Followers

Saturday, July 31, 2010

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்


பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயர் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலுள்ள ஊர்களில் கூட பிரபலமான பெயர். தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்த மகான். மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில் முதன்மையானவர் பசும்பொன் தேவர் அவர்கள். ராஜாஜி அவர்கள் தேவர் மீது அன்பும் பற்றும் கொண்டவர். நான் அர்ஜுனன் என்றால் தேவர்தான் சாரதி என்றார் அவர். மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் ஆலயப் பிரவேசம் மேற்கொண்ட போது பலத்த எதிர்ப்பு இருந்தது. அப்போது ராஜாஜி தேவர் அவர்களைத்தான் சத்தியாக்கிரகிகளுக்குத் துணையாக இருக்கப் பணித்தார். கதிரவனைக் கண்ட பனி போல எதிர்ப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. ஆலயப் பிரவேசம் மிக விமரிசையாக நடந்தது. தேசியமும் தெய்வீகமும் தேவர் கடைப்பிடித்த இரு கொள்கைப் பிடிப்புகள்.

அந்த நாளில் இராமநாதபுரம் மாவட்டத்துக்குட்பட்ட சில பகுதிகளில் ஜஸ்டிஸ் கட்சியினரின் அத்துமீறல்களைத் எதிர்த்து அங்கெல்லாம் தேசிய முழக்கங்களை எதிரொலிக்கச் செய்து "காங்கிரசைக் காத்தவர்" எனும் பாராட்டை தீரர் சத்தியமூர்த்தியிடம் பெற்றவர் தேவர்.

முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் நாள் பிறந்தார். தந்தை உக்கிரபாண்டித் தேவர், தாயார் இந்திராணி அம்மையார். இளம் வயதில் இவர் தாயை இழந்தார். தாயை இழந்த இந்தத் தனயனுக்கு ஒரு இஸ்லாமியப் பெண் தாய்ப்பால் ஊட்டி வளர்த்தார்.

1927ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் சென்னை சென்று வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான எஸ்.சீனிவாச ஐயங்காரைச் சந்தித்த பின் காங்கிரசில் சேர்ந்தார். அப்போது சென்னையில் டாக்டர் அன்சாரியின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அதன் பிறகு ஊர் திரும்பிய தேவர் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த தேவர் புகழ்பெற்ற தலைவர்கள் பலரை அழைத்து ராஜபாளையத்தில் விவசாயிகள் மாநாட்டினை நடத்தினார். ராஜாஜி 1937இல் சென்னை மாகாண முதல்வராகப் பொறுப்பு ஏற்றபின் ஆலயப் பிரவேசச் சட்டத்தைக் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்துள் அழைத்துச் செல்லும் பொறுப்பை மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயர் மேற்கொண்டார். அவருக்கு அங்கு பயங்கர எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை முறியடித்து அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார் தேவர்.

ராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தலில் இவர் முதுகுளத்தூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜில்லா போர்டு தலைவராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் பெயரை சிபாரிசு செய்ததும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்து பாடுபட்டார் தேவர். 1937இல் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பலம்பொருந்திய கட்சியாக விளங்கிய ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரசுக்கும் பலத்த போட்டி. ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம் ராஜா ஜஸ்டிஸ் கட்சி சார்பில் நின்றார். அவர் சமஸ்தானத்தில் மன்னருக்கு எதிராக யார் காங்கிரசில் போட்டியிட முடியும். அப்படி போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியுமா? அந்த நிலையில் தேவரை காங்கிரஸ் கட்சி அங்கு நிறுத்துகிறது. தேவரே வெற்றி பெற்றார்.

அப்போது சாத்தூர் தொகுதியில் காமராஜ் நின்றார். அந்தத் தேர்தலில் கடும் எதிர்ப்பு அமளிக்கு இடையே காமராஜை வெற்றி பெற வைத்தவர் தேவர் அவர்கள்தான். காங்கிரசில் அப்போது மகாத்மா காந்தியின் தலைமைக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் போட்டி நிலவியது. திரிபுரா காங்கிரசில் மகாத்மா காந்தி பட்டாபி சீத்தாராமையாவை தலைமைப் பதவிக்கு நிறுத்துகிறார். நேதாஜியை தீவிர தேசபக்தர்கள் ஆதரித்தனர். இந்தப் போட்டியில் தேவர் நேதாஜியை ஆதரிக்கிறார். நேதாஜி வெற்றி பெற்றதும் காந்திஜி பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று அறிவித்தார். காங்கிரசில் அப்போது இரு கோஷ்டிகளுக்கிடையே ஒற்றுமையில்லாமல் பிறகு நேதாஜி ராஜிநாமா செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரசிலிருந்து வெளியேறிய நேதாஜி பார்வர்டு பிளாக் எனும் கட்சியைத் தோற்றுவிக்கிறார். அதில் தேவர் அங்கம் வகித்தார்.

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தேவர் தீவிரவாத கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சொல்லி அவரை மதுரையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தடை விதித்தனர். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு அடிபணியக்கூடியவரா தேவர். தடையை மீறி சொந்த கிராமமான பசும்பொன்னுக்குச் செல்கிறார். வழியில் திருப்புவனத்தில் கைது செய்யப்பட்டு 18 மாத சிறை தண்டனை பெறுகிறார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் 1939 செப்டம்பர் மாதத்தில்

18 மாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தேவரை, சிறைச்சாலை வாயிலில் மறுபடியும் கைது செய்கிறார்கள். பாதுகாப்புச் சட்டத்தின் படி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, வேலூர், அலிப்புரம், ராஜமுந்திரி, அம்ரோட்டி ஆகிய சிறைகளில் இவர் அடைக்கப்பட்டிருந்தார். போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு தேவர் ஆறாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்தார்.

சுதந்திரம் பெறும் காலம் நெருங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. 1946இல் சட்டசபைக்குத் தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.பிரகாசம் முதல்வராகப் பதவியேற்றார். தேவரை தன்னுடைய அமைச்சரவியில் சேரும்படி பிரகாசம் அழைத்ததை தேவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரசின் ஒரு பிரிவாக செயல்பட்டு வந்த நேதாஜியின் பார்வர்டு பிளாக் கட்சி 1948ல் தனிக் கட்சியாக வெளியே வந்தது. அப்போதிலிருந்து தேவர் காங்கிரசில் இல்லை, பார்வர்டு பிளாக்கின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்த நிலையில் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து குடியரசாக 26-1-1950இல் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றது. தேவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் ஒரே நேரத்தில் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றி பெற்றுப் பின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

மதுரையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் போது அதில் பங்குகொண்ட ஒருவர் கொலையுண்ட வழக்கில் தேவர் கைதுசெய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் இருந்தார். அங்கு இவரது உடல்நலம் கெட்டது. அப்போது தென் மாவட்டங்களில் இருவேறு பிரிவினர்களுக்கிடையே கலவரம் மூண்டது. அப்போது காமராஜ் முதலமைச்சராக இருந்தார். மதுரையில் இவர் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சியே ஒரு நாடக பாணியில் அமைந்தது. விடியற்காலை எழுந்து மதுரையிலிருந்து புறப்பட்டு முதுகுளத்தூர் புறப்பட்டு வைகை நதிப் பாலத்தில் அவரது கார் வரும்போது பாலத்தின் நடுவில் போலீஸார் இவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்கிறார்கள். காரிலிருந்து கீழே இறங்கிய தேவர் முழங்காலுக்கும் கீழ் வரை தொங்கும் தனது பழுப்பு நிற கதர் ஜிப்பாவில் கைவிட்டதுதான் தாமதம் போலீஸ் அதிகாரிகள் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர் ஏதோ ஆயுதத்தை எடுக்கிறார் என்று. இவர் அவர்களை ஒதுக்கிவிட்டுத் தன் பையிலிருந்து பட்டினால் ஆன திருநீற்றுப் பையை எடுத்து அதிலிருந்து கைநிறைய திருநீற்றை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டு, ஊம் இப்போது போகலாம் என்றார்.

இவர் இப்போதைய மியன்மார் எனும் பர்மாவுக்குச் சென்று அங்கு வாழும் தமிழ் மக்களையெல்லாம் சந்தித்திருக்கிறார். அவர்கள் இவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அங்கு சென்ற பல இந்தியத் தலைவர்களில் இவருக்கு அளித்தது போன்ற வரவேற்பு வேறு யாருக்கும் அளிக்கப்பட்டதில்லையாம். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, உலகின் அத்தனை பகுதிகளிலும் தேவரின் புகழ் பரவிக் கிடந்தது.

1957இல் நடந்த பொதுத் தேர்தலிலும் இவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்றத் தொகுதி இரண்டிலும் போட்டியிடுகிறார். இரண்டிலும் மறுபடி வெற்றி. இந்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விடுகிறார். உடல்நலம் கெட்டுவிட்ட நிலையில் 1962ல் நாடாளுமன்றத்துக்கு மட்டும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆனாலும் இவர் டெல்லி சென்று பதவி ஏற்றுக் கொள்ளமுடியாதபடி உடல்நிலை கெட்டு விடுகிறது. தன்னுடைய நண்பர் திருச்சி டாக்டர் காளமேகம் அவர்களிடம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு வைத்தியம் செய்தும் முடியாமல் மதுரை சென்று விடுகிறார். அங்கு அவர் 30-10-1963இல் தனது 55ஆம் வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்து உயிர் துறந்தார். வாழ்க தீரர் முத்துராமலிங்கத் தேவரின் புகழ்!

ஐ. மாயாண்டி பாரதி

ஐ. மாயாண்டி பாரதி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

மதுரை நாட்டுக்களித்த தியாகசீலர்கள் அனேகரில் ஐ.மாயாண்டி பாரதி முக்கியமானவர். சுதந்திரப் போரில் மதுரையின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என்பதை என்றும் மறக்க முடியாது. அது போலவே சுதந்திரப் பொன்விழா ஆண்டில் மதுரை தியாகிகள் மலரை தியாகி ந.சோமையாஜுலு அவர்கள் மிகச் சிறப்பாக வெளிக் கொண்டுவந்திருக்கிறார். இதில் மிக நுணுக்கமாக அனைத்து தாலுகாக்களிலும் இருந்த தியாகிகள் பலரது வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். அவர்களில் ஐ.மாயாண்டி பாரதியின் வரலாறும் ஒன்று.

இவர் 1917ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையார் கு.இருளப்ப ஆசாரி. பின்னாளில் கம்யூனிச இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டைவர் பல்வேறு போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதன் முதலாக 1931இல் கள்ளுக்கடை மறியலில் இவர் தனது போராட்டக் களத்தை அமைத்துக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் 1932இல் சட்டமறுப்பு இயக்கத்தின் போது, போராட்டத்தைப் பற்றி விளக்கும் துண்டுப் பிரசுரங்களை இவர் விநியோகித்தார்; சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப் படுத்தினார். அது தவிர சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்கும் சுதந்திரச் சங்கு போன்ற பத்திரிகைகளை கூவிக் கூவி விற்றார். ராஜாஜி கொண்டு வந்த ஆலயப் பிரவேசச் சட்டத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்த ஆலயப் பிரவேசத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தார். 1935இல் ஜவஹர் வாலிபர் சங்கம் எனும் ஓர் இயக்கத்தைத் தொடங்கி இளைஞர்களை ஒன்று திரட்டி தேச சேவையில் ஈடுபடுத்தினார். வாசக சாலைகளை உருவாக்கி அங்கெல்லாம் மக்கள் சுதந்திரப் போர் செய்திகளைப் படிக்கும்படி வகை செய்தார்.

இவர் ஒரு எழுத்தாளர்; இலக்கியவாதி. திரு வி.கலியாணசுந்தரனார் நடத்திய "நவசக்தி" பத்திரிகையிலும், மகாகவி பாரதியாரின் சீடர் பரலி சு.நெல்லையப்பப் பிள்ளையின் "லோகோபகாரி"யிலும் இவர் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றினார். மேலும் பல சிறு பத்திரிகைகளிலும் எழுதி சுதந்திரத் தீயை எங்கும் பரப்பினார். இவரது எழுத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போர்க்குரல் உரக்க எழும். ஆட்சியாளர்களுக்கு இவரது எழுத்து சிம்ம சொப்பனமாக விளங்கியது.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் எம்.என்.ராயை மதுரைக்கு வரவழைத்து மாநாடு நடத்தி அதில் பெரிய தலைவர்களைப் பேச வைத்தார். 1940இல் இரண்டாம் உலக யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது யுத்த எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பிக் கைதானார். இதில் இவருக்குக் கிடைத்தது 7 மாத கடுங்காவல் தண்டனை. இந்திய பாதுகாப்புச் சட்டப்படி இவர் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைந்து கிடந்தார். வேலூர், தஞ்சாவூர், பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் இவரது சிறை வாழ்க்கைக் கழிந்தது. அடிப்படையில் பொதுவுடமை கருத்துக்களில் மனம் ஈடுபட்ட இவர் முழுநேர கம்யூனிஸ்டாக மாறினார்.

சிறையிலிருந்து விடுதலையான பிறகு வெளியே வந்து அப்போது கம்யூனிஸ்ட் கட்சி நடத்தி வந்த ஜீவாவை ஆசிரியராகக் கொண்ட "ஜனசக்தியில்" வேலைக்கு அமர்ந்தார். அதில் இவர் சுமார் 20 ஆண்டுகள் உதவி ஆசிரியராக இருந்து அனல் கக்கும் கம்யூனிச பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

1950இல் இவர் ஒரு சதிவழக்கொன்றில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றார். சுதந்திர இந்தியாவிலும் சிறைவாசம் அனுபவித்த ஒருசில தேசபக்தர்களில் ஐ.மாயாண்டி பாரதியும் ஒருவர். 1952இல் ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் அமைச்சரவை அமைந்தது. அப்போது 1953இல் மாயாண்டி பாரதி விடுதலை செய்யப்பட்டார். 1962இல் சீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு இந்தியாவில் கம்யூனிச இயக்கம் இரண்டாகப் பிளவு பட்டது. சீன ஆதரவு நிலை எடுத்த இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட் கட்சி) இவர் அங்கம் வகித்தார். அந்த கட்சி நடத்திய "தீக்கதிர்" எனும் பத்திரிகையில் உதவி ஆசிரியராக அமர்ந்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்து கொண்டே இவர், அனைத்துக் கட்சி சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் மாவட்டக் குழுவின் பொதுச்செயலாளராக இருந்தார். சமூக சிந்தனை, இலக்கியச் சிந்தனை, எழுத்தாற்றல் மிக்க சுதந்திரப் போர் வீரர் மாயாண்டி பாரதி. வாழ்க இவரது புகழ்!

Saturday, July 10, 2010

புதுச்சேரி வ. சுப்பையா

புதுச்சேரி வ. சுப்பையா
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

புதுச்சேரி இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பகுதி என்பது நமக்கெல்லாம் தெரியும். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போரின் போது சென்னை மாகாணத்தில் போலீஸ் அராஜகத்துக்குத் தப்பி மகாகவி பாரதி புதுச்சேரி சென்று தங்கியிருந்தது தெரியும். அதுதவிர ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளை, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் ஆகியோரும் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்திருந்தனர். அப்படி இந்திய சுதந்திரப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பூமி புதுச்சேரி. அதுவும் ஒரு அன்னியன் வசம் இருந்தது ஆம்! பிரெஞ்சுக் காரர்களின் வசம் இருந்தது. அதன் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு போராளிதான் வ.சுப்பையா. புதுச்சேரி மற்றும் இந்தியாவிலிருந்த புதுச்சேரி காலனிகள் சுதந்திரம் பெற வ.சுப்பையா செய்த தியாக வரலாற்றின் ஒரு சிறு துளியை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இவர் பிறந்தது 7-2-1911. இந்த காலகட்டத்தில் முதலில் குறிப்பிட்ட இந்திய சுதந்திரப் போர் வீரர்கள் பாரதி, வ.வெ.சு.ஐயர், அரவிந்தர் ஆகியோர் அப்போது அங்குதான் இருந்தார்கள். இவர் தனது 16ஆம் வயதில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்றார். அந்த மாநாட்டுக்கு டாக்டர் அன்சாரி தலைமை வகித்தார். சீனிவாச ஐயங்கார் ஏற்பாடுகளைச் செய்தார். அடுத்த மூன்றாண்டுகளுக்குப் பின்பு உப்பு சத்தியாக்கிரகத்திலும் இவர் பங்கு கொண்டார். அவ்வாண்டில் 'பிரெஞ்சு இந்திய வாலிபர் சங்கம்' எனும் அமைப்பித் தோற்றுவித்தார். ஒரு பக்கம் சமூக சீர்திருத்தம் இவர் கவனத்தைக் கவர்ந்தது, மறுபுறம் நாட்டு சுதந்திரம் இவருக்கு முக்கியமாகத் தெரிந்தது. எனவே இரு வேறு பாதைகளிலும் பயணிக்க வேண்டியிருந்தது.

இந்த வயதில் இவருக்கு ரஷ்ய புரட்சியும், லெனின் எழுதிய நூல்களும், சிங்காரவேலு செட்டியாரின் நூல்களும் இவருக்கு இடது சாரி எண்ணங்களைத் தோற்றுவித்தது. இவர் சென்னை செல்லும் சமயத்திலெல்லாம் அங்கு சங்கு சுப்பிரமணியம் நடத்திக் கொண்டிருந்த "சுதந்திரச் சங்கு" அலுவலகம் செல்வார். அங்கு இவருக்கு டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ச.து.சு.யோகியார், வ.ரா, பி.வரதராஜுலு நாயுடு போன்றவர்களின் அறிமுகம் கிடைத்தது. மகாத்மா காந்தியின் 1934 புதுச்சேரி விஜயம் இவரது ஆர்வத்தை மேலும் தூண்டியது. கம்யூனிஸ்ட் தலைவர் சுந்தரையாவின் அறிமுகம் இவருக்கு ஓர் புதிய வழியைக் காட்டியது.

புதுச்சேரி பிரெஞ்சு அரசாங்கம் தொழிலாளர்களின் சங்கங்களை அங்கீகரிக்கவில்லை. எனவே சுப்பையாவின் கவனம் அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காகத் தொழிற்சங்கங்களைத் தோற்றுவிப்பதில் சென்றது. இராப்பகலாக இவர் அந்த வேலையில் இறங்கி தொழிலாளர் இயக்கங்களைத் தோற்றுவித்தார். அந்தக் காலத்தில் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட தொழில் நேரமென்பது கிடையாது. இந்தக் கோரிக்கைகளை வைத்து இவர் ஒரு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். 84 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்தப் போராட்டம் பின்னர் 1935இல் ஓர் உடன்படிக்கை ஏற்பட்டு முடிவுக்கு வந்தது.

1936இல் நடந்த வேலை நிறுத்தத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி பல தொழிலாளர்களின் உயிர்களை பலி கொண்டனர். இந்தப் போராட்டத்தில் சுப்பையாவையும் சுட்டு விட ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அது இயலவில்லை.

சுப்பையாவுக்கு நேருஜியோடு நெருங்கிய தொடர்பு உண்டு. பிரான்சுக்குச் சென்று புதுச்சேரிப் பிரதேசத்தின் சுதந்திரம் பற்றி அவர்களோடு விவாதிக்க சுப்பையாவை நேருஜி அனுப்பினார். இவருக்கு நேருவைத் தவிர, தீரர் சத்தியமூர்த்தி, காமராஜ், ப.ஜீவானந்தம், சுந்தரையா ஆகியோரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

1954 நவம்பர் முதல் தேதி பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. இந்த வெற்றிக்குப் பின்னால் சுப்பையாவின் உழைப்பும் தியாகமும் இருந்தது. இந்தப் போராட்டத்திற்காக சுப்பையா நாடுகடத்தப்பட்டு புதுச்சேரி எல்லைக்குள் போகமுடியாத சூழ்நிலை இருந்தது. புதுச்சேரியின் சுதந்திர நாளன்று சுப்பையாவை ஒரு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உட்காரவைத்து லட்சக்கணக்கானவர்கள் வரவேற்றனர். 1955இல் அமைந்த புதிய புதுச்சேரி அரசில் வ.சுப்பையா எதிர்கட்சித் தலைவரானார். இருமுறை புதுச்சேரி அமைச்சரவையிலும் பங்கு பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான வ.சுப்பையா எதையும் தாங்கும் இதயம் கொண்டவராக இருந்தார். ஏற்றமும் இறக்கமும் அவருக்கு ஓர் பொருட்டல்ல. இவர் 1993 அக்டோபர் 12இல் காலமானார். வாழ்க புதுச்சேரி வ.சுப்பையா புகழ்!

ஜி.சுப்பிரமணிய ஐயர்

"தி ஹிந்து" பத்திரிகை ஸ்தாபகர் ஜி.சுப்பிரமணிய ஐயர்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

ஜி.சுப்பிரமணிய ஐயர் 'தி ஹிந்து' பத்திரிகையைத் தொடங்கியவர் என்பதோடு, மகாகவி பாரதியாரை மதுரையிலிருந்து அழைத்து வந்து தனது 'சுதேசமித்திரனில்' உதவி ஆசிரியராகச் சேர்த்து விட்டதன் மூலம் தமிழ் நாட்டுக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தவர். காங்கிரஸ் இயக்கத்தின் தொடக்க கால ஸ்தாபகர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கம் வளரவும், உள்நாட்டினர் சுதேசி செய்திகளை அறிந்து கொள்ளவும் பத்திரிகைகளைத் தொடங்கியவர். அகில இந்திய காங்கிரஸ் வரை தனது பெயரையும் புகழையும் ஸ்தாபனம் செய்தவர். பேச்சில் மட்டுமல்ல, தனது செயலிலும் சமூக சீர்திருத்தங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டிய மாபெரும் சமூகப் புரட்ச்சியாளர். இந்த பெருமைகளுக்கெல்லாம் உரியவரான ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றி இப்போது பார்ப்போம்.

இவர் தஞ்சாவூரை அடுத்த திருவையாற்றில் பாவாசாமி மடம் தெருவில், 1855ஆம் ஆண்டில் கணபதி ஐயர், தர்மாம்பாள் தம்பதியரின் தவப்புதல்வனாகப் பிறந்தார். கணபதி ஐயர் அவ்வூர் முன்சீப் கோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தவர். சுப்பிரமணிய ஐயருக்கு உடன்பிறந்தோர் அறுவர், ஒரு சகோதரி. இளம் வயதில் இவரது தந்தை காலமாகிவிட்டார். தனது ஆரம்பக் கல்வியைத் திருவையாற்றில் பயின்ற பின் தஞ்சாவூரில் மிஷினரி பள்ளியொன்றில் படித்து 1869இல் மெட்ரிக் தேறினார். பின்னர் அதே நிர்வாகம் நடத்திய கல்லூரியில் 1871இல் எஃப் ஏ எனும் இண்டர்மீடியட் தேறினார். சிறுவயதிலேயே மீனாட்சியம்மையை மணந்தார்.

சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றார். அப்போது அதற்கு நார்மல் ஸ்கூல் என்று பெயர். பிறகு இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் 1877இல் சேர்ந்தார். அங்கிருந்தபடியே பி.ஏ. தேறினார். திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளி அப்போது ஆங்கிலோ-வர்னாகுலர் பள்ளி என்றிருந்தது. அதன் தலைமை ஆசிரியராக ஆனார். 1888இல் இவரே ஒரு உயர்நிலைப் பள்ளியை ஸ்தாபித்தார்.

திருவல்லிக்கேணியில் அந்தக் காலத்தில் 'இலக்கியக் கழகம்' எனும் பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதில் பல பெரியவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் டி.டி.விஜயராகவாச்சாரியார், டி.டி.ரெங்காச்சாரியார், பி.வி.ரெங்காச்சாரியார், டி.கேசவராவ் பந்துலு ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த சமயம் 1878இல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஒரு இந்தியரை, சர்.டி.முத்துசாமி ஐயரை நீதிபதியாக ஆங்கில அரசு நியமித்தது. அப்போது ஆங்கிலேயர்களே நடத்தி வந்த 'தி மெயில்' போன்ற சில பத்திரிகைகள் இந்த நியமனத்துக்குப் பலத்த கண்டனம் தெரிவித்தன. தலையங்கங்களும் எழுதின. ஒரு கருப்பர் நீதிபதியாகிவிட்டால் இவர்கள் மற்றவர்களிடம் ஜாதிபாகுபாடு பார்ப்பதோடு பாரபட்சமாகவும் நடந்து கொள்வர் என்றெல்லாம் எழுதின. இதைக் கண்டு கொதித்துப் போன இலக்கியக் கழக உறுப்பினர் அறுவரும் தங்களிடமிருந்த ஒன்றே முக்கால் ரூபாய் பணத்தில் ஒரு பத்திரிகையைத் தொடங்கி முதலில் 80 பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டனர். இப்படித்தான் முதன்முதலில் 'தி ஹிந்து' பத்திரிகை 1878 செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாயிற்று. ஆங்கில ஏகாதிபத்தியத்தின் பொய்ப் பிரச்சாரங்களை இந்த சுதேசி பத்திரிகை முறியடிக்கத் தொடங்கியது.

இந்த பத்திரிகை முதலில் வாரம் இருமுறை, மும்முறை என்றெல்லாம் வெளியாகி பின்னர் தினசரியாக மாறியது. 1898இல் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் பத்திரிகையிலிருந்து விலகிக் கொண்டார், உரிமை விஜயராகவாச்சாரியரிடம் போயிற்று. பிறகு கஸ்தூரி ஐயங்கார் வசம் ஆனது. ஜி.எஸ். ஹிந்துவில் இருபது ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அப்போது சென்னை மகாஜனசபை எனும் அமப்பு உதயமானது. 1883இல் ரிப்பன் பிரபு ஸ்தலஸ்தாபன சுயாட்சி திட்டத்தை அறிமுகம் செய்தார். இன்றைய கார்ப்பரேஷன், முனிசிபாலிடி, பஞ்சாயத்து போர்டு போன்றவற்றுக்கு மூல காரணம் இந்த திட்டம்தான். சென்னை மகாஜனசபையின் ஆண்டுக் கூட்டம் 1884இல் நடந்தபோது மக்களின் கருத்துக்களை ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்க ஓர் அமைப்பு தேவை என உணர்ந்தது. அதன் விளைவு பம்பாயில் அதற்கு அடுத்த ஆண்டு காங்கிரஸ் மகாசபை தோற்றுவிக்கப்பட்டது. ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவர் முயற்சியால் இது தோன்றியது. ஒரு ஆங்கிலேயருக்கு ஏன் இந்த முயற்சி என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? 1857இல் நடந்த முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு (சிப்பாய் கலகம்) இந்தியர்கல் விழித்துக் கொண்டுவிட்டார்கள், இனியும் அவர்களை கவனியாமல் விட்டால் ஆபத்து; ஆகையால் அவர்களையும் உள்ளே இழுத்துக் கொண்டு நிர்வாகம் செய்தால் தான் முடியும், மேலும் இந்தியர்களுக்குச் சில சலுகைகளையும் தர வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் எண்ணியதன் பலன் ஒரு ஆங்கிலேயர் காங்கிரசை நிறுவினார்.

முதன்முதலாக 1885இல் பம்பாயில் கூடிய காங்கிரஸ் மகாசபையின் முதல் மாநாட்டில் மொத்தம் கூடிய 72 பிரதிநிதிகளில் சென்னை மாகாண பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டும் 21 பிரதிநிதிகள். காங்கிரசின் தோற்றத்துக்குச் சென்னை எந்த அளவுக்குக் காரணமாக விளங்கியிருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் சான்று. இந்த 21 பிரதிநிதிகளில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் ஒருவர். அதுமட்டுமல்ல, இந்த முதல் காங்கிரசின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய பெருமை ஜி.சுப்பிரமணிய ஐயரையே சேரும். அப்போது அவருக்கு வயது முப்பது.

இந்தப் பெருமை குறித்து "காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்" எழுதிய மகாகவி பாரதியார் கூறுகிறார்:- "தமிழ்நாடு தவமுடையது. ஏனெனில் காங்கிரஸ் மகாசபையின் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றும் பெருமை தமிழ்நாட்டுத் தலைவராகிய "சுதேசமித்திரன்" ஜி.சுப்பிரமணிய ஐயருக்கே கிடைத்தது".

சரி! அந்த முதல் தீர்மானம் கூறுவது என்ன? ஜி.சுப்பிரமணிய ஐயர் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய உரையின் ஒரு பகுதி இது: "இன்று நாம் பேசும் பேறு பெற்றுள்ள நாள். என் முன்னே மரியாதைக்குரிய பெரியோர்கள் அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். இவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருக்கிறார்கள். இந்தியாவின் ஒரு பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்குத் தொடர்பு கொள்ள முடியாத இடத்திலிருந்தெல்லாம் பிரதிநிதிகள் வந்திருக்கிறார்கள். லாகூர், சிந்து, பம்பாய், கல்கத்தா, சென்னை முதலிய இடங்களிலிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள். இது தேசிய வாழ்க்கை நம் நாட்டில் தொடங்கி விட்டதை அறிவிக்கின்ற கூட்டம். மிக விரைவில் நாம் இங்கு ஒரு பெரியத் திருப்பத்தைக் காணப்போகிறோம் என்பதை அறிவிக்கின்ற கூட்டம். இது தொடக்கம்தான். இதுவரை வாழ்ந்தது போலன்றி இனி நாம், நம் நாடு, இந்திய தேசியம், தேசியத்தில் நாட்டம் என்ற உணர்வோடு பேசப்போகிறோம்."

இந்திய தேசியம் பற்றிய முதல் முழக்கம் 1885இல் பம்பாயில் நமது ஜி.சுப்பிரமணிய ஐயரால் முழங்கப்பட்டது என்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை தரக்கூடிய செய்தி. பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களுக்கு தேசிய உணர்வு தேவை என்று முழக்கமிட்டதுதான் பம்பாய் காங்கிரசின் முக்கிய விளைவு. எனவேதான் 'காங்கிரஸ்' எனப் பெயர் சூட்டப்பட்ட அந்த இயக்கத்துக்கு "தேசிய" எனும் பொருள்படக்கூடிய "நேஷனல்" என்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டனர். இந்திய அரசியலை பகுத்து ஆராய்வதற்காக "ராயல் விசாரணைக் கமிஷன்" நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்த முதல் தீர்மானத்தின் சாராம்சம். இந்த முதல் தீர்மானத்தை அடுத்து மொத்தம் எட்டு தீர்மானங்கள் நிறைவேறின. இந்த எட்டு தீர்மானங்களையும் முன்மொழிதல் அல்லது வழிமொழிதலைச் செய்தவர்கள் சென்னை மாகாணத்தவர்கள். அவர்கள்:- பி.அனந்தாச்சார்லு, நீதிபதி எஸ்.சுப்பிரமணிய ஐயர், மு.வீரராகவாச்சாரியார், டி.எஸ்.ஒயிட், பி.ரங்கய்ய நாயுடு, தஞ்சை எஸ்.ஏ.சுவாமிநாத ஐயர், எஸ்.வெங்கடசுப்பராயலு பந்துலு ஆகியோர். இவர்களில் ஒயிட் என்பார் ஆங்கிலோ இந்திய அசோசியேஷனின் தலைவர். இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 62 ஆண்டுகள் கழித்து இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், அதன் முதல் கூட்டத்தில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த ஜி.சுப்பிரமணிய ஐயரை நினைத்து நாம் பெருமைப் படலாம்.

காங்கிரசில் கோபாலகிருஷ்ண கோகலே ஒரு மிதவாதி. பாலகங்காதர திலகர் ஒரு தீவிரவாதி. (இங்கு பயங்கரவாதி என்று பொருள்கொள்ளக் கூடாது - காங்கிரஸ் கொள்கைகளில் புரட்சிகரமான எண்ணங்கொண்டவர் என்பது பொருள்). ஜி.எஸ். திலகரின் வழித்தோன்றல். 1908இல் ஜி.எஸ். சுதேசமித்திரனில் எழுதிய ஒரு கட்டுரைக்காகக் கைது செய்யப்பட்டார். இவர் 1882 லேயே சுதேசமித்திரனைத் தொடங்கி விட்டார். தமிழில் வெளிவந்த முதல் அரசியல் நாளிதழ் சுதேசமித்திரன் தான். அதன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் என்பது பெருமைக்குரிய விஷயம். இவர் ஒரு முறை மதுரைக்குச் சென்றிருந்த சமயம் அங்கு சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக தமிழாசிரியராக இருந்த பாரதியின் அறிவு கூர்மையையும், எழுதும் ஆற்றலையும் கண்டு அவரை சுதேசமித்திரனுக்கு அழைத்து வந்து உதவி ஆசிரியராக்கினார். நாட்டுக்கு ஒரு எழுத்தாளர், கவிஞர், நல்ல பத்திரிகை ஆசிரியர் கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர்.

ஜி.சுப்பிரமணிய ஐயர் தான் பேசும் பொதுக்கூட்டங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்ட பிறகு சிறு சிறு துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பார். அதற்காக இவர் தன்னுடன் ஒரு பெரிய பையையும் வைத்திருப்பார். அதில் அரசியல், சமூக சீர்திருத்தம், ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் போன்ற பல சிறு வெளியீடுகள் இருக்கும். அப்படி அவர் விநியோகம் செய்த ஒரு வெளியீடு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரைன் (Bryan) என்பவர் ஆற்றிய ஒரு உரையாகும். அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசிய ஒரு சொற்பொழிவு அது. அதனைத் தமிழில் மொழிபெயர்த்து ஜி.சுப்பிரமணிய ஐயர் வெளியிட்டார். அதைத்தான் அவர் எல்லா கூட்டங்களிலும் மக்களிடம் விநியோகித்தார். இது குறித்த புகார் ஒன்று சென்னை போலீஸ் கமிஷருக்குச் சென்றது. இந்த விவரங்கள் சென்னை போலீஸ் ஆவணங்களில் காணப்பட்டது.

இவருக்கு ஒரு மகள். அவர் இளம் வயதிலேயே விதவையானார். அந்த காலத்தில் எந்த வயதானாலும் அவர்கள் விதவைக் கோலம் பூண்டு வாழ்நாள் முழுவதும் உள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும். ஆனால் ஜி.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் தன் மகளுக்கு மறுமணம் செய்விக்க முயற்சிகள் எடுத்து பம்பாய் சென்று அங்கு அந்தப் பெண்ணுக்குத் திருமணமும் செய்து வைத்தார். வைதீகர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவர் அஞ்சாமல் செய்ததோடு, விதவைகள் மறுமணத்தை ஆதரித்து எழுதியும் வந்தார். பாரதியின் 'சந்திரிகையின் கதை' எனும் புதினத்தில் இந்த விவரங்கள் அனைத்தையும் சேர்த்திருப்பதைப் பார்க்கலாம்.

ஜி.எஸ். ஐயருக்கு தோலில் ஒரு வித நோய் ஏற்பட்டு மேலேயிருந்து நீர்வடியத் தொடங்கி அது மிகவும் மோசமான கட்டத்தை அடைந்தது. வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கியிருந்த இவரைப் பார்க்க மகாத்மா காந்திஜியே வந்து அவரது புண்களைத் தன் மேல் துண்டால் துடைத்து ஆறுதல் கூறிச் சென்றார். இவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு இவர் 1916ஆம் ஆண்டில் காலமானார். வாழ்க ஜி.சுப்பிரமணிய ஐயர் புகழ்!

கொடைக்கானல் எஸ்.பி.வி.அழகர்சாமி

கொடைக்கானல் எஸ்.பி.வி.அழகர்சாமி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

அமரர் சுப்பிரமணிய சிவா ஒரு சந்நியாசியைப் போல காவி உடை அணிந்து நாட்டுக்காகப் பாடுபட்டு வந்தவர். சிறையில் அவர் பட்ட கொடுமைகளின் காரணமாக தொழுநோய் தொற்றிக் கொள்ள வாழ்நாளெல்லாம் தொழுநோயோடு போராடி மரணமடைந்தவர். அப்படி அவர் வாழ்ந்த நாட்களில் அவருக்கு பல தொண்டர்கள் அமைந்தனர். அவர்களில் ஒருவர்தான் எஸ்.பி.வி.அழகர்சாமியும். குருநாதர் சிவாவிடம் அளவிடற்கரிய பக்தி கொண்டவர். இவரது மிக இளம் வயது முதற்கொண்டு நாட்டுக்காக உழைக்க உறுதி எடுத்துக் கொண்டார்.

வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதையில் பண்ணைக்காடு எனும் ஊர். இங்குதான் இவர் தனது மர வியாபாரத்தைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வந்தார். 1931இல் அவ்வூரில் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி மக்களுக்குப் பணியாற்றி வந்தார். இவரது கடுமையான உழைப்பாலும், திறமையாலும் காங்கிரஸ் கட்சியை வளர்த்தவர்களில் இவர் முதன்மையானவராகத் திகழ்ந்தார். கொடைக்கானல் தாலுகா காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராகவும் பின்னர் செயலாளராகவும் பணியாற்றினார். இவர் காலத்தில் அங்கு இவர் பல மகாநாடுகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் விவசாயப் பிரிவில் பணியாற்றி, விவசாயிகளுக்காக பாடுபட்டு அவர்களை காங்கிரசில் அங்கம் வகிக்கச் செய்தார்.

1937இல் ஒரு தேர்தல் நடைபெற்றது. அப்போதெல்லாம் கட்சிகளுக்குச் சின்னங்கள் கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் வாக்குப் பெட்டிகள். காங்கிரசுக்கு மஞ்சள் நிறப் பெட்டி. ஆகையால் 'மங்களகரமான மஞ்சள் பெட்டிக்கு வாக்களியுங்கள்' என்று வாக்குக் கேட்பார்கள். அழகர்சாமி கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களுக்கெல்லாம் சென்று, மக்களிடம் மஞ்சள் பெட்டிக்கு ஆதரவு திரட்டி காங்கிரசை வெற்றி பெறச் செய்தார்.

வத்தலகுண்டுவில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் மாநாட்டுக்காக இவர் மிகவும் பாடுபட்டார். மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு, கொடைக்கானல் பகுதியிலிருந்து காய்கறிகளைக் கொண்டு வந்து சேர்த்தார். அம்மாநாட்டில் இவரது பணியை தலைவர்கள் மிகவும் பாராட்டினார்கள்.

1941இல் தனிநபர் சத்தியாக்கிரகம் தொடங்கியது. இவர் கொடைக்கானல் பகுதியிலுள்ள எல்லா கிராமங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார். யுத்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார். அங்கெல்லாம் இவரைக் கைது செய்யவில்லை. எனவே இவர் கும்பகோணம் கிளம்பிச் சென்று அங்கு யுத்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்ப 1-3-1941இல் அங்கு கைது செய்யப்பட்டு திருச்சி சிறைக்குக் கொண்டு சென்று ஆறு நாட்கள் ரிமாண்டுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அங்கிருந்து கிளம்பி திருவையாறு சென்று அங்கு 12-3-1941இல் யுத்த எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து அதற்காக 15 நாட்கள் சிறை தண்டனை பெற்றார். விடுதலையாகி மறுபடியும் கும்பகோணம் சென்று 4-4-1941இல் அங்கு மறியல் செய்து கைதானார். இம்முறை தஞ்சாவூர் மாஜிஸ்டிரேட் இவருக்கு இரண்டு மாத தண்டனை விதித்தார். தண்டனைக்காலத்தை திருச்சி சிறையில் அனுபவித்தார்.

மறுபடியும் கொடைக்கானல் பகுதியில் இவரது நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டு ஜுலை 1941இல் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்றார். அதோடு அபராதமும் சிறையில் பி வகுப்பும் கொடுக்கப்பட்டது. அதுமுதல் இவர் காங்கிரஸ் கட்சியின் தீவிர தொண்டராக விளங்கி காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டாலும், இவர் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. தொண்டராகவே கடைசி வரை இருந்த தியாகி அழகர்சாமி. வாழ்க அழகர்சாமி புகழ்!

Tuesday, July 6, 2010

வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்

வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

அன்றைய மதுரை மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த வத்தலகுண்டு எனும் ஊரில் பிறந்தவர் தியாகி பி.எஸ்.சங்கரன். இவ்வூர் சுப்பிரமணிய சிவா எனும் மாபெரும் தியாகியை நாட்டுக்களித்த பெருமையுடைய ஊர். கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள ஊர். மேலே கொடைக்கானல், அருகில் பழனி என எங்கும் எழில் கொஞ்சும் இயற்கை அழகு கொண்ட ஊர். இவ்வூருக்கு மற்றொரு பெருமையும் உண்டு. தமிழில் மிகச் சிறந்த நாவலாசிரியராக உருவானவரும், சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவருமான எழுத்தாளர் பி.ஆர்.ராஜம் ஐயர் பிறந்த ஊர் இது. இதில் தியாகி சங்கரனுக்கு என்ன பெருமை என்கிறீர்களா? அவருக்கு இதில் பெருமை இருக்கிறது. ஏனென்றால், பிரபல எழுத்தாளர் பி.ஆர்.ராஜம் ஐயரின் மருமகன் தான் நாம் இப்போது பார்க்கப் போகும் தியாகி பி.எஸ்.சங்கரன்.

உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து மதுரை சென்று அங்கு அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்தார் சங்கரன். அப்போது, அதாவது 1928இல் பிரிட்டிஷ் அரசு இந்தியா அனுப்பி வைத்த சைமன் கமிஷனை எதிர்த்து நாடும் முழுவதும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த சைமன் கமிஷன் எதிர்ப்பில் பங்கு பெறுவதற்காக அரசியலில் குதித்துக் கல்லூரியை விட்டு வெளியேறினார். ஊர் திரும்பிய இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாகப் பங்காற்றத் தொடங்கினார்.

1930இல் மகாத்மா காந்தியடிகள் செய்த தண்டியாத்திரையைத் தொடர்ந்து தென்னாட்டில் ராஜாஜி வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கினார். அதில் பங்கேற்க தொண்டர்களைத் தேர்ந்தெடுக்க ராஜாஜி பல ஊர்களுக்கும் சென்றார். அப்படி தொண்டர்களாக மதுரை மாவட்டத்திலிருந்து இருபது பேருக்கும் மேல் சென்றனர். இதில் பல தொண்டர்களைத் தயார் செய்து அனுப்பிய பெருமை சங்கரனைச் சாரும். இவருடன் மட்டப்பாறை சிங்கம் எனப்போற்றப்பட்ட மட்டப்பாறை வெங்கட்டராமையரும் இணைந்து பாடுபட்டார்.

1932இல் நடந்த போராட்டத்தில் இவர் கைதாகி இரண்டாண்டு சிறை தண்டனை பெற்றார். சிறையிலிருந்து 1934இல் வெளிவந்த பிறகு மதுரை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கிராமம் கிராமமாகச் சென்று நாட்டுச் சுதந்திரத்துக்காக மக்களைத் தயார் செய்த ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தினார். அதே ஆண்டு காங்கிரஸ் இயக்கத்தின் மாநில மகாநாட்டை வத்தலகுண்டில் நடத்த முறற்சிகள் எடுத்து, பெரும் தலைவர்களான மட்டப்பாறை வெங்கட்டராமையர், அப்துல் காதர், அப்துல் அஜீஸ், ரங்கசாமிச் செட்டியார் போன்றவர்களுடன் சேர்ந்து அந்த மாநாட்டைச் சிறப்பாக ராஜாஜியின் தலைமையில் நடத்தினார்.

அதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே அதாவது 1937-38 ஆண்டில் இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டார். 1941இல் மகாத்மா காந்தி தனிநபர் சத்தியாக்கிரகத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதில் கலந்து கொண்டு சங்கரன் ஆறு மாத சிறை தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டார். இவரைக் கொண்டு போய் அலிப்புரம் சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இவர் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற நிலையில் இவர் விடுவிக்கப்பட்டார். ஊர் திரும்பிய இவரது நிலைமை மோசமடையவே மதுரை எர்ஸ்கின் (இப்போது ராஜாஜி) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயனின்றி இவர் 3-1-1942இல் காலமானார். வாழ்க தியாகி பி.எஸ்.சங்கரன் புகழ்!

மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி

மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்.

மதுரை நகரம் சுதந்திர வேள்விக்கு எண்ணற்ற தொண்டர்களைக் கொடுத்திருக்கிறது. மதுரை மாவட்டம் முழுவதுமாகப் பார்த்தால் நூற்றுக்கணக்கான தியாகிகள்; அவர்கள் அத்தனை பேருடைய வரலாற்றையும் பதிவு செய்து வைக்க வேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் நாட்டுச் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள். யாருடைய ரத்தத்திலும், வியர்வையிலும் நாம் இன்று சுதந்திரத்தின் பெருமையை அனுபவிக்கிறோமோ அத்தகைய தியாகிகளைத்தான் நாம் முதலில் வணங்கி வழிபட வேண்டும்.

மதுரை தந்த பல தியாகிகளில், சிலர் குடும்பம் முழுவதுமே தியாக வேள்வியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டக் குடும்பம்தான் தியாகி மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதியின் குடும்பமும். இவர் எம்.ஏ.,பி.எல்., படித்து வழக்கறிஞராக இருந்தவர். ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியாவுக்குச் சுதந்திரம் தந்துவிட வேண்டுமென்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட பின்பு, நமக்கென்று ஒரு அரசியல் சட்டம் இயற்ற வேண்டியிருந்தது அல்லவா? அந்த சபைக்கு அரசியல் நிர்ணய சபை என்று பெயர். நமது அரசியல் சட்டத்தை ஒவ்வொரு பிரிவாக விவாதித்து நிறைவேற்றிய பிறகு தான் நம் நாடு குடியரசாக பிரகடனப் படுத்தப்பட்டது. அந்த அரசியல் நிர்ணய சபையில் ஒரு உறுப்பினராக இருந்தவர் பெரியவர் எல்.கிருஷ்ணசாமி பாரதி அவர்கள். தமிழ்நாடு என்று நம் மாநிலத்துக்குப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பு இது சென்னை மாகாணம் என்று இருந்தது. இந்த மாநில சட்டமன்றத்திலும் இவர் உறுப்பினராக இருந்திருக்கிறார். அரசியல் களம் மட்டும் இவருக்குச் சொந்தமல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் மொழியிலும் சிறந்த அறிஞராக இவர் இருந்திருக்கிறார்.

மகாகவி பாரதியாருக்கு இவருடைய மாமனார் மிகவும் நெருக்கமான நண்பர். பெயர் உங்களுக்கெல்லாம் மிகவும் அறிமுகமான பெயர். ஆம்! நாவலர் சோமசுந்தர பாரதிதான் இவருடைய மாமனார். மாமனாரும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணியாற்றியிருக்கிறார். ஒரு சிறந்த தமிழ்க் குடும்பம் இவருடையது. மேடைப் பேச்சானாலும் சரி, நீதிமன்றத்தில் தனது கட்சியை எடுத்து வாதாடுவதிலும் கிருஷ்ணசாமி பாரதி தலைசிறந்து விளங்க்கினார். அதுமட்டுமல்ல, இவர் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர். நாட்டின் சுதந்திரத்துக்காக இவர் பலமுறை சிறை சென்றவர். தியாகத்தில் புடம்போட்டு எடுக்கப்பட்டவர் என்றாலே இவரது சிறப்பை விளங்கிக் கொள்ளலாம்.

திரு எல்.கிருஷ்ணசாமி பாரதி மட்டுமா நாட்டுக்காகத் தியாகம் செய்தவர். இல்லை. இவரது மனைவியும், நாவலர் சோமசுந்தர பாரதியின் மகளுமான திருமதி லட்சுமி பாரதியும் நாட்டுக்காகச் சிறை சென்றவர். நம் மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மிகச் சிறந்த தாய், மிகச் சிறந்த தேசபக்தர், பண்பும், அன்பும் நிரம்பப் பெற்றவர். ஒரு முக்கிய செய்தி, மகாத்மா காந்தியடிகள் இறந்த பின் அவருடைய அஸ்தி நாட்டின் பல இடங்களிலும் ஆறுகள், கடல் ஆகியவற்றில் கரைக்கப்பட்டது. அப்படி காந்தி மகானின் அஸ்தியை ராமேஸ்வரம் புனிதத் தலத்தில் கரைத்த பாக்கியம் பெற்றவர் திருமதி லட்சுமி பாரதி. இந்த செய்தியை அவரது புதல்வரும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், நாட்டுக்குழைத்த தியாகியும், தற்போது திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவருமான திரு கி.லட்சுமிகாந்தன் பாரதி அவர்களே சொன்ன செய்தி. இந்தச் செய்தியை அவர்களே சமீபத்தில்தான் தெரிந்து கொண்டாராம்.

திரு எல்.கிருஷ்ணசாமி பாரதி - திருமதி லட்சுமி பாரதி ஆகியோரின் புதல்வரும், முன்பு சொன்ன ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான திரு கி.லட்சுமிகாந்தன் பாரதியும் தனது பெற்றோர்களைப் போலவே, நாட்டுக்காக சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து பணிபுரிந்து சிறை சென்றவர். தியாகி. நாடு சுதந்திரம் அடைந்த பின் தனது கல்வியைத் தொடர்ந்து, மிகச் சிறப்பாகப் பயின்று ஐ.ஏ.எஸ். முடித்து பல மாவட்டங்க்களில் ஆட்சியராக இருந்திருக்கிறார். அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்ற சமயம், தனது சொந்த ஊரான காஞ்சீபுரம் சென்று, அவ்வூரின் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி அம்மாவட்ட ஆட்சியரிடம் விவாதித்தார். அந்த ஆட்சியர் வேறு யாருமல்ல, நமது கி.லட்சுமிகாந்தன் பாரதிதான். சென்னை தலைமைச் செயலகத்திலும் ஒரு துறையின் செயலாளராக இருந்து அரும் பணியாற்றியவர். இப்போது நாம் முன்பே குறிப்பிட்டபடி, திருச்செங்கோட்டில் ராஜாஜியால் ஸ்தாபிக்கப்பட்ட காந்தி ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து மதுவிலக்கு, நூல் நூற்றல், பல கிராம கைத்தொழில்களை வளர்த்தல் போன்ற பல ஆக்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இவருக்கு உறுதுணையாக சிறந்த தேசபக்தரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான கோவை திரு ஏ.தேவராஜ் இருந்து வருகிறார். ஒரு குடும்பமே இந்த நாட்டுக்குச் செய்திருக்கும் தியாகத்துக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம். ஒன்றும் செய்ய வேண்டாம். அவர்களுடைய தியாகத்தை நினைவில் வைத்து வணங்கினாலே போதும். செய்வோமே! வாழ்க எல்.கிருஷ்ணசாமி பாரதி, லட்சுமி அம்மாள், கி.லட்சுமிகாந்தன் பாரதி புகழ்!

தன்னைப் பற்றி திரு லட்சுமிகாந்தன் பாரதி, I.A.S. எழுதியுள்ள கட்டுரை.
"தினமணி" சுதந்திர தின பொன்விழா மலரில் வெளிவந்தது.

(மாணவப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர் லட்சுமிகாந்தன் பாரதி. தாம் கைது செய்யப்பட்டு கை விலங்கிடப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயே, பிற்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, சாதனை படைத்தவர். அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இப்போது திருச்செங்கோட்டில் இருக்கும் ராஜாஜியால் தொடங்கப்பட்ட 'காந்தி ஆசிரமத்தின்' தலைவராக இருந்து சுற்றுப்புற கிராம மக்களுக்கு அரிய பல சேவைகளை செய்து வருகிறார். இவர் போன்ற தேசத் தொண்டர்களுக்கு வயதோ, உடல்நிலையோ ஒரு பொருட்டல்ல. தந்தை, தாய், இவரது சகோதரி, இவர் என்று குடும்பமே நாட்டுச் சுதந்திரப் போரில் ஈடுபட்டு சிறைசென்ற தியாக வரலாறு இவருடையது.

தந்தை திரு எல்.கிருஷ்ணசாமி பாரதியைப் போலவே சுறுசுறுப்பாகப் பேசுபவராகவும், தேசபக்தியில் புடம் போட்ட தங்கமாகவும் காட்சி தரும் திரு லட்சுமிகாந்தன் பாரதி எழுதிய கட்டுரை இதோ:)

நாடு விடுதலை அடைந்த 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது விடுதலை இயக்கமும் 1942ல் நாடே கொதித்து எழுந்ததும் அப்பேரியக்கத்தில் 16 வயது மாணவனாக இருந்த நான் கலந்து கொண்ட நினைவுகளும் என் மனக்கண் முன் தோன்றுகின்றன.

1942 ஆகஸ்டு 9ல் மகாத்மா காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் கைது செய்யப்பட்ட செய்தி கிடைத்தபோது, நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாண்டு மாணவன். 16 வயது பூர்த்தியாகாத இளம் பருவம்.

மாணவர்களாகிய நாங்கள் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சி அளித்தோம். அன்று மாலை, காவல் துறையினரின் படுபயங்கரமான அடக்குமுறைகளையும் மீறி, நாங்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உணர்ச்சியே வடிவாகக் கல்லூரியிலிருந்து புறப்பட்டோம்.

எங்கும் தடியடி - துப்பாக்கிப் பிரயோகம், ஆனால் இவைகள் எல்லாம் எங்களுக்கு வெகு அற்பமாகத் தோன்றின. அவற்றைப் பற்றிக் கவலைப் படாமல், அந்த இரவு நாங்கள் செயல்பட்டது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

இதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் ரகசியக் கூட்டங்களை நடத்தியது "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசியக் கொடி ஏற்றியது, பெண் தியாகிகளை அவமானப்படுத்திய காவல் துறை அதிகாரியின் மீது திராவகம் ஊற்றியது, இப்படி அடுக்கடுக்கான நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன.

காவல் துறையின் தடியடிப் பிரயோகத்தில் எனக்கு அடுத்து நின்ற மாணவரின் மண்டை பிளந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் நான் அவரைத் தாங்கிப் பிடித்தேன். அப்படி அடிபட்ட அந்த மாணவர் கோவிந்தராஜந்தான் பிற்காலத்தில் சட்டப் பேரவை உறுப்பினரானார்.

என் சகோதரி மகாலட்சுமி சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்து வந்தார். அவர் சிறை சென்ற செய்தி கிடைத்த மறுநாள், நான் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதானேன். 6 மாதச் சிறை தண்டனை பெற்று அலிப்புரம் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அங்கு மாபெரும் தலைவர்களுடன் 6 மாதம் இருக்கும் பாக்கியம் கிடைத்தது.

நான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, பல்கலைக் கழகத்தில் நான் தொடர்ந்து படிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்து, பல்கலைக் கழகத்திலிருந்து என்னை நிரந்தரமாக நீக்கினார்கள். இதைப் பற்றிக் குறிப்பிட்டு, ராஜாஜிக்கு எனது தந்தை கிருஷ்ணசாமி பாரதி கடிதம் எழுதினார்.

உடனே, பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த ஏ.எல்.முதலியாருக்கு ராஜாஜி கடிதம் எழுதினார். இளம் வயது மாணவனின் எதிர்காலத்தைப் பாழடிக்கும் வகையில் இப்படிச் செய்தது சரியல்ல என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நான் சிறையிலிருந்து வந்ததும் படிப்பைத் தொடர அனுமதி கிடைத்தது.

எந்த மதுரையில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டேனோ, அதே மதுரையின் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பிற்காலத்தில் நான் பதவி ஏற்றேன். எனது கைமாறு கருதாத தேசபக்திக்குக் கிடைத்த பரிசாக அதை நான் எண்ணினேன்.

அதுமட்டும் அல்ல. 1967ல் காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் கல்லூரியில் அண்ணா சிலை திறப்பு விழா நடைபெற்றது. அச்சிலையை ஏ.எல்.முதலியார் திறந்து வைத்தார். செங்கற்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த நான் விழாவுக்குத் தலைமை வகித்தேன்.

சிறையிலிருந்து வெளிவந்ததும் நான் படிப்பைத் தொடர அனுமதித்தபோது எனது பெற்றோர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யும்படி ஏ.எல்.முதலியார் அறிவுரை கூறியிருந்தார். அதை அவ்விழாவில் நான் அவரிடம் நினைவு படுத்தினேன். அவர் என்னத் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார்.

இந்தியா ஒரு புண்ணிய பூமி. அதே நேரத்தில் இந்தியாவின் புண்ணிய பூமி அந்தமான் தீவுகள். ஆம்! விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் அடைக்கப்பட்ட கொடுஞ் சிறை அந்தமானில்தான் உள்ளது.

அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பலர் அங்கேயே இறந்திருக்கிறார்கள். அங்கு அடைக்கப்பட்டவர்களில் பலருக்கு அடுத்த சிறைக் கொட்டடிகளில் யார் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றே தெரியாது. அவ்விதம் மற்ற கைதிகளைக் காணமுடியாதபடி அச்சிறை நட்சத்திர வடிவில் கட்டப்பட்டிருக்கும். கடுமையான தண்டனைகள், சித்திரவதைகளைச் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அங்கு அனுபவித்தனர்.

அத்தகைய அந்தமான் சிறைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆண்டுதோறும் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். அச்சிறையில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் அனுபவித்த கொடுமைகளை விளக்க வேண்டும்.

இதுவரை இப்படிச் செய்து வந்திருந்தாலே, தற்போது நாட்டில் நிலவும் பிரிவினை வாதம், தீவிரவாதம், சாதி, மத மோதல்கள் போன்றவை தலை தூக்கியிருக்காது. தேசபக்தி இளைய சமுதாயத்தினரிடையே தழைத்து ஓங்கி இருக்கும்.

நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா மலர்.