Followers

Thursday, June 17, 2010

டாக்டர் வரதராஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

டாக்டர் வரதராஜுலு நாயுடு எனும் இந்தப் பெயரை சுதந்திரப் போராட்ட வரலாறு, தமிழக அரசியல் வரலாறு என்று எடுத்துக் கொண்டால் யாரால் மறக்க முடியும்? தமிழ்நாடு அரசியலில் முன்னணி நட்சத்திரங்களான ஈ.வே.ரா., ராஜாஜி, திரு.வி.க., சர்க்கரை செட்டியார், எஸ்.சீனிவாச ஐயங்கார் இப்படிப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் நாயுடு. அரசியல், சமூகம், தொழிற்சங்க இயக்கம் அத்தனையிலும் இவர் முத்திரை பதித்தவர். இவரது வரலாற்றைப் பார்ப்பதற்கு முன் இவர் காலத்திலிருந்து அரசியல் சமூக சூழ்நிலைகளைச் சிறிது பார்க்கலாம்.

பிராமண எதிர்ப்பு என்பது ஜஸ்டிஸ் கட்சியின் அடிப்படை கொள்கை. இந்தக் கொள்கையிலிருந்து சிறிது மாறுபட்டு 1917இல் திவான்பகதூர் கேசவபிள்ளை தலைமையில் "சென்னை மாகாண சங்கம்" எனும் அமைப்பு தோன்றியது. இதன் கொள்கை, காங்கிரசின் சுதந்திரக் கோரிக்கைக்கும் ஆதரவளித்து, தென்னாட்டு பிராமணரல்லாதார் நலனுக்காகவும் பாடுபடுவது என்பதாகும். இந்த அமைப்பின் துணைத் தலைவராக ஈ.வே.ராவும் நாயுடுவும் இருந்தனர். நாயுடு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தங்களது புதிய இயக்கத்திற்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப்படித் தொடங்கியதுதான் நாயுடுவின் அரசியல் சமூக ஈடுபாடு.

1917இல் தென்னிந்திய ரயில்வேயின் தொழிலாளர் சங்கத்தை இவர் தொடங்கினார். ரயில்வே ஒர்க்ஷாப் அப்போது நாகப்பட்டினத்தில் இருந்தது. அதன் பிறகுதான் அது திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. சேலத்தில் நாயுடு "பிரபஞ்சமித்திரன்" எனும் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கப் போக்கையும், தொழிலாளர் நலனுக்கு எதிரான போக்கையும் கடுமையாக எதிர்த்து எழுதிவந்தார். இவரது எழுத்தின் தீவிரத்தைக் கருதி பிரிட்டிஷ் அரசு இவரிடம் பத்திரிகைக்கு ஜாமீன் தொகையாக ரூ.1000 செலுத்த உத்தரவு இட்டது. அப்படி இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை என்று அறிவித்தது. இவர் ஜாமீன் தொகையைச் செலுத்த மறுத்ததால் இவர் ஆகஸ்ட் 22, 1918இல் திருச்சி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் நாயுடுவின் சார்பில் வாதாடிய வக்கீல் ராஜாஜி. அப்பீலில் வழக்கில் வென்றார். மதுரையில் நாயுடு பேசிய பேச்சுக்காக நான்கு மாத சிறை தண்டனை கிடைத்தது.

நாயுடுவுக்கு சிறை என்றதும் மதுரையில் போராட்டம் தொடங்கியது. மதுரை மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ரிசர்வ் போலீஸ் வரவழைக்கப்பட்டது. போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வெறியாட்டம் போட்டது. துப்பாக்கிச்சூட்டில் நீலமேகசுப்பையா எனும் இளைஞன் குண்டடிபட்டு இறந்து போனான். அவன் இறக்கும் போது ராஜாஜி, மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் அருகில் இருந்தனர். அவன் "நாயுடு உயிர் தப்பியதற்காக சந்தோஷப்படுகிறேன்" என்று சொல்லிவிட்டு உயிரை விட்டானாம் அவன்.

மதுரையில் நாயுடுவின் மீது வழக்கு. அதில் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் வரவில்லை. எனவே அரசாங்க பிராசிகியூஷன் தரப்பில் எம்.டி.சுப்பிரமணிய முதலியார் என்பவரை சாட்சியாக அறிவித்தார்கள். அவர் சர் பி.டி.ராஜன் அவர்களின் சித்தப்பா. அவர் காங்கிரசுக்கு எதிரான ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர். அப்படி இருந்த போதிலும் அவர் நாயுடுவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல மறுத்து விட்டார். பரம்பரை பெருமை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரல்லவா? கேவலம் கட்சி வேறுபாட்டுக்காக, நாட்டுக்காக உழைக்கும் ஒரு நல்லவருக்கு எதிராக சாட்சி சொல்லி அவரைச் சிறைக்கு அனுப்ப அந்த பெருமகனார் ஒத்துக் கொள்ளவில்லை. என்னே அன்றைய பண்பாடு!

மதுரை சிறையில் டாக்டர் நாயுடு அடைக்கப்பட்டிருந்த போது அவருக்கு சொல்லொணா கொடுமைகள் இழைக்கப்பட்டன. அந்த விவரங்களை எப்படியோ சிறைக்கு வெளியே கசியவிட்டு, அவை செய்தித்தாள்களில் வெளிவரும்படி செய்துவிட்டார் நாயுடு. இதனைக் கண்ட சிறை ஆதிகாரிகள் ஆத்திரமடைந்தனர். சிறைக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று சொல்லி அவரை இரண்டு வாரங்கள் தனிமைக் கொட்டடியில் அடைத்துவைத்திருந்தனர். இந்த செய்தியும் மதுரை மக்களுக்கு தெரியவந்தது. மறுபடியும் மக்கள் எழுச்சி, போராட்டம் இவை தொடர்ந்தன. அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெல்லிங்டனுக்கு இதெல்லாம் தெரிய வந்தது. நடக்கும் நிகழ்ச்சிகள் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மேலும் இராமநாதபுரம் ராஜாவும் இதில் தலையிட்டு டாக்டர் நாயுடுவுக்கு அளிக்கப்படும் சிறைக்கொடுமையிலிருந்து அவரை விடுவித்து, அவரை மதுரையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றச் செய்தனர். அங்கு நாயுடுவுக்கு வைத்திய வசதியும் செய்து கொடுக்கப்பட்டு, மதுரை போன்ற சிறைக்கொடுமைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொண்டனர்.

1923ஆம் ஆண்டு. அப்போதைய மதுரை கலெக்டர், டாக்டர் நாயுடு மதுரை ஜில்லாவுக்குள் நுழையக்கூடாது என்று ஒரு தடையுத்தரவு போட்டார். அந்த சமயம் உத்தமபாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு ஒன்று நடந்தது. டாக்டர் நாயுடுவைத் தலைமை தாங்க அழைத்திருந்தனர். அவரும் மதுரை கலெக்டரின் தடையுத்தரவையும் மீறி அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்து கலந்து கொண்டார். அங்கு அவர் பேசிய பேச்சு வெள்ளை ஆதிக்க வர்க்கத்துக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. வேறு என்ன செய்ய முடியும், அந்த தேசபக்தரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த முறை அவருக்குக் கிடைத்தது 9 மாத சிறை தண்டனை.

1924 பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் சென்னை மாகாண தொழிலாளர் மகாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1926இல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் எனும் தொழிலாளர் அமைப்புத் தோன்றியது. இதுதான் மூத்த தொழிற்சங்கம். இதிலிருந்துதான் இந்திய தேசிய தொழ்ற்சங்க காங்கிரஸ் எனும் காங்கிரஸ் அமைப்பும், பிறகு ஏ.ஐ.டி.யு.சி. யிலிருந்து தொழிற்சங்க மையம் எனும் மார்க்சிஸ்ட் சங்க அமைப்பும் தோன்றின. பிறகு காலப்போக்கில் கட்சிக்கொரு தொழிற்சங்கம் என்று தொழிலாளர்களின் கட்டமைப்பு சிதறுண்டு போயிற்று என்பது வேறு கதை. 1926இல் ஏ.ஐ.டி.யு.சி.யைத் துவக்கியவர்களில் டாக்டர் நாயுடுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வையும், தொழிலாளர் இயக்கங்களையும் தொடங்கி வளரச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இவருடைய பத்திரிகையில்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் முதன்முதலில் ஒரு அச்சுக்கோக்கும் தொழிலாளியாகத் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தொழிலாளர்களுக்காகப் பாடுபட்ட டாக்டர் நாயுடுவின் பத்திரிகையிலேயே தொழிலாளர் பிரச்சினை தலைதூக்கியது அப்போது அவர் நடந்து கொண்டது எல்லாம் வேறு கதை. அதனை ம.பொ.சியின் "எனது போராட்டங்கள்" எனும் நூலில் படித்துப் பாருங்கள்.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங்கிய இரு சுதந்திரப் போர் வீரர்களில் டாக்டர் நாயுடுவும், வீரமுரசு வ.வெ.சு.ஐயரும் குறிப்பிடத்தக்கவர்கள். வ.வெ.சு.ஐயரின் வாழ்க்கைச் சரிதம் இந்த வலைத்தளத்தில் மற்றொரு பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வ.வெ.சு.ஐயர் நடத்திய பாரத்துவாஜ ஆசிரமத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு நன்கொடை வழங்கியிருந்தது. அப்போது அந்த ஆசிரமத்தில் ஜாதி வேற்பாடு பார்த்து உணவு வழங்கப்படுகிறது என்ற பிரச்சினை எழுந்தது. வ.வெ.சு.ஐயருக்கு எதிராக ஈ.வே.ரா. பெரியாரும், டாக்டர் நாயுடு போன்றோரும் எதிர்க்குரல் எழுப்பினர். அந்தப் பிரச்சினை மகாத்மா காந்தி வரையில் சென்றது. பின்னர் அது முடிவுக்கும் வந்தது. அதன் பிறகு ஐயர் நீண்ட நாட்கள் உயிரோடு இல்லை, பாபநாசம் அருவியில் தன் மகளைக் காப்பதற்காக முயன்றபோது அவரும் வீழ்ந்து உயிர் துறந்தார்.

டாக்டர் நாயுடுவின் காலம் தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சகாப்தம். வாழ்க டாக்டர் வரதராஜுலு நாயுடு புகழ்!