Followers

Thursday, August 26, 2010

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர். தேசியப் போராட்டங்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மகாகவி பாரதியால் பாராட்டப் பெற்றவர். ராஜாஜியின் மனதுக்குகந்த தோழர். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தின் வழிநடைப் பாடலாக 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' எனும் பாடலை எழுதிப் புகழ் பெற்றவர், இந்தப் பெருமைகளுக்கெல்லாம் உரியவர் நாமக்கல் கவிஞர் எனப்படும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள்.

இவர் 1888ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் எனும் ஊரில் அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக இருந்த வெங்கட்டராம பிள்ளை அம்மணி அம்மாள் தம்பதியினருக்கு ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு வாராது வந்த மாமணி போல் வந்து பிறந்த எட்டாவது ஆண் குழந்தை ராமலிங்கம். ராமேஸ்வரம் சென்று ஆண் குழந்தை வேண்டிப் பிறந்ததால் ராமலிங்கம் என்று பெயர் வைக்கப்பட்டது. கவிஞரின் தாயார் அம்மணி அம்மாள் இதிகாச புராணங்களை யெல்லாம் சொல்லி தன் மகனை வளர்த்தார். பொய் பேசுவதும், பொல்லாதவன் என்று பெயரெடுப்பதும் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லி மகனைச் சான்றோனாக வளர்த்தார்.

இவர் நாமக்கல்லில் இருந்த நம்மாழ்வார் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் தந்தை கோவைக்கு மாற்றலாகிச் சென்றபோது கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்த இவருக்குத் தனது அத்தை மகளை 1909இல் திருமணம் செய்து கொண்டார். இவர் ஆசிரியர் தொழில் உட்பட பல தொழில்களைல் சேர்ந்தாலும் ஒன்றிலும் நிலைக்கவில்லை. இவருக்கு இயற்கையிலேயே ஓவியம் வரையும் ஆற்றல் இருந்தது. இவரது ஆசிரியராக இருந்த ஒரு ஆங்கிலேயர், எல்லியட் என்று பெயர், அவர் இவரது ஆற்றலை வளர்க்க உதவினார். இவர் ஓவியங்கள் நல்ல விலை போயின. அப்படி இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை டெல்லியில் நடந்த அவரது முடிசூட்டு விழாவில் பரிசளிப்பதற்காக 1912இல் டெல்லிக்குப் பயணமானார். ஓவியத்தைப் பார்த்து மன்னர் குடும்பம் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை அளித்தது.

ஓவியம் தவிர இவருக்கு கவிதை புனையும் ஆற்றலும் இருந்தது. 1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய "கத்தியின்றி" பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது "சுதந்திரச் சங்கு" பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

இவரது அத்தை மகள் முத்தம்மாளை மணந்து கொண்டாரல்லவா, அவர் 1924இல் காலமானார். அதைத் தொடர்ந்து அவரது இளைய சகோதரியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இவருக்கு 1906ஆம் ஆண்டு முதலே நாட்டுச் சுதந்திரத்தைல் வேட்கை பிறந்தது. இவர் கரூரில் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1914இல் திருச்சி மாவட்ட காங்கிரசின் செயலாளராக இருந்தார். கரூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பணிபுரிந்தார். 1921 முதல் 1930 வரை நாமக்கல் காங்கிரசின் தலைவராக இருந்தார். கரூர் அமராவதி நதிக்கரையில் இவர் அடிக்கடி கூட்டங்கள் நடத்தினார்.

தேவகோட்டை சின்ன அண்ணாமலை தமிழ்ப்பண்ணை எனும் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தினார். அதன் மூலம் நாமக்கல்லாரின் நூல்கள் பிரசுரம் செய்யப்பட்டன. சின்ன அண்ணாமலை சிறந்த பேச்சாளர். அவரது நகைச்சுவை மிகவும் பிரபலம். சங்கப்பலகை எனும் ஒரு பத்திரிகையையும் அவர் நடத்தினார். ம.பொ.சி. தலைவராக இருந்த தமிழரசுக் கழகத்தின் தூண்களில் அவரும் ஒருவர். இவர் மகாகவி பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அவரால் பாராட்டப் பெற்றிருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் முதன் முதலாக 1932இல் இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை கிடைத்தது. சுதந்திரம் நெருங்கி வந்த சமயத்தில் இவரது கவிதைகள் பெரும் புகழ்பெற்று தமிழ் மாநிலமெங்கும் இவருக்குப் பாராட்டும் புகழும் ஈட்டித் தந்தன. 1945இல் இவரைப் பாராட்டி சென்னையில் நடந்த விழாவில் காமராஜ், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்கி போன்றவர்கள் கலந்து கொண்டு இவரைப் பாராட்டினார்கள். இவர் எழுதிய "மலைக்கள்ளன்" எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு 'அரசவைக் கவிஞர்' எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு டெல்லியில் 'பத்மபூஷன்' விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய "காந்தி அஞ்சலி" எனும் கவிதைத் தொகுதி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பாரதிக்குப் பிறகு தோன்றிய ஒரு தேசியக் கவிஞரின் ஆயுள் முடிந்து விட்டது. வாழ்க நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை புகழ்

.
நினைத்த மாத்திரத்தில் சுதந்திரம் பெறலாம்
சொல்கிறார் தேசியக் கவி நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்திரம்;
பிச்சை கேட்க வேண்டுமோ, பிறர் கொடுக்க வல்லதோ?
'வேண்டும்' என்ற உறுதியே விடுதலைக்கு வழிவிடும்
யாண்டிருந்து வருவது? யார் கொடுத்துப் பெறுவது?

'அடிமையல்ல நான்' எனும் ஆண்மையே சுதந்திரம்;
தடியெடுக்க வேண்டுமோ? சண்டையிட்டு வருவதோ?
ஆசைவிட்ட பொழுதிலே அடிமை வாழ்வும் விட்டிடும்;
மீசை துள்ளி வாயினால் மிரட்டினால் கிடைப்பதோ?

அஞ்சுகின்ற தற்றபோது அடிமையற்றுப் போகுமே
நஞ்சுகொண்டு யாரையும் நலிவு செய்து தீருமோ?
நத்திவாழ்வ தில்லையென்ற நாளிலே சுதந்திரம்
கத்தி கொண்டு யாரையும் குத்தினாற் கிடைக்குமோ?

கள்ளமற்ற நேரமே காணலாம் சுதந்திரம்;
உள்ளிருக்கும் ஒன்றை வேறு ஊரிலார் கொடுப்பவர்?
தீமையோடு உறவுவிட்ட திண்மையே சுதந்திரம்
வாய்மையோடு உறவறாத வன்மையே சுதந்திரம்.


ஒப்பற்ற காந்தியால் உலகம் வாழும்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

கவிபாடிப் பெருமை செய்யக் கம்பனில்லை
கற்பனைக்கிங் கில்லையந்தக் காளிதாசன்
செவிநாடும் கீர்த்தனைக்கு தியாகராஜரில்லை
தேசிய பாரதியின் திறமும் இல்லை
புவிசூடும் அறிவினுக்கோர் புதுமை தந்து
புண்ணியமும் கண்ணியமும் புகழும் சேர்ந்த
உவமானம் வேறெவரும் உரைக்க வொண்ணா
உத்தமராம் காந்திதனை உவந்து பேச.

சொல்லுவது எல்லார்க்கும் சுலபமாகும்
சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் சொற்பம்
எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள்
எழுதியது பிறருக்கே தமக்கென் றெண்ணார்
தொல்லுலகில் நாமறிந்த தலைவர் தம்முள்
சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல
இல்லையெனும் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி
இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த செல்வம்.

கொலைகளவு பொய்சூது வஞ்சமாதி
கொடுமைகளே வித்தைகளாய் வளர்த்துக் கொண்டு
தலைசிறந்த பிறவியெனும் மனித வர்க்கம்
சண்டையிட்டு மடிவதனைத் தடுக்க வேண்டி
உலகிலுள்ள மனிதரெல்லாம் கலந்து வாழ
ஒருவராய்த் தவம்புரிய உவந்த காந்தி
விலைமதிக்க முடியாத செல்வமன்றோ
வேறென்ன நாட்டிற்குப் பெருமை வேண்டும்?

புத்தர்பிரான் பெருந்துறவைப் படிக்கும் போதும்
போதிமர நிழல்ஞானம் நினைக்கும் போதும்
கர்த்தர்பிரான் ஏசுமுன்னாள் சிலுவைதன்னில்
களிப்போடு உயிர்கொடுத்த கதையைக் கேட்டும்
சத்துருவாய்க் கொல்லவந்தோர் தமையுங் காத்த
தயைமிகுந்த நபிகளின்பேர் சாற்றும் போதும்
உத்தமரைக் 'கண்டோமா' என்னும் ஏக்கம்
ஒவ்வொரு நாள் நமக்கெல்லாம் உதிப்பதுண்டே!

குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
கோடரி ஒரு புறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம் வரத் தடியடியால் ரணமுண்டாக்கி
நாற்புறமும் பலர் உதைத்து நலியத்திட்ட
அத்தனையும் நான்பொறுத்து அகிம்சை காத்து
அனைவரையும் அதைப்போல நடக்கச் சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்துடட்டில் சிரிப்பினோடும்
உயிர்துறந்தால் அதுவே என் உயர்ந்த ஆசை.

என்றுரைக்கும் காந்தியை நாம் எண்ணிப் பார்த்தால்
எலும்பெல்லாம் நெக்குநெக்காய் இளகுமன்றோ?
நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்
நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வ துண்டோ?
கன்றினுக்குத் தாய்போல உயிர்கட்காகக்
கரைந்துருகும் காந்தியை நாம் நேரில் கண்டோம்
இன்றுலகின் துயர்நீங்கச் சிறந்த மார்க்கம்
எடுத்துரைக்கக் கொடுத்து வைத்தோம் இருந்து கேட்க.

கவிராஜர் கற்பனைக்கும் எட்டாத் தீரம்
கடலென்றாற் குறைவாகும் கருணை வெள்ளம்
புவிராஜர் தலைவணங்கும் புனித வாழ்க்கை
பொறுமையெனும் பெருமைக்குப் போற்றும் தெய்வம்
தவராஜ யோகியர்கள் தேடும் சாந்தி
தளர்வாகும் எழுபத்து ஒன்பதாண்டில்
யுவராஜ வாலிபர்க்கும் இல்லா ஊக்கம்
ஒப்பரிய காந்தியரால் உலகம் வாழ்க.

தீண்டாமைப் பேயை நாட்டைவிட்டு ஓட்டுவோம்
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

தொத்து நோய்கள் மெத்தவும் தொடர்ந்து விட்ட பேரையும்
தொட்டு கிடிச் சொஸ்தமாக்கல் தர்ம மென்று சொல்லுவார்
சுத்தமெனும் ஜாதியால் தொடப்படாது என்றிடில்
தொத்து நோயைக் காட்டிலும் கொடிய ரென்று சொல்வதோ?

நாய் குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம்
நரகல் உண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம்
ஆயும் ஆறு அறிவுடை ஆன்ம ஞான மனிதனை
அருகிலே வரப் பொறாமை அறிவிலே பொருந்துமோ?

செடிமரங்கள் கொடிகளும் ஜீவரென்ற உண்மையை
ஜெகமறிந்து கொள்ள முன்பு செய்த திந்த நாடடா!
முடிவறிந்த உண்மை ஞானம் முற்றி நின்ற நாட்டிலே
மூடரும் சிரிக்கு மிந்த முறையிலா வழக்கமேன்?

உயிரிருக்கும் புழுவையும் ஈசனுக்கு உறையுளாய்
உணருகின்ற உண்மை ஞானம் உலகினுக் குரைத்த நாம்
உயருகின்ற ஜீவருக்குள் நம்மோடொத்த மனிதனை
ஒத்திப் போகச் சொல்லுகின்ற தொத்துக் கொள்ள லாகுமோ?

அமலனாகி அங்குமிங்கும் எங்குமான கடவுளை
ஆலயத்துள் தெய்வமென்று அங்கிருந்து எண்ணுவோம்
விமலனான கடவுள் சக்தி மனிதன் கிட்டி விலகினால்
வேறு ஜீவர் யாவும் அந்த விமலனென்ப தெப்படி?

ஞாயமல்ல ஞாயமல்ல ஞாயமல்ல கொஞ்சமும்
நாடுகின்ற பேர்களை நாமிடைத் தடுப்பது
பாயுமந்த ஆற்றிலே பருகிவெப்பம் ஆறிடும்
பறவையோடு மிருகமிந்தப் பாரிலார் தடுக்கிறார்?

Monday, August 23, 2010

பி.சீனிவாச ராவ்

விவசாயிகளின் எழுச்சி நாயகர் பி.சீனிவாச ராவ்

த்மிழ்நாட்டில் சுதந்திரப் போட்டாத்தில் ஈடுபட்டு தொண்டு புரிந்தவர்களில் பி.சீனிவாச ராவ் ஒருவர். இவர் தனது போராட்டத்தை ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் நிலையில், அந்த ஏகாதிபத்தியம் இந்த நாட்டில் வேரூன்ற காரணங்கள் எவை என்று கண்டு, அந்த ஆணிவேரை அறுத்தெறிய முயன்றவர். வயல்களில் உழைக்கும் விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலிகள், உழைப்பாளிகள் இவர்களைச் சுரண்டிக்கொண்டு, வெள்ளைக்காரர்களுக்குச் சாமரம் வீசும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை அகற்றினாலே, வெள்ளைக்காரர்கள் தானாகவே இந்த நாட்டைவிட்டு ஓடிவிடுவார்கள் என்பது இவரது கருத்து. இந்த நோக்கத்துக்காக அவர் என்ன செய்தார்?

1936இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கப்பட்டது. அந்தச் சங்கத்தை தமிழகம் முழுவதும் கிளைகளைத் தொடங்கி கிராமம் தோறும் பிரச்சாரம் செய்து சுற்றி அலைந்து உழைத்தவர் சீனிவாச ராவ். இவரைப் பற்றி இன்றுகூட கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தவிர மற்றையோர் அறிந்து கொள்ளவில்லை, அறிந்துகொள்ள முயன்றதுமில்லை. இவர் கர்நாடக மாநிலத்தில் காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி இருக்கும் குடகு நாட்டில் பிறந்தவர். இவர் யார் எவர் எங்கிருந்து வந்தார் என்பதையெல்லாம்கூட பிறருக்குத் தெரிவிக்க விரும்பாமல் தான் ஈடுபட்டிருக்கும் இயக்கத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் சீனிவாச ராவ்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் சென்னையில் இவருடன் சிறையில் இருந்தவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அமீர் ஹைதர்கான் போன்றவர்கள். சுதந்திரப் போர் ஒரு புறம், விவசாயிகளின் எழுச்சி மற்றொரு புறம் என்று தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் இவர் தனது இயக்கத்தை மையமாகக் கொண்டார். இவர் ஆரம்ப கால அரசியலின்போது இவருடன் இணைந்து போராடிய பல தலைவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் எஸ்.வி.காட்டே, ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்டராமன் ஆகியோர். இவர்கள் அனைவருமே கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைசிறந்த தொண்டர்கள்.

இவர் அதிகமாகத் தன்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்பாமல், செயல் ஒன்றே குறியாகத் தன் வாழ்நாளைக் கழித்தார். கீழத் தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி போன்ற பகுதிகள்தான் இவரது போராட்டக் களமாக இருந்தது. இந்த ஓய்வறியாத தொண்டனின் மறைவுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிகையான "ஜனசக்தி" இவர் நினைவாக கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டது. அதில் பல தலைவர்களும் இம்மாமனிதன் பற்றிய பல செய்திகளைக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்துமே மிக விளக்கமாக அமைந்திருந்தன. அவற்றில் ப.ஜீவானந்தம் போன்றோர் எழுதிய கட்டுரைகள் பல செய்திகளை உள்ளடக்கி இருந்தன. அதிலிருந்து சில பகுதிகளை இங்கு காணலாம்.

ப.ஜீவானந்தம்: "தன் பெற்றோர் உற்றாரைப் பற்றி, ஊர் பேர் பற்றி இதுவரை மறந்தும் பேசாத ஒரு விசித்திர மனிதர் அவர். அதே பொழுதில் 1930லிருந்து நம்மை விட்டுப் பிரிந்த வரை தமிழகத்தையே தாயகமாகக் கொண்டு வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்திருந்தார். எனது வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு தேசபக்தரையோ, புரட்சி வீரனையோ நான் எதிர்ப்பட்டதில்லை. அப்படிப்பட்ட ஓர் அபூர்வ பிறவி அவர்."

"1930இல் சென்னையில் பிரகாசம் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தின் போது ரத்த பைசாசமே போலீஸ் கமிஷனர் கன்னிங்காம் உருவத்தில் வந்து நடத்திய கொடிய அடக்குமுறைச் சித்திரவதையை இன்று நினத்தாலும் உடலும் குடலும் பதறும். அந்தப் போராட்டத்தில் புலுசு சாம்பமூர்த்தி, காஸா சுப்பாராவ், துர்க்காபாய் முதலான தேசபக்தர்களோடு மாணவராக இருந்த சீனிவாச ராவும் கலந்து கொண்டார். நாட்டின் பெருமையைக் காத்த வீரர்களில் ஒருவர் இவர்."

"ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு ஆளாகி, நான் ஒரு கம்யூனிஸ்ட் என்று மூச்சுகூட விடமுடியாத நிலையில் 2/65 பிராட்வேயை உறைவிடமாகக் கொண்டு ஒரு எடுப்புச்சாப்பாட்டை மூன்று பேர், சில வேளைகளில் நான்கு பேர் உண்டு பணிபுரிந்த காலம் அது. அப்போது சீனிவாச ராவி எங்களுக்கு ஒரு நட்சத்திரமாக விளங்கினார்."

ஹெச்.டி.ராஜாவின் 'நியு ஏஜ்' பத்திரிகையில் முழுநேரமும் பணிபுரிந்தார். 1935இல் காங்கிரஸ் கட்சிக்குள், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் சென்னைக் கிளையை முதலில் அமைத்தவர் சீனிவாச ராவ். இவர் சிறிது அதிகமான நேர்மையாளர். தனக்கு சரி என்றும் நீதி என்றும் பட்டுவிட்டால் அதில் உறுதியாக நிற்பார். அவருடைய கண்டிப்புக்கும், பொறுப்புணர்ச்சிக்கும் பயந்து பலரும் சற்றுத் தள்ளியே இருப்பார்கள். அவருடைய கொள்கை பிடிப்பும், சுயநலமின்மையும் அத்தகையது."

"வெளிமாநிலக்காரர் என்பதாலும், தமிழ் சரியாகப் பேச முடியாததாலும் மணலி கந்தசாமி போன்றோருடன் சேர்ந்து 1943இல் தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தைத் தொடங்கி அவர்களை ஒரு போராட்ட சக்தியாக உருவாக்கினார். அதுமுதல் 30 ஆண்டுகள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்த தமிழகத்தின் ஒப்பற்ற தலைவன். அந்த விவசாயிகளின் தலைவர் இறந்த போது திருத்துறைப்பூண்டியில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டபோது ஆயிரமாயிரம் விவசாயிகள் கண்ணீர் சிந்தி அந்தத் தலைவனை வழியனுப்பிய காட்சி கல்லும் கரையச் செய்யும் காட்சியாகும்."

எம்.ஆர்.வெங்கட்டராமன்: "வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்றுதான் அவர் எப்போதும் பேசுவார். ஒளிவு மறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. தவறுகள் அக்கிரமம் என்று அவர் கருதியதைக் காரசாரமாகக் கண்டித்து விடுவார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அங்கத்தினராக இருந்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டபோது அதன் செயலாளராகவும் இருந்தார். அன்னியத் துணிகள் பகிஷ்காரம் நடந்த போது இவர் போலீசாரால் பயங்கரமாகத் தாக்கப்பட்டார். பூட்ஸ் காலால் மிருகத்தனமாக மிதிக்கப்பட்டார். அத்தனை அடிகளையும் அஞ்சாத நெஞ்சத்தோடு எதிர் கொண்டவர் சீனிவாச ராவ்."

பி.ராமமூர்த்தி: "கண்டிப்பு, கட்டுப்பாடு, எளிய வாழ்க்கை இவைகளுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர் சீனிவாச ராவ். தொண்டனுக்குத் தொண்டனாக, நண்பனுக்கு நண்பனாக, தலைவனுக்குத் தலைவனாகத் திகழ்ந்தார். ஆகவே தான் அவரது மறைவுச் செய்தி கேட்ட சில மணி நேரத்தில் தஞ்சை மாவட்டமே, தமிழகமே கதறி அழுதது. அவரது இறுதிப் பயணத்தைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தார்கள்."

ஏ.எம்.கோபு: "கன்னடத்தில் உயர்சாதியான பிராமண குலத்தில் பிறந்து, காவிரி நதி தீரமான தஞ்சைத் தரணியின் வற்றாத வளத்தின் வித்தாகவும், வேராகவும், விளங்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களில் அவதரித்த லட்சக்கணக்கான வேளான் தொழிலாளரின், குத்தகைதாரர்களின், குறுநில உடைமையாளர்களின் விமோசனத்துக்காக அரும்பாடுபட்டு, தஞ்சையில் உயிர் நீத்து, திருத்துறைப்பூண்டியில் மீளாத்துயில் கொண்ட் தமிழகத்தின் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர் சீனிவாச ராவ்."

பி.சீனிவாச ராவி 1961ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குத் தஞ்சாவூரில் காலமானார். அவர் உயிர் பிரிந்தபோது அவருடன் அப்போது தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் காத்தமுத்து, தஞ்சை ஏ.வி.ராமசாமி, கே.நல்லகண்ணு ஆகியோர் உடனிருந்தனர். அவர் உடல் பி.ராமமூர்த்தி, எம்.காத்தமுத்து, கே.டி.ராஜு ஆகியோரால் திருத்துறைப்பூண்டிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முல்லை ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளும், தொண்டர்களும் கண்ணீர் சிந்த 30-9-1961 இரவு 10-30 மணிக்கு எரியூட்டப்பட்டது.

போராட்டத்தையே தனது வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்த ஒரு ஏழைப்பங்காளனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வாழ்க தோழர் பி.சீனிவாச ராவ் புகழ்!

Wednesday, August 18, 2010

"காந்தி ஆஸ்ரமம்" அ.கிருஷ்ணன்

"காந்தி ஆஸ்ரமம்" அ.கிருஷ்ணன் (1908 - 1985)

காந்தி ஆஸ்ரமம் திரு அ.கிருஷ்ணன் அவர்கள் 1908ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி திருநெல்வேலி நகரத்தில் பிறந்தார். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இவருடைய கல்வி திருநெல்வேலியில் பத்தாம் வகுப்பு வரை நடந்தது. இளம் வயதில் தேசிய உணர்வு ஏற்பட்ட காரணத்தால் அப்போது நடந்த பல தேசிய இயக்க நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் பம்பாய் நகரில் இருந்த உறவினரிடம் வேலைக்காக அனுப்பப்பட்டார். அங்கு இவர் 1927 -29 ஆண்டுகளில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பம்பாய் பெரு நகரம் என்பதோடு இவருடைய தேசிய இயக்கத்தில் ஈடுபடவும் அங்கு இவருக்கு வாய்ப்பு ஏற்பட்டது. கதர் துணிகளை மொத்தமாக வாங்கி தோளில் சுமந்துகொண்டு விற்பனை செய்து தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றார். மகாத்மா காந்தியிடம் இவர் இந்தப் பணிக்காக பெற்ற பாராட்டை இவர் பெருமையாகக் கருதினார்.

பம்பாயிலிருந்து தமிழகம் திரும்பி விளாத்திகுளம் எனும் ஊரில் பொதுப்பணித்துறையில் மேஸ்திரியாகப் பணியாற்றத் தொடங்கினார். அங்கு இருந்த கதர் கடைக்கு இவர் அடிக்கடி செல்வது வழக்கம். அப்படி அங்கு சென்ற போது கதர் கடையில் இருந்த ஒரு பத்திரிகை இவர் கண்களில் பட்டது. அது "விமோசனம்" எனும் பத்திரிகை. அது திருச்செங்கோடு நகரத்தில் ராஜாஜியால் தொடங்கப்பட்ட 'காந்தி ஆசிரமத்தின்' வெளியீடு. அப்போது அதன் ஆசிரியராக இருந்தவர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி. உடனே அந்த பத்திரிகைக்கு சந்தா அனுப்பியதோடு கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் கடிதம் எழுதினார். அவரது வேண்டுகோளை ஏற்று அலுவலகத் தொடர்பினாலும், பொதுத்தொடர்பினாலும் பலரிடம் சந்தா வசூலித்து 'விமோசனம்' பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவினார். இவரது ஆர்வத்தையும், தேசபக்தியையும் கல்கி வெகுவாகப் பாராட்டி இவரை திருச்செங்கோடு வந்து தன்னைச் சந்திக்குமாறு கடிதம் எழுதினார்.

கல்கியின் வேண்டுகோளை ஏற்று கிருஷ்ணன் 1930இல் திருச்செங்கோடு சென்று அங்கு கல்கியைத் தேடினார். இவர் போனபோது கல்கி அங்கு இல்லை. பிறகு அவர் வந்தபின் தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆசிரமத்தில் சேர்ந்தார். அந்த ஆண்டு ராஜாஜி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் செய்வதற்காக திருச்சியிலிருந்து டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து நூறு தொண்டர்களுடன் பாதயாத்திரை சென்றார். இவருக்கும் அந்த சத்தியாக்கிரகத்தில் பங்கு கொள்ள ஆசைதான். ஆனால் இவரை அப்போது வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

அதுமுதல் ராஜாஜி கிருஷ்ணனின் ஆதர்ச தலைவர் ஆனார். சுதந்திரப் போரில் நடைபெற்ற பல போராட்டங்களில் இவர் பங்கு பெற்றார். 1932ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1933 வரை சுமார் ஒரு வருட காலம் சிறை தண்டனை பெற்று கோயம்புத்தூர் மத்திய சிறையில் இருந்தார். அதன் பிறகு 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ராஜாஜி தலைமையில் போராட்டத்தில் கைதாகி இரண்டாம் முறையாக சிறையில் இருந்தார்.

நாமக்கல்லில் இராமலிங்கம் பிள்ளையோடு போராட்டங்களில் கலந்து கொண்டு கொல்லிமலைப் பகுதிகளில் காவல்துறையின் கண்களில் படாமல் காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்தினார். அப்போது இவரோடு இருந்த பல தேசபக்தர்களுக்கு இராமலிங்கம் பிள்ளையின் சகோதரி மகன் இராமசாமி பிள்ளை (கரூர்) சைக்கிளில் சாப்பாடு எடுத்துக் கொண்டு, பாத்திரங்கள் தெரியாமல் அதன் மீது வைக்கோலை வைத்துக் கொண்டு ரகசியமாகக் கொண்டு செல்வாராம். காந்தியத்தில் முழுமையாக நம்பிக்கை கொண்ட இவர் இளமை முதல் கதர் மட்டுமே அணிந்து வந்தார்.

1930 தொடங்க்கி 1970 வரை இவர் காந்தி ஆஸ்ரமப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு 1970இல் பணி நிறைவு பெற்று தன் பிள்ளைகள் பேராசிரியர் கி.கண்ணன், திரு கி.முத்துராமகிருஷ்ணன் ஆகியோரோடு வசித்து வரலானார். இவரது வாழ்க்கையில் இறைவன் விளையாடிவிட்டார். இவரது மூத்த மகனை இவர் 1977ஆம் ஆண்டில் பறிகொடுத்தார். புத்திர சோகம் இவர் மனதை ஆழமாகப் பாதித்திருந்தாலும் அதனை சிறிதுகூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் கீதையின் வழிகாட்டுதல்படி நன்மை தீமைகளைச் சமமாகப் பாவித்துத் தன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். மூத்த மகனை இழந்த பின் எட்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் 1985இல்தான் இவர் மறைந்தார்.

திருச்செங்கோடு ஆசிரிமத்திலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், அதோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ஆசிரமத்தில் இவர் நிர்வாகம் செய்த காலத்தில் இவருக்கு கதர் பணியில் ஈடுபாட்டோடு சிறப்பாகப் பணியாற்றினார். கதர் இயக்கத்தில் அப்போது தீவிரமாக இருந்த கோவை ஐயாமுத்து போன்றவர்களோடு இவருக்குத் தொடர்பு இருந்தது. ஆசிரமத்தில் இராட்டையில் நூல் நூற்கவும், கதர் துணி தயாரிக்கவும் இவர் அதிக ஈடுபாடு காட்டினார். 1940இல் இவர் நாகபுரிக்கருகில் இருந்த வார்தா காந்தி ஆசிரமம் சென்று அங்கு மகன்வாடி கிராமோத்யோக் வித்யாலயாவில் கையினால் காகிதம் செய்யும் முறையைக் கற்று வந்தார். திருச்செங்கோடு திரும்பி இங்கிருந்த தொண்டர்கள் பலருக்கும் கையினால் காகிதம் செய்யும் முறையைப் பயிற்றுவித்து எல்லோருக்கும் பயன்படும்படி கைத்தொழிலை வளர்த்தார்.

அப்போது திருச்செங்கோடு ஆசிரமத்தின் காதி பண்டார் எனும் கதர் கடையின் நிர்வாகியாக பழனிச்சாமி பண்டாரம் என்பவர் இருந்தார். அவர் 1945இல் காலமான போது கிருஷ்ணன் அந்த பண்டாரின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். அதுமுதல் சுமார் இருபத்தைந்தாண்டுகள் அந்தப் பணியைச் செவ்வனே செய்து வந்தார். சேலத்தில் இப்போது உள்ள 'ராஜாஜி காதி பவன்' அன்று ஆசிரமத்தில் இருந்த காதி பண்டாரின் வளர்ந்த நிலைதான்.

தியாகி அ.கிருஷ்ணனுக்கு மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் அதிக ஈடுபாடும் பக்தியும் உண்டு. தன் மகன் ஒருவருக்கு இராமகிருஷ்ணன் என்று பெயரிட்டதே இந்தக் காரணம் தொட்டே. அன்றைய சேலம் மாவட்டத்தில் பல இடங்களுக்கும் பயணம் செய்து மேற்கண்ட மகாங்களைப் பற்றிய பெருமைகளைப் பரப்பியதோடு பல விழாக்களையும் ஏற்பாடு செய்திருக்கிறார். மகாகவி பாரதியாரின் பாடல்களை நல்ல குரல் வளத்தோடு இவர் பாடுவதைக் கேட்டு உருகாதவர் இருக்க முடியாது. உணர்ச்சி பூர்வமாக, பாடல்களின் கருத்துக்கேற்ப இவர் பாரதி பாடல்களைப் பாடிக் கேட்க பலரும் விரும்புவர். நல்ல இசை வளம், குரல் வளம் இவருக்கு உதவி புரிந்தது.

மூத்த மகனை இழந்து விட்டாலும், இவரது மற்ற இரு மகன்களிடமும், தன் மகளிடமும் அன்பு பூண்டு இவர் தனது மனைவியோடு இருந்து 1985இல் காலமானார். வாழ்க தியாகி 'காந்தி ஆஸ்ரமம்' அ.கிருஷ்ணன் புகழ்!

Sunday, August 8, 2010

டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி

டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

அந்தக் காலத்தில் தமிழகத்தில் பெண்கள் அதிகமாக ஆண்களைப் போல அரசியலிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் முன்னணியில் நின்று போராட்டங்களை வழிநடத்துவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நமது கலாச்சாரம், பண்பாடு இவற்றில் மக்கள் வைத்திருந்த அதீதமான நம்பிக்கை. அதுபோலவே பெண்களை உயர்கல்வி கற்க அனுமதிப்பதும் இல்லை. அப்படி உயர்கல்வி கற்று மேம்பட்ட திறமையுடன் வெளிவந்தவர்களில் அனேகம் பேர் மேற்சொன்ன வேலிகளை உடைத்தெறிந்து விட்டு முன்னணியில் விளங்கியிருக்கின்றனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அம்புஜம்மாள், லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, மதுரை அகிலாண்டத்தம்மாள் (மதுரை வைத்தியநாத அய்யரின் மனைவி), மஞ்சுபாஷ்ணி அம்மையார், கடலூர் அஞ்சலை அம்மாள் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்களையும் சொல்லமுடியும்.

மகாகவி பாரதியார் 'சந்திரிகையின் கதை' என்றொரு கதை எழுதியிருக்கிறார். அதில் நிஜமாகவே வாழ்ந்த பல உயர்ந்த மனிதர்களைக் கதாபாத்திரமாகப் படைத்திருக்கிறார். அதில் வீரேசலிங்கம் பந்துலு வருவார். தி ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர் வருவார். இப்படிப்பட்ட உயர்ந்த தலைவர்கள் பெண்களின் உயர்வுக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்கள், தாங்களே தடைகளை மீறி செய்தும் காட்டியிருக்கிறார்கள். இங்கு நாம் பார்க்கப் போகிற விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மணியை அப்படி உருவாக்கியவர் வீரேசலிங்கம் பந்துலு என்று கூறலாம்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் பல தலைவர்கள் போலீசாரின் தடியடிக்கு ஆளாகி குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த வரலாற்றை நாம் நிறைய படித்திருக்கிறோம். ஆனால் அப்படி அடிவாங்கிய பெண்பிள்ளைகளைப் பற்றி அதிகமாகச் செய்திகள் இல்லை. அந்தக் குறையை போக்கும் வகையில் 1930இல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தின் போது, தொண்டர்கள் சேர்ந்து குவித்து வைத்திருந்த உப்பை அள்ளிச் செல்ல போலீஸ் முயன்றபோது, அந்த உப்புக் குவியலைச் சுற்றித் தொண்டர்கள் கைகோர்த்து தடுத்தனர். அப்படித் தடுத்த பலரும் போலீசாரின் புளியம் மிளாரினால் அடிக்கப்பட்டனர். தொண்டர்களில் ஒருவராக இந்தப் போரில் ஈடுபட்ட டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதியை பெண் என்றும் பாராமல், போலீஸ் புளியம் மிளாரினால் அடித்துத் துவைத்ததோடு, அவரது இரண்டு கால்களையும் பிடித்துத் தரையில் தரதரவென்று இழுத்து வந்து தூக்கி கூடாரத்தை விட்டு வெளியே எறிந்த கொடுமையும் நடந்தது. இந்தக் கொடுமை நிகழ்வைச் சற்று கண்மூடி கற்பனை செய்து பாருங்கள். அடடா! என்ன கொடுமை இது என்று அலறத் தோன்றும். அந்தக் கொடுமைக்கு ஆளானவர் நாம் இப்போது பார்க்கப் போகும் தேசத் தொண்டர், சமூகத் தொண்டர், தியாகி டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள்.

மற்றுமொரு செய்தியையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை யொட்டி மதக்கலவரம் வடநாட்டில் கொடுமையாக நிகழ்ந்தேறியபோது, நேரு சிறையில் இருந்த நேரத்தில், அவரது மகள் இந்திரா பிரியதர்ஷினியை மகாத்மா காந்தியடிகளிடம் அனுப்பித் தனக்கு தேச சேவையில் ஈடுபடுத்த வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இந்திராவும் காந்தியடிகளிடம் சென்று கேட்டார். அவர் சொன்னார். நீயோ சின்னப் பெண். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். நீ மதக்கலவரம் நிலவும் டெல்லிக்குச் சென்று என்ன சேவையைச் செய்ய முடியும். நீயே போய் நிலைமையைப் பார்த்து என்ன செய்யலாம் என்று சொல்லு என்றார். இந்திரா டெல்லி வந்தார். தன்னையொத்த இளைஞர்களை ஒன்று சேர்த்தார். "ஹனுமான் சேனா' எனும் அமைப்பை ஏற்படுத்தி வன்முறைகளைத் தடுக்கவும், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும் இந்த சேனையின் மூலம் பாடுபட்டார். அது அங்குமட்டும்தான் நடக்குமா என்ன? ஜவஹர்லால் கேட்டுக் கொண்டபடி இந்திரா செய்ததைப் போல, தென்னகத்தில் டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி அவர்கள் "வானரசேனை" எனும் சிறுவர்களுக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தி, சமூக சேவையில் ஈடுபட்டார்.

சீனிவாச ராவ, சூடாமணி அம்மையார் தம்பதியருக்கு 1892ஆம் வருஷம் டிசம்பர் 6ஆம் தேதி ருக்மணி பிறந்தார். இவருடைய தந்தை இவருடைய இளம் வயதிலேயே திருமணம் செய்துவிட முயன்றபோது வீரேசலிங்கம் பந்துலு தலையிட்டு பால்ய விவாகத்தைத் தடுத்தார். மகளை நன்றாகக் கல்வி கற்கச் செய்ய வேண்டினார். அதன்படி பள்ளி சென்று படிக்கத் தொடங்கினார் ருக்மணி. இந்த துணிச்சலை ஊரார் தாங்கிக் கொள்வார்களா. இவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர். டாக்டர் லக்ஷ்மிபதி என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

திருமதி ருக்மணி லக்ஷ்மிபதிக்குப் பிறந்த குழந்தைகளுள் இறந்தது போக மிச்சம் இரண்டு பெண்கள் ஒரு மகன். இவர்களுள் ஒரு பெண் பிரபல நரம்பியல் மருத்துவரான டாக்டர் ராமமூர்த்தியின் மனைவி இந்திரா ராமமூர்த்தி. ஜாதி சமய வேற்றுமைகளைக் கடந்து இவர் அனைவரிடமும் அன்போடு பழகியதோடு, அதனைச் செயலிலும் காட்டி வந்தார். பெண்களின் முன்னேற்றத்திலும் இவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். முன்பே சொன்னபடி வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் தன் குடும்பத்தை விட்டு போராடி சிறை தண்டனை பெற்றவர் இவர். மகாத்மா காந்தி சென்னை வந்தபோது அவரை வரவேற்று நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தவர்களில் ருக்மணியும் ஒருவர்.

1934இல் இவர் சென்னை மகாஜன சபைக்குத் துணைத் தலவரானார். 1936இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவரானார். 1937இல் சென்னை மாநகராட்சி மன்றத்தில் உறுப்பினரானார். அதே ஆண்டில் சென்னை சட்டசபையின் மேலவைக்குத் தேர்வாகி துணைச் சபாநாயகராக ஆனார். 1938இல் இவர் ஜப்பான் சென்றார். 1940இல் தனி நபர் சத்தியாக்கிரகத்தில் பங்கு கொண்டு கைதானார்.1946இல் சுதந்திரத்துக்கு முன்பு ஆந்திர கேசரி டி.பிரகாசம் தலைமையில் பதவி ஏற்ற காங்கிரஸ் அமைச்சரவையில் இவர் சுகாதார அமைச்சரானார்.

தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பெருமை சேர்த்த இந்த வீரப் பெண்மணி, சமூக சேவகி, சிறந்த நிர்வாகி, 1951ஆம் ஆண்டி ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று காலமானார். இன்று பெண்விடுதலை பற்றிப் பலரும் பேசுகிறார்கள். முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு அதனைச் செயலில் செய்து காட்டிய வீரப் பெண்மணி டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதியின் பெருமைக்கு நாம் அஞ்சலி செய்வோம். வாழ்க டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி புகழ்!

வீர வாஞ்சி

வீர வாஞ்சி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

உலக நாடுகளில் பல வன்முறைப் புரட்சிகளின் மூலம்தான் விடுதலையடைந்திருக்கின்றன. பிரெஞ்சு புரட்சியில் மாண்ட உயிர்கள் எத்தனை? ரஷ்யப் புரட்சியில் மாண்டவர்கள் எத்தனை பேர்? அமெரிக்க உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்? இப்படி உலகம் முழுவதும் போர் மூலமாகத்தான் சுதந்திரம் பெற்றிருக்கின்றனர். இந்தியாவில் மட்டும்தான் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டம், சத்தியாக்கிரகம் மூலம் நெடுநாள் போராட்டத்துக்குப் பிறகு சுதந்திரத்தைக் காணமுடிந்தது. காந்தியடிகளின் இந்தப் போரை "கத்தியின்றி, ரத்தமின்றி" நடந்த போராக எடுத்துக் கொள்ளலாம். அதாவது ஆங்கிலேயர்களின் ரத்தத்தை சிந்த வைக்காமல், அடிபட்டு, உதைபட்டு, துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்டு நம் இந்திய ரத்தத்தைச் சிந்தி இந்த சுதந்திரத்தைப் பெற்றோம் என்பதை மறுக்கமுடியாது. அதுதான் அகிம்சை வழி.

மகாத்மா காந்தியடிகள் இந்திய அரசியலில் ஆழங்கால் படுவதற்கு முன்பு பால கங்காதர திலகர் காலத்தில் இந்த அகிம்சை வழியெல்லாம் நடைமுறையில் இல்லை. அதுமட்டுமல்லாமல் எந்த வழியிலாவது ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்தியாவிலிருந்து விரட்டிவிட வேண்டுமென்கிற துடிப்புதான் நம் மக்கள் உள்ளங்களில் இருந்த கருத்து. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாஞ்சிநாதன் எனும் தேசபக்த இளைஞன், கொடுமைக்காரனும், இந்தியர்களை புழுவிலும் கேவலமாகக் கருதக்கூடியவனும், தேசபக்த சிங்கம் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குக் கிடைத்த கொடிய தண்டனைக்குக் காரணமாக இருந்தவனுமான ஆஷ் என்பவனை சுட்டுக் கொன்றான் என்பது எந்த வகையில் நாம் எடுத்துக் கொள்வது. இது தேசபக்தியின் வெளிப்பாடா இல்லையா, இது தவறு என்று சொல்வதற்கு, இதற்கு மாற்று வழி ஏதேனும் அந்த காலகட்டத்தில் இருந்ததா? இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் கண்ட பிறகுதான் இந்த வீர இளைஞனின் தியாகத்தை மதிப்பிட வேண்டும்.

சரித்திர காலத்தில் ஒரு நாட்டுப் படையும், எதிரி நாட்டுப் படையும் நேருக்கு நேர் போரிட்டுக் கொண்டார்கள். அதில் இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதையெல்லாம் கொலையாகக் கருதுவதில்லை. அதுமட்டுமல்லாமல் கொடியவர்களும், சர்வாதிகாரிகளும் கொலை செய்யப்பட்ட வரலாறு நமக்கு நிறையவே கிடைக்கின்றன. இத்தாலியில் ஃபாசிஸ்ட் தலைவன் முசோலினியும் அவனோடு பல ஃபாசிஸ்ட்டுகளும் மிலான் நகரில் கொல்லப்பட்டு ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்தனர். அப்படிச் செய்தவர்கள் இத்தாலி தேசபக்தர்களாகக் கருதப்பட்டார்களேயன்றி கொலைகாரர்களாக அல்ல. அவர்களுக்கு முன்பாக அதே இத்தாலியில் மாஜினியும் வன்முறை அரசியல் நடத்தியவர்தான். கொடுங்கோன்மை கட்டுக்கடங்காமல் போகிறபோது 'வன்முறை'யும் ஒரு ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் இந்த வீர வாஞ்சியின் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்க்கலாம். தாங்கமுடியாத தருணத்தில் வன்முறையில் ஈடுபடும் தேசபக்தர்கள் எத்தகைய தியாகங்களைப் புரிகிறார்கள். அவையெல்லாம் அவர்களது சொந்த நலனுக்காகவா, நாட்டின் நலன் கருதியா? தன்னை அழித்துக் கொண்டு இந்த நாடு நல்ல நிலை அடையவேண்டுமென்று அவர்கள் செய்த தியாகங்களுக்கு அளவுகோல் உண்டா? சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு வெள்ளைக்கார சார்ஜெண்ட் சாண்டர்ஸ் என்பான் அடித்த அடியின் காரணமாகப் பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய் இறந்து போனார். அன்று லாகூர் பல்கலைக் கழக மாணவர்களாக இருந்த ஷாகீத் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகியோர் அந்த வெறிபிடித்த வெள்ளையனைச் சுட்டுக் கொன்றனர். அது கொலையா? தேசபக்தனின் பழிவாங்கும் செயலா? 24 வயதில் அந்த இளைஞர்கள் நாட்டுக்காகத் தமது இன்னுயிரை நீத்த செயலை என்னவென்று சொல்லலாம்? குதிராம் போஸ், மதன்லால் திங்க்ரா போன்ற மாவீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது யார் பொருட்டு? இதையெல்லாம் நம் மனதில் கொண்ட பிறகே வீரன் வாஞ்சிநாதனின் செயலை எடைபோட வேண்டும்.

வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியார், பொருட்களை விற்கவும் வாங்கவும் என்று வந்த வேலையை விட்டு இங்கு நாடுபிடிக்கும் வேலையில் இறங்கினர். அவர்களது சூழ்ச்சிக்கு இரையான ராஜ்யங்கள் எத்தனை எத்தனை? வாரிசு இல்லாமல் ஒரு அரசன் இறந்தால் அந்த ராஜ்ஜியத்தைத் தங்களதாக எடுத்துக் கொண்டது பிரிட்டிஷ் சூழ்ச்சி. ராஜ்யத்தை நல்லபடி நடத்துவதாகவும், தகுந்த பாதுகாப்புக் கொடுப்பதாகவும் உத்தரவாதமளித்துப் பிடுங்கிக் கொண்ட ராஜ்யங்கள் எத்தனை? இந்தியர்கள் ஏமாளிகள் இவர்கள் தொடைகளில் திரித்த வரையில் லாபம் என்று கருதியது வியாபாரம் செய்யவந்த கிழக்கிந்திய கம்பெனி. அதில் ஆளவந்தவர்கள் ராபர்ட் கிளைவ் போன்றவர்கள் ஈவு இரக்கமற்ற முரடர்கள். இந்தியர்களை மனிதர்களாகவே நினைக்கத் தெரியாதவர்கள். இந்தப் பின்னணியில் வாஞ்சியின் வரலாற்றைப் பார்ப்போம்.

அமைதியாகவும், வெள்ளையனின் அடக்குமுறைக்குக் கட்டுப்பட்டும் தென்னகம் முழுவதும் வாய்பேசாத மெளனிகளாக இருந்த சமயம் உரக்கக் குரல் கொடுத்த தேசிய வாதிகள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா மற்றும் அவர்களோடு தோளோடு தோள் நின்ற மாடசாமி போன்ற வீரர் பெருமக்கள். இவர்களைக் கைது செய்து பொய்யான வழக்கில் சிக்க வைத்து இந்த வீரப்பெருமக்களைச் சிறைச்சாலைக்குள் கொண்டு வந்து அடைத்த பின் பிரச்சினை ஒன்றும் இருக்காது என்று இருமாந்திருந்த வெள்ளை ஆதிக்கமும், அதன் பிரதிநிதியாகத் திருநெல்வேலி ஆக்டிங் கலெக்டராக இருந்த ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் என்பானும் எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளான சம்பவம் ஒன்று மணியாச்சி ரயில் சந்திப்பில் நடந்தது. ஆம்! 1911ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி காலை 10-40 மணிக்கு மணியாச்சி சந்திப்பில் அந்த சம்பவம் நடந்தது.

17-6-1911 கலெக்டர் ஆஷ் அவனது மனைவி ஆகியோர் கொடைக்கானலில் படிக்கும் தங்களது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக நெல்லை பாலம் ரயில் நிலையத்தில் காலை 9-30 மணிக்குக் கிளம்பினார்கள். அவர்கள் பயணம் செய்த ரயில் மனியாச்சியில் நின்றது. அங்கு தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலுக்காக இருவரும் முதல் வகுப்புப் பெட்டியில் காத்திருந்தார்கள். அந்த நேரத்தில் அந்த ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டு வந்த வண்டியை விட்டு இறங்கி ஆஷ் இருந்த முதல் வகுப்புப் பெட்டிக்குள் ஏறினார். வாஞ்சியைப் பார்த்த ஆஷ் பதறினான், யார் நீ என்று கத்தினான். உடனே தன் கைத்துப்பாக்கியால் ஆஷை நோக்கிச் சுட்டார். குண்டு அவன் மார்பில் பாய்ந்தது. அந்த நிலையிலும் ஆஷ் தன்னைச் சுட்டவனைப் பிடிக்க முயன்றான். அவன் மனைவி அதைத் தடுத்து விட்டாள்.

ஆஷைச் சுட்டுவிட்டு பெட்டியை விட்டுக் கீழே இறங்கிய வாஞ்சிநாதனைப் பிடிக்க சிலர் முயன்றனர். அவர்களை உதறித் தள்ளிவிட்டு அருகிலிருந்த கழிப்பறைக்குள் சென்றுவிட்டார் வாஞ்சி. உள்ளே நுழைய பயந்துகொண்டு ஒரு மணி நேரம் நின்றவர்கள் கழிப்பறையிலிருந்து குண்டு வெடித்த சப்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தார்கள். அங்கே வாஞ்சி தனது கைத் துப்பாக்கியைத் தன் வாயினுள் சுட்டுக்கொண்டு இறந்து வீழ்ந்து கிடந்தார். குண்டடிபட்டுக் காயமடைந்த ஆஷ் திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லும் வழியில் கங்கைகொண்டான் எனுமிடத்தில் இறந்து போனார்.

கழிப்பறையில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து கிடந்த வாஞ்சிநாதன் உடலைப் போலீசார் சோதனையிட்டனர். அவர் காட்டிலாகாவில் வேலை பார்த்தவராதலால் உறுதியான துணியால் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்தார். ஒரு பையில் தமிழில் எழுதப்பட்டு, தமிழிலும் ஆங்கிலத்திலும் கையெழுத்திடப்பட்ட தேதியில்லாத ஒரு கடிதம் இருந்தது. அவர் அணிந்திருந்த கோட்டில் ஒரு மணிபர்சும், ராணி விக்டோரியாவின் படமும், இரண்டாம் வகுப்பு ரயில்வே டிக்கட் ஒன்று, ஐந்து அணா நாணயங்கள் இவை இருந்தன.

யார் இந்த வாஞ்சி? அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட செங்கோட்டையில் கோயில் மணியமாக இருந்த ரகுபதி ஐயர் என்பவரின் மகன். இவருக்கு நான்கு சகோதரிகள், இரண்டு ஆண் பிள்ளைகளில் இவர் இளையவர். இவர் செங்கோட்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். திருவனந்தபுரம் மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.படித்தார். தனது 23ஆம் வயதில் முன்னீர்ப்பள்ளம் சீதாராமையரின் மகள் பொன்னம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்து பரோடா சமஸ்தானத்துக்குச் சென்று மரவேலை செய்யும் தொழில்துறைப் படிப்பைப் படித்துத் தேறினார். பிறகு புனலூரில் காட்டிலாகாவில் பாரஸ்ட் கார்டாக வேலைக்குச் சேர்ந்தார்.

அந்த காலகட்டத்தில் தென் தமிழ்நாட்டில் பாரதமாதா சங்கம் என்றொரு இயக்கம் வேகமாக வளர்ந்து வந்தது. இதனை நிறுவியவர் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி என்பார். இவர் சீர்காழியை அடுத்த எருக்கூர் கிராமத்தில் பிறந்தவர். தேசபக்தியின் காரணமாக வெள்ளை அரசுக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் எதிராக ஒரு மாபெரும் புரட்சி செய்ய எண்ணி வங்கத்திலிருந்து வந்திருந்த சில புரட்சிக்காரர்களின் தீர்மானப்படி பாரதமாதா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. நீலகண்டனுக்கு ஏற்கனவே புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த வ.வெ.சு.ஐயரின் தொடர்பு இருந்தது. இந்த பாரதமாதா சங்கம் என்பது ஒரு ரகசிய இயக்கம். இதில் உறுப்பினர்களாக இருப்போர் ரகசியமாக ஒன்று கூடி, காளியின் படத்திற்கு முன்னால் குங்குமம் கலந்த தண்ணீரை வெள்ளையரின் குருதி என்று எண்ணிக் குடிப்பர். கத்தியால் தங்கல் கை விரல்களில் கீறிக்கொண்டு அந்த ரத்தத்தால் ஒரு வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வர். என்ன ஆபத்து நேர்ந்தாலும், சங்கத்தைப் பற்றிய ரகசியங்களை வெளியாருக்குச் சொல்வதில்லை, எதிர்பாராத ஆபத்து எதுவும் ஏற்பட்டால் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள வேண்டும். எப்படியும் ரகசியம் வெளிவரக்கூடாது என்றெல்லாம் இந்தச் சங்கத்தின் நிபந்தனைகள் ஆகும்.

வாஞ்சிநாதன் நீலகண்ட பிரம்மச்சாரியோடு நேர்ந்த ஏதோ மனவருத்தத்தால் அவரை ஒதுக்கிவிட்டு புதுச்சேரியிலிருந்த வ.வெ.சு.ஐயரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டார். செங்கோட்டையிலிருந்து புதுச்சேரி சென்று அங்கு ஐயரைச் சந்தித்தார். அப்போது ஐயர் சிலருக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை அளித்து வந்தார். அதில் வாஞ்சிநாதனும் சேர்ந்து கொண்டு துப்பாக்கிச் சுடும் பயிற்சியைப் பெற்றார். வாஞ்சிநாதன் ஆஷ் என்பானைக் கொல்ல ஏன் முடிவெடுத்தார்?

தூத்துக்குடியில் 1906இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனியை அழித்து ஒழிப்பதற்கு இடைவிடாமல் பாடுபட்டவன் அப்போது தூத்துக்குடியில் சப் கலெக்டராக இருந்த இந்த ஆஷ் என்பான். அங்கு இவன் இருந்த காலத்தில் இவன் செய்த அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. நாடு போற்றும் சிதம்பரம் பிள்ளையை அவமதித்தான். அவர் மீது பொய் வழக்குகளைப் போட்டான். இவரை ஒழிப்பதுதான் தனது வாழ்க்கை லட்சியம் என்பது போல நடந்து கொண்டான்.

குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளைக்காரர்கள் குள்ளிப்பதற்காக அங்கு இந்தியர்கள் யாரும் நீராடக்கூடாது என்று உத்தரவு போட்டான் ஆஷ். வ.உ.சிதம்பரம் பிள்ளை இரண்டு தீவாந்தர தண்டனை பெறக் காரணமாக இருந்தவனும், உத்தமத் தலைவராக இருந்த சுப்பிரமனிய சிவாவை அவரது தகுதியறியாமல் அவமானப் படுத்திய இந்த அன்னியனை இனியும் உலாவ விடக்கூடாது என்று முடிவெடுத்தார் வாஞ்சி. ரகசியக் கூட்டத்தில் சீட்டுக் குலுக்கிப் போட்டு பாரதமாதா சங்கத்தினர் வாஞ்சியின் பெயர் வரவே இந்தப் பணியை முடிக்க வாஞ்சியை ரத்தத்தால் வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தனர். வாஞ்சியும் திட்டமிட்டபடி ஆஷையும் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டார்.

வாஞ்சியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கிலக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்ன? "ஆங்கிலச் சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசத்தின் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தித் தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருவோவிந்தன், அர்ஜுனன் ஆகியோர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில் எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் கால் வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்னை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை."

இந்தக் கொலை நாடு முழுவதும் பரபரப்பை ஊட்டியது. எங்கு பார்த்தாலும் போலீசின் அத்து மீறல், கெடுபிடி. புனலூரில் ஒரு வக்கீல் தான் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார். செங்கோட்டையில் வாஞ்சிநாதனுக்கு நெருங்கியவர்கள் வீடுகள் போலீசாரால் சூறையாடப்பட்டன. கைதுக்குத் தப்பி தலைமறைவானார் மாடசாமி என்பார். தர்மராஜ ஐயர் வீடு சூறையாடப்பட்டவுடன் சித்திரவதைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

23 வயதே ஆன வாஞ்சிநாதனின் இளம் மனைவி பொன்னம்மாள், பருவமடைந்த நாள் முதலே விதவையானாள். தேசபக்தனை மணந்து கொண்டால் என்ன கிடைக்கும் என்பதை அவள் உலகுக்கு அறிவிப்பது போல எல்லாம் நடந்தன. இந்த வழக்கில் மாடசாமி தப்பிப் போய்விட்டாலும், அழகப்ப பிள்ளை, தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சாவடி அருணாசலம் பிள்ளை எனும் மாணவர் கல்லூரி விடுதியிலேயே கைது செய்யப்பட்டார். இவர்கள் தவிர இந்த வழக்குக்காக தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை, வக்கீல் குமாஸ்தா சோமசுந்தரம் பிள்ளை, சுந்தரபாண்டியபுரம் சோமசுந்தரம் ஐயர் ஆகியோரும் கைதானார்கள். இவர்களில் சிலர் அப்ரூவர்களாக ஆனார்கள். புதுச்சேரியில் இருந்த போது மாடசாமி மூலம் வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொல்லப் போகிறான் என்ற செய்தி கேட்டதும், இதுபோன்ற தனிப்பட்ட கொலைகளில் நம்பிக்கை இல்லாத, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஒரு புரட்சி செய்ய ஒரு இயக்கத்தை நடத்தி வந்த நீலகண்ட பிரம்மச்சாரி, பழி தன் மீது விழுந்துவிடும் என்பதால் தப்பிக் காசி நகருக்குச் சென்று விட்டார். ஆனால் விதி அவரை அங்கு சென்னை மாகாண ரகசியப் போலீசார் உருவில் துரத்திக் கொண்டு சென்றது. அவர் அங்கிருந்து கல்கத்தா சென்று விட்டார். ஆனால் காசியில் இவருக்கு அடைக்கலம் கொடுத்த செட்டியாரை போலீஸ் துன்புறுத்தியது.

தன்னைக் கைது செய்ய போலீசார் அலைகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் நீலகண்ட பிரம்மச்சாரி கல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சரணடைந்தார். அங்கிருந்து அவர் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார். இவரை நீதிபதியின் முன்பு கொண்டு வந்து நிறுத்தியபோது விலங்கிடப்பட்டுக் கொண்டு வரப்பட்டார். இவரது தேஜசைப் பார்த்த நீதிபதி, இவரது விலங்குகளை நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். பின்னாளில் ஓம்கார் சுவாமிகளாக நீலகண்ட பிரம்மச்சாரி கர்நாடக மாநிலம் நந்தி மலையடிவாரத்தில் வசித்த காலம் வரை அந்த நீதிபதி இவருடைய சீடனாக விளங்கி வந்தார்.

ஆஷ் கொலை வழக்கு நீண்ட நாட்கள் நடைபெற்றது. இறுதியில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ணன் 4 ஆண்டுகள், ஆலப்புழை ஹரிஹர ஐயர் 3 ஆண்டுகள், தூத்துக்குடி முத்துக்குமாரசாமி பிள்ளை, சுப்பையா பிள்ளை, செங்கோட்டை ஜெகநாத ஐயங்கார், புனலூர் பாபு பிள்ளை, செங்கோட்டை பிச்சுமணி ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மேலும் சிலர், சாவடி அருணாசலம் பிள்ளை, கஸ்பா அழகப்ப பிள்ளை, எட்டயபுரம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் விடுதலையானார்கள்.

ஒருக்கால் வாஞ்சி உயிரை விடாமல் இருந்திருந்தால் அவருக்கு பிரிட்டிஷ் அரசு தூக்குத் தண்டனை விதித்திருக்கும். இவர்கள் கையால் மாண்டு போவதைவிட தன்னைத் தானே மாய்த்துக் கொள்வதையே அந்த மாவீரன் விரும்பி ஏற்றுக் கொண்டான். இத்தோடு இந்த வழக்கின் போக்கு நின்று போய்விடவில்லை. இந்த தண்டனையெல்லாம் கொடுத்து முடித்த பிறகும், வீர சாவர்க்கருக்கு இதில் பங்கு உண்டா என்று போலீசுக்கு மூக்கில் வியர்த்தது. அவரையும் விசாரணை செய்தனர். இன்றும் கூட ஆஷ் கொலை எங்கு எவரால் திட்டமிடப்பட்டது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. வாஞ்சி புதுச்சேரி சென்று வ.வெ.சு.ஐயரைச் சந்தித்தது அறிந்து போலீஸ் ஐயரை மாட்டிவைக்க தன்னால் ஆனமட்டும் முயன்று பார்த்தது. அதற்குச் சாதகமாக எந்த சாட்சியும் கிடைக்கவில்லை, ஐயரின் மீது வழக்குப் போட முடியவில்லை.

தேசபக்த சிங்கங்கள் இதற்கு முன்பு பல தடவை முயன்றனர், சில வெற்றி பெற்றன, சில தோல்வியில் முடிந்தன. குதிராம் போஸ் முயன்றதில் இரு பெண்கள்தான் மாண்டனர். மதன்லால் திங்க்ரா யாரைக் கொல்ல திட்டமிட்டாரோ, அவர் தப்பிவிட, மற்றொரு குற்றவாளியான கர்சானைத் தாக்கியது. ஆனால் மணியாச்சியில் வாஞ்சிநாதன் வைத்த குறி தப்பவில்லை. இதனை வெறும் கொலையாகப் பார்ப்பதை விட ஒரு தேசபக்தன் நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கொள்வதுதான் சரியாக இருக்கும். காரணம், அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பெனியின் பானர்மன் எனும் ஆங்கில தளபதி வீரபாண்டிய கட்டபொம்மனைக் கயத்தாற்றில் தூக்கிலிட்டான். நூறு ஆண்டுகள் கழித்து அதே நெல்லை மண்ணில் வீரவாஞ்சி அதற்குப் பழிவாங்கிவிட்டான் என்றுதான் கொள்ள வேண்டும்.

வாஞ்சிநாதன் இந்தச் செயலைச் செய்த மணியாச்சி ரயில் நிலையத்துக்கு அவன் பெயரை வைக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் உறுப்பினர் குமரி அனந்தன் அவர்கள் பாடுபட்டு, இறுதியில் மணியாச்சி என்ற பெயரோடு வாஞ்சியின் பெயரையும் சேர்த்திடச் செய்தமைக்கு அவருக்கு தேசபக்தர்கள் நன்றிக்கடன் பட்டவர்களாகிறார்கள். வாழ்க வீர வாஞ்சியின் புகழ்!

Monday, August 2, 2010

தியாகசீலர் ந.சோமையாஜுலு

தியாகசீலர் ந.சோமையாஜுலு
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தான் முதன்முதலாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர்முழக்கத்தை எழுப்பியது. இங்கு ஏராளமான தேசத் தொண்டர்கள் உருவாகியிருக்கிறார்கள். முதன்முதலாக ஆங்கிலப் படைகளைப் போர்க்களத்தில் சந்தித்து மரண தண்டனைக்கு உள்ளான கட்டபொம்மு நாயக்கர், சுதேசிக் கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, இந்தியரைப் புல்லிலும் கேவலமாகக் கருதிய கலெக்டர் ஆஷ் என்பவனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீரவாஞ்சி, இவர்கள் வாழ்ந்த பூமி இது. இங்குதான் தியாகசீலர் ந.சோமையாஜுலு பிறந்தார்.

திருச்செந்தூர் அருகிலுள்ள ஆத்தூர் எனுமிடத்தில் 1902 டிசம்பர் 28ஆம் தேதி சோமசுந்தர ஐயர் சீதையம்மாள் தம்பதியருக்குப் பிறந்த குழந்தைதான் நரசிம்ம சோமையாஜுலு. இவரது இளமைக்காலக் கல்வி தூத்துக்குடியில்தான் நடந்தது. இளம் வயதில் விளையாட்டுகளிலும், உடற்பயிற்சியிலும் ஆர்வம் நிறைந்தவராக இருந்தார். அவர் மாணவராக இருந்த காலத்தில் வ.உ.சியின் தேசிய இயக்கப் போராட்டங்கள் இவர் மனதில் கிளர்ச்சியையும், உறுதியையும் ஏற்படுத்தின. அந்தக் காலத்தில் காவல்துறையினர் செய்த அத்து மீறல்கள், அக்கிரமங்கள் இவர் மனதில் புயலை எழுப்பின. ஓரளவு விவரம் புரிந்த வயதில் இவர் வ.உ.சியையும், சாது கணபதி என்ற வழக்கறிஞரையும் சந்தித்திருக்கிறார். இவரது கல்லூரி பருவத்தில் இவரது தேசியப் போராட்டத்தின் தாக்கம் அதிகமாகியது. வ.உ.சி.யே இவரது ஆதர்ச தலைவராக விளங்கினார். அவரது துணிச்சலும், நேர்மையும், கொண்ட காரியத்தில் விடாமுயற்சியும் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம்.

மகாகவியின் இறப்புக்கு முன்பு சோமையாஜுலு அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறார். அவர் பாடல்களைப் பாடும் போது கேட்டிருக்கிறார். இவையனைத்தும் திருநெல்வேலிக்கு பாரதி வந்த போது நடந்தது. இவர் முதன்முதலாக கலந்து கொண்ட தேசியப் போராட்டம் 1920இல் நடத்திய ஒத்துழையாமை இயக்கம். அது முதல் இவர் பல காங்கிரஸ் மாநாடுகளுக்குச் சென்று வரலானார். பல பெரிய தலைவர்களின் உரைகளைக் கேட்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. அதோடு இவர் ஆசிரியர் பணியிலும் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார்.

1924இல் திருவண்ணாமலையில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குப் பல தொண்டர்களைத் திரட்டி அனைவரும் மதுரையிலிருந்து நடந்தே திருவண்ணாமலை சென்றடைந்தனர். வழிநடையின் போது அவர்களுக்குச் சிரமம் தெரியாமல் இருப்பதற்கு பாரதியின் பாடல்கள் பயன்பட்டன. இப்போது கேரளத்தில் இருக்கும் வைக்கம் நகரில் நிலவிய தீண்டாமையை எதிர்த்து மதுரக் ஜார்ஜ் ஜோசப் தலைமையில் பலரும் சென்று கலந்து கொண்டனர். அப்போது சங்கரன்கோயிலில் இருந்த சோமையாஜுலுவும் தொண்டர்கள் புடைசூழ வைக்கம் செல்லப் புறப்பட்டபோது, போராட்டம் முடிவடைந்துவிட்டது என்று செய்தி வரவே பயணத்தை நிறுத்திக் கொண்டார்.

வ.உ.சியின் வலது கரம் போல செயல்பட்ட சுப்பிரமணிய சிவா, வ.உ.சியுடன் சிறை சென்றவர். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்கப் பாடுபட்டவர். அவரோடு சோமையாஜுலுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிவாவைத் தனது குருவாக பாவித்தார் சோமையாஜுலு. அப்போது நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயர் ஒரு ஆசிரமம் நிறுவினார். அதுமுதல் சோமையாஜுலுவுக்கு வ.வெ.சு.ஐயரின் நட்பும் கிடைத்தது.

1924இல் பம்பாய் மாகாணம் பெல்காம் நகரில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்காக மதுரையிலிருந்து பெல்காம் வரையிலான 1100 கி.மீ தூரத்தை பல தொண்டர்களைக் கூட்டிக் கொண்டு சோமையாஜுலு கால்நடையாகவே புறப்பட்டுப் பாதயாத்திரை சென்றார். மாநாடு முடிந்து திரும்பும் போதும் நடந்தேதான் திரும்பி வந்தனர். 1927இல் நாகபுரி வேளேந்தும் போராட்டத்தையொட்டி மதுரையில் சோமையாஜுலு பல காங்கிரஸ் தொண்டர்களுடன் வாள் ஏந்தி ஊர்வலம் சென்றனர். அடுத்து கர்னல் நீலன் சிலை அகற்றும் போராட்டத்திலும் இவர் தீவிரமாகப் பங்கு கொண்டார். 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போரின்போது இந்தியச் சிப்பாய்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் புரட்சி செய்து பல மாதங்கள் வடமாநிலங்களைத் தங்கள் வசம் வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அடக்கும் விதமாக கர்னல் நீல் சென்னையிலிருந்து அனுப்பப்பட்டான். அவன் கல்கத்தா சென்று ஆங்கிலப் படையுடன் சென்று வழிநெடுக அப்பாவி மக்களைப் பெண்கள், குழந்தைகள் உடபட பலரைக் கொன்று இந்தியச் சிப்பாய்களை அடக்கிக் கொடுமை புரிந்தவன். அவனுக்குச் சென்னையில் சிலை வைத்திருந்தார்கள். அந்தச் சிலையை அகற்ற ஓர் போராட்டம் நடந்தது. எனினும் 1937இல் ராஜாஜி அமைச்சரவை அமைந்ததும் முதல் வேலையாக அந்த நீலன் சிலை அகற்றப்பட்டு அருங்காட்சியகத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டது. எதிர்த்த ஆங்கில ஆதரவாளர்களுக்கு ராஜாஜி சொன்ன பதில், அதி எங்கள் சிலை, அதனை எங்கு வேண்டுமானாலும் வைப்போம் என்பதுதான்.

1930இல் மகாத்மா காந்தி நடத்திய தண்டி உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை அடுத்து சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் திருச்சி முதல் வேதாரண்யம் முதல் 15 நாட்கள் யாத்திரை செய்து உப்பு அள்ளிய நிகழ்ச்சி நடந்தது. இந்தப் போராட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் தொண்டர்களைச் சேர்க்கும் பணியும் மதுரையில் நடந்தது. அதில் ந.சோமையாஜுலுவின் முயற்சியால் முப்பதுக்கும் மேற்பட்ட தொண்டர்களை மதுரை அனுப்பியது. இந்தப் போராட்டத்தின் பொதுஜன தொடர்பு வேலையை சோமையாஜுலு ஏற்றுக் கொண்டார்.

இவர் கோவில்பட்டியில் பேசிய ஒரு பொதுக்கூட்டச் சொற்பொழிவிற்காக ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டு ஆறுமாத கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்த வழக்கு நடந்த காலத்திலேயே இவர் மீது மேலும் பல வழக்குகள் போடப்பட்டன. ஆறுமாத தண்டனை முடிந்து வெளியே வரும்போது மறுபடி கைதுசெய்யப்பட்டு மறுபடி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது இவருக்கு.

மதுரையில் சட்டமறுப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தபோது போலீசின் கடுமையான தடியடிக்கு ஆளானார் இவர். இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் இவருக்கு. கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு இவர் மீண்டும் தடியடிக்கு ஆளானார். 1932இல் இவருக்கு பத்து மாதம் சிறை தண்டனை கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரி எண்ணங்கொண்ட தலைவர்கள் கூடி 1937இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி எனும் அமைப்பை ஏற்படுத்தினர். அதில் இவர் இணைந்தார். 1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது இவர் யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் கைது செய்யப்பட்டார். 1940இல் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1942இல் காங்கிரஸ் நடத்திய உச்ச கட்டப் போராட்டம். வெள்ளையனே வெளியேறு போராட்டம். இதிலும் இவர் கைது செய்யப்பட்டார், ஆனால் இவரது உடல்நிலை காரணமாக இடையில் விடுதலையானார். கல்கி அவர்கள் எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் கட்டத் தொடங்கியபோது அந்தக் குழுவில் செயலாளராக இருந்து உழைத்தவர் சோமையாஜுலு. இந்திய சுதந்திரத்துக்குப் பின் 1952இல் நடைபெற்ற முதல் சட்டசபை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து பெரும் வெற்றி பெற்றார். இவரைப் பற்றி மிக உயர்வாக எழுதியுள்ள பெரியோர்கள் இவரைச் "சொற்சோர்விலாத சோமையாஜுலு" என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் தியாகிகள் வரலாற்றைத் தொகுக்க குழுக்கள் அமைக்கப்பட்டன. அப்படி திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதி தியாகிகள் வரலாற்றினைத் தொகுத்து வெளியிட்டார் நா.சோமையாஜுலு அவர்கள். 1972இல் சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தினைத் தொடங்கினார். தன் வாழ்நாள் முழுவதையும் இந்த நாட்டுக்காகச் செலவிட்ட தியாகி நா.சோமையாஜுலு அவர்கள் 1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீங்கி அமரரானார். வாழ்க நா.சோமையாஜுலு புகழ்!

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

ஓமந்தூர், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் திண்டிவனத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்திலுள்ள சின்னஞ்சிறு கிராமம். இந்த கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி முத்துராம ரெட்டி ரங்கநாயகி தம்பதியருக்கு ஓர் தவப்புதல்வன் பிறந்தான். அந்தக் குழந்தைதான் பின்னாளில் சென்னை மாகாண அரசியலில் பெருமைக்குரியவராக விளங்கிய ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆவார். அரசியலில் நாணயம், ஒழுக்கம், எளிமை, பொறுப்புணர்ச்சி, கடமை தவறாமை இப்படிப்பட்ட தவக்குணங்கள் பெற்று விளங்கியவர்கள் மிகச் சிலரே. அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவராகவும், பின்னாளில் காமராஜ் அவ்வளவு குணங்களையும் தன்னகத்தே எற்றுக் கொண்டவராக விளங்க அவருக்கு வழிகாட்டியாக விளங்கியவரும் இந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார் தான்.

இளம் வயதில் தந்தையை இழந்த ஓ.பி.ஆர் தன் கல்வியை மட்டும் விடாமல் தொடர்ந்தார். கற்பதில் ஆர்வமும், கற்றதை நடத்தையில் காட்ட ஊக்கமும் உடையவராக விளங்கினார் இவர். இலக்கணம் கற்றார், சமய, ஆன்மிக, நீதி நூல்களைக் கற்றார், இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழிகளையும் கசடறக் கற்றார். அவரது அறிவும் ஞானமும் விசாலமடைய அடைய அவர் சிந்தனையும் பரந்து விரிந்ததாக, 'சர்வோ ஜனஹ ஸுகினோ பவந்து' இவ்வுலக மாந்தரெல்லாம் நலமோங்கி வாழ்க எனும் மந்திரத்தைத் தனது வாழ்க்கையை வழிகாட்டும் தாரக மந்திரமாகக் கொண்டு விளங்கினார். ஊருக்குள் இவருக்கு நல்ல பெயர், போதாதற்கு இவர்தான் அவ்வூரின் மணியகாரர். மக்கள் இவருக்கு அளிக்கும் மரியாதைக்குக் கேட்க வேண்டுமா? உயர்ந்த பதவியில் அமர்ந்திருப்போர் நேர்மை, இரக்கம், தூய்மை இவற்றின் இருப்பிடமாக இருந்தால் கேட்க வேண்டுமா? இவரிடம் மக்கள் அன்பு மட்டுமல்ல, பக்தியே செலுத்தி வந்தார்கள்.

இவர் அடிப்படையில் ஒரு விவசாயி. தானே களத்தில் இறங்கி விவசாயம் பார்த்து, அதில் தேவையான முன்னேற்றங்களைச் செய்து அனுபவ விவசாயியாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கினார். திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமண மகரிஷியிடம் இவருக்கு ஈடுபாடு, பக்தி. தியாகி வெங்கம்பூர் சாஸ்த்திரி என்றொருவர். அவர்தான் ரெட்டியார் மனதில் தேசிய விதையை ஊன்றி, அதை நன்கு வளர்த்து விட்ட அரசியல் குரு. இவரது அயராத காங்கிரஸ் பணி, தன்னலமற்ற தொண்டு இவரை 1930ஆம் ஆண்டில் தென் ஆற்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஆக்கியது. இவர் தென் ஆற்காடு மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சுற்றுப் பயணம் செய்து நாட்டின் அரசியல் நிலமையை மக்களுக்கு விளக்கி, கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

காந்தி ஆசிரமம் ஒன்றை சிறுவந்தாடு எனும் கிராமத்தில் தொடங்கி நடத்தினார். தென் ஆற்காடு மாவட்டத்தில் 1927 தொடங்கி 1934 வரையிலான காலகட்டத்தில் பல காங்கிரஸ் மகாநாடுகளைக் கூட்டி மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். ஒரு காலத்தில் தென் ஆற்காடு மாவட்டம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் தலமை அகமாகத் திகழ்ந்தது. புகழ்பெற்ற ராபர்ட் கிளைவ் கிழக்கிந்திய கம்பெனி கவர்னராக இருந்த இடம் கடலூர்தான். இங்குள்ள ஒரு மைதானத்தில் எந்தவொரு நிகழ்ச்சியையும் பொதுமக்கள் நடத்தத் தடை இருந்தது. அந்தத் தடையை எதிர்த்து ஓமந்தூரார் அங்கு ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அதிகார வர்க்கம் செய்வதறியாது விழித்தது. ஓமந்தூரரின் புகழ் பெருகியது. கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அம்மாவட்டத்தின் காங்கிரஸ் இயக்கம் வேகமாக வளரத் தொடங்கியது.

1920இல் நாகபுரியில் சேலம் விஜயராகவாச்சாரியார் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதற்குச் சென்று வந்த ஓ.பி.ஆர். தென் ஆற்காடு மாவட்ட அரசியல் மாநாட்டைக் கூட்டினார். இதில் பண்டித அசலாம்பிகை அம்மையார், 'தி ஹிந்து' ரங்கசாமி ஐயங்கார், காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கிருஷ்ணசாமி சர்மா வ.உ.சி. தண்டிக்கப்பட்டபோது கரூரில் அந்த தண்டனை தீர்ப்பை எதிர்த்து பேசிய பேச்சுக்காக சிறை தண்டனை பெற்றவர்.

1933இல் பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களை அழைத்து மாவட்ட மாநாட்டை நடத்தினார். 1930இல் ராஜாஜி தலைமையில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்திற்குத் தொண்டர்களை அனுப்பிய குற்றத்துக்காக இவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஆறு மாத சிறை தண்டனை கிடைத்தது. அதுதான் அவரது முதல் சிறை வாசம்.

அதற்கு அடுத்த ஆண்டே, மகாத்மா காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டு இரண்டாம் முறையாக ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு இவர் ஊரின் ஓரத்தில் ஒரு ஓலைக் குடிசை அமைத்து அதில் வசிக்கலானார். அரசியலும் ஆன்மீகமும் அவருக்கு உறுதுணையாக இருந்ததால் பலரும் இவரைத் தேடி அங்கு வரலாயினர். அந்தக் காலத்தில் தென் ஆற்காடும், செங்கல்பட்டும் இணைந்தது ஒரு பாராளுமன்றத் தொகுதி. இங்கு எம். பக்தவத்சலத்தின் மாமனாரும் பிரபல காங்கிரஸ் தலைவருமான முத்துரங்க முதலியார் காங்கிரஸ் சார்பிலும், கேசவன் எனும் ஜஸ்டிஸ் கட்சிக்காரரும் இங்கு போட்டியிட்டனர். இதில் முத்துரங்க முதலியார் வென்றார்.

1936 தேர்தலில் இம்மாவட்டத்தில் பல இடங்களிலும் கடுமையான போட்டி காங்கிரசுக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்கும். இதில் ஓ.பி.ஆர். முனைந்து ஈடுபட்டு காங்கிரஸ் சார்பில் ந.சோமையாஜுலு, பசும்பொன் தேவர், ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி ஆகியோரை அழைத்து கூட்டங்கள் நடத்தி காங்கிரசை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் பயனாக அகில இந்தியாவும் ஓ.பி.ஆரை. கவனிக்கத் தொடங்கியது. யார் இந்த சாதனையாளர் என்று. ஓ.பி.ஆரின் பெயர் தமிழகமெங்கும் பரவியது.

1938இல் இவர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரானார். இவரது புரட்சிகரமான போக்கும், முற்போக்குச் சிந்தனைகளும் இவருக்கு கட்சியிலும் சரி, உறவிலும் சரி எதிர்ப்புகள் அதிகம் ஏற்பட்டன. எந்த கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாத, ஊழலற்ற, நேர்மையான இவரைப் போன்ற அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்புகள் ஏற்படுவது சகஜம்தான். என்ன செய்வது? புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டுமென்பதற்காகவும் இவர் பாடுபடலானார். இவரை ஆதரித்துப் பல தலைவர்கள் அன்று அந்த போராட்டத்தைத் தொடங்கி நடத்தி வந்தனர்.

1942 ஆகஸ்ட் 8, பம்பாயில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு" எனும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போரில் ஒன்று செய், அல்லது செத்து மடி எனும் வேத வாக்கியத்தை மகாத்மா தொண்டர்களுக்கு வழங்கினார். அன்று இரவே அங்கு வந்திருந்த அத்தனை தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஓமந்தூராரும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு 18 மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். இது இவரது நான்காவது சிறை வாசம்.

இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக சென்னை மாகாண பிரதமர் என்ற முறையில் கொடியேற்றும் உரிமை ஓமந்தூராருக்குக் கிடைத்தது. சென்னை கவர்னராக இருந்த சர் ஆர்ச்பால்டு நை முதலானோர் இந்த வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தென் ஆற்காடு மாவட்ட கிராமவாசி ஒருவர் தன் தியாகத்தாலும், உழைப்பாலும் சென்னை மாகாண முதல்வராக பதவி ஏற்றது அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது. இவருக்குப் பிறகு குமாரசாமி ராஜாவும், அதன் பின்னால் இந்திய குடியரசு ஆனபிற்பாடு 1952இல் ராஜாஜியும் 1954இல் காமராஜ் அவர்களும் அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தப் பதவியில் அமர்ந்தாலும், ஓமந்தூராரின் நினைவு நேர்மை, சத்தியம், ஒழுக்கம் இவற்றோடு இணைந்தே மனதில் நிற்கிறது. வாழ்க ஓமந்தூரார் புகழ்!

Sunday, August 1, 2010

ப. ஜீவானந்தம்


ப. ஜீவானந்தம்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

"ஜீவா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ப. ஜீவானந்தம் கம்யூனிச இயக்கத்தில் மிகவும் பிரபலமானவராகவும் அக்கட்சியின் அதிகார பூர்வ ஏடான "ஜனசக்தி" இதழ் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக இறங்கி பாடுபட்டதும், மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி.

கன்யாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் 21-8-1907இல் பட்டன் பிள்ளை உமையம்மை தம்பதியரின் மகனாகப் பிறந்தார் ஜீவா. இந்தச் சிறுவனுக்கு சொரிமுத்து என்றும் மூக்காண்டி என்றும் பெயர் . இவரே தனது பெயரை ஜீவானந்தம் என்று மாற்றி வைத்துக் கொண்டார். இளம் வயதில் மகாத்மா காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு காந்திய வழியில் அரசியல் சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இராமநாதபுரம் மாவட்டம் சிராவயம் எனும் கிராமத்தில் 1927இல் "காந்தி ஆசிரமம்" ஒன்றை இவர் நிறுவினார்.

1927இல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாடுதான் ஜீவா கலந்து கொண்ட காங்கிரஸ் மாநாடு. அரசியலில் காந்திஜியையும் சமூகப் பிரச்சினைகளில் பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களையும் பின்பற்றத் தொடங்கினார். அரசியல், சமூக மாற்றம் இவற்றோடு இலக்கியத் தாக்கமும் அவரிடம் இயற்கையாக வந்து சேர்ந்து கொண்டது. மகாகவி பாரதியின் பால் மிக்க ஈடுபாடு கொண்டு அவர் எழுதியுள்ள நூல்களும், கட்டுரைகளும் ஏராளம். கவி ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளில் மனம் ஈடுபட்டு அவற்றை அழகிய தமிழில் இவர் மொழிபெயர்த்துப் பாடுவதை நாள் முழுவதும் கூட கேட்டுக் கொண்டிருக்கலாம். குறிப்பாக தாகூரின் "கீதாஞ்சலி"யை இவர் தமிழாக்கம் செய்திருப்பதைப் போல வேறு யாரும் செய்திருப்பதாகத் தெரியவில்லை.

சிராவயலில் தான் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு காந்திஜி வரவேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க காந்திஜி வருகை புரிந்தார். அங்கு வந்து ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்த காந்திஜி ஜீவாவிடம், உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டாராம். அதற்கு ஜீவா இந்த தேசம்தான் எனது சொத்து என்று பதில் கூறினாராம். இந்தப் பதிலைக் கேட்டு வியந்துபோன காந்திஜி இல்லையில்லை நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து என்றாராம். இந்தச் செய்தி பலராலும் பிரபலமாகப் பேசப்பட்டு வந்த செய்தி.

மகாத்மா காந்தி விதவைகளின் மறுமணம் பற்றிக் கொண்டிருந்த கருத்தை மகாகவி பாரதியும் கண்டித்திருக்கிறார். காந்திஜி இன்னமும் இந்த விஷயத்தில் பிற்போக்கானவர் என்பது அவர் கருத்து. அதுபோலவே ஜீவாவும் சமூக சீர்திருத்தங்களில் காந்திஜி சற்று பிற்போக்கானவர், ஆனால் தேச சுதந்திரம், கதர்த் தொழில் ஆகியவை அவர் கொண்ட உயரிய சேவைகல் என்று கருதினார்.

1928இல் சைமன் கமிஷன் எதிர்ப்பு இயக்கத்திலும் அதனையொட்டி அந்தப் போரில் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் மறைவினால் மனம் பாதிக்கப்ப்ட்ட நிலையில் ஜீவா பல ஊர்களுக்கும் சென்று பொதுமக்களிடம் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களை விளக்கிப் பொதுக் கூட்டங்களில் பேசினார். 1928இல் பெரியகுளத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சிறிது நேரம் பேசினார். இந்த காலகட்டத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையோடும் ஜீவாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது.

சரி! காங்கிரஸில் இருந்து கொண்டு காந்திஜி, பெரியார் ஆகியோருடைய கொள்கைகளைப் பின்பற்றி வந்த ஜீவா பின் எப்போது கம்யூனிஸ்ட்டாக மாறினார்? இந்த கேள்வி எழுகிறது அல்லவா? ஆம். அதற்கொரு சரியான காரணம் இருக்கிறது. இந்திய சுதந்திரப் போர் ஒரு பக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருந்தது. மகாத்மா காந்தி போலவே நாட்டிலுள்ள அனைவரும் அமைதி, அகிம்சை, சத்தியாக்கிரகம் என்று இருப்பார்கள் என்று எண்ணியதோ என்னவோ பிரிட்டிஷ் அரசு. ஆனால் அவர்களது எண்ணங்களுக்கு மாறாக பல மாகாணங்களில் தொழிலாளர் இயக்கங்கள் உருவாகி, வளர்ந்து, பலம்பெறத் தொடங்கியது. தொழிலாளர் நலன் மட்டுமல்ல, நாட்டு நலனும் முக்கியம் என்று இவர்களது செயல்பாடு இருந்தது கண்டு வெள்ளையர் ஆட்சிக்குக் கிலி பிடித்தது. என்ன செய்வது? இந்த தொழிலாளர் தலைவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் தள்ளி இவர்கள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு எதிராகச் சதி செய்தார்கள் என்று குற்றம் சாட்டிச் சிறையில் தள்ளிவிட எண்ணியது.

அதற்காக வட மாநிலங்கள் மேற்கு வங்கம், பம்பாய், பஞ்சாப், ஐக்கியமாகாணம் போன்ற பகுதிகளில் இருந்த விவசாய, தொழிலாளர் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களைப் பிடித்து அவர்கள் மீது சதிவழக்கொன்றை ஜோடித்து விசாரணை என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தினர். இதற்கு "மீரத் சதிவழக்கு" என்று பெயர். கம்யூனிச இயக்கத்தின் மூத்த பிதாமகர் எஸ்.ஏ.டாங்கே போன்ற முன்னணித் தலைவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நின்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு 1933இல் வெளிவந்தது. குற்றவாளிகள் என கூண்டில் நிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் மிக விளக்கமாக அறிக்கைகளை வெளியிட்டார்கள். இதையெல்லாம் படித்த ஜீவாவுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுத் தனது எதிர்கால அரசியலை நிச்சயம் செய்து கொண்டார்.

ஜீவாவின் அனல் கக்கும் பேச்சைக் கண்டு பிரிட்டிஷ் அரசு, இவர் இனி எந்தக் கூட்டத்திலும் பேசக்கூடாது என்று தடை விதித்தனர். ஆனால் அந்தத் தடையை மீறி ஜீவா கோட்டையூரில் பேசினார். இது பெரிய குற்றம் அல்லவா, பிரிட்டிஷார் பார்வையில். இவர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து பிறகு திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். அவரது சிறைவாசமும், சிறையில் பகத் சிங்கின் கூட்டாளிகளோடு ஏற்பட்ட பரிச்சயமும், மார்க்சீய நூல்களைப் படித்ததன் பலனும் சேர்ந்து இவரை ஒரு முழு கம்யூனிஸ்ட்டாக மாற்றியது.

கம்யூனிசம் ஒரு புறம், சமூக சீர்திருத்தம் மறுபுறம் என்று இவர் இருமுனை வாளாகச் செயல்பட்டார். பகத் சிங்கின் நூலொன்றை இவர் தமிழில் மொழிபெயர்த்தமைக்காகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார் ஜீவா. அப்படிக் கைது செய்யப்பட்ட இவரை மிகவும் கொடிய பயங்கரவாதியாகச் சித்தரித்து கைவிலங்கிட்டு ஊர் ஊராக அழைத்துச் சென்று சிறையிலடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவரது செயல்பாடு இன்னும் வேகமாக வளரத் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியில் இருந்த இடதுசாரி கொள்கையுடையவர்கள் அனைவரும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்டனர். இவர்களது முதல் மகாநாடு சேலத்தில் நடந்தது. இதில் ஜீவா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு தொழிற்சங்க காங்கிரசின் தலைவராகவும் தேர்வானார் ஜீவா. 1938இல் வத்தலகுண்டில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநாட்டிலிருந்து அகில இந்திய காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் தேர்வாயினர். அவர்களில் ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோரோடு இவர்களைக் காட்டிலும் அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார் ஜீவா. அப்போதுதான் ராஜாஜிக்கு யார் இந்த ஜீவா என்ற கேள்வி பிறந்தது.

இவர் பல தொழிற்சங்கங்களுக்குத் தலைமை ஏற்றுப் பல போராட்டங்களை நடத்தினார். இவரது வளர்ச்சியைக் கண்டோ, அல்லது இவருக்குத் தொழிலாளர் மத்தியில் இருந்த செல்வாக்கு காரணமாகவோ, அல்லது இவரது போக்கு காங்கிரசுக்கு பாதகமாக இருக்குமென்றோ தெரியவில்லை காங்கிரஸ் கட்சி இவரை 1939 ஆகஸ்ட்டில் கட்சியை விட்டு நீக்கியது. உடனே ஜீவா தனது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்தார்.

அதன் பிறகு காங்கிரசிலோ, அல்லது காங்கிரஸ் சோஷலிஸ்ட் குழுவிலோ அங்கம் வகிக்காமல் ஜீவா முழுநேர கம்யூனிஸ்ட்டாகவே இருந்தார். 1940இல் இவரை சென்னை நகரை விட்டு வெளியேறும்படி வெள்ளையர் அரசாங்கம் உத்தரவிட்டது. அதனால் இவர் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காரைக்கால் பகுதிக்குச் சென்றார். அந்த அரசும் இவரை அங்கு தங்க சம்மதிக்கவில்லை. அங்கிருந்து பம்பாய் சென்ற ஜீவாவை அந்த மாகாண அரசு பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்து சிறையில் அடைத்து, பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றியது. 1942இல் விடுதலையான ஜீவா திருவாங்கூருக்கு அனுப்பப்பட்டார். அந்த சமஸ்தான அரசு இவரை சொந்த ஊரான பூதப்பாண்டியை விட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இவரால் சும்மாயிருக்க முடியுமா? தடையை மீறினார், கைது செய்யப்பட்டு சிறைவாசமும் ரூ.500 அபராதமும் கிடைத்தது.

அதிலிருந்து தொடர்ந்து ஜீவா தொழிலாளர் போராட்டங்களிலும், அரசியல் போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பாக 1946இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால் அது முதல் இந்திய சுதந்திரம் வரை தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். 1952 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அப்போது சென்னை மாகாணத்தில் அமைந்த அரசுக்கு ராஜாஜி முதலமைச்சர் ஆனார். அப்போது ஆளும்கட்சி வரிசையில் ராஜாஜியும், எதிர் வரிசையில் பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இருந்து வாதிட்டதைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்போது ராஜாஜி சொன்னார் கம்யூனிஸ்ட்டுகள்தான் எனது முதல் எதிரி என்று.

ஜீவாவின் அரசியல், சமூக சீர்திருத்தக் கொள்கை, தொழிற்சங்க பணிகள் இவற்றோடு இலக்கியத் துறையிலும் இவர் சிறந்து விளங்கினார். இவரது கணீரென்ற குரலில் இவர் தாகூரின் 'கீதாஞ்சலி'யை மொழிபெயர்த்த தமிழ்க் கவிதையை உரக்கப் பாடியதை நேரில் கேட்டு அனுபவித்த பேறு இந்தக் கட்டுரையை எழுதும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. தனது அந்திம காலத்தில் சென்னை தாம்பரத்தில் ஒரு குடிசையில் அவரும் அவரது மனைவியும் வாழ்ந்த காலத்தில், காமராஜ் முதலமைச்சராக ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற தாம்பரம் வந்தார். இங்குதான் ஜீவா இருக்கிறாராமே அவர் வீட்டுக்கு விடு என்று காரோட்டியைக் கேட்டுக் கொண்டார் காமராஜ். கார் ஒரு குடிசை வாயிலில் நின்றது. இறங்கி உள்ளே போனார் காமராஜ். அங்கு ஒரு கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர் ஜீவா. காமராஜ் மனம் கலங்கியது. சரி நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும் வாருங்கள் போகலாம் என்றார். சிறிது நேரம் ஆகுமே பரவாயில்லையா என்றார் ஜீவா. காமராஜ் காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஜீவா வரக்கணோம். என்னவென்று பார்த்தால் அவருக்கென்று இருந்த ஒரே வேட்டியை துவைத்து காயவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு இருவரும் சென்றார்கள்.

ஜீவா வசிக்க ஒரு அரசாங்க வீட்டை ஒதுக்க காமராஜ் ஜீவாவிடம் அனுமதி கேட்டார். அதை மறுத்துவிட்ட ஜீவா சொன்னார், இந்த நாட்டில் வீடு இல்லாத ஏழைகளுக்கு என்று இருக்க வீடு கிடைக்கிறதோ அன்று எனக்குக் கொடுத்தால் போதுமென்றார். அதன் பிறகு அவர் அதிக நாள் உயிரோடு இல்லை. இறக்கும் தருவாயில் ஜீவா சொன்ன செய்தி, காமராஜுக்குத் தகவல் சொல்லிவிடு என்பதுதான். இந்த நூற்றாண்டின் ஒரு அதிசய மனிதர், கொள்கைப் பிடிப்புள்ள மக்கள் தலைவன், சிறந்த இலக்கியவாதி மறைந்து போனார். ஆனாலும் அவர் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு ஆயிரமாயிரம் தொண்டர்கள் இன்றும் ஜீவாவின் பெயரை நினைவில் வைத்துக் கொண்டு மரியாதை செய்து வருகிறார்கள். வாழ்க ஜீவாவின் புகழ்!



"ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு"

(இந்தக் கட்டுரை "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலரில் பி.எம்.சோமசுந்தரம் எழுதி வெளியானது)

சுதந்திரப் பொன் விழாவை நாம் உற்சாகமாகக் கொண்டாடும் நேரத்தில் நமக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு நம் முன்னோர்கள் பட்ட பாட்டையும் அவர்கள் செய்த தியாகத்தையும் எழுதிட எந்த அகராதியிலும் வார்த்தைகள் இல்லை என்பதே உண்மை.

குடும்பத்தைத் துறந்து வெஞ்சிறையில் அடைபட்டு செங்குருதி சிந்தி தம் இனிய உயிரத் தந்து, நமக்கு வாங்கித் தந்த சுதந்திரம் இது. இந்த வேள்வியில் ஆஹூதியானோர் பல்லாயிரக் கணக்கில். அவர்களில் இந்தத் தலைமுறையினர் மறக்க முடியாதவர் மறக்கக்கூடாதவர் ஜீவா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் ப.ஜீவானந்தம்.

1927ஆம் ஆண்டு சிராவயல் கிராமத்தில் ஜீவா ஆரம்பித்த ஆசிரமத்திற்கு விஜயம் செய்தார் காந்தியடிகள். ஜீவாவைப் பார்த்து உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அவர் கேட்டார். 'இந்திய மக்கள்தான் என் சொத்து' என்று ஜீவா பதிலளித்தார். இந்த பதிலால் நெகிழ்ந்த காந்தியடிகள் 'இல்லை, நீங்கள்தான் இந்தியாவின் சொத்து' என ஜீவாவைப் பாராட்டினார்.

பதவிக்காகவும் சொந்தச் சூழ்நிலை காரணமாகவும் தங்களது கொள்கைகளையே தியாகம் செய்யும் தலைவர்களை இன்று பார்க்கிறோம். கொண்ட கொள்கையில் எந்தச் சூழ்நிலையிலும் லட்சியங்களைக் கைவிடாத கொள்கைக் கோமானகவே கடைசி வரை வாழ்ந்தவர் ஜீவா.

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது தந்தை பெரியாரின் இணையிலாத் தொண்டனாகவும் வலது கரமாகவும் இருந்தவர்.

குறைந்தது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பெரியாரிடம் கருத்து மாறுபட்டு பலர் பிரிந்து செல்வது வழக்கம். பிரிந்து செல்பவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். ஒரு சமயத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் திசை மாறுவதைக் கண்டார் ஜீவா. 1935இல் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மகாநாட்டில் பெரியாரின் முன்னிலையிலேயே அவரது கருத்தை போக்கை விமர்சனம் செய்து (தலைவரைத் தொண்டர்கள் விமர்சனம் செய்ய முடிந்த காலம் அது) விட்டு வெளியேறினார்.

ஆத்திகராக பொது வாழ்வை ஆரம்பித்தவர் ஜீவா. காங்கிரஸ் தொண்டராக சோஷலிஸ்டாக சுயமரியாதை வீரராக பொதுவுடமைக் கட்சியின் தொண்டர் தோழர் தலைவர் என்று பல நிலைகளில் பணியாற்றியவர். காந்திஜி, பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், ராய. சொ., கோவை அய்யாமுத்து போன்ற முன்னணித் தலைவர்களுடன் இணைந்து பாரதத்தின் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர். இன மத பேதமின்றி பல்வேறு கட்சிகளும் போராடிப் பெற்ற இந்தச் சுதந்திரத்தைக் காங்கிரஸ்காரர்கள் தங்கள் பிதுரார்ஜித சொத்தாக அனுபவிக்க நினைத்த போது அதைத் தன் கடைசி மூச்சு உள்ளவரை எதிர்த்தவர் ஜீவா.

பல தலைவர்களையும், கலைஞர்களையும் இந்த நாட்டுக்குத் தந்த நாஞ்சில் நாட்டில் பூதப்பாண்டி எனும் சிற்றூரில் ஏழ்மையான குடும்பத்தில் 21-8-1907ஆம் ஆண்டு பிறந்தவர் ஜீவானந்தம். பின்னாளில் இவர் ஜீவா எனப் பெயர் பெற்றாலும் இவரது பெற்றோர் பட்டம் பிள்ளை உமையாம்பாள் தம்பதியினர் இவருக்கு வைத்த பெயர் சொரிமுத்து.

சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் பேசும்போது கைது செய்யப்பட்டார். சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார். இது அவருக்கு முதல் சிறை அனுபவம். அன்று தொடங்கி 1942இல் தடுப்புக் காவல் சட்டப்படி மீண்டும் சிறை. நாடு கடத்தல் என்று அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம்.

ஜீவாவை அவரது தொண்டர்கள் "ஜீவா ஏறினா ரயிலு, இறங்கினா ஜெயிலு" என்று சொல்லும் அளவுக்குத் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போராட்டத்திலும் சிறையிலும் கழித்தார்.

பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இருந்த சமயம் மதுரையில் மாநாடு ஒன்றை மிகச் சிறப்பான முறையில் நடத்தினார். ஜீவா மாநாடு முடிந்த மறுநாள் சக தோழர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். பக்கத்தில் இருந்தவர்கள் 'மயக்கம்' தெளிவித்து எழுப்பினர். மயக்கம் ஏன் வந்தது என்று கேட்டனர். கையில் காசில்லாததால் ஜீவா இரண்டு நாள் பட்டினி என்பது அப்போது அவர்களுக்குத் தெரிந்தது. (பாருங்கள்! இவர் ஒரு அகில இந்திய கட்சியின் மாநிலத் தலைவர்) உடனே அவருக்கு உணவு கொடுத்தனர். அப்போது மாநாட்டுக்குப் பந்தல் போட்டவர் வந்து நின்றார். ஜீவா, தன் அரைக்கால் சட்டையிலிருந்து பணக்கத்தை ஒன்றை எடுத்து அவரிடம் தந்தார்.

இவ்வளவு பணம் இருக்கும்போது ஏன் பட்டினியாக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்டபோது வந்த பதில் "இது கட்சியின் பணம். நான் சாப்பிட அல்ல". இதுதான் மாசிலா மாணிக்கம் ஜீவா.

பாரத மக்களின் மனதில் சோஷலிசக் கருத்துக்களை ஊன்றியவர் நேரு என்றால், தமிழக மக்களின் மனதில் அதை ஆழ ஊன்றியவர் ஜீவா.

குடிசை வீட்டில் வாழ்ந்த ஜீவாவுக்கு அரசு சார்பில் வீடு கொடுக்க அப்போதைய முதலமைச்சர் காமராஜ் விரும்பினார். அவர் ஜீவாவிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்த போது, "எல்லோருக்கும் வீடு கொடிங்கள். அப்போது எனக்கும் ஒன்று கொடுங்கள், அதுதான் உண்மையான சோஷலிசம்" என்று அரசு வீட்டை மறுத்தவர் ஜீவா.

எந்த விஷயத்திலும் ஒரு உண்மையான அக்கறையுடனும், தீவிரமான பற்றுதலுடனும் ஈடுபடும் இயல்பு கொண்டவர் ஜீவா. தலைவராக இருந்த போதும் தன்னை ஒரு தொண்டனாக தோழனாக நினைப்பதில் பெருமை கொண்டவர்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.