Followers

Saturday, July 10, 2010

புதுச்சேரி வ. சுப்பையா

புதுச்சேரி வ. சுப்பையா
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

புதுச்சேரி இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பகுதி என்பது நமக்கெல்லாம் தெரியும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போரின் போது சென்னை மாகாணத்தில் போலீஸ் அராஜகத்துக்குத் தப்பி மகாகவி பாரதி புதுச்சேரி சென்று தங்கியிருந்தது தெரியும். அதுதவிர ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளை, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் ஆகியோரும் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்திருந்தனர். அப்படி இந்திய சுதந்திரப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பூமி புதுச்சேரி. அதுவும் ஒரு அன்னியன் வசம் இருந்தது ஆம்! பிரெஞ்சுக் காரர்களின் வசம் இருந்தது. அதன் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு போராளிதான் வ.சுப்பையா. புதுச்சேரி மற்றும் இந்தியாவிலிருந்த புதுச்சேரி காலனிகள் சுதந்திரம் பெற வ.சுப்பையா செய்த தியாக வரலாற்றின் ஒரு சிறு துளியை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இவர் பிறந்தது 7-2-1911. இந்த காலகட்டத்தில் முதலில் குறிப்பிட்ட இந்திய சுதந்திரப் போர் வீரர்கள் பாரதி, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் ஆகியோர் அப்போது அங்குதான் இருந்தார்கள். இவர் தனது 16ஆம் வயதில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றார். அந்த மாநாட்டுக்கு டாக்டர் அன்சாரி தலைமை வகித்தார். சீனிவாச ஐயங்கார் ஏற்பாடுகளைச் செய்தார். அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பின்பு உப்பு சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு கொண்டார். அவ்வாண்டில் 'பிரெஞ்சு இந்திய வாலிபர் சங்கம்' எனும் அமைப்பித் தோற்றுவித்தார். ஒரு பக்கம் சமூக சீர்திருத்தம் இவர் கவனத்தைக் கவர்ந்தது, மறுபுறம் நாட்டு சுதந்திரம் இவருக்கு முக்கியமாகத் தெரிந்தது. எனவே இரு வேறு பாதைகளிலும் பயணிக்க வேண்டியிருந்தது.

இந்த வயதில் இவருக்கு ரஷ்ய புரட்சியும், லெனின் எழுதிய நூல்களும், சிங்காரவேலு செட்டியாரின் நூல்களும் இவருக்கு இடது சாரி எண்ணங்களைத் தோற்றுவித்தது. இவர் சென்னை செல்லும் சமயத்திலெல்லாம் அங்கு சங்கு சுப்பிரமணியம் நடத்திக் கொண்டிருந்த "சுதந்திரச் சங்கு" அலுவலகம் செல்வார். அங்கு இவருக்கு டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ச.து.சு.யோகியார், வ.ரா, பி.வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. மகாத்மா காந்தியின் 1934 புதுச்சேரி விஜயம் இவரது ஆர்வத்தை மேலும் தூண்டியது. கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரையாவின் அறிமுகம் இவருக்கு ஓர் புதிய வழியைக் காட்டியது.

புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர்களின் சங்கங்களை அங்கீகரிக்கவில்லை. எனவே சுப்பையாவின் கவனம் அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காகத் தொழிற்சங்கங்களைத் தோற்றுவிப்பதில் சென்றது. இராப்பகலாக இவர் அந்த வேலையில் இறங்கி தொழிலாளர் இயக்கங்களைத் தோற்றுவித்தார். அந்தக் காலத்தில் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட தொழில் நேரமென்பது கிடையாது. இந்தக் கோரிக்கைகளை வைத்து இவர் ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். 84 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தப் போராட்டம் பின்னர் 1935இல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டு முடிவுக்கு வந்தது.

1936இல் நடந்த வேலை நிறுத்தத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி பல தொழிலாளர்களின் உயிர்களை பலி கொண்டனர். இந்தப் போராட்டத்தில் சுப்பையாவையும் சுட்டு விட ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அது இயலவில்லை.

சுப்பையாவுக்கு நேருஜியோடு நெருங்கிய தொடர்பு உண்டு. பிரான்சுக்குச் சென்று புதுச்சேரிப் பிரதேசத்தின் சுதந்திரம் பற்றி அவர்களோடு விவாதிக்க சுப்பையாவை நேருஜி அனுப்பினார். இவருக்கு நேருவைத் தவிர, தீரர் சத்தியமூர்த்தி, காமராஜ், ப.ஜீவானந்தம், சுந்தரையா ஆகியோரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

1954 நவம்பர் முதல் தேதி பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. இந்த வெற்றிக்குப் பின்னால் சுப்பையாவின் உழைப்பும் தியாகமும் இருந்தது. இந்தப் போராட்டத்திற்காக சுப்பையா நாடுகடத்தப்பட்டு புதுச்சேரி எல்லைக்குள் போகமுடியாத சூழ்நிலை இருந்தது. புதுச்சேரியின் சுதந்திர நாளன்று சுப்பையாவை ஒரு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உட்காரவைத்து லட்சக்கணக்கானவர்கள் வரவேற்றனர். 1955இல் அமைந்த புதிய புதுச்சேரி அரசில் வ.சுப்பையா எதிர்கட்சித் தலைவரானார். இருமுறை புதுச்சேரி அமைச்சரவையிலும் பங்கு பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான வ.சுப்பையா எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக இருந்தார். ஏற்றமும் இறக்கமும் அவருக்கு ஓர் பொருட்டல்ல. இவர் 1993 அக்டோபர் 12இல் காலமானார். வாழ்க புதுச்சேரி வ.சுப்பையா புகழ்!

ஜி.சுப்பிரமணிய ஐயர்

"தி ஹிந்து" பத்திரிகை ஸ்தாபகர் ஜி.சுப்பிரமணிய ஐயர்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

ஜி.சுப்பிரமணிய ஐயர் 'தி ஹிந்து' பத்திரிகையைத் தொடங்கியவர் என்பதோடு, மகாகவி பாரதியாரை மதுரையிலிருந்து அழைத்து வந்து தனது 'சுதேசமித்திரனில்' உதவி ஆசிரியராகச் சேர்த்து விட்டதன் மூலம் தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தவர். காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க கால ஸ்தாபகர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கம் வளரவும், உள்நாட்டினர் சுதேசி செய்திகளை அறிந்து கொள்ளவும் பத்திரிகைகளைத் தொடங்கியவர். அகில இந்திய காங்கிரஸ் வரை தனது பெயரையும் புகழையும் ஸ்தாபனம் செய்தவர். பேச்சில் மட்டுமல்ல, தனது செயலிலும் சமூக சீர்திருத்தங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டிய மாபெரும் சமூகப் புரட்ச்சியாளர். இந்த பெருமைகளுக்கெல்லாம் உரியவரான ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றி இப்போது பார்ப்போம்.

இவர் தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றில் பாவாசாமி மடம் தெருவில், 1855ஆம் ஆண்டில் கணபதி ஐயர், தர்மாம்பாள் தம்பதியரின் தவப்புதல்வனாகப் பிறந்தார். கணபதி ஐயர் அவ்வூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். சுப்பிரமணிய ஐயருக்கு உடன்பிறந்தோர் அறுவர், ஒரு சகோதரி. இளம் வயதில் இவரது தந்தை காலமாகிவிட்டார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவையாற்றில் பயின்ற பின் தஞ்சாவூரில் மிஷினரி பள்ளியொன்றில் படித்து 1869இல் மெட்ரிக் தேறினார். பின்னர் அதே நிர்வாகம் நடத்திய கல்லூரியில் 1871இல் எஃப் ஏ எனும் இண்டர்மீடியட் தேறினார். சிறுவயதிலேயே மீனாட்சியம்மையை மணந்தார்.

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். அப்போது அதற்கு நார்மல் ஸ்கூல் என்று பெயர். பிறகு இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் 1877இல் சேர்ந்தார். அங்கிருந்தபடியே பி.ஏ. தேறினார். திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளி அப்போது ஆங்கிலோ-வர்னாகுலர் பள்ளி என்றிருந்தது. அதன் தலைமை ஆசிரியராக ஆனார். 1888இல் இவரே ஒரு உயர்நிலைப் பள்ளியை ஸ்தாபித்தார்.

திருவல்லிக்கேணியில் அந்தக் காலத்தில் 'இலக்கியக் கழகம்' எனும் பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதில் பல பெரியவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் டி.டி.விஜயராகவாச்சாரியார், டி.டி.ரெங்காச்சாரியார், பி.வி.ரெங்காச்சாரியார், டி.கேசவராவ் பந்துலு ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த சமயம் 1878இல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஒரு இந்தியரை, சர்.டி.முத்துசாமி ஐயரை நீதிபதியாக ஆங்கில அரசு நியமித்தது. அப்போது ஆங்கிலேயர்களே நடத்தி வந்த 'தி மெயில்' போன்ற சில பத்திரிகைகள் இந்த நியமனத்துக்குப் பலத்த கண்டனம் தெரிவித்தன. தலையங்கங்களும் எழுதின. ஒரு கருப்பர் நீதிபதியாகிவிட்டால் இவர்கள் மற்றவர்களிடம் ஜாதிபாகுபாடு பார்ப்பதோடு பாரபட்சமாகவும் நடந்து கொள்வர் என்றெல்லாம் எழுதின. இதைக் கண்டு கொதித்துப் போன இலக்கியக் கழக உறுப்பினர் அறுவரும் தங்களிடமிருந்த ஒன்றே முக்கால் ரூபாய் பணத்தில் ஒரு பத்திரிகையைத் தொடங்கி முதலில் 80 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டனர். இப்படித்தான் முதன்முதலில் 'தி ஹிந்து' பத்திரிகை 1878 செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாயிற்று. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பொய்ப் பிரச்சாரங்களை இந்த சுதேசி பத்திரிகை முறியடிக்கத் தொடங்கியது.

இந்த பத்திரிகை முதலில் வாரம் இருமுறை, மும்முறை என்றெல்லாம் வெளியாகி பின்னர் தினசரியாக மாறியது. 1898இல் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் பத்திரிகையிலிருந்து விலகிக் கொண்டார், உரிமை விஜயராகவாச்சாரியரிடம் போயிற்று. பிறகு கஸ்தூரி ஐயங்கார் வசம் ஆனது. ஜி.எஸ். ஹிந்துவில் இருபது ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அப்போது சென்னை மகாஜனசபை எனும் அமப்பு உதயமானது. 1883இல் ரிப்பன் பிரபு ஸ்தலஸ்தாபன சுயாட்சி திட்டத்தை அறிமுகம் செய்தார். இன்றைய கார்ப்பரேஷன், முனிசிபாலிடி, பஞ்சாயத்து போர்டு போன்றவற்றுக்கு மூல காரணம் இந்த திட்டம்தான். சென்னை மகாஜனசபையின் ஆண்டுக் கூட்டம் 1884இல் நடந்தபோது மக்களின் கருத்துக்களை ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்க ஓர் அமைப்பு தேவை என உணர்ந்தது. அதன் விளைவு பம்பாயில் அதற்கு அடுத்த ஆண்டு காங்கிரஸ் மகாசபை தோற்றுவிக்கப்பட்டது. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர் முயற்சியால் இது தோன்றியது. ஒரு ஆங்கிலேயருக்கு ஏன் இந்த முயற்சி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு (சிப்பாய் கலகம்) இந்தியர்கல் விழித்துக் கொண்டுவிட்டார்கள், இனியும் அவர்களை கவனியாமல் விட்டால் ஆபத்து; ஆகையால் அவர்களையும் உள்ளே இழுத்துக் கொண்டு நிர்வாகம் செய்தால் தான் முடியும், மேலும் இந்தியர்களுக்குச் சில சலுகைகளையும் தர வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் எண்ணியதன் பலன் ஒரு ஆங்கிலேயர் காங்கிரசை நிறுவினார்.

முதன்முதலாக 1885இல் பம்பாயில் கூடிய காங்கிரஸ் மகாசபையின் முதல் மாநாட்டில் மொத்தம் கூடிய 72 பிரதிநிதிகளில் சென்னை மாகாண பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டும் 21 பிரதிநிதிகள். காங்கிரசின் தோற்றத்துக்குச் சென்னை எந்த அளவுக்குக் காரணமாக விளங்கியிருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் சான்று. இந்த 21 பிரதிநிதிகளில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். அதுமட்டுமல்ல, இந்த முதல் காங்கிரசின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய பெருமை ஜி.சுப்பிரமணிய ஐயரையே சேரும். அப்போது அவருக்கு வயது முப்பது.

இந்தப் பெருமை குறித்து "காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்" எழுதிய மகாகவி பாரதியார் கூறுகிறார்:- "தமிழ்நாடு தவமுடையது. ஏனெனில் காங்கிரஸ் மகாசபையின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் பெருமை தமிழ்நாட்டுத் தலைவராகிய "சுதேசமித்திரன்" ஜி.சுப்பிரமணிய ஐயருக்கே கிடைத்தது".

சரி! அந்த முதல் தீர்மானம் கூறுவது என்ன? ஜி.சுப்பிரமணிய ஐயர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய உரையின் ஒரு பகுதி இது: "இன்று நாம் பேசும் பேறு பெற்றுள்ள நாள். என் முன்னே மரியாதைக்குரிய பெரியோர்கள் அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருக்கிறார்கள். இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குத் தொடர்பு கொள்ள முடியாத இடத்திலிருந்தெல்லாம் பிரதிநிதிகள் வந்திருக்கிறார்கள். லாகூர், சிந்து, பம்பாய், கல்கத்தா, சென்னை முதலிய இடங்களிலிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள். இது தேசிய வாழ்க்கை நம் நாட்டில் தொடங்கி விட்டதை அறிவிக்கின்ற கூட்டம். மிக விரைவில் நாம் இங்கு ஒரு பெரியத் திருப்பத்தைக் காணப்போகிறோம் என்பதை அறிவிக்கின்ற கூட்டம். இது தொடக்கம்தான். இதுவரை வாழ்ந்தது போலன்றி இனி நாம், நம் நாடு, இந்திய தேசியம், தேசியத்தில் நாட்டம் என்ற உணர்வோடு பேசப்போகிறோம்."

இந்திய தேசியம் பற்றிய முதல் முழக்கம் 1885இல் பம்பாயில் நமது ஜி.சுப்பிரமணிய ஐயரால் முழங்கப்பட்டது என்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை தரக்கூடிய செய்தி. பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களுக்கு தேசிய உணர்வு தேவை என்று முழக்கமிட்டதுதான் பம்பாய் காங்கிரசின் முக்கிய விளைவு. எனவேதான் 'காங்கிரஸ்' எனப் பெயர் சூட்டப்பட்ட அந்த இயக்கத்துக்கு "தேசிய" எனும் பொருள்படக்கூடிய "நேஷனல்" என்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டனர். இந்திய அரசியலை பகுத்து ஆராய்வதற்காக "ராயல் விசாரணைக் கமிஷன்" நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த முதல் தீர்மானத்தின் சாராம்சம். இந்த முதல் தீர்மானத்தை அடுத்து மொத்தம் எட்டு தீர்மானங்கள் நிறைவேறின. இந்த எட்டு தீர்மானங்களையும் முன்மொழிதல் அல்லது வழிமொழிதலைச் செய்தவர்கள் சென்னை மாகாணத்தவர்கள். அவர்கள்:- பி.அனந்தாச்சார்லு, நீதிபதி எஸ்.சுப்பிரமணிய ஐயர், மு.வீரராகவாச்சாரியார், டி.எஸ்.ஒயிட், பி.ரங்கய்ய நாயுடு, தஞ்சை எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர், எஸ்.வெங்கடசுப்பராயலு பந்துலு ஆகியோர். இவர்களில் ஒயிட் என்பார் ஆங்கிலோ இந்திய அசோசியேஷனின் தலைவர். இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 62 ஆண்டுகள் கழித்து இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், அதன் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த ஜி.சுப்பிரமணிய ஐயரை நினைத்து நாம் பெருமைப் படலாம்.

காங்கிரசில் கோபாலகிருஷ்ண கோகலே ஒரு மிதவாதி. பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி. (இங்கு பயங்கரவாதி என்று பொருள்கொள்ளக் கூடாது - காங்கிரஸ் கொள்கைகளில் புரட்சிகரமான எண்ணங்கொண்டவர் என்பது பொருள்). ஜி.எஸ். திலகரின் வழித்தோன்றல். 1908இல் ஜி.எஸ். சுதேசமித்திரனில் எழுதிய ஒரு கட்டுரைக்காகக் கைது செய்யப்பட்டார். இவர் 1882 லேயே சுதேசமித்திரனைத் தொடங்கி விட்டார். தமிழில் வெளிவந்த முதல் அரசியல் நாளிதழ் சுதேசமித்திரன் தான். அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் என்பது பெருமைக்குரிய விஷயம். இவர் ஒரு முறை மதுரைக்குச் சென்றிருந்த சமயம் அங்கு சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக இருந்த பாரதியின் அறிவு கூர்மையையும், எழுதும் ஆற்றலையும் கண்டு அவரை சுதேசமித்திரனுக்கு அழைத்து வந்து உதவி ஆசிரியராக்கினார். நாட்டுக்கு ஒரு எழுத்தாளர், கவிஞர், நல்ல பத்திரிகை ஆசிரியர் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர்.

ஜி.சுப்பிரமணிய ஐயர் தான் பேசும் பொதுக்கூட்டங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்ட பிறகு சிறு சிறு துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பார். அதற்காக இவர் தன்னுடன் ஒரு பெரிய பையையும் வைத்திருப்பார். அதில் அரசியல், சமூக சீர்திருத்தம், ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் போன்ற பல சிறு வெளியீடுகள் இருக்கும். அப்படி அவர் விநியோகம் செய்த ஒரு வெளியீடு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரைன் (Bryan) என்பவர் ஆற்றிய ஒரு உரையாகும். அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசிய ஒரு சொற்பொழிவு அது. அதனைத் தமிழில் மொழிபெயர்த்து ஜி.சுப்பிரமணிய ஐயர் வெளியிட்டார். அதைத்தான் அவர் எல்லா கூட்டங்களிலும் மக்களிடம் விநியோகித்தார். இது குறித்த புகார் ஒன்று சென்னை போலீஸ் கமிஷருக்குச் சென்றது. இந்த விவரங்கள் சென்னை போலீஸ் ஆவணங்களில் காணப்பட்டது.

இவருக்கு ஒரு மகள். அவர் இளம் வயதிலேயே விதவையானார். அந்த காலத்தில் எந்த வயதானாலும் அவர்கள் விதவைக் கோலம் பூண்டு வாழ்நாள் முழுவதும் உள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும். ஆனால் ஜி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் தன் மகளுக்கு மறுமணம் செய்விக்க முயற்சிகள் எடுத்து பம்பாய் சென்று அங்கு அந்தப் பெண்ணுக்குத் திருமணமும் செய்து வைத்தார். வைதீகர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவர் அஞ்சாமல் செய்ததோடு, விதவைகள் மறுமணத்தை ஆதரித்து எழுதியும் வந்தார். பாரதியின் 'சந்திரிகையின் கதை' எனும் புதினத்தில் இந்த விவரங்கள் அனைத்தையும் சேர்த்திருப்பதைப் பார்க்கலாம்.

ஜி.எஸ். ஐயருக்கு தோலில் ஒரு வித நோய் ஏற்பட்டு மேலேயிருந்து நீர்வடியத் தொடங்கி அது மிகவும் மோசமான கட்டத்தை அடைந்தது. வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கியிருந்த இவரைப் பார்க்க மகாத்மா காந்திஜியே வந்து அவரது புண்களைத் தன் மேல் துண்டால் துடைத்து ஆறுதல் கூறிச் சென்றார். இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு இவர் 1916ஆம் ஆண்டில் காலமானார். வாழ்க ஜி.சுப்பிரமணிய ஐயர் புகழ்!

கொடைக்கானல் எஸ்.பி.வி.அழகர்சாமி

கொடைக்கானல் எஸ்.பி.வி.அழகர்சாமி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

அமரர் சுப்பிரமணிய சிவா ஒரு சந்நியாசியைப் போல காவி உடை அணிந்து நாட்டுக்காகப் பாடுபட்டு வந்தவர். சிறையில் அவர் பட்ட கொடுமைகளின் காரணமாக தொழுநோய் தொற்றிக் கொள்ள வாழ்நாளெல்லாம் தொழுநோயோடு போராடி மரணமடைந்தவர். அப்படி அவர் வாழ்ந்த நாட்களில் அவருக்கு பல தொண்டர்கள் அமைந்தனர். அவர்களில் ஒருவர்தான் எஸ்.பி.வி.அழகர்சாமியும். குருநாதர் சிவாவிடம் அளவிடற்கரிய பக்தி கொண்டவர். இவரது மிக இளம் வயது முதற்கொண்டு நாட்டுக்காக உழைக்க உறுதி எடுத்துக் கொண்டார்.

வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் பண்ணைக்காடு எனும் ஊர். இங்குதான் இவர் தனது மர வியாபாரத்தைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வந்தார். 1931இல் அவ்வூரில் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி மக்களுக்குப் பணியாற்றி வந்தார். இவரது கடுமையான உழைப்பாலும், திறமையாலும் காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர்களில் இவர் முதன்மையானவராகத் திகழ்ந்தார். கொடைக்கானல் தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராகவும் பின்னர் செயலாளராகவும் பணியாற்றினார். இவர் காலத்தில் அங்கு இவர் பல மகாநாடுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் விவசாயப் பிரிவில் பணியாற்றி, விவசாயிகளுக்காக பாடுபட்டு அவர்களை காங்கிரசில் அங்கம் வகிக்கச் செய்தார்.

1937இல் ஒரு தேர்தல் நடைபெற்றது. அப்போதெல்லாம் கட்சிகளுக்குச் சின்னங்கள் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் வாக்குப் பெட்டிகள். காங்கிரசுக்கு மஞ்சள் நிறப் பெட்டி. ஆகையால் 'மங்களகரமான மஞ்சள் பெட்டிக்கு வாக்களியுங்கள்' என்று வாக்குக் கேட்பார்கள். அழகர்சாமி கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களுக்கெல்லாம் சென்று, மக்களிடம் மஞ்சள் பெட்டிக்கு ஆதரவு திரட்டி காங்கிரசை வெற்றி பெறச் செய்தார்.

வத்தலகுண்டுவில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் மாநாட்டுக்காக இவர் மிகவும் பாடுபட்டார். மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு, கொடைக்கானல் பகுதியிலிருந்து காய்கறிகளைக் கொண்டு வந்து சேர்த்தார். அம்மாநாட்டில் இவரது பணியை தலைவர்கள் மிகவும் பாராட்டினார்கள்.

1941இல் தனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியது. இவர் கொடைக்கானல் பகுதியிலுள்ள எல்லா கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். யுத்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார். அங்கெல்லாம் இவரைக் கைது செய்யவில்லை. எனவே இவர் கும்பகோணம் கிளம்பிச் சென்று அங்கு யுத்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்ப 1-3-1941இல் அங்கு கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்குக் கொண்டு சென்று ஆறு நாட்கள் ரிமாண்டுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அங்கிருந்து கிளம்பி திருவையாறு சென்று அங்கு 12-3-1941இல் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து அதற்காக 15 நாட்கள் சிறை தண்டனை பெற்றார். விடுதலையாகி மறுபடியும் கும்பகோணம் சென்று 4-4-1941இல் அங்கு மறியல் செய்து கைதானார். இம்முறை தஞ்சாவூர் மாஜிஸ்டிரேட் இவருக்கு இரண்டு மாத தண்டனை விதித்தார். தண்டனைக்காலத்தை திருச்சி சிறையில் அனுபவித்தார்.

மறுபடியும் கொடைக்கானல் பகுதியில் இவரது நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு ஜுலை 1941இல் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். அதோடு அபராதமும் சிறையில் பி வகுப்பும் கொடுக்கப்பட்டது. அதுமுதல் இவர் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராக விளங்கி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டாலும், இவர் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. தொண்டராகவே கடைசி வரை இருந்த தியாகி அழகர்சாமி. வாழ்க அழகர்சாமி புகழ்!