந்திர தின வாழ்த்து


இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!! வந்தேமாதரம்!!!

64ஆம் ஆண்டு சுதந்திர நாளில் ஓர் உறுதிமொழி ஏற்போம். ஊழலை ஒழிப்போம். ஊழல் வாதிகளை உதறித் தள்ளுவோம். உலகத்து நாடுகளுக்குத் தலைமை ஏற்போம். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு. வந்தேமாதரம்!

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?

எண்ணமெலாம் நெய்யாக எம் உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?

ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?

தர்மமே வெல்லும் எனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?

நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய்!
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?

பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்?
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே?

நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம் கேட்டால்
எம்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவோ?

இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர்
அன்று கொடு வழ்ந்த அருமையெலாம் ஓராயோ?

நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்
ஓயும் முன்னர் எங்களுக்கிவ் ஓர் வரம் நீ நல்குதியே.
***

இதந்தரு மனையின் நீங்கி
இடர்மிகு சிறைப் பட்டாலும்
பதந்திரு இரண்டும் மாறிப்
பழிமிகுத் திழிவு உற்றாலும்
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.
***

-- மகாகவி சுப்பிரமணிய பாரதியார

Monday, July 25, 2011

வேலூர் சிப்பாய்கள் புரட்சி


வேலூர் சிப்பாய்கள் புரட்சி

1857இல் வட இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியாரிடம் வேலை செய்த இந்திய சிப்பாய்களின் கலவரம் மிகப் பிரபலமானது. அதை வீர சவார்க்கர் முதல் பல சரித்திர ஆசிரியர்களும் முதல் சுந்ததிரப் போர் என்கின்றனர். அதற்கும் முன்னதாக தமிழ் நாட்டில் வேலூரில் சிப்பாய்கள் செய்த கலவரம் ஒன்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

தென் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியார் சிறுகச் சிறுகத் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டு வந்த நிலையில், தெற்கே பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட கட்டபொம்மு நாயக்கரும், சிவங்கைச் சிங்கங்களான பெரிய மருது சென்ன மருது ஆகியோர் தூக்கில் போடப்பட்டு இறந்த பிறகு கிழக்கிந்திய கம்பெனி தென்னகத்தில் காலூன்றிவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்தது. சிவகங்கைப் போர் முடிந்தது. பெரிய மருதும் சின்ன மருதும் கொல்லப்பட்டு கொடுமையாக அவர்களது தலை துண்டிக்கப்பட்டு மக்கள் பார்வையில் படும்படி நட்டு வைக்கப்பட்டது. தென்னகம் முழுவதும் கம்பெனியின் அதிகாரத்திற்குட்பட்டு இருந்தது.

இந்த சூழ்நிலையில் இருட்டில் திடீரென்று தோன்றிய பளிச்சிடும் மின்னல் போல வேலூரில் ஒரு புரட்சி தொடங்கியது. 1806ஆம் வருஷம் வேலூரில் நடந்த நிகழ்ச்சி குறித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கூறும் வரலாற்றை இப்போது பார்ப்போம்.
                                                    Vellore Fort - Another view
கோட்டையில் இளவரசர்கள்.

"வேலூர் நகரத்தில் சுற்றிலும் அகழிகளைக் கொண்ட மிகப்பெரிய கோட்டை ஒன்று இன்றும் இருந்துவரக் காண்கிறோம். ஆற்காட்டு நவாபின் ஆட்சியில் இருந்த இந்த கோட்டையானது கிழக்கிந்தியக் கம்பெனியாரின் கைகளுக்கு மாறியது. இதன் விளைவாக மைசூர் போரில் கம்பெனியாரிடம் தோல்வியுற்று மாண்டுபோன மாவீரன் திப்பு சுல்தானின் மக்கள் பிரிட்டிஷ் படைகளால் கைது செய்யப்பட்டு இந்த வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஏதோ ஒருவர் அல்லது இருவர் அல்ல. பதெனெட்டு பேர். ஆம்! ஆண் மக்கள் பன்னிருவர், பெண் மக்கள் அறுவர். இவர்களில் ஆண் மக்களில் இருவர்க்குத் திருமணம் ஆகியிருந்தது. இவர்களையும் சேர்த்து திப்புவின் குடும்பம் முழுவதையும் வேலூர் கோட்டையிலே குடியமர்த்தியது பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி. அவர்களுக்குத் தேவைப்படும் பணியாட்களையும் அமர்த்திக் கொடுத்து, நெருங்கிய சுற்றத்தாரையும் அவர்களுக்குத் துணை சேர்த்துக் கொடுத்தது. மாற்றான் மக்களாயினும் அவர்களுடைய சுதந்திரத்தைப் பறித்துக் கைது செய்திருப்பினும் அவர்களை மரியாதையாக நடத்தினர் கம்பெனியார்.

வெள்ளையர்களும், இந்தியர்களுமான ராணுவத்தினர் வேலூர் கோட்டையில் காவலுக்கு நிறுத்தப் பட்டனர். இந்திய ராணுவத்தினரிலே தமிழரும் இருந்தனர். அவர்கள் எண்ணிக்கையிலே மிகுதி என்று சொல்லப்படுகிறது.
                                                                     William Bentick
மதத்தில் தலையீடு.

இந்திய சிப்பாய்களிடம் மத ரீதியான மாறுதலை ஏற்படுத்த கம்பெனி முயன்றது. காதில் கடுக்கன் அணிவது தமிழர் வழக்கம். வேலூர் கோட்டையிலிருந்த சிப்பாய்களிலும் பலர் கடுக்கன் அணிந்திருந்தனர். அவர்கள் தங்கள் காதணிகளைக் கழற்றிவிட வேண்டுமென்று வெள்ளை ராணுவ அதிகாரிகள் ஆணை பிறப்பித்தனர். வழக்கமாகத் தலையில் அணிந்திருந்த குல்லாயிலும் மாறுதல் செய்யப்பட்டது. தோலால் ஆன காலணியும் வழங்கப்பட்டது. இந்த மாறுதல்களெல்லாம் தமிழினத்தைச் சார்ந்த சிப்பாய்களுக்குப் பிடிக்கவில்லை. அரை நூற்றாண்டுக்குப் பின், மத உணர்ச்சியைத் தாக்கக்கூடிய வகையில் இந்து சிப்பாய்களிடம் கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட கம்பெனி ஆட்சி மாறுதல்களைத் திணித்ததால்தான் வடபுலத்தில் சிப்பாய்ப் புரட்சி தோன்றியது. அதற்கு முன்மாதிரியாக இருந்தன வேலூர் சிப்பாய்களிடம் வெள்ளை ராணுவ அதிகாரிகள் திணித்த மாறுதல்கள். இந்த மாறுதல்களை எதிர்த்த சிப்பாய்களில் பலரைக் கைது செய்து, அவர்களைச் சென்னைக்கு அனுப்பி அங்கே அவர்களுக்குக் கசையடித் தண்டனை வழங்கப்பட்டது.

நள்ளிரவில் பூத்த புரட்சி!

இந்தக் கொடுமை வேலூரிலே தங்கியிருந்த சிப்பாய்களிடையே பழிவாங்கும் உணர்ச்சியை உண்டாக்கியது. வேலூர்க் கோட்டையில் காவலில் வைக்கப்பட்ட மைசூர் இளவரசர்களும் சிப்பாய்களிடையே புரட்சியைத் தூண்டியிருக்க வேண்டும். கோட்டைக்கு வெளியே வேலூர் நகரில் வாழ்ந்த சுதந்திர உணர்வுடைய தமிழ் மக்களோடும் கோட்டையிலிருந்த புரட்சி மனம் படைத்த சிப்பாய்களும் இரகசியத் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது.

1806ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதியன்று இரவு பிரிட்டிஷ் ராணுவத்தைச் சார்ந்த தளபதிகள் சிலர் கோட்டைக்குள்ளேயே இந்திய சிப்பாய்கள் மத்தியில் தங்கி உறங்கினர். காவலுக்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளைச் சிப்பாய்களும் இரவு நேரத்தைக் கழிக்கக் கோட்டைக்குள்ளே தங்கினர். அன்று நடுநிசி கழிந்த பின்னிரவு நேரத்தில் சரியாக மூன்று மணிக்குப் புரட்சி வெடித்தது. போர்த்தளவாடங்கள் நிரப்பப்பட்டிருந்த அறையை இந்தியச் சிப்பாய்கள் கைப்பற்றினர். லெஃப்டினென்ட் கர்னல்கள் எண்மர் தங்கியிருந்த இல்லத்தையும் சிப்பாய்கள் முற்றுகையிட்டனர். தளபதிகளும் ஆங்கில ராணுவத்தினருமாக வெள்ளை நிறத்தவர் பலர் புரட்சி வீரர்களால் கொல்லப்பட்டனர். பல மணி நேரம் வேலூர்க் கோட்டைக்குள்ளே துப்பாக்கி வெடிச்சத்தம் ஓயவில்லை. பொழுது விடிந்து காலைக் கதிரவன் அடிவானத்தில் தோன்றிய பின்னரும் புரட்சி நீடித்தது. லெஃப்டினென்ட் கர்னல்களில் சிலர் எப்படியோ கோட்டையைவிட்டு வெளியேறித் தலைமறைவாயினர். கோட்டைக்குள்ளே பீரங்கிகளும் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன.
                                                                     War Memorial
8 மணி நேரப் புரட்சி

கோட்டைக்குள்ளிருந்த சுமார் நானூறு வெள்ளை வீரர்களில் சுமார் இருநூறு பேர் வரை கொல்லப்பட்டு விட்டனர். கேப்டன் மாக்லாசலன் என்ற வெள்ளைத் தளபதி உள்ளிட்ட பலர் படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர். இதற்குள் வெளியிலிருந்து வெள்ளைப் படைகள் தருவிக்கப்பட்டன. அப்படையினர் கோட்டையின் தலைவாயிலைக் கைப்பற்றி, கோட்டைக்குள்ளிருந்த படை வீரர்களை முற்றுகையிட்டனர்.

ஜூலை 9ஆம் தேதி பின்னிரவு நேரத்தில் தொடங்கிய புரட்சி 10ஆம் தேதி முற்பகல் வரை சரியாக எட்டு மணி நேரம் நடைபெற்றது. இதற்குள் காப்டன் யங், லெஃப். வுட்ஹவுஸ், கர்னல் கென்னடி ஆகிய ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆற்காட்டிலிருந்த தளபதி வெள்ளைப் படையைத் திரட்டிக் கொண்டு வேலூர் நகருக்கு விரைந்தான். ஆற்காட்டுப் படை இந்தியப் புரட்சி வீரர்களை வெற்றி கண்டு கோட்டையைக் கைப்பற்றியது. இந்தப் புரட்சியில் வேலூர் நகர மக்களிலே ஆண்களும் பெண்களுமாகப் பலர் பங்கு கொண்டனர் என்று "ஆற்காட்டு ரூபாயின் அருஞ்செயல்கள்" எனும் நூலின் ஆசிரியர் கூறுகிறார்.

புரட்சியில் தோற்ற இந்தியச் சிப்பாய்கள் வெள்ளையர்களால் பழிவாங்கப்பட்டனர். அவர்களில் சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கோட்டையிலும் வேலூரின் சுற்றுப் புறங்களிலும் வேட்டையாடி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியச் சிப்பாய்களை வெள்ளையர்கள் கைது செய்தனர்.

வெள்ளையனுக்கு வெற்றி

வேலூரில் நடந்த சிப்பய் புரட்சியானது எட்டு மணி நேரத்திற்குள் ஓய்ந்துவிட்டது. அதிலே இந்துக்களும், இஸ்லாமியர்களும் பங்கு கொண்டனர். இந்திய சிப்பாய்களிலேயே சிலர் துரோகிகளாக மாறி, ஆங்கில தளபதிகளிடம் புரட்சி வீரர்களின் அந்தரங்கத் திட்டத்தை முன்கூட்டி அறிவித்திருந்ததனால் வெள்ளையருக்கு வெற்றி கிடைத்தது. முஸ்தபா எனும் துரோகிக்கு இரண்டாயிரம் பகோடாக்களைப் பரிசாக அளித்து கெளரவித்தது வெள்ளை அரசு. துரோகச் செயலுக்குக் கிடைத்த வெகுமதி அது.

புரட்சிக்குப் பின்னர் அதிலே முன்னணியிலிருந்தவர்களுக்கு மரண தண்டனையும், ஆண்டுக் கணக்கில் சிறைத் தண்டனையும் கம்பெனி அதிகாரிகளால் விதிக்கப்பட்டன. வேலூர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த மைசூர் திப்பு சுல்தானின் மக்கள் கைதிகளாக இருந்த நிலையிலேயே, *கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டு அங்கே காவலில் வைக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் நிகழ்ந்தத்டாலும், தமிழரும் பங்கு கொண்டதாலும் மைசூர் சுல்தானின் மக்கள் சிறை வைக்கப்பட்டதன் காரணமாக எழுந்த வேலூர் புரட்சியானது சுதந்திரப் போரில் தமிழகம் ஆற்றியுள்ள பங்கிலே சிறப்பிடம் பெறுகிறதெனலாம்."

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கல்கத்தாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட மைசூர் புலி திப்புவின் மக்களின் கதி என்ன என்று பத்திரிகையாளர்கள் விசார்த்து அறிந்த வகையில், அவர்களின் வாரிசுகள் அங்கு குடியேறி, காலணிகள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

1857 இந்திய சிப்பாய் கலகம் என்று வர்ணிக்கப்பட்ட 'முதல் சுதந்திரப் போருக்கு' முன்னதாக நடந்தது நமது வேலூர் சிப்பாய் புரட்சி. பெயர் தெரியாத அந்த வீரத் தியாகிகளுக்கு நமது வீரவணக்கங்களை அளித்திடுவோம். வாழ்க வேலூர் புரட்சி வீரர்கள் புகழ்!

Saturday, July 23, 2011

மாடசாமி பிள்ளை


மாடசாமி பிள்ளை

யார் இந்த மாடசாமி? திருநெல்வேலி சதி வழக்கில், கலெக்டர் ஆஷ் கொலை சம்பந்தமாகத் தேடப்பட்டவர். வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு தேசபக்தர். நெஞ்சுரம் மிக்கவர். ஆஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவான இவர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் போய்விட்டது. அவர் இருக்குமிடம் மட்டுமா தெரியாமல் போய்விட்டது. அவர் யார் என்பதே இன்றைக்குப் பலருக்குத் தெரியாமல் வரலாற்றில் முக்கிய இடம்பெறாமல் போய்விட்ட தியாகி அவர்.

ஆஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் இவர் காணாமல் போய்விட்டதாகப் போலீசார் சொல்லி வந்தனர். இவரது ஊர் ஒட்டப்பிடாரம். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.பிறந்த ஊர். இந்தப் புனித பூமியில் பிறந்த மாடசாமி பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான வன்முறைப் புரட்சியில் ஈடுபட்டிருந்தது வியப்புக்குரியது அல்ல.

வீரர் மாடசாமி திரு வ.உ.சியின் தோழராகவும், சீடராகவும் இருந்து சட்டத்திற்குட்பட்ட முறையில் நடந்த சுதேசிக் கிளர்ச்சியில் பங்கு கொண்டவரும் ஆவார். தலைமறைவான பிறகு அவர் என்ன ஆனார்? செவி வழிச் செய்தியாக இவர் பிரிட்டிஷ் இந்தியாவை விட்டு வெளியேறி புதுச்சேரிக்குச் சென்று விட்டதாகச் சிலர் தெரிவித்தனர். அங்கு தங்கியிருந்த காலத்தில் இவருக்கு வ.வெ.சு.ஐயருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மாடசாமி குறித்து போலீசாரின் இரகசியக் குறிப்பு கூறும் செய்தி: "தூத்துக்குடி போலீஸ் துணை சுப்பரின்டெண்ட் ஜான்சன் தலைமறைவாகிவிட்ட மாடசாமிப் பிள்ளையைப் பிடிக்க எத்தனையோ முயன்றும் முடியவில்லை. அவரது வீட்டிலுள்ள பொருட்களையும் அவருக்குச் சொந்தமான நிலங்களையும் பறிமுதல் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரியில் இவர் இருக்கிறார் என்ற செய்தி அறிந்த பிரிட்டிஷ் போலீசார் அவரை அங்கும் சென்று வேட்டையாடத் தயாராகினர். இந்தச் செய்தியறிந்த மாடசாமி அங்கிருந்து தப்பி சிங்கப்பூர் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு சென்ற பிறகு அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார் என்கிற விஷயங்கள் எல்லாம் மர்மமாகவே இருந்து வருகின்றன. ஒரு சமயம் அவரைக் கொழும்புவில் பார்த்ததாகச் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆக, அவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இரும்புப் பிடியிலிருந்து தப்பி உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் காலமாகி யிருக்க வேண்டும். இப்படிப்பட்ட தியாகிகளின் வாழ்க்கையை என்னவென்பது? எப்படிப் போற்றுவது?

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் அவர்கள் "விடுதலைப் போரில் தமிழகம்" எனும் நூலில் மாடசாமி குறித்து எழுதியிருக்கிறார். அவர் சொல்கிறார், "மாடசாமி கோழைத்தனத்தால் தலைமறைவாகி விடவில்லை. தண்டனைக்குப் பயந்தும் தப்பியோடவில்லை. அந்நாளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பியோடி, புரட்சிச் செயல்களில் ஈடுபடுவது புரட்சியாளரின் வேலை திட்டமாக இருந்தது. காந்திய சகாப்தம் பிறந்த பின்னர்தான் இந்த முறை பெருமை தரத் தக்கதல்ல என்று தேசபக்தர்களால் கருதப்பட்டது".

திரு மாடசாமியைப் பற்றி அவர் சாந்திருந்த 'அபிநவ பாரதம்' எனும் புரட்சி இயக்கத்தைத் தமிழ்நாட்டில் தோற்றுவித்து நடத்தி வந்தவரும், ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்டு வழக்கில் 7 ஆண்டுகள் கடும்காவல் தண்டனை பெற்றவருமான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுவதையும் ம.பொ.சி. தனது நூலில் குறிப்பிடுகிறார்.

"எனது புரட்சிப் படையில் மாடசாமி பிரதானமானவர். மகா தீரர்; சூரர்; வீரர்! இவரைப் போல உறுதியும் துணிவும் மிகுந்தவரைக் காண்பது அரிது. இவர் சகலகலாவல்லவர். எந்த நிமிஷத்திலும் எந்த வேஷத்தையும் போட்டுத் திறமையுடன் செயல்பட வல்லவர். போலீசாரைப் பல தரம் ஏமாற்றியுள்ளார். நெருங்கியவர்களைத் தவிர வேறு யாராலும் இவரை அடையாளம் காண இயலாது. அவ்வளவு சாமர்த்தியசாலி. ஒட்டப்பிடாரம்தான் இவரது சொந்த ஊர். திருமணமானவர். குழந்தைகளும் உண்டு. அப்படியிருந்தும் இவர் புரட்சி வேள்வியில் குதித்து நீந்தினாரென்றால், இவரது ஆண்மையையும், உறுதியையும் என்னென்று புகழ்வது."
(இந்தியச் சுதந்திரப் போர்)

ம.பொ.சி. அவர்கள் மாடசாமியின் வரலாற்றைத் தொடர்ந்து எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் செய்தி: "மாடசாமி தலைமறைவானபின் அவருடைய சொத்துக்களை யெல்லாம் நீதிமன்றத்தின் ஆணைப்படி அரசு பறிமுதல் செய்துவிட்டது. அதனால், கணவனைப் பிரிந்து அவரது மனைவி தம் குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன பாடுபட்டாரோ? தேசபக்த மாவீரனுக்கு மக்களாகப் பிறந்த பாவத்திற்காக அந்தக் குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் எவ்வளவு காலம் அல்லலுற்றனவோ? அவர்களது தியாக வாழ்வுக்குத் திரை விழுந்து விட்டதே!"

வாழ்க தியாகசீலர் மாடசாமிப் பிள்ளை புகழ்!!

Friday, July 15, 2011

பொட்டி ஸ்ரீராமுலு

பொட்டி ஸ்ரீராமுலு

ஆந்திர மாநிலத்தின் பிதா பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிந்து தனி மாநிலமாக அமைவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தத் தியாகி. இவருடைய உயிர்த்தியாகம்தான் ஆந்திரா உருவாகக் காரணமாக இருந்தது. ஆகவே ஆந்திர தெலுங்கு மக்கள் போற்றும் தியாகியாக இவர் விளங்குகிறார். நாமும் நமது சென்னை மாகாணம் எப்படி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்தது என்ற வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாமே.
Charminar, Hussaini sagar

காந்தியத்தில் நம்பிக்கையுடைய தேசபக்தர் பொட்டி ஸ்ரீராமுலு. சத்தியம், அகிம்சை, தேசபக்தி இவற்றில் ஈடுபாடும் ஹரிஜன் முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்டவர். இவர் சென்னையில் அண்ணாபிள்ளை தெருவில் வசித்து வந்த குருவய்யா மகாலக்ஷ்மம்மா தம்பதியரின் மகனாக 16-3-1901இல் பிறந்தார். தெலுங்கு ஆரிய வைசிய குலத்தைச் சேர்ந்தவர் இவர். இவர்கள் பொதுவாக சைவ உணவை உட்கொள்பவர்காளக இருப்பார்கள். இளம் வயதில் காந்திஜியின் தாக்கம் இவருக்கு இருந்ததால் அவருடைய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது இருபதாம் வயது வரை சென்னையில் படித்தார், பின்னர் Sanitary Engineering படிப்பை பம்பாயில் விக்டோரியா ஜுபிலி டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்டில் படித்தார். அந்த நாளில் ரயில்வே மண்டலங்கள் பல பெயர்களில் அறியப்பட்டன. சென்னையில் சதர்ன் மராட்டா ரயில்வே (MSM) என்றும், நாகைப்பட்டினத்திலும் பின்னர் திருச்சியிலும் இருந்த மண்டலம் தென் இந்திய ரயில்வே (SIR) என்றும் இருந்தது. அது போல இவர் Great Indian Peninsular Railwayயில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு இவர் சுமார் நான்கு ஆண்டுகள் ரூ.250 மாதச் சம்பளத்தில் பணியாற்றினார். இவர் தனது 26ஆம் வயதில் 1927இல் மனைவியை இழந்தார். அதன் பின் உலக வாழ்க்கையில் பற்று நீங்கியவராக வேலையிலிருந்தும் வெளியேறினார். தனது சொத்துக்களை தனது சகோதரர்களுக்கும் தாய்க்கும் எழுதிக் கொடுத்துவிட்டு மகாத்மா காந்தி நடத்தி வந்த சபர்மதி ஆசிரமத்தில் சென்று சேர்ந்து கொண்டார்.
Hightech city

சொந்த வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தவிர்க்க இவர் நாட்டுச் சுதந்திரப் போரில் தீவிர பங்கு கொண்டார். 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு கைதானார். 1941இல் மகாத்மா காந்தி அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு கொண்டார். 1942இல் வெள்ளையனே வெளியேறு எனும் போராட்டத்தின் போது இவர் மூன்று முறை கைதானார். குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் பகுதியில் கிராம புனருத்தாரண பணிகளை மேற்கொண்டு செயல்பட்டார். ஆந்திர பகுதியில் கிருஷ்ணா ஜில்லாவிலும் இவர் ஏமனி சுப்பிரமண்யம் என்பவர் தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். 1943, 1944 ஆகிய ஆண்டுகளில் நெல்லூர் மாவட்டத்தில் ராட்டையில் நூல் நூற்க மக்களுக்கு ஊக்கம் அளித்தார். இவர் எல்லோரிடமும் சமமாகப் பழகுவதோடு, கிடைத்த இடத்தில் யார் வீடாக இருந்தாலும் அங்கு உணவை ஏற்றுக் கொள்வார். 1946 முதல் 48 வரையிலான காலகட்டத்தில் இவர் நெல்லூர் ஜில்லாவில் ஹரிஜனங்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து மூன்று முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நெல்லூரில் மூலப்பேட்டை எனுமிடத்தில் உள்ள வேணுகோபாலசுவாமி ஆலயத்தில் ஹரிஜன ஆலய பிரவேசத்துக்காகப் போராடி வெற்றியும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து ஹரிஜன முன்னேற்றத்துக்காக இவர் பல முறை போராடியிருக்கிறார்.
Osmania University

இவருடைய போராட்டங்கள் காரணமாக மாவட்ட கலெக்டர்கள் வாரத்தில் ஒரு நாள் ஹரிஜன முன்னேற்றம் குறித்த பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர். வயதான காலத்தில் இவர் நெல்லூரில் தங்கியிருந்தார். ஹரிஜன முன்னேற்றம் தான் இவருடைய வாழ்க்கையின் குறிக்கோள். அந்த வாசகங்கள் அடங்கிய அட்டையை இவர் எப்போதும் அணிந்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார். இப்படி இவர் தெருத் தெருவாக பிரச்சார அட்டையைத் தூக்கிக் கொண்டு அலைவதைக் கண்டு இவர் ஒரு மனநலம் இல்லாதவர் என்றுகூட மக்கள் கருதத் தொடங்கினர்.
Location of Hyderabad

அப்போதைய சென்னை மாகாணத்தில் தமிழ் பேசும் பகுதிகள் தவிர, ஆந்திரத்தின் பெரும் பகுதி, கன்னடம் பேசும் பெல்லாரி போன்ற பகுதிகள், கேரளத்தின் மலபார் பகுதிகள் இவைகளெல்லாம் சென்னை மாகாணத்திற்குட்பட்டிருந்தன. மொழிவாரி மாகாணப் பிரிவினை அப்போது ஏற்படவில்லை. ஆகையால் பொட்டி ஸ்ரீராமுலு சென்னை மாகாணத்தில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்களின் நலன்களைக் காப்பதற்காகவும், தெலுங்கு மக்களின் தனிப்பட்ட கலாச்சாரத்தைக் காப்பதற்காகவும், இந்த தெலுங்கு மக்களின் உரிமைக் குரலை அரசாங்கம் கேட்கவேண்டும் தனி ஆந்திர மாநிலத்தைப் பிரித்து அமைத்திட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். இவருடைய தனி ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி இவர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.
Tirupathy Venkateshwara temple

இவரது போராட்டத்தைக் கண்டு பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இவருக்கு ஒரு உறுதி மொழி அளித்தார். தனி ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழிதான் அது. இந்த உறுதி மொழியின் பேரில் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். அதன் பிறகு உடனடியாகவோ, பல காலம் கழித்தோ தனி ஆந்திர மாநிலம் பிரிப்பது குறித்து எந்த நடவடிக்கையைக் காணோம், இப்போதைய தெலுங்கானா பிரச்சினை இழுத்தடிப்பது போலத்தான் அப்போதும் நடந்தது. பார்த்தார் பொட்டி ஸ்ரீராமுலு. இவர்கள் சும்மா வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று நினைத்தார். ஆகையால் இவர் மறுபடியும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 1952 அக்டோபர் 19 அன்று சென்னை மகரிஷி புலுசு சாம்பமூர்த்தியின் இல்லத்தில் தனி ஆந்திரம் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.
Godavari bridge near Rajamundhry

அவரது கோரிக்கையின் முக்கிய அம்சம் சென்னை மாநகரம் புதிதாக அமையப்போகும் ஆந்திர மாநிலத்தின் தலைநகராக ஆகவேண்டும் என்பதுதான். மிக சாதாரணமாகத் தொடங்கிய உண்ணாவிரதம் ஆந்திர காங்கிரஸ் கமிட்டியின் ஆதரவைப் பெறாமலேயே, பொதுமக்களிடையே ஒரு பரபரப்பை உண்டாக்கத் தொடங்கியது. இந்த கோரிக்கைகள் குறித்து பல வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகும் கூட அன்றைய அரசாங்கம் இவைகளை நிறைவேற்றுவது குறித்து முடிவு எதையும் அறிவிப்பதாகத் தெரியவில்லை. உண்ணாவிரதம் தொடர்ந்து நடந்தது. நாளாக நாளாக பொட்டியின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. அவர் நிலைமை கவலைக்கிடமாக ஆகியது. இந்த நிலையில் 1952 டிசம்பர் மாதம் 15 நள்ளிரவு, 16 விடியற்காலம் பொட்டி ஸ்ரீராமுலுவின் ஆவி பிரிந்தது.
Andhra Pradesh

தனி ஆந்திர மாநில கோரிக்கைக்காக பொட்டியின் உயிர் தியாகம் நிறைவேறியது. தெலுங்கு பேசும் மக்களுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு மக்களின் ஏகோபித்த போற்றுதலுக்கு உள்ளானார். அவரது இறுதி ஊர்வலத்தில் தெலுங்கு மக்கள் அவரது தியாகத்தைப் பாராட்டி கோஷங்கள் எழுப்பினர். சவ ஊர்வலம் மெளண்ட் ரோடை அடைந்த போது, ஊர்வலம் மிகப் பெரியதாக ஆகியது. கோஷங்களுக்கிடையே ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அந்தப் பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன. கலவரம் நடக்கும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. மற்ற பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து சேர்ந்தனர், கலவரம் பெரிதாகியது. சென்னை மாநகரில் தொடங்கிய இந்த கலவரங்கள் மெல்ல பரவி, ஆந்திரப் பகுதிகளான விஜயநகரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமகேந்திரபுரம், எல்லூரு, குண்டூர், தெனாலி, ஓங்கோல், நெல்லூர் ஆகிய இடங்களிலும் கலவரம் தொடங்கியது. அனகபள்ளி எனும் ஊரிலும் விஜயவாடாவிலும் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்ந்து நாலைந்து நாட்களாம வேகம் அடைந்து கொண்டிருந்தது. சென்னை நகரிலும் ஆந்திர நகரங்களிலும் கலவரம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது.
Kuchipudi dance

1952 டிசம்பர் 19ஆம் தேதி பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா எனும் புதிய மாநிலம் பிரிக்கப்படும் என்ற முடிவை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து கலவரங்கள் அடங்கின. புதிய மாநிலம் அமைவதை எதிர்பார்த்து ஆந்திர மக்கள் ஆவலோடு காத்திருந்தனர். 1953 அக்டோபர் முதல் தேதி கர்நூலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆந்திரா எனும் புதிய மாநிலம் உருவாகியது. எனினும் ஹைதராபாத் சமஸ்தானத்துக்குட்பட்ட தெலுங்கு பேசும் தெலுங்கானா பகுதிகள் 1956 வரை ஹைதராபாத்துடனேயே இருந்து வந்தது. 1956 நவம்பர் 1ஆம் தேதி தெலுங்கானா பகுதிகள் ஆந்திரத்துடன் சேர்ந்து ஆந்திரப் பிரதேசம் என்று பெயர் பெற்று விளங்கிற்று. இந்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்துக்கு ஹைதராபாத்தை தலைமையிடமாக அரசு அறிவித்தது.

1956இல் அதே நாளில் கேரளா என்றும் கர்நாடகா என்றும் புதிய மாநிலங்கள் தோன்றின. அதனைத் தொடர்ந்து பம்பாய் மாகாணத்திலிருந்து குஜராத், மஹாராஷ்டிரா எனும் மாநிலங்கள் 1960இல் உருவாகின. தென் இந்தியாவில் பல தென்னிந்திய மொழிகள் பேசப்படுவதால் ஒன்றுபட்ட சென்னை மாகாணம் மொழிவாரியாகப் பிரிந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மொழிவாரி மாநிலம் என்பது பண்டித ஜவஹர்லால் நேரு செய்த புரட்சிகரமான நடவடிக்கை. மொழியின் அடிப்படையில் மொழிவாரி மாநிலம் அமைந்த காரணத்தால் அந்தந்த மொழிகள் வளரவும், மேன்மையடையவும் வழிவகுத்தது.

புதிய ஆந்திர மாநிலம் உருவாவதற்காக சென்னை நகரில் பொட்டி ஸ்ரீராமுலு 82 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார். அவர் புதிய ஆந்திரா மாநிலத்துக்கு சென்னை நகரம் தலைநகராக இருக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தார். சென்னை இல்லாத ஆந்திர மாநிலம் தலையில்லாத முண்டம் என்று அவர் வர்ணித்தார். அவர் உண்ணாவிரதம் இருந்த இந்த 82 நாட்கள் வரையிலும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும், சென்னை மாகாண பிரதமர் (அன்று அதுதான் முதல்வருக்குப் பெயர்) ராஜாஜியும் என்ன காரணத்தினாலோ அவருடைய உண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்தவோ, மருத்துவமனைக்குக் கொண்டு சென்று ஆகாரம் கொடுக்கச் செய்யவோ முயற்சி செய்யவில்லை. காரணம் என்னவாக இருக்கும் என்று ஆய்வு செய்ததில் இவர்கள் இருவரும் இந்திய ஒற்றுமையில் நம்பிக்கை வைத்திருந்ததும், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து போனால் அவரவர் போட்டியில் ஒருவருக்கொருவர் பூசலிட்டு இந்திய ஒற்றுமை அழிந்து போகும் என்று நம்பியதாகத்தான் இருக்க முடியும். எனினும் இந்திய வரலாற்றில் ஜதின் தாஸ் ஒருவர்தான் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர், மற்ற அனைவரும் தடுக்கப்பட்டோ, கட்டாயப்படுத்தி உண்ணா நோன்பை கைவிட்டிருக்கிறார்கல். பொட்டி ஸ்ரீராமுலு அதற்கு விதிவிலக்காக அமைந்து விட்டார். அவரது உயிர்த்தியாகம் புதிய மொழிவாரி மாநிலம் பிரியக் காரணமாக இருந்தது.

Jawaharlal Nerhru & Gandhiji
இந்த உயிர்த்தியாகத்தின் காரணமாக பொட்டி ஸ்ரீராமுலுவை "அமரர்" எனும் பொருளில் தெலுங்கில் "அமரஜீவி" என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர். எப்படியிருந்தாலும் ஆந்திர மக்கள் பொட்டி ஸ்ரீராமுலுவை அமரர் ஸ்ரீராமுலு என்று என்றென்றும் மனதில் வைத்துப் போற்றுவார்கள்.