Followers

Friday, June 25, 2010

சுப்பிரமணிய சிவா

வீரத் துறவி சுப்பிரமணிய சிவா
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.

மற்ற இருவரைப் பற்றி இந்த வலைத்தளத்தில் வேறோர் இடத்தில் வரலாற்றைக் கொடுத்திருக்கிறோம். இப்போது 'வீரமுரசு' எனப் புகழப்படும் சுப்பிரமணிய சிவா பற்றி பார்ப்போம். வீரத்துறவி என்று தலைப்பில் கொடுத்துவிட்டு, இவர் ஓர் சுதந்திரப்போராட்ட வீரர் என்கிறீர்களே என ஐயப்பாடு எழலாம். ஆம்! இவர் அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்தே சுதந்திரத்துக்காகப் போராடினார், ஆகையால் இந்தத் தலைப்பு அவருக்கு மிகவும் பொருந்தும்.

இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.அவர் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது. சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக 'வந்தேமாதரம்', 'அல்லஹுஅக்பர்', என்று முழக்கமிடுவாராம்.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார்.

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் 'பிரபஞ்சமித்திரன்' எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார். இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்த சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்!

Tuesday, June 22, 2010

எம்.பி.டி.ஆச்சார்யா

புரட்சி வீரர் எம்.பி.டி.ஆச்சார்யா
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

பாரத நாட்டுச் சுதந்திரத்துக்காகப் போராடிய காந்திய வழி அகிம்சை போராட்ட வீரர்களைப் பற்றி பார்த்துக்கொண்டு வந்தோம். இந்திய சுதந்திரம் காந்தியடிகள் முன்னின்று நடத்திய அகிம்சை வழிப் போராட்டத்தினால்தான் இறுதியில் கிடைத்தது என்பது உண்மை. ஆனாலும் பால கங்காதர திலகரின் வழிவந்த பலர் காந்திஜி இந்திய அரசியலுக்கு வருவதற்கு முன், 'அகிம்சை' எனும் கோட்பாடு அறிமுகமாகாத வரை, எந்த வகையிலேனும், அது வன்முறை வழியாக இருந்தாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடுவது என்று முடிவெடுத்தார்கள். காந்திஜியின் தொண்டர்கள் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், ஆளுவோரின் அராஜகங்களால் போலீசால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். அடிபட்டிருக்கின்றனர். தீராக கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கின்றனர். அது போலவே திலகர் வழி வந்தவர்கள் வன்முறை, கொலை இவற்றில் ஈடுபட்டாலும்அவர்களது தியாகங்கள் மட்டும் சாதாரணமானதா. உயிரைத் துச்சமாக மதித்து அன்னியனை இந்த மண்ணை விட்டு அகற்றிட அவர்கள் பட்டபாடு, நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது. இந்த இருவகை தேசபக்தர்களின் நோக்கம் ஒன்றுதான்; எனினும் வழிமுறை மட்டும் வேறுவேறானது. எந்த வழியில் பாடுபட்டால் என்ன, நாம் சுதந்திரம் பெற வேண்டும், அன்னிய ஏகாதிபத்தியம் மூட்டை முடிச்சுக்களுடன் கப்பல் ஏற வேண்டுமென்பதுதான் அந்த இரு சாராரின் கருத்து என்பதால், இத்தகைய தியாகிகளுக்கிடையே நாம் பாரபட்சம் பார்க்க முடியாது.

இந்திய சுதந்திர வரலாற்றில் அதிக அளவில் வன்முறையில் நம்பிக்கை வைத்து போராடிய தியாகசீலர்கள் வடநாட்டில் மிக அதிகம். தெற்கே ஆங்காங்கே சில நிகழ்ச்சிகள் நடந்த போதிலும் வ.வெ.சு.ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், எம்.பி.டி.திருமலாச்சாரி, பாஷ்யம் அனும் ஆர்யா, ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளை போன்ற சிலர் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கத்தான் செய்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்காங்கே பரவியிருந்த இவ்வன்முறை அரசியல், 1942இல் ஆகஸ்ட் புரட்சியென்று வெடித்துப் புறப்பட்டது. அதில் ஏராளமானோர் காந்தியத் தொண்டர்கள் உட்பட பல வன்முறைச் செயல்களில் ஈடுபட்டார்கள். தேவகோட்டை தேசபக்தர்களை விடுவிக்க திருவாடனை கிளைச்சிறை உடைக்கப்பட்டு உள்ளே இருந்தவர்களைத் தப்ப வைத்தனர். குலசேகரப்பட்டினத்தில் அமைதியாகக் கூட்டம் முடிந்து திரும்பியவர்களை குடிவெறியில் சுடத்தொடங்கிய டி.எஸ்.பி. ஒருவரை தொண்டர்கள் அடித்தே கொன்றனர். தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன. இப்படியும் ஒரு பகுதியினர் சுதந்திரப் போரில் பங்கு பெற்றிருக்கிறார்கள் அல்லவா? அந்த தியாக சீலர்களுக்கும் நாம் நன்றி செலுத்த வேண்டாமா?

எம்.பி.டி.ஆச்சார்யா பற்றி பார்ப்பதற்கு முன், முந்தைய பாராவில் குறிப்பிட்ட "குலசேகரப்பட்டினம் கொலை வழக்கு" பற்றியும் அதில் தண்டனை பெற்ற விவரங்களையும், ஒரு இந்திய ஐ.சி.எஸ். அதிகாரி வழங்கிய தீர்ப்பில் இருந்த ஆத்திரம் எப்படிப்பட்டது என்பதையும் ஒரு சிறிது பார்க்கத்தான் வேண்டும். 1942 ஆகஸ்ட் மாதம், பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் காந்திஜி "வெள்ளையனே வெளியேறு" எனும் தீர்மானத்தில் பேசி, இதை "செய் அல்லது செத்து மடி" என்று அறைகூவல் விட்டபின், அன்று இரவே அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்பட்டது. தொண்டர்கள் பொங்கு எழுந்தனர். தலைவர்களை எங்கு கொண்டு சென்றார்கள், என்ன செய்தார்கள் என்றே தெரியாத குழுப்ப நிலை. என்ன செய்கிறோம் என்று புரியாமல் ஆங்காங்கே வன்முறை வெடித்தெழுந்தது. நாடே புரட்சித்தீயில் எரியத்தொடங்கியது.

அப்போது தெற்கே திருநெல்வேலிக்கருகே ஆறுமுகனேரி எனும் இடத்தில் கே.டி.கோசல்ராம் எனும் புரட்சிக்கார காங்கிரஸ்காரர் பெரும் கூட்டத்தைக் கூட்டி ஏதோ திட்டமிட்டார். கூட்டம் முழுவதும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. அவர்கள் அனைவரும் தங்களது உதிரத்தால் கையெழுத்திட்டு உயிரைக்கொடுக்கவும் தயார் என்று முழக்கமிட்டனர். நாட்டு விடுதலைக்காக ஒரு தற்கொலைப்படை அமைக்கப்பட்டது. அதில் பங்கு பெற்றோர் பி.எஸ்.ராஜகோபாலன், காசிராஜன், கடையனோடை மகாராஜன், அமலிபுரம் பெஞ்சமின், ஏரல் நடராஜன் செட்டியார், கொட்டங்காடு ஏ.டி.காசி, மெய்யன்பிறப்பு சிவந்திக்கனி, பரமன்குறிச்சி நாகமணி வாத்தியார், செட்டியாபத்து அருணாசலம், வாழவல்லான் பச்சப்பெருமாள், இராமலிங்கம், தங்கவேல் நாடார் ஆகியோர் தற்கொலைப்படை வீரர்கள்.

இவர்கள் அனைவரும் மெய்ஞானபுரம் தபால் அலுவலகத்தைச் சூரையாடிவிட்டு தலைமறைவாயினர். இவர்களைக்கண்டவுடன் சுட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். செப்டம்பர் 29 அன்று குலசேகரப்பட்டினம் உப்பளத்தில் கூட்டம் நடத்திவிட்டு புரட்சி வீரர்கள் திரும்ப வந்து கொண்டிருந்தனர். அப்போது விடியற்காலை 4 மணி சுமாருக்கு வழியிலிருந்த முசாபரி பங்களாவின் வாசலில் லோன் எனும் ஆங்கிலேய போலீஸ் அதிகாரி வயிறு முட்ட குடித்துவிட்டு போதையில் தள்ளாடிக்கொண்டு சாலையில் போய்க்கொண்டிருந்த தொண்டர்களை வழிமறித்து தகறாறு செய்தான். தன் கை துப்பாக்கியை எடுத்து பி.எஸ்.ராஜகோபாலனின் நெற்றியில் வைத்து அழுத்தி சுடத் தயாரானான். சும்மா இருப்பார்களா தொண்டர்கள். அவன் மீது பாய்ந்து ஒருவர் தன் கையிலிருந்த வேல் கம்பை அந்த லோன் மார்பில் பாய்ச்சினார். அருகிலிருந்தவர்கள் அவனை அரிவாளால் சரமாரியாக வெட்டித்தள்ளினர். 64 வெட்டுக் காயங்களோடு அவன் இங்கிலாந்து போய்ச்சேருவதற்கு பதில் எமலோகம் போய்ச்சேர்ந்தான்.

ராஜகோபாலன், காசிராஜன் உட்பட 21 பேர் மீது வழக்கு. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த டி.வி.பாலகிருஷ்ண ஐயருக்கு என்ன கடுப்போ தெரியவில்லை. 1944 பிப்ரவரி 6ல் தீர்ப்பை வழங்கினார். காசிராஜன், ராஜகோபாலன் இருவருக்கும் தூக்குத் தண்டனை கொடுத்தார். அது போதாது என்று நினைத்தாரோ என்னவோ, அவர்களுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் (60 ஆண்டுகள்) இதுதவிர மேலும் 14 ஆண்டு தண்டனையும் கொடுத்தார். மொத்தத்தில் ஒரு தூக்கு தண்டனை 74 ஆண்டு கடுங்காவல் தண்டனை. அப்போது ராஜகோபாலன் கேட்டார், "ஐயா நீதிபதி அவர்களே எங்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்துவிட்டு அது போதாதென்று 74 ஆண்டு சிறை தண்டனையும் கொடுத்திருக்கிறீர்களே, இந்த 74 ஆண்டு சிறை தூக்குக்கு முன்பா அல்லது பின்பா என்று கேட்டனர். அந்த சூழ்நிலையிலும் தேசபக்தர்கல் உயிரை மதிக்காமல் கேலி செய்து அந்த நீதிபதியைத் தலைகுனிய வைத்தனர். கோர்ட்டே சிரித்தது.

சரி! இனி எம்.பி.டி.ஆச்சார்யாவிடம் வருவோம். இந்திய சுதந்திரம் பற்றி ரஷ்யாவின் ஒப்பற்ற தலைவர் லெனினைச் சந்திக்க பல குழுவினர் சென்றனர். அதில் இடம்பெற்ற இரு தமிழர் எம்.பி.டி.ஆச்சார்யா, வீரன் செண்பகராமன் பிள்ளை ஆகியோர். மண்டையம் பிரதிவாதி திருமலை ஆச்சார்யா என்ற பெயரின் சுருக்கம்தான் எம்.பி.டி.ஆச்சார்யா. மண்டையம் என்பது மைசூர் பக்கம் உள்ள ஒரு கிராமம். இங்கிருந்து குடிபெயர்ந்து சென்னையில் குடியேறிய மண்டையம் குடும்பத்தார் இந்திய விடுதலைக்காகப் பல தியாகங்களைச் செய்திருக்கின்றனர். ஒரு குடும்பத்தார் செய்திருக்கிற மாபெரும் காரியங்களைத் திரட்டி வெளியிட வேண்டாமோ? புரட்சிக்கவி பாரதிக்கும் இந்தக் குடும்பதான் பல பெரிய உதவிகளைச் செய்திருக்கிறது. இவர்கள் தொடங்கிய "இந்தியா" பத்திரிகை மூலம்தான் பாரதி தனது அக்கினி ஜ்வாலையை ஆங்கில அரசுக்கு எதிராக வீசினான். இந்த மண்டையம் குடும்பத்தில் குறிப்பிடத்தகுந்த தேசபக்தர்கள் மண்டயம் திருமலாச்சார்யா, மண்டயம் எஸ்.எண்.திருமலாச்சார்யா, மண்டையம் சீனிவாசாச்சார்யா போன்றவர்கள்.

"இந்தியா" பத்திரிகையை சென்னையிலும், பிறகு புதுச்சேரியிலும் நிறுவி சுதந்திரக் கனல் பரப்பி வந்தார்கள். 1917இல் ரஷ்யாவில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடித்தது. கொடுங்கோலன் ட்ஸார் மன்னன் வீழ்ந்தான். இது குறித்து, அப்போதே மார்க்சீயத்திலும், வன்முறையிலும் நம்பிக்கை வைத்திருந்த எம்.பி.டி.ஆச்சார்யாவின் செல்வாக்குதான் பாரதி ரஷ்ய புரட்சியைப் போற்றிப் பாட காரணமாக இருந்திருக்கலாம். இவர் இந்தியாவில் இருந்த வரை அதிகம் கவனிக்கபடாதவராக இருந்த போதிலும், கடல் கடந்து அயல்நாட்டுக்குப் போய் அங்கு புரட்சி இயக்கங்களில் ஈடுபட்ட போதுதான், அடடா, இவர் இந்தியாவில் இருந்தபோது என்னவெல்லாம் செய்திருப்பார் என்று சிந்தித்தார்கள் போலும். இவர் லண்டனில் உலகப் புகழ்பெற்ற ஷ்யாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமான "இந்தியா ஹவுஸ்' எனும் இல்லத்தில் வீர சாவர்க்கர், வ.வெ.சு.ஐயர், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்தார். உலகங்கெணும் புரட்சி இயக்கத்துக்கான வித்தை இவர் பல நாடுகளிலும் சென்று விதைத்தார். பெர்லின், ஸ்டாக்ஹோம் ஆகிய இடங்களிலும் இவர்கள் தங்கள் கிளைகளை நிறுவினார்கள். "உலக சோஷலிஸ்ட் இயக்கங்கள் இந்திய விடுதலையில் அதிக அக்கறை காட்டவில்லை" என்று கருதினார்கள்.

ரஷ்யாவில் நடந்த மாபெரும் மக்கள் புரட்சி எம்.பி.டி.ஆச்சார்யாவுக்கு ஒரு நம்பிக்கையைத் தோற்றுவித்தது. இந்த புரட்சி 'யுகப்புரட்சி' என்று பாரதியால் புகழப்பட்டது. இந்த புரட்சியின் விளைவாக இந்தியாவிலும் ஓர் புரட்சியைத் தோற்றுவிக்க முடியும் என்றும் இவர் நம்பினார். கம்யூனிஸ்ட் அகிலம் எனப்பட்ட குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாயகானாகக் கருதப்படும் எம்.என்.ராய்க்கும் எம்.பி.டி.ஆச்சார்யாவுக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. கிலாபத் இயக்கத்தையொட்டி ஆப்கானிஸ்தானில் இந்திய விடுதலைக்காக ஒரு ராணுவப் பயிற்சிக்குத் திட்டமிட்டார். ஆனால் அன்றைய ஆப்கன் அரசு ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திட்டம் தோல்வியுற்றது.

பல காலம் அன்னிய மண்ணில் இந்திய விடுதலை நாடி சுற்றித் திரிந்து, உலக நாடுகளில் பலவற்றிலும் புரட்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு எந்த வகையிலும் எதுவும் பயனளிக்கவில்லை என்ற நிலை வந்ததும், அவர் இந்தியா திரும்பி பம்பாயில் பலகாலம் வாழ்ந்து பின் மறைந்து போனார், எவ்வளவோ புரட்சிக்காரர்களின் வாழ்க்கையைப் போலவே. வாழ்க புரட்ச்சிகாரர் எம்.பி.டி.ஆச்சார்யா புகழ்!

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்



சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை. இவரிடம் என்ன காந்த சக்தியா இருந்தது? அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை இவர் அப்படி கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டார். அவர் மேடைப் பேச்சை, அப்படியே பதிவு செய்து அச்சிட்டால், ஒரு சிறிதுகூட இலக்கணப் பிழையின்றி, சொற்றொடர் அழகாக அமைந்து, வாய்விட்டுப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும். தோற்றத்தில் மட்டுமென்ன? அந்த ஆழ்ந்து ஊடுறுவும் கரிய கண்கள். அபூர்வமான மீசை. படியவாரப்பட்ட தலை, வெள்ளை வெளேரென்ற தூய கதராடை, முழுக்கைச்சட்டை, தோளில் மடித்துப் போடப்பட்ட கதர் துண்டு. மேடையில் அவர் நிற்கும் தோரணையே ஒரு மாவீரனின் தோற்றம் போலத்தான் இருக்கும். ஆனால் ... அந்த மனிதர் சிறைவாசம் கொடுத்த கொடிய வயிற்றுப்புண்ணால் அவதிப்பட்டவர். சூடான அல்லது காரமான எதையும் சாப்பிட முடியாதவர். தயிர் மட்டும் விரும்பிச் சாப்பிடும் அப்பட்டமான தேசிய வாதி. ஆம்! அந்த தமிழினத் தலைவன்தான் ம.பொ.சி.


இது என்ன? யாருக்கும் இல்லாத தனி நபர் வர்ணனை என்று நினைக்கலாம். இவர் வேறு யாரைப் போலவும் இல்லாமல் பல கோணங்களிலும் புதுமை படைத்தவர். இவர் செல்வந்தரல்ல! மிக மிக ஏழை. வடதமிழ் நாட்டில் கள்ளிறக்கும் தொழில் புரியும் கிராமணி குலத்தில் பிறந்தவர். அடிப்படைப் பள்ளிக் கல்வி என்றால் இவர் படித்தது மூன்றாம் வகுப்பு மட்டுமே. ஆனால், இன்றைய நிலையில் பல முனைவர் பட்டங்களைப் பெறக்கூடிய தகுதி பெற்ற கல்வியாளர். தமிழ் இவரது மூச்சு. தமிழ்நாடு இவரது உயிர் உறையும் புனிதமான இடம். முதன்முதலில் "உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு"      என்றும், "மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி" என்றும், "தலைகொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்றும் குரல் கொடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்கவைத்துக் கொள்ளவும் பாடுபட்டவர். வடவேங்கடமும் தென்குமரியும் இடையிட்ட தமிழகத்தைப் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்று, மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டபோது வடவேங்கடத்தை மீட்போம் என்று போரிட்ட வீரத் தளபதி. திருப்பதி மட்டுமல்ல, திருத்தணியும் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. உடனே வட எல்லைப் போராட்டம் தொடங்கியதன் பலன் இன்று திருத்தணியாவது நமக்கு மிச்சமானது. தென் குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்டதாக இருந்தது. தெற்கெல்லை மீட்க நேசமணி போன்றோர்களுடன் இணைந்து போராடினார், இன்று குமரி தமிழ்நாட்டின் தெற்கெல்லையாக இருக்கிறது. தேவிகுளம் பீர்மேடு தமிழகத்துக்குச் சொந்தம் என்று போராடினார், "குளமாவது மேடாவது" என்று உடன்பிறந்தோரே கேலி செய்ததன் பலன் இவரது போராட்டம் தோல்வி கண்டது. தமிழிலக்கியத்தில் சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தைப் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரச்சாரம் செய்த பலன் இன்று அந்த காப்பியம் தமிழர் நாவிலெல்லாம் மணம் வீசுகிறது. கம்பனைச் சிலர் சிறுமைப் படுத்தியும், கம்பராமாயணத்தை எரித்தும் வந்த நேரத்தில், இவர் கம்பனின் பெருமையை உலகறியச் செய்து, தனது 'தமிழரசுக்கழக' மாநில மாநாட்டின் போதெல்லாம் முதல் நாள் மாநாடு இலக்கிய மாநாடு என்று பெயரிட்டு, இலக்கியங்களை பரவச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இப்படிப் பல பெருமைகள், பல முதன்மையான செயல்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம். கட்டுரை நீண்டுவிடும். அந்தப் பெருமகனார் தமிழக வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்த புடம் போட்டெடுத்த தியாக புருஷன். அவர் வரலாற்றைச் சிறிது பார்ப்போமா?

வளமையான குடும்பத்தில் பிறந்து, வாய்ப்பும் வசதியும் நிரம்பப்பெற்றதன் பயனாகப் பல பெருந்தலைகளோடு பழக்கம் வைத்துத் தலைவனானவர்கள் பலர். கல்வியில் சிறந்து பட்டம் பெற்று, புகழ் பரவிநின்றதன் பயனாகப் பொது வாழ்க்கையிலும் தலையிட்டு முன்னேறியவர்கள் பலர். பெருந்தலைகளின் உதவியால் கைதூக்கி விடப்பட்டு பிரபலமானவர் சிலர். இப்படி எதுவும்  இல்லாமல், மிகமிக ஏழைக் குடும்பத்தில் பிறந்து, வறுமை ஒன்றையே சொத்தாகக் கொண்ட ஒருவர், ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்கமுடியாத சூழலில், தான் பிறந்த குடியினரின் குலத்தொழிலான கள்ளிறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் எதிர்ப்பைத் தனது கள் எதிர்ப்பினால் ஏற்படுத்திக் கொண்டு திண்டாடிய ஒரு தொழிலாளியின் வரலாறு இது.

இவர் செய்த தொழில்கள் பல. அதிலெல்லாம் இவர் முத்திரை பதித்தார். பின் எப்படிப் படித்தார். இவர் ஏற்றுக்கொண்ட அச்சுக்கோர்க்கும் தொழிலில்தான் அவருக்கு இந்த பலன் கிட்டியது. இப்போது போல அல்லாமல் அன்றைய தினம் அச்சடிப்பதற்கு விஷயத்தை ஒவ்வொரு எழுத்தாக அச்சு கோர்த்துத்தான் செய்து வந்தார்கள். அந்த பணி இவருக்கு. அங்கு விஷயம் அச்சில் ஏற ஏற இவர் மனத்தில் தமிழ் படிப்படியாக அரங்கேறத் தொடங்கியது. முதலில் இவரை 'கிராமணி' என்றும் 'கிராமணியார்" என்றும்தான் அழைத்தனர். அவ்வளவு ஏன்? ராஜாஜி கடைசி வரை இவரை 'கிராமணி' என்றுதான் அழைத்து வந்தார். இவர் அவரை ராமராகவும், தன்னை அனுமனாகவும் வர்ணித்து எழுதியும் பேசியும் வந்த உண்மையான ராஜாஜி தொண்டன் இவர். இவரது பணி சிறக்கச் சிறக்க சிலப்பதிகாரத்தை இவர் பிரபலமாக்க "சிலம்புச் செல்வர்" என்ற அடைமொழி இவர் பெயருக்கு முன் சேர்ந்து கொண்டது. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் சிலம்புச்செல்வர்.
                                                            V.O.Chidambaram Pillai

சென்னையில் தேனாம்பேட்டைப் பகுதியில் வாழ்ந்த பொன்னுச்சாமி கிராமணியார்தான் இவரது தந்தை. தாயார் சிவகாமி அம்மையார். இவர்தான் ம.பொ.சியை உருவாக்கியவர். இவர் சொன்ன புராணக் கதைகள், நீதிக் கதைகள், பாடல்கள் இவைதான் இவரை ஓர் சத்திய புருஷராக உருவாகக் காரணமாக இருந்தன. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஞானப்பிரகாசம். பிந்நாளில் ஞானப்பிரகாசமாக விளங்குவார் என்று எப்படித்தான் அவர்களுக்குத் தெரிந்ததோ? பெற்றோரிடம் இவருக்கு அதீதமான பக்தி, அதிலும் தாயார் என்றால் அவருக்குக் கடவுளாகவே நினைப்பு. இவரும் படிக்கத்தான் பள்ளிக்குச் சென்றார். ஆனால் உடன் பிறந்த வறுமை, இவரால் புத்தகம் வாங்கக்கூட முடியாமல் மூன்றாம் வகுப்பிலிருந்து துரத்தப்பட்டார். ஆனாலும் அன்னை கொடுத்த கல்வி, அவரது ஆயுளுக்கும் பயன்பட்டது.

முன்னமேயே சொன்னபடி இவர் பல தொழில்களை வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்தார். நெசவுத்தொழில் செய்தார். அச்சுக்கோக்கும் பணியினைச் செய்தார். இவர் காந்திஜி, ராஜாஜி இவர்களைப் பின்பற்றி மதுவிலக்குக் கொள்கையில் மிக திடமாக இருந்த காரணத்தால் இவரது உறவினர், ஜாதியினர் கூட இவரை வெறுத்து ஒதுக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள். இவரை ஜாதிப்பிரஷ்டம்கூட செய்து விட்டனர். இவ்வளவு கஷ்ட தசையிலும் இவர் நாட்டை நினைத்தார், குடிப்பழக்கத்தினால் அழிந்து போய்க்கொண்டிருக்கும் ஏழை எளியவர்களை நினைத்தார், நம்மை அடக்கி ஆண்டுகொண்டிருக்கும் வெள்ளை பரங்கியர்களை எப்படி விரட்டுவது என்று எண்ணமிட்டார்.

பதினைந்து ஆண்டுகள் வசித்துவந்த இவர்களது ஓலைக்குடிசை ஒருநாள் தீப்பற்றிக்கொண்டது. இவரது ஆழ்ந்த இறை நம்பிக்கை இவரைக் காப்பாற்றியது. 1928இல் இவருக்குத் திருமணம் ஆயிற்று. மிகக் குறைந்த நாட்களிலேயே அந்த இளம் மனைவி கூற்றுக்கு இரையாகி விட்டார். இனி தேச சேவைதான் நமக்கு என்று மறுபடி திருமணம் செய்து கொள்ளாமலேயே நாட்டுப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். என்றாலும் பெற்றோரும் சுற்றத்தாரும் விடுவார்களா? 1937இல் தனது 31ஆம் வயதில் தனது மாமன் மகளான 17 வயது ராஜேஸ்வரியைத் திருமணம் செய்து கொண்டார்.
                                                                        Rajaji
அன்றைய பிரபலமான தேசபக்தரும், தமிழ்நாட்டுப் பெருந்தலைவர்களில் ஒருவரும், "தமிழ்நாடு" எனும் தினப்பத்திரிகையை நடத்தி வந்தவருமான டாக்டர் வரதராஜுலு நாயுடுவிடம் இவர் அச்சுக்கோக்கும் பணியில் சேர்ந்தார். அங்கு ஒரு தொழிலாளர் பிரச்சினை. அது முடிந்ததும் தொழிலாளர்கள் அனைவரும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். போராடிய ம.பொ.சி. மட்டும் வெளியேற்றப்பட்டார். விதி விளையாடியது. மறுபடியும் வேலை தேடி அலையும் நிலைமை. அப்போது அவரது உறவினர் இவரைத் தன் கள்ளுக்கடையில் கணக்கு எழுத அதிக சம்பளம் ரூ.45 கொடுத்துக் கூப்பிட்டார். இவருக்கு கள்ளுக்கடைக்குப் போக இஷ்டமில்லை. மறுபடி அச்சுக்கோக்கும் பணியில் ரூ.18 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

இவருக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. மனைவியின் வழியில் வந்த ஒரு வீட்டில் இவர் வாழ்ந்தார். இவரது பொது வாழ்க்கை விடுதலைப் போரில் செலவழிந்தது. இருபதாண்டு காங்கிரஸ் உறவில் இவர் ஆறுமுறை சிறை சென்றார். முதல் வகுப்பு கைதியாக அல்ல. மூன்றாம் தர கிரிமினல்களுடன் வாழும் 'சி' வகுப்பு கைதியாக. கடைசி காலத்தில் இவரது புகழ், அந்தஸ்து இவை உயர்ந்த காலத்தில்தான் இவருக்கு 'ஏ' வகுப்பு கிட்டியது.

இவர் கைதாகி அமராவதி சிறையில் இருந்த காலத்தில் உடல் நலம் குன்றி, உயிருக்குப் போராடும் நிலைமைக்கு வந்து விட்டார். சிறையில் இவருடன் இருந்த பல தலைவர்களும் இவருக்கு வைத்தியம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர். வி.வி.கிரி அவர்கள் இவருடன் சிறையில் இருந்தார். அவர்தான் இவரை அவ்வூர் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவினார். சிறையில் இவர் நடைப்பிணமாகத்தான் இருந்தார். மகாகவி பாரதியைப் போல இவரும் தனது முப்பத்தியொன்பதாம் வயதில் கிட்டத்தட்ட உயிரை விட்டுவிடும் நிலைமைக்கு வந்து விட்டார். இவரை மேலும் அங்கே வைத்திருந்தால் இறந்து போனாலும் போய்விடுவார் என்று இவரை வேலூர் சிறைக்கு மாற்றினர். இவர் பரோலில் வீடு சென்றபோது இவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு இவர் உடல் மெலிந்து, முகத்தில் மீசை மட்டும்தான் இருந்தது. 1942 ஆகஸ்ட் 13ம் தேதி இவர் சிறை செல்லும்போது இவரது எடை 119 பவுண்டு. வேலூர் சிறையில் 1944 ஜனவரியில் இவரது எடை 88 பவுண்டு. அங்கிருந்து இவர் மீண்டும் தஞ்சை சிறப்பு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு இவர் கிட்டத்தட்ட இறக்கும் தருவாய்க்கு வந்து விட்டார். அதனால் இவரை உடனடியாக விடுதலை செய்து சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டனர். தஞ்சை சிறையிலிருந்து குறுக்கு வழியாக தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு இரவு 10-30க்குக் கிளம்பும் ராமேஸ்வரம் போட்மெயிலில் ஏற்றிவிட இருவர் இவரை ஒரு ஸ்ட்ரெச்சரில் போட்டுத் தூக்கிக்கொண்டு போகும் போது அரை நினைவிலிருந்த இவருக்கு யாரோ சாலையில் போனவர் சொன்னது காதில் விழுந்ததாம். "ஐயோ பாவம்! ஏதோ ஒரு அனாதை பிணம் போலிருக்கிறது" என்று. என்ன கொடுமை?

மறுநாள் சென்னை எழும்பூரில் இவரை அழைத்துச் சென்றனர். இவரது சிறை வாழ்க்கை, பட்ட துன்பங்கள், இவரது உடல் நிலை இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் முடிவே இருக்காது. அடுத்ததைப் பார்ப்போம். இவர் வடசென்னை மதுவிலக்குப் பிரச்சாரக் குழு, ஹரிஜன சேவை, கதர் விற்பனை இப்படியெல்லாம் பணி செய்திருக்கிறார். வடசென்னை காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக இருந்திருக்கிறார். பல ஆண்டுகள் சிறை வாசம், பலமுறை சிறைப் பிரவேசம், உடல்நிலைக் கோளாறு, இப்படி மாறிமாறி துன்பம் துன்பம் என்று அனுபவித்த ம.பொசிக்கு சுதந்திரம் கிடைத்த பிறகாவது நல்ல காலம் பிறந்ததா என்றால், அதுவும் இல்லை. அதுவரை அவருக்கு அதாவது சுதந்திரம் வரை ஆங்கிலேய ஏகாதிபத்தியம்தான் எதிரி. சுதந்திரத்துக்குப் பிறகு ஏராளமான எதிரிகள், உள் கட்சியிலும், எதிர் கட்சியிலும். எல்லாம் அவர் பிறந்த நேரம்.

சுதந்திரத்துக்குப் பிறகு சென்னை மாகாணத்தைப் பிரித்து விஷால் ஆந்திரா வேண்டுமென்று உண்ணாவிரதமிருந்து உயிரைவிட்டார் பொட்டி ஸ்ரீராமுலு என்பவர். உடனே கலவரம். நேரு மாநிலங்களைப் பிரிக்க ஒரு குழு அமைத்தார். அதன் சிபாரிசுப்படி தமிழ்நாடு தனியாகவும், ஆந்திரம் தனியாகவும் பிரிக்கப்பட்டது. அப்போதைய சித்தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திரத்துக்குப் போயிற்று. அந்த மாவட்டத்தில்தான் புகழ்மிக்க க்ஷேத்திரங்களான திருப்பதி, திருத்தணி முதலியன இருந்தன.
                                                                                            Kavi Ka.Mu.Sheriff                          
 இவர் திருப்பதியை மீட்க போராட்டம் தொடங்கினார். காங்கிரஸ்  கட்சியில் இருந்து கொண்டு இதுபோன்ற கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பது தமிழ்நாடு காங்கிரசின் கொள்கை. என்ன          

செய்வது. காங்கிரசை விட்டு வெளியேறினார். அவர் அதற்கு முன்பே கலாச்சார கழகமாக ஆரம்பித்திருந்த "தமிழரசுக் கழகத்தை" எல்லைப் போராட்டதில் ஈடுபடுத்தித்தானும் போரில் ஈடுபட்டார். எந்த காங்கிரசுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் தியாகம் செய்தாரோ அந்தக் கட்சி இவரை தூக்கி வெளியில் எறிந்து விட்டது. போர் குணம் இவருக்கு உடன் பிறந்ததாயிற்றே. விடுவாரா. இவரும் முழு மூச்சுடன் போராட்டத்தில் இறங்கினார். திருப்பதி கிடைக்காவிட்டாலும் திருத்தணி தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. அதில் இவருக்கு கே.விநாயகம் எனும் ஒரு தளபதியும் கிடைத்தார். இவர் திருத்தணியில் வழக்கறிஞராக இருந்தவர். பின்னாளில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிங்கம் போல நின்று வாதிட்டவர்.

ம.பொ.சிக்குத் துணையாக அன்று காங்கிரசிலிருந்து சின்ன அண்ணாமலை, ஜி.உமாபதி, கவி கா.மு.ஷெரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், கு.சா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர் கோடையிடி குப்புசாமி போன்றவர்கள் தமிழரசுக் கழகத்துக்கு வந்தனர். முன்பே கூறியபடி தெற்கெல்லை போராட்டத்திலும் ஈடுபட்டார். தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்தில் சேர்க்க வேண்டுமென்று போராடினார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேரள முதலமைச்சர், கேரள காங்கிரஸ் இவற்றோடு பேசிய பின், குளமாவது, மேடாவது என்று பேச, அந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது. இவர் எந்த இயக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அங்கு இவருக்கு எந்த பெருமையும் கிடைக்கவில்லை. ஆனால் இவர் 'திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு" என்று அடிக்கடி நடத்தினார். அந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். காலத்தில் இவருக்கு மேலவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இவரை அப்போது எல்லோரும் கேலி செய்தனர். எதிரியின் காலடியில் விழுந்து விட்டார் ஆதாயம் தேடி என்று. போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் இறைவனுக்கே என்று இவர் ஒரு கர்ம வீரராக வாழ்ந்தார்.
Kamaraj

சுதந்திரதின பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் சுதந்திரப் போடில் சிறப்பிடம் வகித்த சில இடங்களிலிருந்தெல்லாம் புனித மண் எடுத்து அதையெல்லாம் டில்லியில் காந்திசமாதி ராஜ்காட்டுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடாகியது. அந்த இயக்கத்தில் 1930இல் ராஜாஜி உப்பெடுத்து சத்தியாக்கிரகம் செய்த வேதாரண்யத்தில் புனித மண் எடுக்கும் பொறுப்பினை எம்.ஜி.ஆர். ம.பொ.சிக்குக் கொடுத்தார். தள்ளாத வயதிலும் அவர் அங்கு சென்று புனித மண் எடுத்து வந்து டில்லியில் சேர்த்தார். அதைப்பற்றி அவர் எழுதிய நூலில் அந்த பயணம் முழுவதிலும் காங்கிரஸ்காரர்கள் யாரும் வந்து கலந்து கொள்ளவோ, சந்திக்கவோ இல்லை என்று எழுதியிருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் உடனிருந்தாராம். தஞ்சை ரயில் நிலையத்தில் அன்றைய நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் சிங்காரவடிவேல் அவர்கள் டில்லி செல்வதற்காக நின்றிருந்த போது ம.பொ.சியைச் சந்தித்துப் பேசினாராம். தன் வாழ்நாள் எல்லாம் ராஜாஜியின் அந்தரங்க தொண்டராக இருந்தவர் இவர். எந்த பதவியையும் கேட்டுப் பெறாதவர் இவர். ராஜாஜி சுதந்திரா கட்சி தொடங்கிய போது எவ்வளவோ கூப்பிட்டும் ம.பொ.சி. அந்தக் கட்சிக்குப் போகவில்லை.

ராஜாஜி 1952இல் மந்திரிசபை அமைத்தபோது தஞ்சை நிலசீர்திருத்த சட்டம் 60:40 அவசரச்சட்டம் அமலாகியது. அந்த அவசரச் சட்டம் அமலாகிய தினம் ராஜாஜி தஞ்சை ராமநாதன் செட்டியார் ஹாலில், தஞ்சை நிலப்பிரபுக்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுவதாக ஏற்பாடு. அதுவரை இப்படியொரு சட்டம் வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. காலையில் ராஜாஜி வந்து விட்டார். அன்றைய "தி ஹிந்து" பத்திரிகையில் அவசரச்சட்டம் பற்றிய செய்தி வருகிறது. கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் மத்தியில் என்ன செய்வது கூட்டத்தை ரத்து செய்வதா என்ற நிலை. ராஜாஜி கூட்டத்தில் எதிர்ப்புக்கிடையே பேசினார். அந்தக் கூட்டத்தில் சி.சுப்பிரமணியமும், ம.பொ.சியும்தான் அவசரச் சட்டத்தை விளக்கிப் பேசினர். ஒருவழியாக நிலப்பிரப்புக்கள் சமாதானமாகி கூட்டம் முடிந்தது. ஆனால் தஞ்சை மாவட்டம் முழுவதும் எதிர்ப்பு அதிகமானதால், ராஜாஜி ம.பொ.சியிடம் நீங்கள் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லா இடங்களிலும் சட்டத்தை விளக்கிப் பேசி அனைவரும் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்று பணித்தார். அவரும் அதுபோலவே ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்தார். மாயவரத்தில் பேசும்போது இவர் கற்களால் தாக்கப்பட்டு காயமடைந்தார். பொதுத் தொண்டில் சுதந்திர இந்தியாவிலும் அடிபட்ட தேசபக்தர் ம.பொ.சி.மட்டும்தான்.

இந்த மாமனிதன் நெடுநாள் வாழ்ந்தார். மூன்றாம் வகுப்புப் படித்திருந்தாலும் டாக்டர் பட்டம் இவரைத் தேடி வந்தது. இவர்1995ஆம் வருடம் அக்டோபர் 3ம் தேதி தனது 89ஆம் வயதில் காந்தி பிறந்த நாளுக்கு அடுத்த நாள் உயிர் நீத்தார். வாழ்க ம.பொ.சி. புகழ்! வாழ்க தமிழ்!

Sunday, June 20, 2010

மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்

மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

மதுரை மாநகர் அளித்த தேசபக்தர்களில் என்.எம்.ஆர்.சுப்பராமன் முக்கியமானவர். மதுரை மக்கள்தொகையில் அன்று நாலில் ஒரு பங்கு இருந்த செளராஷ்டிர சமூகத்தில் 1905 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியில் இவர் பிறந்தார். இவரது தந்தை நாட்டாண்மை ராயலு ஐயர், தாய் காவேரி அம்மாள். இவருடைய குடும்பம் நல்ல செல்வ செழிப்புள்ள குடும்பம். இவரது இளம் வயதில் விளையாட்டுக்களில் குறிப்பாக கால்பந்தாட்டம், நீச்சல், மலையேற்றம் போன்றவற்றில் ஆர்வமுள்ளவர். படிப்பில் கேட்கவே வேண்டாம். நல்ல திறமைசாலி. இளம் வயதிலேயே முத்துராமையர் என்பவருடைய பெண்ணான பர்வதவர்த்தினியோடு இவருக்குத் திருமணம் ஆயிற்று.

படிக்கும் பருவத்திலேயே காந்தியடிகளுடைய பத்திரிகைகளைப் படித்து இவர் தேசபக்தி கொண்டார். காந்திஜியின் போராட்டங்கள் இவரைக் கவர்ந்தன. ரெளலட் சட்ட எதிர்ப்பு, ஜாலியன்வாலாபாக் படுகொலை இவைகள் இவரது மனதை மிகவும் பாதித்தன. இதனால் 1923இல் இவர் ராமேஸ்வரம் சென்று ராமநாதஸ்வாமி தரிசனம் செய்தபின் தூய கதராடை அணிந்து வந்தார். அதுமுதல் கடைசி வரை கதராடை அணிவதே அவர் வழக்கம். காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொண்டார்.

இவர் இயக்கத்தில் சேர்ந்த பின் முதன்முதலாக சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இவர் பங்குகொண்ட முதல் போராட்டம். இதில் ஜார்ஜ் ஜோசப், பசும்பொன் தேவர், காமராஜ் ஆகியோருடன் சேர்ந்து போராட வாய்ப்புக் கிடைத்தது. 1930இல் இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். அதே ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாடு காங்கிரசின் மகாநாடு மதுரையில் நடந்தது. இம்மாநாட்டுக்கு என்.எம்.ஆர்.தான் தலைமை வகித்தார். மதுரை கோரிப்பாளையத்தில் இன்று இராஜாஜி அரசு மருத்துவமனை இருக்கும் இடம் அன்று அடர்ந்த காடாக இருந்தது.வைகை ஆற்றின் கரைவரை ஒரே காடுதான். அந்தப் பகுதிகளில் ஓலைக் குடிசைகளில் பல கள்ளுக்கடைகள் இருந்தன. 1930 ஜூலை 30 அன்று அங்கு கள்ளுக்கடை மறியல் நடந்தது. மறியல் அகிம்சை வழியில் நடந்தது. அந்தக் குடிசைகளுக்குக் கள் குடிக்க வருபவர்களை கையெடுத்துக் கும்பிட்டு தொண்டர்கள் "வேண்டாம் ஐயா! கள் குடிக்காதீர்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். அங்கு வந்த குடிகாரர்களில் சிலர் பதில் சொல்லாமல் சென்றனர், சிலர் இவர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டுச் சென்றனர், சிலர் இவர்கள் மீது எச்சிலை உமிழ்ந்தனர். அப்படியும் மிகப் பொறுமையோடு சத்தியாக்கிரகிகள் வேண்டுகோள் விடுத்த வண்ணம் நின்றனர். அந்த நிலையில் திடீரென்று போலீஸார் வேனில் வந்து இறங்கி இவர்களைத் தடிகொண்டு தாக்கத் தொடங்கினர். சுற்றிலும் கூட்டம் கூடிநின்றது. அவர்களில் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். கள்ளுக்கடைகளுக்கு தீவைக்கவும் செய்தனர். போலீஸ் கண்மண் தெரியாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஏழு பேர் இறந்தனர், கூட்டத்திலிருந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறுநால் போலீசாரின் அத்துமீறிய நடவடிக்கைகளைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஒரு பெரிய கண்டன ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கள்ளுக்கடை மறியல் தன் தலைமையில் நடைபெறும் என்று என்.எம்.ஆர். அறிவித்தார். காங்கிரஸ் தொண்டர் இப்ராஹிம் என்பவர் தமுக்கு அடித்து ஊருக்கு இந்த செய்தியைத் தெரிவித்தார். மறுநாளும் வந்தது. கள்ளுக்கடை மறியல் தொடங்கியது.

மக்கட்கூட்டம் பெருக்கெடுத்து வந்தது. மாசிவீதி வழியாக ஊர்வலம் புறப்பட்டது. இது நடைபெறாமல் தடுக்க, போலீசார் என்.எம்.ஆர். உட்பட பல தொண்டர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டது. இவர் மீது தீ வைத்தல், கொள்ளை அடித்தல் போன்ற பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கில் இவருக்கு ஓராண்டு சிறையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறையில் ஏற்கனவே அவினாசிலிங்கம் செட்டியாரும் இருந்தார். அங்கு இவர்கள் இருவரும் சிறைக்கைதிகளுக்கு திருக்குறள், பகவான் இராமகிருஷ்ணர் வரலாறு போன்றவற்றை போதிக்கலாயினர். கணவர் சிறை சென்ற பிறகு என்.எம்.ஆரின் மனைவி சும்மாயிருப்பாரா? அவரும் மகளிர் அணியைச் சேர்த்துக் கொண்டு அன்னியத் துணிக்கடைகளை மறியல் செய்து சிறைப்பட்டு ஆறு மாத கால தண்டனை பெற்றார்.

1934இல் மதுரை வந்த காந்தியடிகள் என்.எம்.ஆர் வீட்டில் தங்கினார். அவருக்கு என்.எம்.ஆர். ஒரு திருக்குறள் நூலைப் பரிசாக அளித்தார். காந்திஜி இவரை வாழ்த்தினார். அதுவரை பிரம்மச்சரிய விரதம் இருந்த என்.எம்.ஆரின் மனதை மாற்றி குடும்ப வாழ்க்கைக்கு ஊக்குவித்தார். காந்திஜி மட்டுமல்ல 1935இல் பாபு ராஜேந்திர பிரசாத், 1936இல் ஜவஹர்லால் நேரு இவர்களும் தங்கள் தமிழக விஜயத்தின் போது மதுரையில் என்.எம்.ஆர். இல்லத்தில்தான் தங்கினார்கள்.

இந்த காலகட்டத்தில் தென்னக கோயில்களில் ஹரிஜனங்கள் ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற செய்தி கேட்டு காந்திஜி மிகவும் வருந்தினார். அவர்களுக்குத் திறக்காக கோயில்களுக்க்த் தானும் போவதில்லை என்ற விரதம் மேற்கொண்டார். பல கோயில்கள் அனைவருக்கும் கோயில் கதவுகளைத் திறந்து விட்டன. 1938ஆம் ஆண்டி ஜூன் மாதம் மதுரை காங்கிரஸ், ஹரிஜன் ஆலயப் பிரவெச்ச மாநாடு நடத்தியது. தொடர்ந்து மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தேறியது, பலத்த எதிர்ப்புக்கிடையில். எனினும் ராஜாஜியின் ராஜதந்திரமும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வீரமும் ஆலயப் பிரவேசம் நன்கு நடக்க துறைபுரிந்தது.

1942இல் மதுரையில் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தில் தடைமீறி ஊர்வலம் நடந்தது. மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் தலைமை வகித்தார். ஏ.வி. உட்பட பல தொண்டர்கள் பாதுகாப்புக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். மூன்று நாட்கள் கழித்து என்.எம்.ஆர். கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மதுரையில் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. மீண்டும் போலீஸ் தடியடி, கலகம். 1942 புரட்சியில் என்.எம்.ஆர். திருச்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் சிறை வைக்கப்பட்டார்.

இவர் மதுரை நகராட்சித் தலைவராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும், டில்லி பாராளுமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்திருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்கு மதுரையில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதை இவர் கடுமையாக எதிர்த்தார். மதுரை நகருக்குட்பட்ட பகுதிகளுக்கு மக்களுக்க நல்ல பல வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் தன் வாழ்நாளில் செய்த பல தொண்டுகளைப் பட்டியலிட்டால், அது மிகப் பெரிய நூலாக இருக்கும். இவர் வாழ்வின் கடைசி வரை காந்தியடிகளின் தொண்டராகவே வாழ்ந்தார். இறுதி நாட்களில் நாடு செல்லும் அவலம் குறித்தும், தனது தியாகங்கள் அவமதிக்கப்பட்ட அவமதிப்பு உணர்வாலும் துவண்டு போய், 1983 ஜனவரி 25 அன்று அமரர் ஆனார். வாழ்க தமிழ்நாட்டு காந்தி என்.எம்.ஆர்.சுப்பராமன் புகழ்!

மதுரை A.வைத்தியநாத ஐயர்

மதுரை A.வைத்தியநாத ஐயர்
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

மதுரை அளித்த தேசபக்தர்களில் ஏ.வைத்தியநாத ஐயர் குறிப்பிடத்தக்கவர். மகாத்மா காந்தி தமிழ்நாட்டு விஜயமொன்றின்போது குற்றால அருவிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்த குற்றாலநாத ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை என்றறிந்து கோயிலுக்குச் சென்று வழிபடாமல் திரும்பிவிட்டார். பின்னர் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்திலும் அதே போல நடந்தது. தமிழ்நாட்டில் என்று அனைவரும் சமமாகக் கோயிலில் அனுமதிக்கப்படுகிறார்களோ அதன்பிறகுதான் நான் கோயிலுக்குள் நுழைவேன் என்று சபதமேற்கொண்டார். 1936ல் தேர்தலில் வென்று ராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமராக (அன்று முதல்வர் பதவிக்கு அப்படித்தான் பெயர்) பதவியேற்றுக் கொண்டபின் ஆலயப் பிரவேசச் சட்டம் கொண்டு வந்தார். எல்லா ஆலயங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்க போராட வேண்டியிருந்தது.

மதுரையில் ஏ.வைத்தியநாத ஐயரிடம் மதுரை மீனாக்ஷி அம்மன் ஆலயத்தில் ஆலயப்பிரவேசம் நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் பல தொண்டர்களுடன், பின்னாளில் அமைச்சராக இருந்த மேலூர் திரு கக்கன் உட்பட பலர் தயாராக குளித்து, திருநீறணிந்த கோலத்தில் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்டபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டிருந்தனர். இந்த செய்தி ராஜாஜிக்குத் தெரிந்து அவர் முதுகுளத்தூர் திரு முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் பார்த்துக் கொள்வார், நீங்கள் திட்டமிட்டபடி ஆலயப்பிரவேசம் செய்யுங்கள் என்று மதுரை வைத்தியநாத ஐயருக்கும் தெரிவித்து விட்டார். தொண்டர்கள் ஆலயத்துக்குள் நுழைய தயாரான சமயம், எதிர் தரப்பில் தடி, கம்பு, வேல், அரிவாள் முதலிய ஆயுதங்களுடன் மற்றோரு கூட்டம் இவர்களைத் தடுக்க தயாராக இருந்தது. அந்த நேரம் பார்த்து முதுகுளத்தூர் தேவரின் ஆட்கள் அங்கு வந்து இறங்குவதைப் பார்த்ததுதான் தாமதம், அதுவரை வரிந்துகட்டிக்கொண்டு தொடை தட்டியவர்கள் காணாமல் போய்விட்டனர். ஆலயப் பிரவேசம் வைத்தியநாத ஐயர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதன் பின் மதுரை வந்த காந்தியடிகள் கோயிலுக்குச் சென்று வழிபட்டார் என்பதெல்லாம் வரலாற்றுச் செய்திகள். அந்த புகழ்வாய்ந்த ஆலயப்பிரவேச நிகழ்ச்சியின் நாயகன் இந்த ஏ.வைத்தியநாத ஐயர் அவர்கள்.

மதுரை ஏ.வைத்தியநாத ஐயர் மதுரையில் ஓர் புகழ் பெற்ற வழக்கறிஞர். காங்கிரஸ் இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர். இவருக்கு அந்நாளில் மதுரையில் ஏராளமான சீடர்கள், பலதரப்பட்டவர்கள். ராஜாஜியின் அத்தியந்த தோழர் இல்லையில்லை பக்தர். அந்நாளில் அப்பகுதி முழுவதிலும் ஹரிஜனங்கள் அனைவரும் இவரைத் தங்கள் தந்தைபோல எண்ணிப் போற்றி வந்தனர். இவரது குடும்பத்தில் ஒருவராகவும், தொண்டராகவும் இருந்தவர்களில் முதன்மையானவர் முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் திரு பி.கக்கன் அவர்கள். தோற்றத்தில் இவர் மிக ஆசாரசீலராக இருப்பார். பஞ்சகச்ச வேஷ்டி, கதர் ஜிப்பா, மடித்துத் தோள்மீது போட்ட கதர் துண்டு, நெற்றி நிறைய விபூதி, தலையில் உச்சிக்குடுமி, மெலிந்த உடல் இதுதான் அவரது தோற்றம். அனைவருக்கும் புரியும்படியான எளிய பேச்சு வழக்கில் இவர் பேச்சு அமைந்திருக்கும்.

இவர் வீடு தேசபக்தர்களுக்கு ஒரு சத்திரம். எப்போதும் இவர் வீட்டில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். சிறைசென்றுவிட்ட காங்கிரஸ் தொண்டர்களின் குடும்பத்தினர் வந்தால் அவர்களுக்கு பண உதவி உடனே செய்வார். ராஜாஜி மதுரை வந்தால் இவர் வீட்டில்தான் தங்குவார். இவர்தான் இப்படியென்றால் இவரது மனைவி அகிலாண்டத்தம்மாள் அதற்கும் மேல்.

இவர் பிறந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த விஷ்ணம்பேட்டை. கொள்ளிடக்கரை ஊர். தந்தயார் அருணாசலம் அய்யர், தாயார் லட்சுமி அம்மாள். வைத்தியநாதய்யர் இவர்களது இரண்டாவது மகன். அருணாசலம் ஐயர் புதுக்கோட்டை மகாராஜா பள்ளியில் கணக்கு ஆசிரியராக இருந்தார். அங்கிருந்து அனைவரும் மதுரையில் குடியேறினர். இவர் மதுரையில் பாரதியார் ஆசிரியராக சிறிது காலம் இருந்த சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளி இறுதி வகுப்பில் தங்கப்பதக்கம் வென்றார். அரசாங்க உதவித்தொகை கிடைத்தது, அதில் மேற்கல்வி பயின்றார். மதுரையிலும், பின்னர் மாநிலக் கல்லூரியிலும் படித்துத் தேறினார். அப்போது சென்னையில் விபின் சந்திர பால் வந்து கடற்கரையில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அதில் மனம் ஈடுபட்டு இவர் தேசபக்தர் ஆனார்.

இவருக்கு சுந்தரராஜன், சங்கரன், சதாசிவம் என்ற மூன்று குமாரர்கள். சுலோசனா, சாவித்திரி எனும் இரண்டு புதல்விகள். மதுரைக்கு வந்த பெருந்தலைவர் சி.ஆர்.தாஸ் அவர்களை வைத்தியநாதய்யர் சந்தித்தார். அவர் அறிவுரைப்படி வக்கீல் தொழிலை விடாமல், அதன் மூலம் பலருக்கு உதவி செய்து கொண்டும், நாட்டுப்பணியாற்றிக்கொண்டும் இருந்தார். பல தேசிய தலைவர்கள் சிறையிலிருந்து வெளிவரும்போது அவர்களை எதிர்கொண்டு வரவேற்கும் நல்ல பணியைச் செய்து வந்தார். ஜார்ஜ் ஜோசப், துர்க்காபாய் போன்றவர்களை இவர்தான் வரவேற்றுத் தன் இல்லம் அழைத்து வந்தார். மதுரையில் ஏற்படும் வெள்ளம், தீ விபத்து காலங்களில் இவர் ஓடிச்சென்று உதவி ஏற்பாடுகளைச் செய்து வந்தார். கருப்பையா பாரதி எனும் தொண்டர் கொலை செய்யப்பட்ட போது அவரது குடும்பத்துக்கு நிதி வசூல் செய்து உதவி செய்தார்.

1946இல் வைகை நதியின் வடகரையில் திராவிடக் கழக மகாநாடு நடைபெற்றது. சில தி.க.தொண்டர்கள் மீனாக்ஷி அம்மன் கோயிலுக்குச் சென்று அங்கு கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த பக்தர்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு போய் மகாநாட்டு பந்தல் வரை விட்டனர். மகாநாட்டு பந்தலும் தீயில் எரிந்தது. அப்போது ஷெனாய் நகரில் ஈ.வே.ரா தங்கியிருந்த வீட்டைச் சுற்றியும் கூட்டம் கூடியது. போலீசும் தடுமாறியது. தகவல் அறிந்த அய்யர் அங்கு விரைந்து சென்று நடுவில் நின்று பொதுமக்களைத் தடுத்து நிறுத்தி அமைதிப்படுத்தினார். பெரியாரையும் அவரது தொண்டர்களையும் பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். (தகவல்: திரு ஐ.மாயாண்டி பாரதி - நூல்: "விடுதலை வேள்வியில் தமிழகம்")

இவர் 1947-52 இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1947இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒரு ரயில்வே ஸ்ட்ரைக் நடந்தது. தலைமறைவாக இருந்த பி.ராமமூர்த்தி மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு முக்கிய வேலையாகச் செல்ல வேண்டி இருந்தது. பி.ஆர். வைத்தியநாத அய்யரை அணுகினார். சென்னைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். எதிர் கட்சியைச் சேர்ந்தவர், ஒரு கம்யூனிஸ்ட் இருந்தாலும் சரியென்று இவரைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். வழியில் போலீஸ் வண்டியை நிறுத்தியபோது, பி.ஆர்.அடியில் படுத்துக் கொண்டார், ஐயர், "நான் எம்.எல்.ஏ. அவசரமாக செல்கிறேன்" என்று சொல்லவும் வழிவிட்டனர். பி.ராமமூர்த்தியும் தலை தப்பினார். இவர் 1946இல் மதுரையில் மூளவிருந்த மதக் கலவரத்தையும் லாவகமாக தடுத்து நிறுத்தினார்.

1930இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரையிலிருந்து ஐயர் தலைமையில் ஒரு படை வேதாரண்யம் சென்று உப்பு எடுத்தது. அங்கு புளிய மிளாறினால் அடி வாங்கி சிறையிலும் அடைக்கப்பட்டார். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்துக்காக சட்டத்தை மீறி பேசிய குற்றத்துக்காக ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இவர் பாதுகாப்புக் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார்.

தீண்டாமை ஒழிப்புக்காக இவர் நடத்திய ஆலயப் பிரவேசம் குறித்து இக்கட்டுரையின் முதலில் கூறியபடி, இவர் என்.எம்.ஆர்.சுப்பராமன், டாக்டர் ஜி.ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகலா பட்டாபிராமையா, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை, மட்டப்பாறை வெங்கட்டராமையர் ஆகியோருடன் ஐ.மாயாண்டி பாரதி போன்ற மாணவர்களோடும் சேர்ந்து ஆலயப் பிரவேசப் பிரச்சாரம் மேற்கொண்டார். இவரது அரிஜன சேவையும், தீண்டாமை ஒழிப்பும் அவரது இறுதிக் காலம் தொடர்ந்தது.

1930இல் உப்பு சத்தியாக்கிரகத்தில் சிறைப்பட்டபோது இவர் அபராதம் செலுத்த மறுத்ததால் இவரது கார் ஏலம் விடப்பட்டது. ஆனால் மதுரையில் இவரது காரை ஏலத்தில் எடுக்க எவருமே முன்வரவில்லை. இவரது குடும்பமே நாட்டுக்காகச் சிறை சென்ற குடும்பம். மகன் வை.சங்கரன் ஆறு மாதம் அலிப்பூர் சிறையில் இருந்தார். அய்யரின் தம்பியும் சிறை சென்றார். மனைவி அகிலாண்டத்தம்மாள், கக்கன் அவர்கள் தன் தாயாகக் கருதிய இவரும் சிறை சென்றார்.

தியாகசீலர் மதுரை ஏ.வைத்தியநாதையர் பற்றி பார்த்தோம். இவர் மட்டுமல்ல, இவரது மனைவி திருமதி அகிலாண்டத்தம்மாள், மகன் ஏ.வி.சங்கரன் ஆகியோரும் நாட்டுக்காகச் சிறை சென்ற தியாகிகளாவர். குடும்பத்தார் மட்டுமா? இல்லை, குடும்பத்தில் ஒருவராக இருந்து மதுரை ஏ.வி.ஐயரின் குடும்பப் பொறுப்புக்களையெல்லாம் கவனித்து வந்த வளர்ப்பு மகன் தியாகசீலர் பூ.கக்கன் அவர்களும் ஒரு சிறைசென்ற தியாகி. இப்படி இவரும் இவரோடு சேர்ந்தவர்களும் நாட்டுக்காக உழைத்தவர்கள்.இவர் 1955ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மதுரையில் காலமானார்.

மதுரை ஏ.வைத்தியநாத ஐயரின் மனைவி திருமதி அகிலாண்டத்தம்மாள் 1899இல் பிறந்தவர். மதுரைக்கு இவர் வீட்டுக்கு வரும் தொண்டர்களுக்கெல்லாம் அலுப்பு சலிப்பு இல்லாமல் மலர்ந்து இன்முகத்தோடு உபசரித்து உணவு வழங்கியவர் இவர். இவரை 'அன்னபூரணி' என்றே தொண்டர்கள் எல்லாம் புகழ்ந்து பேசுவார்கள். அன்றைய தொண்டர்கள் மதுரைக்கு வந்த எவரும் இவர் கையால் உணவருந்தாமல் போனதில்லை. இவர் 1932 மற்றும் 1933ஆம் ஆண்டுகளில் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு 2 மாத சிறை தண்டனையும், 1941இல் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் 3 மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டார். இவர் மதுரை, வேலூர் ஆகிய சிறைகளில் இருந்திருக்கிறார். ஐயருக்குச் சிறந்த மனைவியாகவும், காங்கிரஸ் இயக்கத்துக்கு ஒரு ஊக்கமுள்ள தொண்டராகவும், காங்கிரஸ் தொண்டர்களுக்கெல்லாம் உணவு அளித்து அன்னபூரணியாகவும் திகழ்ந்தார்.

இவர்களது குமாரர்தான் பிரபல வழக்கறிஞர் ஏ.வி.சங்கரன், எம்.ஏ.,பி.எல். இவர் 1942இல் சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மகாத்மா காந்தி ஆகாகான் அரண்மனையில் உண்ணாவிரதம் இருக்கிறார் என்ற செய்தி கேட்டுத் தானும் உண்ணாவிரதம் இருந்து, மறியலிலும் ஈடுபட்டார். இவர் மறியல் செய்தமைக்காக அன்றைய இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் 6 மாத காலம் தண்டனை விதிக்கப்பட்டார். இவர் ஒருமுறை திருச்சி தேவர் அரங்கத்தில் நடந்த எம்.ஆர்.ராதாவின் கீமாயணம் நாடகம் பார்க்கப் போயிருந்தார். அந்த நாடகத்தில் எம்.ஆர்.ராதா ராமனை இழிவு படுத்தியும், சீதையைப் பற்றிக் கொச்சையாகப் பேசியும் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எழுந்து சங்கரன், நீங்கள் சொல்லும் இந்த 'கீமாயண'க் கதைக்கான விஷயங்கள் எந்த நூலில் இருக்கிறது. இவற்றுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா என்று கேள்வி எழுப்பினார். திராவிட இயக்க நிகழ்ச்சிகளில் இதுபோன்ற நியாயமான கேள்விகளை யாராவது கேட்டால் என்ன ஆகுமோ அது அன்று சங்கரனுக்கு ஆயிற்று. இது நமது சுதந்திர இந்தியாவில் எல்லா உரிமைகளும் பெற்றிருந்த நேரத்தில், அரசாங்கத்தால் அல்ல குடிமக்களில் ஒரு பகுதியினரால் வழங்கப்பட்ட தீர்ப்பு. எனினும் மதுரை ஏ.வி.ஐயர் குடும்பம் ஒரு தியாகக் குடும்பம். வாழ்க அவர்களது புகழ்! வாழ்க தியாக வைத்தியநாத அய்யரின் புகழ்!

Saturday, June 19, 2010

கோவை அ. அய்யாமுத்து

கோவை அ. அய்யாமுத்து
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

தமிழக அரசியலில் இருவேறு துருவங்களாக மின்னிய ராஜாஜி, பெரியார் ஈ.வே.ரா. ஆகிய இருவரிடமும் நட்பு பாராட்டி அரசியலிலும், கதர் அபிவிருத்திப் பணியிலும் ஈடுபட்ட ஒரு தலைசிறந்த தேசபக்தர் கோவை அ.அய்யாமுத்து. இவரைப் பற்றிய ஒரு தவறான செய்தியை யாரோ சிலர் மகாத்மா காந்தியடிகளிடம் சொல்லிவிட, அவரும் அதை உண்மை என்று நம்பி தன் பத்திரிகையில் இவரைக் கண்டித்துவிட, இவரோ நேரே காந்தியடிகளிடம் சென்று அவரது தவறைச்சுட்டிக் காட்டி அதனை அவர் திருத்திக்கொள்ளும்படி செய்த அகிம்சை வழி போராளி இவர். அவரைப் பற்றி இந்த சிறு கட்டுரையில் பார்ப்போம்.

பால கங்காதர திலகரின் கால்த்துக்குப் பிறகு இந்திய சுதந்திரப் போர் காந்திஜியின் தலைமையில், அகிம்சை வழி அறப்போராட்டமாக நடைபெற்றது. அப்படிப்பட்ட அகிம்சை வழிப் படையில் இருந்தவர் அய்யாமுத்து. இவருடைய சுதேசிப் பற்றும், காந்திய வழிமுறைகளில் அசைக்க முடியாத நம்பிக்கையும், கடின உழைப்பும், நேர்மை தவறாத இவரது பண்பும் இவர் மீது ராஜாஜியை அன்பு கொள்ளச் செய்தது.

காந்திஜி 1921ஆம் ஆண்டு கோயம்புத்தூருக்கு வருகை புரிந்தார். அன்றைய கோவை மாநகரம் அவருக்கு அளித்த வரவேற்பில் அவருடைய ஒத்துழையாமை இயக்கத்தில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் காந்திஜி அவர்களை கைராட்டையில் நூல் நூற்கத் தொடங்குங்கள், கதர் துணிகளையே அணியுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைத்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கோவை அய்யாமுத்து அன்று முதல் தன் வாழ்வை கதர் பணிக்கே அர்ப்பணித்துக் கொண்டார்.

அதுவரை அன்னிய ஆடைகள் விற்பனை செய்த ரோவர் அண் கோ எனும் நிறுவனத்தை நடத்தி வந்தவர், அந்த வியாபாரத்தை நிறுத்தி விட்டு ரங்கூன் நகருக்குச் சென்றார். அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தபின் கோவை வந்த அவர் கதராடை அணிந்து, கதர் வியாபாரியாகத் திரும்பி வந்தார். கோவை மாவட்டத்தில் பரஞ்சேர்வழி எனும் கிராமம் இவரது பூர்வீக ஊர். இவரது தந்தையார் அங்கண்ண கவுண்டர், தாய் மாராக்காள். இவர் 1898இல் பிறந்தவர்.

கோவையில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். அப்போதே ஆங்கிலத்தில் நல்ல அனுபவம் இருந்தது. நன்கு ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் புலமை பெற்றார். முதலில் இவர் ஸ்பென்சர் கம்பெனி உட்பட பல வேலைகளில் இருந்தார். இவர் இளமைப் பருவத்தில் 1914இல் முதல் உலகப் போர் தொடங்கியது. இவர் யுத்தத்தில் சேர்ந்து போரிட விரும்பினார். 1918இல் ராணுவத்தில் சேர்ந்து இப்போதை ஈராக்கில் பணியாற்றினார். ஊர் திரும்பிய பின் 1921இல் கோவிந்தம்மாளை இவர் திருமணம் செய்து கொண்டார்.

இவரைப் போலவே இவரது மனைவியும் கதர் தொண்டர். ராட்டையில் நூல் நூற்பதை ஒரு வேள்வியாக நடத்தி வந்தார். அய்யாமுத்து கிராமங்கள் தோறும் பயணம் செய்து சுதந்திரப் பிரச்சாரமும், கதர்த் தொண்டும் செய்து வரலானார். ஆங்காங்கே ராட்டையில் நூல் நூற்பவர்களுடைய நூல்களை வாங்கி திருப்பூர் காதி வஸ்த்திராலயத்துக்கு அனுப்பி வந்தார். இவரே கோவையில் ஒரு கதர் கடையைத் துவங்கி கதர் விற்பனையை மேற்கொண்டார். அந்த சமயம் திருப்பூர் கதர் போர்டின் தலைவர் காங்கிரசிலிருந்த பெரியார் ஈ.வே.ரா. அவருடன் அய்யாமுத்துவுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

அந்த சமயம் இப்போதைய கேரளத்திலுள்ள வைக்கம் எனும் ஊரில் தீண்டாமை கடுமையாக நிலவி வந்தது. அங்குள்ள ஆலயத்தைச்சுற்றி நான்கு தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடமாடக்கூடாது என்ற உத்தரவு அமலில் இருந்தது. இதனை எதிர்த்து கேரளத்தின் சர்வோதயத் தலைவர் கேளப்பான், கே.பி.கேசவ மேனன் ஆகியோர் சத்தியாக்கிரகம் செய்தனர். தமிழக மக்கள் சார்பில் பெரியார் ஈ.வே.ரா.வும் அய்யாமுத்துவும் அங்கு சென்று கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் அய்யாமுத்துவுக்கு ஒரு மாதம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. இவர் விடுதலையாகி சிறையிலிருந்து வெளி வந்தபோது இவரை வரவேற்றவர் ராஜாஜி.

திருச்செங்கோட்டில் பி.கே.ரத்தினசபாபதி கவுண்டர் எனும் ஜமீந்தார் கொடுத்த நிலத்தில் ராஜாஜியால் காந்தி ஆசிரமம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் அய்யாமுத்து பெரும்பாடுபட்டு கட்டடங்களை உருவாக்கத் துணை புரிந்தார். அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் ராட்டையில் நூல் நூற்க வேண்டும். அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வியும் ராட்டை நூல் நூற்கும் பயிற்சியும் தர்ப்பட்டது. தீவிரமாக மதுவிலக்குப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. ராஜாஜியும் க.சந்தானமும் தங்கள் குடும்பத்தோடு ஆசிரமத்தில் குடியேறினர். கல்கி கிருஷ்ணமூர்த்தியும் இங்கு வந்து 'விமோசனம்' எனும் மதுவிலக்குப் பிரச்சார பத்திரிகையின் ஆசிரியரானார்.

அந்த காலத்தில் ஆண்டுதோறும் காங்கிரஸ் இயக்கத்தின் ஆண்டு மாநாடு பல ஊர்களிலும் நடைபெறும். அங்கெல்லாம் அய்யாமுத்து சென்று வந்தார். அப்படி அவர் சென்ற காங்கிரஸ் மாநாடுகள் பெல்காம், லாஹூர், கராச்சி, லக்னோ, ராம்கர், ஹரிபுரா, நாசிக், ஆவடி என்று தொடர்ச்சியாக இவர் மாநாடுகளுக்குச் சென்று வந்தார். ஊர் ஊராகச் சென்று கிராம மக்களை கதர் நூற்கவும், கதர் உடைகளை அணியவும், நூற்ற நூலை திருப்பூர் காதி வஸ்த்திராலயத்தில் கொடுத்து துணியாக வாங்கி அணியவும் பழக்கப்படுத்தினார். ஆண்டில் பெரும் பகுதி இவர் இதுபோன்ற கதர் பிரச்சார் சுற்றுப்பயண்த்தில்தான் கழித்தார். இவரால் கதர் உற்பத்தி அதிகரித்தது. கிராமங்களில் நூல் நூற்போர் எண்ணிக்கை அதிகரித்தது. கதர் என்றால் அய்யாமுத்து என்று ராஜாஜி இவரைப் பாராட்டினார். இவர் காலத்தில் கதர்த் தொழில் உச்ச கட்டத்தை அடைந்தது. திருப்பூர் காதி வஸ்த்திராலயமும் அதிக லாபம் பெற்றது.

1936இல் இவர் தமிழ்நாடு சர்க்கா சங்கத்தின் செயலாளர் ஆனார். அகில பாரத சர்க்கா சங்கத்தின் செயலாளருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக இவர் தன் பதவியை ராஜிநாமா செய்தார். ராஜாஜி தலையிட்டு இவரை வார்தா சென்று காந்திஜியைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போதுதான் நாம் முன்பே குறிப்பிட்டபடி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்து, காந்திஜி கொண்டிருந்த கருத்தை மாற்றிக்கொள்ளச் செய்தார். அப்போது காந்திஜி தனது அகில இந்திய சர்க்கா சங்க தலைவர் பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை அய்யாமுத்துவிடம் தந்தார். அதைப் பெற்றுக் கொள்ளாமல் அய்யாமுத்து காந்திஜியிடம் "இதை ஏன் என்னிடம் கொடுக்கிறீர்கள், உங்களைப் படைத்த கடவுளிடம் கொடுங்கள் என்றார்". இத்தோடு பிரச்சினை முடிவுக்கு வந்து அய்யாமுத்து மீண்டும் ஊர் திரும்பி கதர் பணிகளைக் கவனிக்கலானார்.

இதன் பிறகும் கூட அய்யாமுத்துவின் எதிரிகள் இவரைப் பற்றி பல பொய்யான குற்றச்சாட்டுகளை காந்திஜியிடம் கொண்டு சென்றனர். அவை அனைத்தும் பொய் என்று பிசுபிசுத்துப் போயிற்று. 1932இல் இவர் புஞ்சை புளியம்பட்டியில் போலீஸ் தடியடியில் காயமடைந்தார். ஆறு மாதம் வேலூர் சிறையில் கிடந்தார். மறுபடியும் ஒரு ஆறுமாதம் சிறையும் ஐம்பது ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டார். இந்த சிறைவாசம் கோவை சிறையில். இதோடு முன்னர் 1931இல் சாத்தான்குளத்தில் பேசிய பேச்சுக்காக மற்றொரு ஆறுமாத சிறை தண்டனையும் ஒருமிக்க அனுபவிக்க வேண்டியதாயிற்று. ராஜாஜியிடம் எந்த அளவு மரியாதை இருந்திருந்தால் இவர் "ராஜாஜி என் தந்தை" என்று ஒரு நூலை எழுதியிருப்பார். 1960இல் இவர் ராஜாஜியின் சுதந்திராக் கட்சியில் சேர்ந்து பின் 1966இல் அதிலிருந்து வெளியேறினார்.

அதே அளவு நட்பும் உரிமையும் பெரியாரிடமும் அவருக்கு இருந்தது. பெரியாருடைய 'குடியரசு' பத்திரிகையை ஈரோட்டிலிருந்து சென்னைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து வெளியிட அய்யாமுத்துவை பெரியார் பணித்தார். அப்படியே செய்த அய்யாமுத்து விற்பனையை பலமடங்கு உயர்த்திக் காட்டினார். அவரோடு ஏற்பட்ட ஒரு பிணக்கின் காரணமாக அதைவிட்டு விலகினார். இந்திய சுதந்திர தினத்தி 1947இல் இவர் தான் வசித்த புஞ்சை புளியம்பட்டியில் எளிமையாகக் கொண்டாடினார். வாழ்வையே நாட்டுக்கும், கதர் தொழிலுக்கும், இந்திய சுதந்திரத்துக்கும் அர்ப்பணித்த இந்த அற்புத தம்பதியரின் தியாக வாழ்க்கை போற்றுதலுக்குரியதாகும். வாழ்க கோவை அய்யாமுத்து புகழ்!

Thursday, June 17, 2010

டாக்டர் வரதராஜுலு நாயுடு

டாக்டர் வரதராஜுலு நாயுடு
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

டாக்டர் வரதராஜுலு நாயுடு எனும் இந்தப் பெயரை சுதந்திரப் போராட்ட வரலாறு, தமிழக அரசியல் வரலாறு என்று எடுத்துக் கொண்டால் யாரால் மறக்க முடியும்? தமிழ்நாடு அரசியலில் முன்னணி நட்சத்திரங்களான ஈ.வே.ரா., ராஜாஜி, திரு.வி.க., சர்க்கரை செட்டியார், எஸ்.சீனிவாச ஐயங்கார் இப்படிப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் நாயுடு. அரசியல், சமூகம், தொழிற்சங்க இயக்கம் அத்தனையிலும் இவர் முத்திரை பதித்தவர். இவரது வரலாற்றைப் பார்ப்பதற்கு முன் இவர் காலத்திலிருந்து அரசியல் சமூக சூழ்நிலைகளைச் சிறிது பார்க்கலாம்.

பிராமண எதிர்ப்பு என்பது ஜஸ்டிஸ் கட்சியின் அடிப்படை கொள்கை. இந்தக் கொள்கையிலிருந்து சிறிது மாறுபட்டு 1917இல் திவான்பகதூர் கேசவபிள்ளை தலைமையில் "சென்னை மாகாண சங்கம்" எனும் அமைப்பு தோன்றியது. இதன் கொள்கை, காங்கிரசின் சுதந்திரக் கோரிக்கைக்கும் ஆதரவளித்து, தென்னாட்டு பிராமணரல்லாதார் நலனுக்காகவும் பாடுபடுவது என்பதாகும். இந்த அமைப்பின் துணைத் தலைவராக ஈ.வே.ராவும் நாயுடுவும் இருந்தனர். நாயுடு தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தங்களது புதிய இயக்கத்திற்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இப்படித் தொடங்கியதுதான் நாயுடுவின் அரசியல் சமூக ஈடுபாடு.

1917இல் தென்னிந்திய ரயில்வேயின் தொழிலாளர் சங்கத்தை இவர் தொடங்கினார். ரயில்வே ஒர்க்ஷாப் அப்போது நாகப்பட்டினத்தில் இருந்தது. அதன் பிறகுதான் அது திருச்சிராப்பள்ளிக்கு மாற்றப்பட்டது. சேலத்தில் நாயுடு "பிரபஞ்சமித்திரன்" எனும் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார். அதில் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கப் போக்கையும், தொழிலாளர் நலனுக்கு எதிரான போக்கையும் கடுமையாக எதிர்த்து எழுதிவந்தார். இவரது எழுத்தின் தீவிரத்தைக் கருதி பிரிட்டிஷ் அரசு இவரிடம் பத்திரிகைக்கு ஜாமீன் தொகையாக ரூ.1000 செலுத்த உத்தரவு இட்டது. அப்படி இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை என்று அறிவித்தது. இவர் ஜாமீன் தொகையைச் செலுத்த மறுத்ததால் இவர் ஆகஸ்ட் 22, 1918இல் திருச்சி ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் நாயுடுவின் சார்பில் வாதாடிய வக்கீல் ராஜாஜி. அப்பீலில் வழக்கில் வென்றார். மதுரையில் நாயுடு பேசிய பேச்சுக்காக நான்கு மாத சிறை தண்டனை கிடைத்தது.

நாயுடுவுக்கு சிறை என்றதும் மதுரையில் போராட்டம் தொடங்கியது. மதுரை மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே ரிசர்வ் போலீஸ் வரவழைக்கப்பட்டது. போலீஸ் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று வெறியாட்டம் போட்டது. துப்பாக்கிச்சூட்டில் நீலமேகசுப்பையா எனும் இளைஞன் குண்டடிபட்டு இறந்து போனான். அவன் இறக்கும் போது ராஜாஜி, மதுரை ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் அருகில் இருந்தனர். அவன் "நாயுடு உயிர் தப்பியதற்காக சந்தோஷப்படுகிறேன்" என்று சொல்லிவிட்டு உயிரை விட்டானாம் அவன்.

மதுரையில் நாயுடுவின் மீது வழக்கு. அதில் அவருக்கு எதிராக சாட்சி சொல்ல யாரும் வரவில்லை. எனவே அரசாங்க பிராசிகியூஷன் தரப்பில் எம்.டி.சுப்பிரமணிய முதலியார் என்பவரை சாட்சியாக அறிவித்தார்கள். அவர் சர் பி.டி.ராஜன் அவர்களின் சித்தப்பா. அவர் காங்கிரசுக்கு எதிரான ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர். அப்படி இருந்த போதிலும் அவர் நாயுடுவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல மறுத்து விட்டார். பரம்பரை பெருமை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவரல்லவா? கேவலம் கட்சி வேறுபாட்டுக்காக, நாட்டுக்காக உழைக்கும் ஒரு நல்லவருக்கு எதிராக சாட்சி சொல்லி அவரைச் சிறைக்கு அனுப்ப அந்த பெருமகனார் ஒத்துக் கொள்ளவில்லை. என்னே அன்றைய பண்பாடு!

மதுரை சிறையில் டாக்டர் நாயுடு அடைக்கப்பட்டிருந்த போது அவருக்கு சொல்லொணா கொடுமைகள் இழைக்கப்பட்டன. அந்த விவரங்களை எப்படியோ சிறைக்கு வெளியே கசியவிட்டு, அவை செய்தித்தாள்களில் வெளிவரும்படி செய்துவிட்டார் நாயுடு. இதனைக் கண்ட சிறை ஆதிகாரிகள் ஆத்திரமடைந்தனர். சிறைக் கட்டுப்பாட்டை மீறிவிட்டார் என்று சொல்லி அவரை இரண்டு வாரங்கள் தனிமைக் கொட்டடியில் அடைத்துவைத்திருந்தனர். இந்த செய்தியும் மதுரை மக்களுக்கு தெரியவந்தது. மறுபடியும் மக்கள் எழுச்சி, போராட்டம் இவை தொடர்ந்தன. அப்போது சென்னை மாகாண கவர்னராக இருந்த வெல்லிங்டனுக்கு இதெல்லாம் தெரிய வந்தது. நடக்கும் நிகழ்ச்சிகள் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மேலும் இராமநாதபுரம் ராஜாவும் இதில் தலையிட்டு டாக்டர் நாயுடுவுக்கு அளிக்கப்படும் சிறைக்கொடுமையிலிருந்து அவரை விடுவித்து, அவரை மதுரையிலிருந்து திருச்சி சிறைக்கு மாற்றச் செய்தனர். அங்கு நாயுடுவுக்கு வைத்திய வசதியும் செய்து கொடுக்கப்பட்டு, மதுரை போன்ற சிறைக்கொடுமைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொண்டனர்.

1923ஆம் ஆண்டு. அப்போதைய மதுரை கலெக்டர், டாக்டர் நாயுடு மதுரை ஜில்லாவுக்குள் நுழையக்கூடாது என்று ஒரு தடையுத்தரவு போட்டார். அந்த சமயம் உத்தமபாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் மாநாடு ஒன்று நடந்தது. டாக்டர் நாயுடுவைத் தலைமை தாங்க அழைத்திருந்தனர். அவரும் மதுரை கலெக்டரின் தடையுத்தரவையும் மீறி அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்து கலந்து கொண்டார். அங்கு அவர் பேசிய பேச்சு வெள்ளை ஆதிக்க வர்க்கத்துக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. வேறு என்ன செய்ய முடியும், அந்த தேசபக்தரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த முறை அவருக்குக் கிடைத்தது 9 மாத சிறை தண்டனை.

1924 பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் சென்னை மாகாண தொழிலாளர் மகாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1926இல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் எனும் தொழிலாளர் அமைப்புத் தோன்றியது. இதுதான் மூத்த தொழிற்சங்கம். இதிலிருந்துதான் இந்திய தேசிய தொழ்ற்சங்க காங்கிரஸ் எனும் காங்கிரஸ் அமைப்பும், பிறகு ஏ.ஐ.டி.யு.சி. யிலிருந்து தொழிற்சங்க மையம் எனும் மார்க்சிஸ்ட் சங்க அமைப்பும் தோன்றின. பிறகு காலப்போக்கில் கட்சிக்கொரு தொழிற்சங்கம் என்று தொழிலாளர்களின் கட்டமைப்பு சிதறுண்டு போயிற்று என்பது வேறு கதை. 1926இல் ஏ.ஐ.டி.யு.சி.யைத் துவக்கியவர்களில் டாக்டர் நாயுடுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்வையும், தொழிலாளர் இயக்கங்களையும் தொடங்கி வளரச் செய்த பெருமை இவருக்கு உண்டு. இவருடைய பத்திரிகையில்தான் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் முதன்முதலில் ஒரு அச்சுக்கோக்கும் தொழிலாளியாகத் தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தொழிலாளர்களுக்காகப் பாடுபட்ட டாக்டர் நாயுடுவின் பத்திரிகையிலேயே தொழிலாளர் பிரச்சினை தலைதூக்கியது அப்போது அவர் நடந்து கொண்டது எல்லாம் வேறு கதை. அதனை ம.பொ.சியின் "எனது போராட்டங்கள்" எனும் நூலில் படித்துப் பாருங்கள்.

இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங்கிய இரு சுதந்திரப் போர் வீரர்களில் டாக்டர் நாயுடுவும், வீரமுரசு வ.வெ.சு.ஐயரும் குறிப்பிடத்தக்கவர்கள். வ.வெ.சு.ஐயரின் வாழ்க்கைச் சரிதம் இந்த வலைத்தளத்தில் மற்றொரு பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வ.வெ.சு.ஐயர் நடத்திய பாரத்துவாஜ ஆசிரமத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒரு நன்கொடை வழங்கியிருந்தது. அப்போது அந்த ஆசிரமத்தில் ஜாதி வேற்பாடு பார்த்து உணவு வழங்கப்படுகிறது என்ற பிரச்சினை எழுந்தது. வ.வெ.சு.ஐயருக்கு எதிராக ஈ.வே.ரா. பெரியாரும், டாக்டர் நாயுடு போன்றோரும் எதிர்க்குரல் எழுப்பினர். அந்தப் பிரச்சினை மகாத்மா காந்தி வரையில் சென்றது. பின்னர் அது முடிவுக்கும் வந்தது. அதன் பிறகு ஐயர் நீண்ட நாட்கள் உயிரோடு இல்லை, பாபநாசம் அருவியில் தன் மகளைக் காப்பதற்காக முயன்றபோது அவரும் வீழ்ந்து உயிர் துறந்தார்.

டாக்டர் நாயுடுவின் காலம் தமிழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சகாப்தம். வாழ்க டாக்டர் வரதராஜுலு நாயுடு புகழ்!

Wednesday, June 16, 2010

வீரன் செண்பகராமன் பிள்ளை

"எம்டன்" புகழ் வீரன் செண்பகராமன் பிள்ளை
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

வீரன் செண்பகராமன் எனும் பெயரை முதல் உலக யுத்தத்தின் போது கேட்டவர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு வந்த "எம்டன்" எனும் ஜெர்மானிய கப்பலில் இருந்து குண்டு வீசித் தாக்கிய செய்தியில் செண்பகராமன் பிள்ளையின் பெயர் அடிபடலாயிற்று. இவரைப் பற்றிய ஒரு சில நூல்கள் வெளியாகியுள்ளன. சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஒரு தலைவராக இருந்த கவிஞர் வானம்பாடி அவர்கள் வீரன் செண்பகராமன் பற்றிய ஒரு நூலையும் எழுதியிருக்கிறார். கவிஞர் வானம்பாடி தஞ்சை காசுக்கடைத்தெருவில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு "வானம்பாடி அச்சகம்" என்ற ஒரு அச்சகம் வைத்திருந்தார். ஒரு வகையில் ம.பொ.சி. அவர்கள்தான் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், வ.உ.சிதம்பரம் பிள்ளையை 'கப்பலோட்டிய தமிழன்' என்று அடைமொழி சேர்த்து பெருமை சேர்த்த வகையிலும், மேலும் பற்பல சுதந்திரப் போர் புரிந்த பலர் வரலாறுகளையும் வெளிக் கொணரக் காரணமாக இருந்தார். அதோடு அரசாங்கமே செய்ய வேண்டிய ஒரு வேலையையும் தனிமனிதனாக அந்த தூய கதராடைத் தியாகி செய்து முடித்தார். அதுதான் "விடுதலைப் போரில் தமிழகம்" எனும் இரு நூல்களாகும்.

இனி வீரன் செண்பகராமன் பற்றி பார்ப்போம். இவர் வாழ்ந்த காலம் 1891 முதல் 1934 வரை. அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட பகுதியில் "எட்டு வீட்டுப் பிள்ளைமார்" எனப்படும் சீர்மிகுந்த குடியில் பிறந்தவர். இவர் திருவனந்தபுரத்தில் வசித்த காலத்தில் அங்கு வசித்த ஒரு ஜெர்மானியர் இவருக்குப் பழக்கமானார். அவருடைய அழைப்பின் பேரில் இவர் 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி தனது பதினேழாம் வயதில் தாய் நாட்டை விட்டுப் புறப்பட்டு ஜெர்மனிக்குச் சென்றார்.

அன்றைய ஜெர்மனியில் அதிபராக இருந்தவர் வில்லியம் கெய்சர் என்பவர். தன்னுடைய அறிவுத் திறனாலும், ஆற்றல்மிக்க செயல்பாடுகளாலும் அதிபர் கெய்சரை இவர் கவர்ந்தார். அங்கு சென்ற பின் இவர் பல மொழிகளைக் கற்றார்; புலமை பெற்றார்; பல பத்திரிகைகளையும் நடத்தினார். டாக்டர் பட்டமும் பெற்றார். அப்போது இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் நாட்டு சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய நேரம். இவரோ வேறு விதமாகத் திட்டமிட்டார். ஜெர்மனியின் உதவியோடு இந்தியாவை ஆட்சி புரியும் ஆங்கிலேயர்களின் மீது போர் தொடுத்து அவர்களை விரட்டிவிட்டு இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்ய எண்ணமிட்டார். அதன் பொருட்டு இந்தியர்களைக் கொண்ட ஒரு அமைப்பை ஜெர்மனியில் அமைத்தார். அதன் பெயர் "Indian National Volunteers". இவர்தான் முதன் முதலில் தாய்நாட்டை வணங்க "ஜெய் ஹிந்த்" எனும் கோஷத்தை உருவாக்கி முழங்கினார். இவரது அடிச்சுவட்டில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைக்கவும், இவரது "ஜெய்ஹிந்த்" கோஷத்தை முழக்கமிடவும் தொடங்கினார்.

1914 தொடங்கி முதல் உலக மகா யுத்தம் நடைபெற்றது. உலகக் கடல் பகுதியெங்கும் ஜெர்மானியப் போர் கப்பல்கள் உலவிவந்தன. ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரின் கப்பல்களை உடைத்தெறியத் தொடங்கின. அப்படிப்பட்டதொரு கப்பல் "எம்டன்" எனும் பெயரில் சென்னை கடற்கரைக்கு வந்து சென்னை மீது குண்டுகளை வீசியது. இப்போதைய உயர்நீதி மன்ற வளாகத்தில்கூட ஒரு குண்டு விழுந்தது. அந்த கப்பலில் தலைமை இன்ஜினீயராக வந்தவர் செண்பகராமன் பிள்ளை. இவரைப் பற்றி கவிஞர் வானம்பாடி தனது நூலில் குறிப்பிடும் செய்தி:-

"யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் யுத்த கேந்திரத்தின் மீது விமானத்தில் பறந்து பிரிட்டிஷ் பட்டாளத்தில் இருந்த இந்திய சிப்பாய்களின் மத்தியில் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வீசி, பிரிட்டனுக்கு எதிராக அவர்களது துப்பாகி முனைகளைத் திருப்புமாறு கோரினார். ஜெர்மனியிடம் பிடிபட்ட ஆயிரக்கணக்கான இந்திய யுத்தக் கைதிகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தார்."

"மெஸபடோமியா யுத்த கேந்திரத்தில் போராடிய சுதேசி இராணுவத்தைக் கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக இந்தியாவிற்கு வரும் பிரிட்டிஷ் சப்ளைகளைத் துண்டித்து, மூன்று கடல்களிலும் முற்றுகையிட்டு உள்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் புரட்சிக்கு உதவி செய்வதன் மூலம் பிரிட்டனை செயலற்றதாக்கி, காபூலில் அமைத்த சுதந்திர அரசாங்கத்தை டில்லிக்கு மாற்றத் திட்டமிட்டிருந்தார்"

இவர் ஜெர்மனியில் இருந்த காலத்தில் இவரைப் பல இந்தியத் தலைவர்கள், குறிப்பாக மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சந்தித்தனர். கெய்சர் அதிபராக இருந்த வரை வீரன் செண்பகராமன் பிள்ளைக்கு ஒரு தொல்லையுமில்லை. முதல் யுத்தத்துக்குப் பிறகு அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக ஆனபின்பு இவருக்குப் பல தொல்லைகள் விளைவதாயின. ஹிட்லர் இந்தியாவையும் இந்தியர்களையும் கேவலமாகப் பேசப்போக, அதனை வன்மையாகக் கண்டித்த செண்பகராமன் அவனை மன்னிப்பு கேட்க வைத்தார். விடுவான வஞ்சனையின் வடிவமான ஹிட்லர். இந்த இந்திய வீரனுக்குக் குழி பறிக்கத் தொடங்கினான். அதன் விளைவு 1936இல் வீரன் செண்பகராமன் மரணத்தைத் தழுவினார்.

செண்பகராமன் ரஷ்யாவுக்கும் சென்றார். அங்கு புதிய ரஷ்யாவை உருவாக்கிய லெனினைச் சந்தித்தார். இது குறித்து ஷவுகத் உஸ்மானி என்பார் எழுதியுள்ள ஆங்கில கட்டுரையின் சில பகுதிகள் இதோ:

"There were two other outstanding personalities who belonged to no group. They were Dr.Tarakanath Das and Dr.Chenbagaraman Pillai. The ashes of this renowned South Indian leader, Pillai, were very recently carried to their last resting place by the Indian Cruiser INS Delhi. This was indeed in fulfilment of a revolutionaries vow. As Free Press Journal of Bombay (Sep.12, 1966) put it, " In early 1930's Dr.Pillai incurred the wrath of Hitler whose ominous rumblings were just beginning to be heard. In May 1934, Pillai died of suspected slow poisoning. His body was cremated in Berlin."

அந்த மும்பை பத்திரிகை செண்பகராமன் பிள்ளையின் சபதம் என்ன என்பதையும் குறிப்பிடுகிறது. அது:-
"It was some years after the war (I World War of 1914-18) that he made a vow that he would one day return to the land of his birth in a powerful battleship flying the flag of the Indian Republic."

1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் செண்பகராமன் பிள்ளையின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அவருடைய மனைவி, மணிப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அவரும் அலையாய் அலைந்தார் இதற்காக. இறுதியில் ஒரு நாள் அவரது மனோரதம் நிறைவேறியது. அந்த மாவீரனின் அஸ்தி இந்திய மண்ணில் ஐக்கியமானது. வாழ்க வீரன் செண்பகராமன் புகழ்!

Tuesday, June 15, 2010

சேலம் A.சுப்பிரமணியம்

சேலம் A.சுப்பிரமணியம்
தொகுப்பு: தஞ்சை வெ. கோபாலன்

இந்திய சுதந்திரப் போராட்டம் பல்வேறு கட்டங்களாகப் பிரிந்து நடந்தன. 1885 முதல் 1906 வரையிலான காங்கிரஸ் வரலாறு பிரிட்டிஷ் அரசுக்கு மனுச்செய்து, வேண்டுகோள் விடுத்து, காங்கிரஸ் மாநாடுகளுக்கு பிரிட்டிஷ் வைஸ்ராய், கவர்னர்கள் ஆகியோரை அழைத்து கெளரவித்து நடத்தப்பட்டன. 1906க்குப் பிறகு பால கங்காதர திலகரின் காலம்தான் முதன் முதலாக பரிபூர்ண சுதந்திர பிரகடனம் வெளியிடப்பட்ட காலம். 'சுதந்திரம் என் பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்' என்பது திலகரின் குறிக்கோள். அவரது சீடர்களாக தமிழகத்தில் பலர் இருந்தனர். கப்பலோட்டிய தமிழன் என்று போற்றப்பட்ட வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் திலகரின் தொண்டர்கள்.

அவரது மறைவுக்குப் பின் காந்தி சகாப்தம் தொடங்கியது. அவரது காலத்தில் 1919இல் பிரிட்டிஷ் அரசாங்கம் 'ரெளலட் சட்டம்' எனும் ஓர் அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தியாவில் சுதந்திரம் என்று வாயைத் திறப்போர்க்கு கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தர கொண்டுவரப்பட்ட சட்டம் இந்த ரெளலட் சட்டம். இந்த அராஜக சட்டத்தை எதிர்த்து காந்திஜி குரல் கொடுத்தார். நாடு முழுவதும் எதிர்ப்பு ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் என்று எங்கும் அமளி ஏற்பட்டது. பிரிட்டிஷ் அரசின் அராஜகத்தை எதிர்த்து அங்கெல்லாம் குரல் எழுப்பப்பட்டது.

நாடு முழுவதும் நடந்த ரெளலட் சட்ட எதிர்ப்பு சேலம் நகரிலும் நடந்தது. அதற்காக சேலத்தில் நடந்த ஒரு ஊர்வலத்துக்கு பூபதி என்பவர் தலைமை தாங்கி நடத்திச் சென்றார். அப்போது சேலத்தில் பள்ளிக்கூடமொன்றில் படித்து வந்த ஏ.சுப்பிரமணியம் எனும் சிறுவன் இந்த ஊர்வலம் குறித்து வீதி வீதியாகச்சென்று மக்களுக்கு அறிவித்து ஊர்வலம் வெற்றி பெற உழைத்தான். மாணவப் பருவத்தில் தொடங்கிய சுப்பிரமணியனின் தேசபக்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. சேலத்துக்கு வந்து பேசும் பெரும் தலைவர்கள் கூட்டத்துக்கெல்லாம் சென்று அவர்கள் சொற்பொழிவைக் கேட்டு தேசாவேசம் கொள்ளலானான். ஒவ்வொரு கூட்டத்திலும் முன்னால் நின்று "வந்தேமாதரம்" "பாரதமாதாகி ஜே" என்று கோஷமிடுவார். இப்படி தேச சேவையில் ஈடுபட்டிருந்தாலும் காந்திஜியின் கொள்கைகளைக் காட்டிலும் வன்முறை வழியே இவருக்குச் சரி என்று தோன்றியது. மயிலே மயிலே இறகு போடு என்றால் போடுமா? அடி மேல் அடி அடித்தால் அம்மியும் அசையும் என்பது இவரது கருத்து.

1922ஆம் ஆண்டு. இங்கிலாந்தின் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். சென்னைக்கும் அவரது பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரது வருகையை எதிர்த்து காங்கிரஸின் பெரும் தலைவராக இருந்த ஆந்திர கேசரி டி.பிரகாசம் தலைமையில் ஓர் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் ஏ.சுப்பிரமணியமும் கலந்து கொண்டார். அப்போது போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தடியடியில் இவருக்கு அடிபட்டு தலை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. காயம் ஆற பலநாள் ஆனபோதும், இவரது வஞ்சம் நாளுக்கு நாள் வளர்ந்தது.

மகாத்மா காந்தி 1927இல் தமிழகத்துக்கு விஜயம் செய்தார். அவரது விஜயத்தின் போது இளைஞர்கள், மாணவர்கள் அவரைச் சந்தித்து உரையாடினர். அப்போது இவர் காந்திஜியிடம் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். காந்திஜியின் வழிமுறைகள் இவருக்குச் சரியாகப் படவில்லை. இப்படியெல்லாம் போராடினாலா வெள்ளையன் இந்த நாட்டைவிட்டுப் போவான். ஆனால் இந்த வீரமிக்க இளைஞர்களின் கோபத்தீயைத் தன் அறிவார்ந்த உரைகளால் காந்திஜி சமப்படுத்தி, அவர்களையும் காந்திஜியின் அகிம்சை வழிக்குக் கொண்டு வந்தார். ஏ.சுப்பிரமணியமும் காந்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவராக மாறினார்.

1930 மார்ச்சில் மகாத்மா காந்தி சபர்மதியிலிருந்து தண்டி வரை உப்பு சத்தியாக்கிரக யாத்திரை தொடங்கினார். தெற்கே அவரது மனச்சாட்சியாக விளங்கிய ராஜாஜி இங்குமொன்று உப்பு சத்தியாக்கிரக யாத்திரையை திருச்சியிலிருந்து தொடங்கி வேதாரண்யத்தில் முடித்தார். இந்த சென்னை ராஜதானியின் தலைநகரில் நடக்காமல் எங்கோ தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த இந்தப் போர் போலவே, சென்னையின் முக்கியப் பகுதியிலும் ஓர் உப்பு சத்தியாக்கிரகத்தை துர்க்காபாய் தேஷ்முக் தலைமையில் தொடங்கப்பட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் சென்னை கோட்டையின் முன் உப்பு காய்ச்சுவதற்காக அணிவகுத்துச் செல்லலாயினர். அதில் ஏ.சுப்பிரமணியமும் தொண்டர்களில் வழிநடத்திச் செல்லும் தலைவராகச் சென்றார்.

இந்த ஊர்வலம் போலீசாரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டது. அடித்து, உதைத்து, கண்மண் தெரியாமல் துகைத்து, இவர்களை நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச் சென்ற கொடுமை நடந்தது. 40க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பலத்த காயமடைந்தனர். தியாகி ஜமதக்கினி நாயக்கர், திருவேங்கட நாயக்கர், திருவாங்கூர் தம்பி, சேலம் ஏ.சுப்பிரமணியம் ஆகியவர்கல் சுயநினைவு இழந்து கிடந்தனர். அடிபட்ட தியாகிகளை துர்க்காபாய் தேஷ்முக் தனது வேனில் ஏற்றிக்கொண்டு சென்று டாக்டர் ராமாராவ் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். உடல் நலம் தேறியதும் சேலம் சென்று, மீண்டும் சென்னை வந்து சூளையில் நடந்த மறியலில் கலந்து கொண்டு ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்தார்.

மதுவிலக்குப் பிரச்சாரம் செய்து வந்த இவர் மீது கள்ளுக்கடை முதலாளிகளுக்குக் காண்டு. இவரை எப்படியும் ஒழித்துவிட வேண்டுமென்று சமயம் பார்த்திருந்தனர். ஒரு நாள் இவர் ஏமாந்த சமயம் இவரை அடியாட்கள் கண்மண் தெரியாமல் அடித்துக் கொண்டு போய் ஒரு சோளக்காட்டில் போட்டுவிட்டுப் போய்விட்டனர். இவரது சேவை தேவை என்றோ என்னவோ, பாரதமாதா இவரைக் காப்பாற்றி உயிர் பிழைக்கச் செய்து விட்டாள். இது போதாதென்று இவர் மீது பொய்வழக்கு ஒன்று போட்டு இவரை மீண்டும் ஓராண்டு சிறைக்கு அனுப்பினர் ஆட்சியாளர்கள்.

1940இல் காந்திஜி தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டம் அறிவித்தார். இவர் சேலத்தை விட்டு தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்குச் சென்று அங்கு சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்டார். இப்போது அவருக்குக் கிடைத்த தண்டனை 16 மாத கடுங்காவல் சிறை. இவர் பலமுறை சிறை சென்று நாட்டுக்காக உழைத்து, சர்வோதயத் திட்டத்தால் கவரப்பட்டு, ஏழை எளியவர்களுக்காகப் பாடுபட்டுத் தன் வாழ்நாளை அமைத்துக் கொண்டார். சுதந்திரத்தின் பலனையோ, பதவி, பகட்டு, பவிஷுகளையோ பெறாத இவர், எந்த எதிர்பார்ப்புமின்றி சாதாரண காந்தியத் தொண்டனாகவே வாழ்ந்து வந்தார். வாழ்க ஏ.சுப்பிரமணியம் புகழ்!

Monday, June 14, 2010

குமராண்டிபாளையம் நாச்சியப்பன்

சேலம் மாவட்டம் குமராண்டிபாளையம் நாச்சியப்பன்.
தொகுப்பு: தஞ்சை வெ.கோபாலன்

மகாத்மா காந்தியடிகள் 1930க்குப் பிறகுதான் மதுவிலக்குக் கொள்கையை முன்வைத்து அகிம்சை வழியில் மறியல் முதலான போராட்டங்களை நடத்தினார். அதற்கு முந்தைய காலகட்டத்திலும் அன்றைய காங்கிரசார் மதுவிலக்கை ஓர் முக்கியமான கொள்கையாகக் கொண்டிருந்தனர். ஏழை எளிய உழைப்பாளர்கள் தங்கள் உழைப்பினால் கிடைத்த பணத்தையும், அதையும் மீறி, தங்கள் வீட்டுப் பெண்டு பிள்ளைகளின் நகைகளையும், ஏன்? தாலியையும் கூட விற்றுக் குடித்து அழிந்து போனதைத் தடுத்து நிறுத்த எண்ணம் கொண்டனர் தியாக பாரம்பரியத்தில் வந்த அன்றைய காங்கிரசார். இந்த காலகட்டத்திற்கு முன்னதாகவே தமிழகத்தில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ராஜாஜி ஆரம்பித்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தங்கிக் கொண்டு ராஜாஜி மதுவிலக்குப் பிரச்சாரம் செய்து வந்தார். அதற்காகவே "விமோசனம்" எனும் ஒரு பத்திரிகையும் நடத்தப்பட்டது. அதன் ஆசிரியராக இருந்து பத்திரிகை துறைக்கு வந்தவர்தான் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி.

அன்று ஆசிரம தொண்டர்கள் பலர் மாட்டு வண்டிகளில் மதுவினால் விளையும் கேட்டினை விளக்கும் விளம்பரத் தட்டிகளை வைத்துக் கொண்டு கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். திருச்செங்கோடு காந்தி ஆசிரிம தொண்டர்களின் பிரச்சாரத்தின் பயனாக பொதுவாக மக்கள் மதுவின் கேட்டினைப் புரிந்துகொண்டு சிறிது சிறிதாக அதனை விலக்கத் தொடங்கினர். திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் ஆகிய மூன்று தாலுக்காக்களிலும் மதுவிலக்குப் பிரச்சாரத்துக்குப் பரிபூரண வெற்றிகிடைத்தது. இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அன்றைய கலால் இலாகா இயக்குனராக இருந்த ஆங்கிலேயர் ஈ.பி.கார்ட்டர் என்பவர் நேரில் வந்து ஆய்வு செய்து இங்கெல்லாம் மதுவிலக்கு வெற்றிகரமாக நடைபெறுவதைக் கண்டு வியந்து திருச்செங்கோடு ஆசிரமத்தின் பார்வையாளர் புத்தகத்தில் பாராட்டி எழுதினார். பூரண மதுவிலக்கு ஏற்படுமானால், அடிமட்ட மக்களின் வாழ்க்கை மேம்படுவதோடு, அமைதியும், ஒழுக்கமும் மக்கள் மத்தில் நிலவும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

மகாத்மா காந்தியடிகள் இந்த மூன்று தாலுக்காக்களிலும் மதுவிலக்கு சட்டத்தினால் கொண்டுவரப்படாமல், தொண்டர்களின் சாத்வீக தொண்டினால் வெற்றி பெற்றுள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அந்தப் பகுதிகளில் எங்காவது கள்ளுக்கடை திறந்திருப்பது தெரிந்தால் அவ்வூர் மக்களே சென்று அதனை மூடவைத்தனர். கள் இறக்கப்படாமலும் பார்த்துக் கொண்டனர். இதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இந்த சூழ்நிலையில், எங்கும் எப்போதும் பலர் நேர்வழியில் சென்றால் யாராவது ஒருவர் குறுக்கு வழி தேடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட ஒருவன் கள்ளத் தனமாக சாராயம் காய்ச்சத் தொடங்கினான். இது 1930க்கு முந்தைய நிலை. இன்றைய நிலையை எண்ணிப் பார்க்காதீர்கள். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு கள்ளச் சாராயமும், அரசாங்க சாராயமும் ஆறாக ஓடுவதை நாம் காணலாம். இந்தத் திருட்டுத் தனத்தை நாச்சியப்பன் எனும் ஒரு தேசபக்தன், காந்திய தொண்டன் போலீசுக்குத் தகவல் கொடுத்தான். குற்றவாளி கைதுசெய்யப்பட்டுத் தண்டிக்கப் பட்டான். அது அன்றைய நிலை. அவன் சிறைவாசம் முடிந்து ஊர் திரும்பியதும் முதல் வேலையாகத் தன்னைப் பற்றி போலீசுக்குத் தகவல் கொடுத்த குமராண்டிபாளையம் நாச்சியப்பனைத் தேடிப் பிடித்து அவனை அடித்துத் துன்புறுத்தி, அவன் இரண்டு கண்களிலும் பார்வை இழக்கச் செய்தபின் ஊரைவிட்டு ஓடிவிட்டான். பாவம் நாச்சியப்பன், கண்கள் குருடானான். நல்ல காரியம் செய்த பாவத்துக்காக!

இந்தச் செய்தி திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்த ராஜாஜியை எட்டியது. அவர் உடனே நாச்சியனை ஆசிரமத்துக்கு அழைத்து வந்து அவனுக்கு சிகிச்சை அளிக்க உதவினார். அவன் கண்களின் புண்கள் குணமடைந்த பின் அவனுக்கு ராட்டையில் நூல் நூற்கக் கற்றுத் தந்தார். அவன் நூற்கும் நூலுக்கு மட்டும் மற்றவர் நூற்கும் நூலுக்குக் கொடுக்கும் தொகையைவிட இரட்டிப்பாக வழங்கி வந்தார். அப்போதெல்லாம் காங்கிரஸ் பொருட்காட்சி நடத்துவது வழக்கம். அங்கெல்லாம் இரு கண்கள் இல்லாத நாச்சியப்பன் நூல் நூற்பதை மக்களுக்குக் காட்டி, அவனது மேன்மையை விளக்கி வந்தார். அந்த நாச்சியப்பனுக்கு ஆசிரமம் ஓய்வு ஊதியம் வழங்கி எந்தக் குறையுமின்றி காப்பாற்றி வந்தது.

திருச்செங்கோடு காந்தி ஆசிரமும் ராஜாஜியும் கண்களை இழந்த நாச்சியப்பனுக்கு ஆதரவாக இருந்து வந்தது போல, மேலும் பல தியாகிகளுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. வாழ்க மதுவிலக்குக் கொள்கைக்காக தன்னிரு கண்களையிழந்த தியாகி நாச்சியப்பன் புகழ் வாழ்க!