Followers

Tuesday, July 6, 2010

மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி

மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

மதுரை நகரம் சுதந்திர வேள்விக்கு எண்ணற்ற தொண்டர்களைக் கொடுத்திருக்கிறது. மதுரை மாவட்டம் முழுவதுமாகப் பார்த்தால் நூற்றுக்கணக்கான தியாகிகள்; அவர்கள் அத்தனை பேருடைய வரலாற்றையும் பதிவு செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் நாட்டுச் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள். யாருடைய ரத்தத்திலும், வியர்வையிலும் நாம் இன்று சுதந்திரத்தின் பெருமையை அனுபவிக்கிறோமோ அத்தகைய தியாகிகளைத்தான் நாம் முதலில் வணங்கி வழிபட வேண்டும்.

மதுரை தந்த பல தியாகிகளில், சிலர் குடும்பம் முழுவதுமே தியாக வேள்வியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டக் குடும்பம்தான் தியாகி மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதியின் குடும்பமும். இவர் எம்.ஏ.,பி.எல்., படித்து வழக்கறிஞராக இருந்தவர். ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவுக்குச் சுதந்திரம் தந்துவிட வேண்டுமென்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட பின்பு, நமக்கென்று ஒரு அரசியல் சட்டம் இயற்ற வேண்டியிருந்தது அல்லவா? அந்த சபைக்கு அரசியல் நிர்ணய சபை என்று பெயர். நமது அரசியல் சட்டத்தை ஒவ்வொரு பிரிவாக விவாதித்து நிறைவேற்றிய பிறகு தான் நம் நாடு குடியரசாக பிரகடனப் படுத்தப்பட்டது. அந்த அரசியல் நிர்ணய சபையில் ஒரு உறுப்பினராக இருந்தவர் பெரியவர் எல்.கிருஷ்ணசாமி பாரதி அவர்கள். தமிழ்நாடு என்று நம் மாநிலத்துக்குப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பு இது சென்னை மாகாணம் என்று இருந்தது. இந்த மாநில சட்டமன்றத்திலும் இவர் உறுப்பினராக இருந்திருக்கிறார். அரசியல் களம் மட்டும் இவருக்குச் சொந்தமல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் மொழியிலும் சிறந்த அறிஞராக இவர் இருந்திருக்கிறார்.

மகாகவி பாரதியாருக்கு இவருடைய மாமனார் மிகவும் நெருக்கமான நண்பர். பெயர் உங்களுக்கெல்லாம் மிகவும் அறிமுகமான பெயர். ஆம்! நாவலர் சோமசுந்தர பாரதிதான் இவருடைய மாமனார். மாமனாரும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணியாற்றியிருக்கிறார். ஒரு சிறந்த தமிழ்க் குடும்பம் இவருடையது. மேடைப் பேச்சானாலும் சரி, நீதிமன்றத்தில் தனது கட்சியை எடுத்து வாதாடுவதிலும் கிருஷ்ணசாமி பாரதி தலைசிறந்து விளங்க்கினார். அதுமட்டுமல்ல, இவர் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர். நாட்டின் சுதந்திரத்துக்காக இவர் பலமுறை சிறை சென்றவர். தியாகத்தில் புடம்போட்டு எடுக்கப்பட்டவர் என்றாலே இவரது சிறப்பை விளங்கிக் கொள்ளலாம்.

திரு எல்.கிருஷ்ணசாமி பாரதி மட்டுமா நாட்டுக்காகத் தியாகம் செய்தவர். இல்லை. இவரது மனைவியும், நாவலர் சோமசுந்தர பாரதியின் மகளுமான திருமதி லட்சுமி பாரதியும் நாட்டுக்காகச் சிறை சென்றவர். நம் மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மிகச் சிறந்த தாய், மிகச் சிறந்த தேசபக்தர், பண்பும், அன்பும் நிரம்பப் பெற்றவர். ஒரு முக்கிய செய்தி, மகாத்மா காந்தியடிகள் இறந்த பின் அவருடைய அஸ்தி நாட்டின் பல இடங்களிலும் ஆறுகள், கடல் ஆகியவற்றில் கரைக்கப்பட்டது. அப்படி காந்தி மகானின் அஸ்தியை ராமேஸ்வரம் புனிதத் தலத்தில் கரைத்த பாக்கியம் பெற்றவர் திருமதி லட்சுமி பாரதி. இந்த செய்தியை அவரது புதல்வரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நாட்டுக்குழைத்த தியாகியும், தற்போது திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவருமான திரு கி.லட்சுமிகாந்தன் பாரதி அவர்களே சொன்ன செய்தி. இந்தச் செய்தியை அவர்களே சமீபத்தில்தான் தெரிந்து கொண்டாராம்.

திரு எல்.கிருஷ்ணசாமி பாரதி - திருமதி லட்சுமி பாரதி ஆகியோரின் புதல்வரும், முன்பு சொன்ன ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான திரு கி.லட்சுமிகாந்தன் பாரதியும் தனது பெற்றோர்களைப் போலவே, நாட்டுக்காக சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து பணிபுரிந்து சிறை சென்றவர். தியாகி. நாடு சுதந்திரம் அடைந்த பின் தனது கல்வியைத் தொடர்ந்து, மிகச் சிறப்பாகப் பயின்று ஐ.ஏ.எஸ். முடித்து பல மாவட்டங்க்களில் ஆட்சியராக இருந்திருக்கிறார். அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்ற சமயம், தனது சொந்த ஊரான காஞ்சீபுரம் சென்று, அவ்வூரின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி அம்மாவட்ட ஆட்சியரிடம் விவாதித்தார். அந்த ஆட்சியர் வேறு யாருமல்ல, நமது கி.லட்சுமிகாந்தன் பாரதிதான். சென்னை தலைமைச் செயலகத்திலும் ஒரு துறையின் செயலாளராக இருந்து அரும் பணியாற்றியவர். இப்போது நாம் முன்பே குறிப்பிட்டபடி, திருச்செங்கோட்டில் ராஜாஜியால் ஸ்தாபிக்கப்பட்ட காந்தி ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து மதுவிலக்கு, நூல் நூற்றல், பல கிராம கைத்தொழில்களை வளர்த்தல் போன்ற பல ஆக்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இவருக்கு உறுதுணையாக சிறந்த தேசபக்தரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான கோவை திரு ஏ.தேவராஜ் இருந்து வருகிறார். ஒரு குடும்பமே இந்த நாட்டுக்குச் செய்திருக்கும் தியாகத்துக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம். ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்களுடைய தியாகத்தை நினைவில் வைத்து வணங்கினாலே போதும். செய்வோமே! வாழ்க எல்.கிருஷ்ணசாமி பாரதி, லட்சுமி அம்மாள், கி.லட்சுமிகாந்தன் பாரதி புகழ்!

தன்னைப் பற்றி திரு லட்சுமிகாந்தன் பாரதி, I.A.S. எழுதியுள்ள கட்டுரை.
"தினமணி" சுதந்திர தின பொன்விழா மலரில் வெளிவந்தது.

(மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர் லட்சுமிகாந்தன் பாரதி. தாம் கைது செய்யப்பட்டு கை விலங்கிடப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயே, பிற்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, சாதனை படைத்தவர். அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இப்போது திருச்செங்கோட்டில் இருக்கும் ராஜாஜியால் தொடங்கப்பட்ட 'காந்தி ஆசிரமத்தின்' தலைவராக இருந்து சுற்றுப்புற கிராம மக்களுக்கு அரிய பல சேவைகளை செய்து வருகிறார். இவர் போன்ற தேசத் தொண்டர்களுக்கு வயதோ, உடல்நிலையோ ஒரு பொருட்டல்ல. தந்தை, தாய், இவரது சகோதரி, இவர் என்று குடும்பமே நாட்டுச் சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறைசென்ற தியாக வரலாறு இவருடையது.

தந்தை திரு எல்.கிருஷ்ணசாமி பாரதியைப் போலவே சுறுசுறுப்பாகப் பேசுபவராகவும், தேசபக்தியில் புடம் போட்ட தங்கமாகவும் காட்சி தரும் திரு லட்சுமிகாந்தன் பாரதி எழுதிய கட்டுரை இதோ:)

நாடு விடுதலை அடைந்த 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது விடுதலை இயக்கமும் 1942ல் நாடே கொதித்து எழுந்ததும் அப்பேரியக்கத்தில் 16 வயது மாணவனாக இருந்த நான் கலந்து கொண்ட நினைவுகளும் என் மனக்கண் முன் தோன்றுகின்றன.

1942 ஆகஸ்டு 9ல் மகாத்மா காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தபோது, நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாண்டு மாணவன். 16 வயது பூர்த்தியாகாத இளம் பருவம்.

மாணவர்களாகிய நாங்கள் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சி அளித்தோம். அன்று மாலை, காவல் துறையினரின் படுபயங்கரமான அடக்குமுறைகளையும் மீறி, நாங்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உணர்ச்சியே வடிவாகக் கல்லூரியிலிருந்து புறப்பட்டோம்.

எங்கும் தடியடி - துப்பாக்கிப் பிரயோகம், ஆனால் இவைகள் எல்லாம் எங்களுக்கு வெகு அற்பமாகத் தோன்றின. அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல், அந்த இரவு நாங்கள் செயல்பட்டது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

இதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் ரகசியக் கூட்டங்களை நடத்தியது "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசியக் கொடி ஏற்றியது, பெண் தியாகிகளை அவமானப்படுத்திய காவல் துறை அதிகாரியின் மீது திராவகம் ஊற்றியது, இப்படி அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன.

காவல் துறையின் தடியடிப் பிரயோகத்தில் எனக்கு அடுத்து நின்ற மாணவரின் மண்டை பிளந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் நான் அவரைத் தாங்கிப் பிடித்தேன். அப்படி அடிபட்ட அந்த மாணவர் கோவிந்தராஜந்தான் பிற்காலத்தில் சட்டப் பேரவை உறுப்பினரானார்.

என் சகோதரி மகாலட்சுமி சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து வந்தார். அவர் சிறை சென்ற செய்தி கிடைத்த மறுநாள், நான் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானேன். 6 மாதச் சிறை தண்டனை பெற்று அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு மாபெரும் தலைவர்களுடன் 6 மாதம் இருக்கும் பாக்கியம் கிடைத்தது.

நான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, பல்கலைக் கழகத்தில் நான் தொடர்ந்து படிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்து, பல்கலைக் கழகத்திலிருந்து என்னை நிரந்தரமாக நீக்கினார்கள். இதைப் பற்றிக் குறிப்பிட்டு, ராஜாஜிக்கு எனது தந்தை கிருஷ்ணசாமி பாரதி கடிதம் எழுதினார்.

உடனே, பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த ஏ.எல்.முதலியாருக்கு ராஜாஜி கடிதம் எழுதினார். இளம் வயது மாணவனின் எதிர்காலத்தைப் பாழடிக்கும் வகையில் இப்படிச் செய்தது சரியல்ல என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நான் சிறையிலிருந்து வந்ததும் படிப்பைத் தொடர அனுமதி கிடைத்தது.

எந்த மதுரையில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டேனோ, அதே மதுரையின் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பிற்காலத்தில் நான் பதவி ஏற்றேன். எனது கைமாறு கருதாத தேசபக்திக்குக் கிடைத்த பரிசாக அதை நான் எண்ணினேன்.

அதுமட்டும் அல்ல. 1967ல் காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா சிலை திறப்பு விழா நடைபெற்றது. அச்சிலையை ஏ.எல்.முதலியார் திறந்து வைத்தார். செங்கற்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த நான் விழாவுக்குத் தலைமை வகித்தேன்.

சிறையிலிருந்து வெளிவந்ததும் நான் படிப்பைத் தொடர அனுமதித்தபோது எனது பெற்றோர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும்படி ஏ.எல்.முதலியார் அறிவுரை கூறியிருந்தார். அதை அவ்விழாவில் நான் அவரிடம் நினைவு படுத்தினேன். அவர் என்னத் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார்.

இந்தியா ஒரு புண்ணிய பூமி. அதே நேரத்தில் இந்தியாவின் புண்ணிய பூமி அந்தமான் தீவுகள். ஆம்! விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் அடைக்கப்பட்ட கொடுஞ் சிறை அந்தமானில்தான் உள்ளது.

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பலர் அங்கேயே இறந்திருக்கிறார்கள். அங்கு அடைக்கப்பட்டவர்களில் பலருக்கு அடுத்த சிறைக் கொட்டடிகளில் யார் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தெரியாது. அவ்விதம் மற்ற கைதிகளைக் காணமுடியாதபடி அச்சிறை நட்சத்திர வடிவில் கட்டப்பட்டிருக்கும். கடுமையான தண்டனைகள், சித்திரவதைகளைச் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அங்கு அனுபவித்தனர்.

அத்தகைய அந்தமான் சிறைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆண்டுதோறும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். அச்சிறையில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனுபவித்த கொடுமைகளை விளக்க வேண்டும்.

இதுவரை இப்படிச் செய்து வந்திருந்தாலே, தற்போது நாட்டில் நிலவும் பிரிவினை வாதம், தீவிரவாதம், சாதி, மத மோதல்கள் போன்றவை தலை தூக்கியிருக்காது. தேசபக்தி இளைய சமுதாயத்தினரிடையே தழைத்து ஓங்கி இருக்கும்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.

1 comment:

  1. நாட்டுக்கு உழைத்த / உழைக்கும் நல்லக் குடும்பம் ஏனென்றால் அது பாரதியின் பெயரைத்தாங்கி நிற்கும் குடும்பம் இல்லையா? வாழ்க அவர்தம் புகழ்.
    நன்றி.

    ReplyDelete

Please give your comments here